காலா!!
வாரணம் பொருத மார்பு..
வரையினை எடுத்த தோள்கள் …
நாரத முனிவர்க்கேற்ப நயம்பட உரைத்த நா…
தாரணி மௌலி பத்து, சங்கரன் கொடுத்த வாள், வீரம் ….
இவையெல்லாம் கவிச்சக்ரவர்த்தி கம்பன் வில்லன் ராவணன் குறித்துப் புகழ்ந்து எழுதியவை. இவை தவிர, தனது கம்பராமாயாணத்திலே இன்னும் சொல்லலங்காரமாய் ராவணனைப் புகழ்ந்து – திரும்பவும் படிக்கவும், புகழப்பட்டது ராமனல்ல, ராவணன் – கம்பன் எழுதி எழுதி மாய்ந்துள்ளான். அவ்வளவு சிறப்புகள் மிக்கவன் ராவணன் என்பதில் கவிச்சக்கரவர்த்திக்கு எந்தச் சந்தேகமும் இருந்ததில்லை.
அது சரி….
சூப்பர் ஸ்டாரின் ‘காலா” திரைப்படம் குறித்து எழுதச் சொன்னால் கவிச்சக்ரவர்த்தி எங்கே வந்தான் என்று கேட்கத் தோன்றுகிறதா? காரணம் இருக்கிறது, அதனைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, திரைப்படம் குறித்துப் பார்ப்போம்.
மும்பாய் நகரத்தில், தமிழர் குடியிருப்புப் பகுதியான தாராவி ஏரியாவின் தாதா, கரிகாலன் என்கிற ‘காலா’. அந்த நிலத்தைக் கபளீகரம் செய்து இன்னும் பல கோடிகளைத் தன் கணக்கில் சேர்த்துக் கொள்ளத் துடிக்கும், ஏற்கனவே பல கோடிகளுக்கு சொந்தக்காரனான அரசியல்வாதி ஹரிதாதா. இவர்களிருவருக்குமான மோதலே இந்தத் திரைப்படம். நூறு வருடங்களுக்கும் மேலாக அரைத்து அரைத்துப் புளித்த மாவு இந்தக் கதை. இதற்கு மேலும் கதைபற்றி சொல்வதற்கு ஏதுமில்லையென்ற காரணத்தால் வேறு விஷயங்களைப்பற்றி பேசுவோம்.
அறுபத்து எட்டு அகவையைத் தொட்ட சூப்பர் ஸ்டார் இன்னும் அந்தக் கவர்ச்சியும், மிளிர்ச்சியும், உணர்ச்சியைத் தூண்டும் ஸ்டைலும் சற்றும் குறையாமல் இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். க்ளோஸ்-அப் ஷாட்களில் மட்டும் சற்றுச் சுருக்கங்கள் தெரிவதைத் தவிர்த்து, இன்னும் கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன்பால் ஈர்க்கும் கவர்ச்சிக்குச் சற்றும் குறைவில்லாத சூப்பர் ஸ்டாராகவே காட்சியளிக்கிறார். காலா’வில் தனது ஸ்டைல் பாணி மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் பரிமளித்திருக்கிறார். முந்நாள் காதலியை நெடுநாட்களுக்குப் பின்னர் முதன்முறையாக, குடும்பத்தினர் அனைவரின் முன்னிலையில், சந்திக்கையில் காட்டும் ஒருவிதமான பயம் கலந்த காதலையும், தனிமையில் சந்திக்கையில் பழைய நினைவுகளுடனான சொற்ப செண்டிமெண்ட்டுடன் கூடிய காதலையும், ”ஒரு கேள்வி கேக்காம என்ன அனுப்பி வச்சா, அவளோட உலகமே நான்தான்” என்று மனைவியைப் பற்றி பழைய காதலியிடம் விளக்கிடும் நெகிழ்ச்சியிலும், “ஆமா, அந்த ராமசாமியை உனக்கு நெஜமாவே பிடிச்சுதா?” என்று மனைவியிடம் அவளின் பள்ளித் தோழன் பற்றிக் கேட்கும் பொஸஸ்ஸிவ்னஸ்ஸிலும், “ஆமா, இவரு யாரு?” என்று பத்தாவது முறையாக ஷாயாஜி ஷிண்டேவைப் பார்த்துக் கேட்கும் நகைச்சுவையும், குடிபோதையும் கலந்த எகத்தாளத்திலும் – அப்பப்பா ரஜினி நிஜமாகவே அசத்திவிட்டார். எப்பொழுதும் போல அனல் பறக்கும் சண்டைகளோ, அப்பாவியான நகைச்சுவையோ, அனைவரையும் முணுமுணுக்க வைக்கும் பஞ்ச் டையலாக்குகளோ இல்லையென்பது அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாய் இருக்கக் கூடும், ஆனால் நமக்கு அவரின் நடிப்பு ஒரு முழு மனநிறைவைத் தந்தது.
