ஒரு நாள் போதுமா?
சேருங்காலச் சுகத்தில் உதித்த உயிரை
ஒருமுழக் கொடி பிணைத்த உடம்பை
பிரித்தெறிந்த நொடியில் அணைந்து போகாது
வரிந்தெடுத்து நெஞ்சோடு அணைத்த வித்தகமே!
அன்று தொடங்கி அந்தம் வரையில்
என்றும் சேய்நலம் கருதும் தாய்மையே
நின்றன் திருப்புகழை நினைந்து உருகிட
இன்றொரு நாள் மட்டும் போதுமா?
உந்தியெழும் சூரியன், அந்திசாயும் சந்திரன்
சிந்திச்சிதறும் கார்காலம், நிந்தைதரு வேனிலென
விந்தைமிகு இயற்கையது பிறழ்ந்து தவழ்ந்தாலும்
சிந்தைமாறா சிரத்தையோடு மக்களை நேசிப்பாயே!
துறவுபூண்ட ஞானிகளும் மறக்கவியலா உறவு
வரவுஅளக்கும் வணிகரும் கணிக்கவியலா செல்வம்
உருவந்தொழும் ஆத்திகரும் உணரவியலா வேள்வி
மறுதலிக்கும் நாத்திகரும் மறுக்கவியலா தெய்வம்!
கழிகின்ற நாட்களும் கடந்து போகும்
அழிகின்ற மெய்யும் தளர்ந்து போகும்-நீ
பொழிகின்ற பாசமட்டும் வளரக் கண்டு
மொழிகின்ற சொல்லும் வறண்டு ஒழியும்!
ஒற்றைவரி வாழ்த்தில் அடங்கிடுமோ அந்நேசம்.
குற்றமறு சிறுகவியில் சுருங்கிடுமோ எந்நன்றி!
முற்றுபெறா உன்னதமன்றோ அன்னையெனும் உறவுமுறை
சுற்றுமுலகு நிற்கும்வரை போற்றிடுவோம் நிதம் அவரை!
– அருகன்
Tags: Mother's day, அன்னையர் தினம்