\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

சந்தமும் சங்கீதமும்

தமிழ்த் திரையிசையுலகை தங்களது வரிகளாலும், இசையாலும் மிகச் சிறப்பாக ஆண்ட இரு மேதைகள் பிறந்த தினம் ஜூன் 24.  இயற்கையின் வியத்தகு படைப்புகளில் மிக உன்னதமான நிகழ்வு இது. இந்தக் காரணத்தால்தானோ என்னவோ இந்த இருவர் கூட்டணியில் உருவான பாடல்களெல்லாம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நீங்காத தனியிடத்தைப் பிடித்துவிட்டன. இன்று தமிழ்த் திரையிசை பிரமிப்பூட்டும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வித விதமான கருவிகள், பலப்பல குரல்கள், அசர வைக்கும் ஒலிப்பதிவு, தொழில்நுட்பம், எல்லைகள் இல்லா இசைச் சுதந்திரம் இப்படி பல மாற்றங்கள். இவை அனைத்தையும் தாண்டி இந்த இரு மேதைகள் படைத்த பாடல்கள் மனதை மயிலிறகால் வருடிச் செல்வதைப் போல சுகம் தரும் பாடல்கள். சுகம், துக்கம், ஏக்கம், விரக்தி  – எந்த மனநிலையில் இருந்தாலும் துணையாய் வந்து ஒட்டிக் கொண்ட பாடல்கள். இசைக்காகப் பாடலா? பாடலுக்காக இசையா என்று இவர்களில் ஒருவர் விளக்கினால் மட்டுமே அறிந்து கொள்ளும் வகையில் ஒன்றோடொன்று குழைந்து, இயைந்து உருவான பாடல்கள்! ஆம், கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் என்ற இரு மேதைகளும் ஒரே தினத்தில் தான் பிறந்தார்கள். கண்ணதாசன் 1927 ஆம் ஆண்டு சிறுகூடல்பட்டியிலும், விஸ்வநாதன் 1928 ஆம் ஆண்டு எலப்புள்ளியிலும் பிறந்தவர்கள். இவர்களிடையே பூத்து வளர்ந்த பந்தம் தமிழ்த் திசையிசை உலகுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

கன்னியின் காதலி

திரைப்படங்களுக்குக் கண்ணதாசன் எழுதிய முதல் பாடல் கன்னியின் காதலி படத்திற்காக  ‘கலங்காதிரு மனமே உந்தன் கனவெல்லாம் நனவாகுமொரு தினமே’. இதே படத்துக்காக சி.ஆர். சுப்புராமன் கொடுத்த மெட்டை கவிஞரிடம் வாசித்துக் காண்பித்து, பாடல் வரிகள் வாங்கி வரும் பொறுப்பு விஸ்வநாதனிடம் தரப்பட்டது. ‘காரணம் தெரியாமல் உள்ளம் களி கொண்டே கூத்தாடுதே’ என்று வரிகள் தந்தார் கண்ணதாசன். ‘மெட்டுக்குக் கச்சிதமாகப் பொருந்தினாலும் களி. கூத்து எல்லாம் நல்லாயில்லை, வேறு எழுதிக் கொடுங்கள்’ என்று அடம் பிடித்திருக்கிறார் விஸ்வநாதன். அந்தச் சமயத்தில் அங்கு வந்த உடுமலை நாராயண கவி, ‘காரணம் தெரியாமல் உள்ளம் சந்தோஷங் கொண்டாடுதே’ என்று மாற்றி எழுதிக் கொடுத்து, கண்ணதாசனிடம் ‘நீ அழகான கவிதைத் தமிழ்ல எழுதியிருக்க. அது இந்த மடையனுக்குப் புரியல… இங்க இருக்க நிறைய பேர் அவனை மாதிரி மடையனுங்கதான்.. அவனுங்களுக்குப் புரியற மாதிரி எளிமையா எழுது, சரியா?’ என்று சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்கும், எம்.எஸ். விஸ்வநாதனுக்கும் 1946 ஆம் ஆண்டு துளிர்த்த இந்த உறவு, விருட்சமாகி 1981 ஆம் ஆண்டு கண்ணதாசன் மறையும் வரை செழித்தது.

அனைவருக்கும் காபி கொடுக்கும் வேலைகளுக்கு இடையில் ஆர்மோனியத்தைத் தூக்கிக் கொண்டு போய்ப் பாட்டு எழுதி வாங்கிக் கொண்டு வரும் வேலை செய்து வந்த விஸ்வநாதன் சொல்லிய எளிமை கண்ணதாசனின் பாடல்களில் பிரதான, வசீகரிக்கும் தன்மையாகிவிட்டது. விஸ்வநாதன் இசையமைப்பாளராக உருவெடுத்த பின்னர் இந்தக் கூட்டணி எளிமையான வரிகளை, மென்மையான இசையுடன் கலந்து கொடுத்து ரசிகர்களைக் கட்டிப்போட்டது.  