“தூய்மையான நாட்டை உருவாக்குவேன்” என்று பிரச்சாரம் செய்து கொண்டு, வெள்ளை உடையில் பவனி வந்து, திரைமறைவில் கொலைகளுக்கு அஞ்சாத பணக்கார வில்லன் வேடம் நாநா படேகருக்கு. ரஜினியுடன் ஒருவருக்கொருவராகப் பேசும்பொழுதும் சரி, பேத்திக்கு ராமாயணம் போதிக்கும்போதும் சரி, கட்சிக்காரர்களுக்குத் தன் பராக்கிரமங்களைச் சுருக்கமாக விளக்கும்போதும் சரி, மனிதர் அமைதியான நடிப்பில் அசத்தி விடுகிறார். இவருக்கு உண்மையில் அறுபத்தியேழு வயதாகிறது என்றால் ஒருவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். மிடுக்கான தோற்றத்துடன், பொலிவாகவும் நிறைவாகவும் காணப்படுகிறார். அது சரி, ”க்ளீன் சிட்டி” என்று பிரச்சாரங்களிலும், போஸ்டர்களிலும் காட்டுவது, ராமாயணக் காலஷேபங்களை ரசித்துக் கேட்பது, அவற்றை மேற்கோளிட்டுப் பேசுவது – இவையெல்லாம் ஏதோவொரு நிஜ அரசியல்வாதியை நினைவுபடுத்துவது போலில்லை? இது ஒரு தற்செயல் என்று நம்புமளவுக்கு ரசிகர்கள் முட்டாள்களல்ல என்ற புரிதலிலேயே வைக்கப்பட்ட காட்சிகள்போல் தோன்றுகிறது.
ரஜினியின் மனைவியாகவும், திரைப்படத்தின் ஹீரோயினாகவும் வருபவர் ஈஸ்வரி ராய். அப்பாவித் தனத்தின் மொத்த உருவமாய்க் காட்சியளிக்கும் இவருக்கு நடிப்பதற்குப் பல சந்தர்ப்பங்கள். அனைத்தையும் மிக அருமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார். சொல்லப் போனால் இவர் திரைப்படத்தில் வந்து போகும்வரைதான் கொஞ்ச நஞ்ச ஸ்வாரஸ்யமாவது இருக்கிறது எனலாம். க்ளாமரான தோற்றமோ, உடலைக் காட்டி நடிக்கும் வாய்ப்போ இல்லை என்றாலும், கண்களிலும், பார்வைக் குழைவிலும், வெண்பற்கள் தெரிய கணவனிடம் காட்டும் சிறு ஊடல்களிலும் – பக்குவமான காதலை, கவர்ச்சியை அருமையாகக் காட்டியுள்ளார்.
எப்பொழுதும் போதையிலிருப்பதுபோன்ற ரோலில் சமுத்திரகனி வழக்கம்போல இயற்கையாய் நடித்துள்ளார். ஹூமா குர்ஷி ரஜினியின் பழைய காதலியாகவும், இன்றைய என்.ஜி.ஓ.வாகவும் வந்து போகிறார். பெரிதான வாய்ப்பு இருந்ததாகவோ, அவரும் அதைப்பற்றிக் கவலைப்பட்டதாகவோ தெரியவில்லை. சில இடங்களிலேயே வந்து போனாலும், அஞ்சலி படேல் இளமையும், வீரமும் ததும்பும் வண்ணம் கண்ணுக்கு நிறைவாகக் காட்சியளிக்கிறார். அவர் தோன்றிய முதல் காட்சியிலேயே, அவரின் முடிவு இதுபோலத்தான் இருக்கும் என்று நம் மனம் சொல்லிவிட்டது – வெரி ப்ரெடிக்டபிள்.
குப்பைக் கூளங்களுடனான சேரி, பல்வேறு இடிபாடுகளுக்கிடையே துணி துவைக்கும் தொழிலாளிகளின் போராட்டம், வானம் திறந்து பெருமழை பொழிய சற்றும் அவசரம் இன்றி ஓவர் ப்ரிட்ஜ் மீது குடை பிடித்துக் கொண்டு நடந்து வரும் ரஜினி, மெலிதான மழைக்கு நடுவில் புறாக் கூண்டு போன்ற வீடுகளுக்கு மத்தியில் தனது வீட்டு பால்கனியில் மென்மையான தழுவலுடன் கணவன் மனைவி – பின்னணியில் பாட்டு – என்று பல இடங்களில் ஒளிப்பதிவாளர் முரளி அசத்தியுள்ளார். சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல் கேட்கையில் முணுமுணுக்க வைக்கும் வகை, திரையரங்கு விட்டு வெளியே வந்தபின் நினைவிலில்லை (இதற்கு நம் ரசனையே பெருங்காரணமென நினைக்கிறோம். இன்றைய இசை ரசிகர்களுக்கு பிடித்த வகையிலே அமைந்திருக்குமென்று நினைக்கிறோம்).
