வாசகர்களுக்கு வணக்கம்!
நீண்ட நாட்களாக வாசகர்களைத் தலையங்கத்தின் மூலம் சந்திக்க இயலாததற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். மினசோட்டா வாசகர்கள் கோடையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பர் என நம்புகிறோம். இந்தியா, இலங்கை மற்றும் கிழக்காசிய நாடுகளில் வெயிலின் உக்கிரம் அதிகமான காலமிது என்று நினைக்கிறோம். மனிதன் பொதுவாகவே எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் ஏதோ ஒன்றைக் குறையாக நினைத்து வாழ்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளான் என்று தோன்றுகிறது. எந்தத் தட்ப வெப்பமாயினும் அதற்கேற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் எவரும், தட்ப வெட்பம் குறித்துக் கவலையுற மாட்டார்கள் என்பது நாமறிந்ததே.
இயற்கையின் சீற்றத்தைவிட, இங்கிருக்கும் மனிதர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் தலைவர்கள் செயல்களால் சாதாரண மனிதன் அடையும் துயர் சொல்லி மாளாதது.இந்த வகையில், சமீபத்தில் பல நிகழ்வுகள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. தமிழகம் தலைவனில்லாதக் கப்பலாய்த் தத்தளித்துக் கொண்டிருப்பதாகக் கருதுகிறோம். ‘தடி எடுத்தவர்களெல்லாம் தண்டல்காரர்களாகக்’ காட்சியளிக்கிறார்கள். நித்திய கண்டம் பூர்ண ஆயுசு என்ற முறையில் தற்போதைய அரசாங்கம் ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த முன்னேற்றத் திட்டங்களும் நடப்பதாகத் தெரியவில்லை. சட்ட ஒழுங்கும் சீர் குலைந்து போனதாகவே காணப்படுகிறது. ஸ்டெர்லைட் பிரச்சினை, நெடுவாசல் பிரச்சினை, தாமிரபரணியைக் காத்தல், டாஸ்மாக் மூடப்படுவது, நீட் போன்ற மாணவர்களின் மேற்படிப்பு குறித்த பிரச்சினை, அண்டை மாநிலங்களின் அணைகட்டும் துரிதம், காவேரிப் பிரச்சினை, கௌரவக் கொலைகள், மணற் கொள்ளை, விவசாயிகளின் துயரம் என அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றில் எதைப் பற்றியும் ஆளுங்கட்சியோ, எதிர்க் கட்சிகளோ, ஏனைய அரசியல் வாதிகளோ பெரிதாக அக்கறை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை. புதிதாக அரசியலுக்கு வந்துள்ள சினிமா பிரபலங்களும், அவரவர் பாணியில் பத்திரிக்கை செய்திகளுக்குத் தீனி தருவது மட்டுமே குறியாக வைத்துள்ளதாகத் தோன்றுகிறது. ஒலிவாங்கி முன் நிற்பவர்களையெல்லாம் தலைவர்கள் என்று ஏற்கும் அவல நிலைக்குத் தமிழ் நாடு தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அண்டை மாநிலமான கர்நாடகத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. அங்கே மக்களின் முடிவு எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையைக் கொடுக்கவில்லை. பாரதீய ஜனதாக் கட்சி, தங்களால் ஆட்சி அமைக்க முடியுமென்று சொல்ல, அக்கட்சிக்குக் கட்டுப்பட்ட கவர்னர் அவர்களை ஆட்சியமைக்க அழைக்க, அவர்கள் குதிரை வியாபரத்திற்குப் பதினைந்து நாட்கள் தவணை கேட்க, உச்ச நீதிமன்றம் அதை மறுக்க, தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க இயலாது என்ற நிலையில் மூன்றே நாட்களுக்குள் ராஜினாமா செய்ய, காங்கிரஸின் ஆதரவுடன் நாற்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜனதா தள ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இதைவிட ஜனநாயகத்தில் வேறொரு கேலிக்கூத்து இருக்குமா என்பது சந்தேகமே. இந்தக் கேலிக்கூத்துக்கு அனைத்துக் கட்சிகளுமே சமபங்கான பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டியதுதான்.
அமெரிக்க அரசியலிலும் இதுபோன்ற கேவலங்களுக்குக் குறைவில்லை. வட கொரியாவுடனான பிரச்சினை, குடியேற்ற சட்டச் சீர்திருத்தப் பிரச்சினை, அதிபர் அன்றாடம் ஒவ்வொரு நாடுகளின் தலைவர்களுடனும் தொடுக்கும் வார்த்தைப் போர் என்று இங்கும் பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினை.
சரி, சாதாரண மனிதர்களாகிய நாம் என்னதான் செய்வது? நம் ஓட்டு மிகப் பலம் வாய்ந்தது, அதனைச் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் சொல்லக் கேட்டிருப்பீர்கள். பயன்படுத்த நாம் ரெடி, ஆனால் இந்தப் பிரச்சினைகள் எல்லாவற்றிற்கும் தீர்வு காண்பவராகவோ, புதிதாகப் பிரச்சினைகள் முளைக்காவண்ணம் காப்பவராகவோ ஏதேனும் தலைவர் தென்படுகிறாரா? அது இல்லாத பட்சத்தில் நம் ஓட்டின் மதிப்புதான் என்ன? அதை வைத்துக் கொண்டு நம்மால் செய்ய முடிந்ததுதான் என்ன?
இவையெல்லாவற்றிற்கும் தீர்வு என்ன என்ற கேள்வி எழுகையில், ‘முகம்மது பின் துக்ளக்’ நாடகத்தின் வசனம் ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது. “பெருமாளைக் கேளுங்கோ, தெரிஞ்சா சொல்வார்”.
அதே பெருமாளை, அல்லாவை, ஏசுவை, இன்னபிற மதங்கள் வழிபடும் கடவுளரைத் தொழுது கேட்போம். நிச்சயமாக ஒரு விடிவுகாலம் பிறக்கும்.
– ஆசிரியர்.