தூத்துக்குடித் துயரம்
மயானமாகக் காட்சியளிக்கிறது தூத்துக்குடி! ஸ்டெர்லைட் நிறுவனத்தின் விரிவாக்கத்தை எதிர்த்துத் தொடங்கிய போராட்டம் நூறாவது நாளை எட்டிய நிலையில், தூத்துக்குடி கலெக்டரிடம் மனு அளிக்கப் பேரணியாகச் சென்ற பொது மக்கள் போலீஸாரால் சுடப்பட்டு, அடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, இன்னும் பல்வேறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். 13 பேர் இறந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், உண்மையான எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்று தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. அந்தப் பகுதியில் கடந்த ஐந்து நாட்களாக இணையம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. அதை மீறி வரும் செய்திகள் பதறவைக்கின்றன; இவையெல்லாம் இரண்டாவது பெரிய ஜனநாயக நாட்டில் நடப்பவையா என்று சந்தேகம் எழுப்ப வைக்கின்றன.
பேரணியாக வந்த போராட்டக்காரர்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியதாகப் போய்விட்டது என்கிறது காவல்துறை. அதையே முன்மொழிகிறார் முதல்வர். ஆனால், போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய 8 பேர் இதில் திட்டமிட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 17 வயது மாணவி ஸ்னோலின் என்ற பெண்ணும் வாயில் சுடப்பட்டு இறந்திருக்கிறார். கலவரத்தில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு ஏகப்பட்ட சட்டத்திட்டங்கள் இருந்தும், அது எதுவும் இங்குக் கடைப்பிடிக்கப்படவில்லை.
ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்து அந்த மண்ணின் மக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெரும் தாக்குதலை ஏற்படுத்தியிருக்கிறது இந்த நிகழ்வு. இதில் யாரிடம் சென்று நியாயம் கேட்பது என்று தெரியாமல் நிற்கிறார்கள் மக்கள். மக்களைக் காக்க வேண்டிய காவல்துறையும், அரசும் மக்களுக்கு எதிராக நிற்கிறார்கள். இனி யாரும் எந்தப் போராட்டமும் நடத்தக்கூடாது என்று அச்சுறுத்த நடத்திய தாக்குதலாகத் தெரிகிறது .
கடைகள் அடைக்கப்பட்டு, வங்கி ஏடிஎம்கள் மூடப்பட்டு, இணையம் துண்டிக்கப்பட்டு இயல்பு நிலை இல்லாமல், ஒரு எமர்ஜென்சி நிலையை அடைந்திருக்கிறது தூத்துக்குடி. இவை அனைத்தும் ஒரு தனியார் நிறுவனத்தை எதிர்த்ததற்காக. தமிழர்கள் இதையும் எதுவும் தெரியாதது போல் கடந்து சென்றால், நம் மண்ணுக்கு விமோசனமே இருக்காது.
அப்படி எண்ணாமல், இப்படிப் பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எண்ணும் மக்கள் பல்வேறு இடங்களில் கண்டன பேரணி நடத்தி வருகிறார்கள். மினசோட்டா செயிண்ட் பால் கேபிட்டல் கட்டிடத்திற்கு எதிரே மே 27ஆம் தேதி 2 மணிக்கு கூடிய மினசோட்டா தமிழர்கள், இங்குத் தங்கள் குரலை எழுப்பினர். துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலியுடன் தொடங்கிய கூட்டம், கட்டிடத்தின் முன்னால் மௌன பேரணி சென்றனர்.
பின்பு, அங்கு வந்திருந்தவர்கள் தங்கள் கருத்தையும், வருத்தத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொண்டனர். முக்கியமாக, சில குழந்தைகளும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தினர். பெட்டிஷன் எழுதப்பட்டு, வந்திருந்த அனைவர்களிடமும் கையெழுத்து வாங்கப்பட்டது. பிறகு, கேப்பிட்டல் கட்டிடத்தின் முன்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. எப்படியாவது தூத்துக்குடி மக்களுக்கு நல்லது நடந்தால் சரிதான் என்ற எதிர்பார்ப்புடன் மாலை மூன்றரை மணி அளவில் கூட்டத்தினர் கலைந்து சென்றனர்.
இந்த எதிர்ப்புக்குரல்கள் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். இது சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும். தூத்துக்குடியில் சர்வதேச பார்வையாளர்கள் அழைக்கப்பட்டு, இதற்கான விசாரணையில் ஈடுபடுத்தப்பட வேண்டும். தூத்துக்குடிக்கு நல்லது நடக்கும் என்று நாமும் எதிர்பார்ப்போம்.
பிற்சேர்க்கை – இன்றைக்கு (மே 28) ஆலையை மூட அரசாணை வெளியிட்டு, ஆலைக்கு சீல் வைத்துள்ளது தமிழக அரசாங்கம். இது போராட்டத்தை மட்டுபடுத்துவதற்கான வெற்று நாடகமாக முடிந்துவிடக்கூடாது என்றே இச்சமயம் எண்ணத் தோன்றுகிறது.
- சரவணகுமரன்.
- புகைப்படங்கள்: ராஜேஷ்
Tags: Shooting, Sterlite, Tutucorin, தூத்துக்குடி, ஸ்டெர்லைட்