பொதுவாக, ’வெள்ளை’ என்றால் தூய்மை என்றும் ‘கருப்பு’ என்றால் சாத்தான் என்றும் பார்த்தே பழகிவிட்ட பலரையும் மாற்றும் வண்ணம் நல்லவர் ரஜினி பெரும்பாலும் கருப்பு உடையிலேயே இருப்பதும், வில்லன் நாநா படேகர் வெள்ளையுடையிலேயே இருப்பதும் வித்தியாசங்கள் எனக் கொள்ளலாம். ’காலா’ என்ற பெயருக்குக் கருப்பு என்று பொருள் என்றும், முதற்காதலியின் மகள் பெயர் ”கெய்ரா” என்பதற்கும் ‘கருப்பு’ என்றே பொருள் என்றும் ரசிகர்களுக்கு ஓரிரு முறை சொல்லிக் காட்டி, தான் கூற வந்ததை விளக்க முற்பட்டிருக்கிறார் இயக்குனர் பா. ரஞ்சித். சமூகத்தில் தாழ்த்தப்பட்டோரின் துயரங்களைக் காட்ட வேண்டுமென்று தொடங்கியதைப் பாராட்ட வேண்டும். இரும்பாலான ஆயுதங்களைக் கொண்டு முகத்திலே அடித்த பின்னர் மீண்டும் எழுந்து வந்து சண்டை போடுவது, முதுகின் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த பின்னரும் எப்படியோ பிழைத்து வருவது, பல குடிசைகளும் கட்டடங்களும் பற்றி எரிகையில் அனைவரும் பதைபதைக்க நிற்க இவர் மட்டும் ஓடிச் சென்று ஒரு பிள்ளையைத் தூக்கியதும் அனைவரும் பின்னால் நடந்து வருவது (அவர்களாகவே முதலிலேயே வந்திருக்கலாமே!) என்ற பல அபத்தமான காட்சிகளால், வழக்கமான ரஜினி மசாலா இல்லாவிட்டாலும், யதார்த்தமான படம் என்று கூற இயலவில்லை.
சரி, இதெல்லாம் கூட நாம் இயக்குனர் குறித்து எழுத வந்த பெரிய விஷயங்களில்லை. இப்பொழுது, முதல் பத்தியில் எழுதப்பட்ட ராவணன் குறித்த கருத்திற்கு வருவோம். நேரடியாகக் கூறாவிட்டாலும், இந்தப் படத்தில் கூற விழைந்ததாக நாம் கருதுவது; ரஜினிகாந்த் ராவணன், நாநா படேகர் ராமன். அதாவது, ராவணன் ஹீரோ, ராமன் வில்லன். ராவணன் நல்லவன், ராமன் கெட்டவன்; ராவணன் சாதாரண மக்களைக் காப்பவன், ராமன் சாதாரண மக்களைப் பற்றிக் கவலைப்படாத அதிகார வர்க்கம்.
1946 ஆம் ஆண்டில், திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புலவர் குழந்தை என்பவர் எழுதிய கவிதை நூலாகிய “இராவண காவியம்” ராவணனைக் கதையின் நாயகனாகக் கொண்டு, ராம, லக்ஷ்மணர்களை வெறுக்கும்படியான வகையில் எழுதப்பட்ட ஒன்று. இந்தப் புத்தகம்கூட ஒரு காட்சியில், பின்னணியில் காட்டப்படுகிறது. இந்தப் படத்தின் காட்சியமைப்புகளும், கதை விவரிக்கப்பட்ட விதமும், “ஒத்தத்தலை ராவணா” போன்ற பாடல்களும், உச்சகட்ட காட்சியில் சண்டைகளுக்குப் பின்னணியாய் ராமாயண கதாகாலட்சேபமும் அதில் சொல்லப்படும் நிகழ்வுகள் மற்றும் சண்டைக் காட்சிகளின் நிகழ்வுக்குமான ஒப்புமை எனப் பல விஷயங்கள் நம்மை இவ்வாறு ஊகிக்க வைக்கின்றன.
சரி, ராவணனை நல்லவன் என்று காட்டுவது தவறா என்ற கேள்வி எழுவது நியாயமே. தவறேதுமில்லை, அதையேதான் கம்பனும் விளக்கியிருப்பதாகக் காட்டுவதற்காகவே தொடக்கத்தில் கம்பராமாயணப் பாடலைக் காட்டினோம். அதாவது, இவ்வளவு மேன்மை பொருந்தியவன் ராவணன், ஆனாலும் பெண்ணாசை காரணமாக வில்லனாகச் சித்தரிக்கப்படுகிறான் என்றுதான் கூறுகிறார் கம்பர். ஏதோ தமிழனை இழிவுபடுத்தியதாகவும், அதனைச் சரி செய்வதற்காக இது போன்ற காவியங்களைப் படைக்க வேண்டுமென்றோ, இதுபோன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டுமென்றோ அவசியமில்லை என்பதைக் கூறிக் கொள்ளவே இந்தச் சிறு குறிப்பு.
மொத்தத்தில், ரஜினி ரசிகர்களுக்கு முழுமையாகத் தீனி போடும் படமாகத் தோன்றவில்லை. புரட்சிப் புயலை வெடித்துக் கிளப்பும் ஒரு பெரிய முயற்சியாகவும் படவில்லை. ‘காலா’ ரஜினி/ரஞ்சித் இணைப்பின் மற்றுமொரு சறுக்’கலா’?
– ரசிகன்.
Tags: kaala, Kaala the movie, காலா, சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த்