சித்திரைத் தமிழிசை விழா
முனைவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவரது மனைவி அனிதா குப்புசாமி ஆகியோர் பங்கேற்ற சித்திரை தமிழ் இசை விழா ஏப்ரல் 29 ஆம் தேதியன்று ப்ளுமிங்டன் கென்னடி ஹைஸ்கூலில் நடைபெற்றது. இந்த ஆண்டு சித்திரையில் கோடையை வரவேற்பதா அல்லது வசந்தத்தை வரவேற்பதா என்ற குழப்பத்தில் இருக்கும் மினசோட்டாவாசிகளுக்கு இந்த இசை தம்பதியினரை ஆரவாரத்துடன் வரவேற்பதில் எந்தத் தயக்கமும் இல்லை.
அனிதா குப்புசாமி ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய “மலரும் மொட்டும்“ நிகழ்ச்சியை, பல ஆண்டுகள் கழித்து இந்த மேடையில் மினசோட்டா தமிழ் குழந்தைகளுடன் மீண்டும் நடத்தினார். அக்காலத்தில் அவருடைய நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகள் பலர், இப்போது வளர்ந்து திருமணமாகி குழந்தைகள் பெற்று பெற்றோர் ஆகி விட்டார்களாம். இந்த சுவையானத் தகவலை அளித்த அனிதா அவர்கள் இப்போதும் இந்நிகழ்ச்சியை அப்போது போலவே சுவையாக நடத்தினார். குழந்தைகளுடனான அவரது கெமிஸ்ட்ரி செம!!
கடவுள் வாழ்த்து, கும்மி, தமிழ் உணர்வுப் பாடல்கள், கிராமியப் பாடல்கள், திரையிசைப் பாடல்கள், கர்னாடக இசை, குழந்தைப் பாடல் என மேடையில் பாடிய நேரம் முழுக்க இசை ரசிகர்களைத் தங்கள் குரலில் கட்டி போட்டனர் குப்புசாமி & அனிதா இசை தம்பதியினர். ஒவ்வொரு பாடலுக்கு மத்தியிலும் குப்புசாமி அளித்த தகவல்கள் மிக சுவாரஸ்யம். பள்ளி மாணவர்களுக்கு இசை சொல்லிக் கொடுப்பது எப்படி? என்ற தலைப்பில் அவர் செய்த ஆய்வு பற்றிய தகவல்கள் இசை ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியமானது.
அவர் பாடிய பாடல்களுக்குச் சிறுவர், சிறுமியர் மட்டுமின்றி பெண்களும் சேர்ந்து மேடைக்கு முன்பு சென்று நடனமாடி நிகழ்வை திருவிழா கோலமாக்கினர். அவரின் குரல் மட்டுமில்லாமல் இசைக்கேற்ப அவருடைய அசைவுகள் கவனத்தை மீட்டியது. இசையில் கலைமாமணி போன்ற விருதுகள், கர்னாடக இசை குறித்த ஆய்விற்கு முனைவர் பட்டம் போன்றவை பெற்று உயரத்திற்கு சென்றாலும், ஒரு கிராமத்து இசை கலைஞனின் எளிமை அவரை விட்டு சென்றுவிடவில்லை.
இந்த மேடையில் மற்றொரு சிறப்பாக மினசோட்டாவில் இருந்துகொண்டு, தமிழியலில் பட்டம் பெற்றவர்களுக்கு, இவ்விழாவில் சான்றிதழ் வழங்கி கெளரவித்தார் முனைவர் குப்புசாமி அவர்கள்.
நிகழ்வின் முத்தாய்ப்பாக திருமதி அனிதா குப்புசாமி அவர்களுக்கு “மக்களிசை குயில்“ என்ற பட்டமும், முனைவர் புஷ்பவனம் குப்புசாமி அவர்களுக்கு “தமிழிசை வேந்தர்“ என்ற பட்டமும் மினசோட்டா தமிழ் சங்கத்தால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ் மண்ணில் மறுக்கப்பட்ட அங்கீகாரம் தங்களுக்கு அமெரிக்க மண்ணில் கிடைத்துள்ளது என உணர்வு பொங்க அனிதா குப்புசாமி அவர்கள் தெரிவித்தார்.
மொத்தத்தில், இவ்விழா மினசோட்டாத் தமிழர்களுக்கு கோடையின் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் கொண்டுவந்து சேர்த்ததாக அமைந்தது என்றால் அது மிகையில்லை.
– சரவணகுமரன்.