 

பல பாடல்களில் கவியரசரின் வரிகள் மிக மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டு அவ்வரிகளில் பொதிந்திருக்கும் உள்ளார்ந்த தத்துவங்கள் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதும் உண்மை.

ஞானம்..

‘வானத்திலேறி சந்திர மண்டல வாசலைத் தொடலாமா?

மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?

என்றொரு காலம் ஏங்கியதுண்டு இன்று கிடைத்தது பதிலொன்று

ஞானம் பிறந்து வானில் பறந்து மீண்டு வந்தான் உயிர் கொண்டு’

(கேள்வி பிறந்தது அன்று)

கவியரசர் இதில் மறு ஜென்மம் பற்றிச் சொல்கிறாரா அல்லது மனிதன் நிலவுக்குச் சென்று வந்த நிகழ்வைப் பற்றி சொல்கிறாரா?

விரகம் ..

பழங்கால இலக்கியங்களில் புலவர்கள் சிலாகித்து எழுதிய இந்தச் சூழ்நிலை கிடைத்தால் விடுவாரா கவியரசர். அல்லது அவரது வரிகளை லேசில் விட்டுவிடுவாரா மெல்லிசை மன்னர்?

நெருப்பென்று சொன்னால் நீரிலும் அணையும்

நீரென்று சொன்னால் நெருப்பிலும் வேகும்

நான் கொண்ட நெருப்பு அணைக்கின்ற நெருப்பு

யார் அணைப்பாரோ, இறைவனின் பொறுப்பு   (கண்ணிலே என்ன உண்டு)

தலைவியின் விரகத்தை மறைமுகமாகக் கவியரசு எழுத்தால் வடிக்க, ‘யார் அணைப்பாரோ’ என்ற இரு சொற்களில் ஏக்கத்தையும் ‘இறைவனின் பொறுப்பு’ என்ற சொற்களில் காத்திருப்பையும் இசையால் எழுதியிருப்பார் இசையரசர்.

அரசியல் …

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த அரசியலை எண்ணிச் சிரித்த கவிஞரின் வரிகளுக்கு இசையரசர் சிரிப்பால் அலங்கரித்த பாடல்.

மேடையேறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு

கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு, கழுத பாடும் பாட்டு

ஆசை வார்த்த காட்டு உனக்குங்கூட ஓட்டு ஹஹஹா (சிரிப்பு வருது சிரிப்பு வருது)

அண்மையில் நடந்த தேர்தல் வரை நிலைத்து நிற்கும் இந்த  அவலத்தை அன்றே எண்ணிச் சிரித்துள்ளனர் இவர்கள்.

காதல் ..

காதல் அனுபவத்தை இதைவிடச் சிறப்பாக யாரும் சொல்லியிருக்க முடியுமா பாருங்கள்..

தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்

சொல்லாமல் கொள்ளாமல் அவளிடம் நான் சென்றேன்

அது கூடாதென்றாள்.. மனம் தாளாதென்றாள்

ஒன்று நானே தந்தேன்.. அது போதாதென்றாள்…

                    அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்)

 

நாணத்தால் முதலில் வேண்டாமென்று மறுத்தவள், பின்னர் ஆசை மிகுவதால் போதாதென்கிறாளாம். மேலைநாட்டு இசைச் சாயலில் இந்த உணர்வை வெளிப்படுத்தியிருப்பது மிகச் சிறந்த உத்தி எனலாம்.

 

வருணிப்பு ..

கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாவதில்லை. காதலியின் அழகை வருணித்துப் பாடும் பல பாடல்கள் உள்ளன. பெரும்பாலானவை வெளிப்புற உவமைகள், வருணனைகள் கொண்டவை. இந்தப் பாடல் வரிகளைப் பாருங்கள்.

உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா..

வண்ணக் கண்ணல்லவா..

இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா?

மின்னல் இடையல்லவா??     (கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா)

மேலோட்டமாகப் பார்த்தால் கண்கள் பெரிதாக ‘இருக்கிறேன்’ என்று சொல்வது போலவும் இடை மெலிந்து ‘இல்லவே இல்லை’ என்பது சொல்வது போலவும் கொள்ளலாம். ஆனால் உன்னித்துப் பாருங்கள். உண்டு எனச் சொல்வதற்குத் தலை மேலும் கீழும் ஆடும், அது போல் அவளது விழிகள் வெட்கத்தில் அவனையும், நிலத்தையும் மாறி மாறிப் பார்ப்பதால் உண்டு என்பதைப் போல மேலும் கீழும் ஆடுகிறதாம்.  இல்லை என்பதற்குப் பொதுவாகத் தலையை இடம் வலமாக அசைப்போம் இல்லையா? அதே போல அவளது இடை, இட வலமாக அசைகிறதாம்.

இயற்கையின் சிறப்புகளுடன் காதலியை ஒப்பிடும் காதலனாக மாறிய கவியரசைப் பாருங்கள்.

பறவைகளில் அவள் மணிப்புறா

பாடல்களில் அவள் தாலாட்டு

கனிகளிலே அவள் மாங்கனி

காற்றினிலே அவள் தென்றல்

பால்போல் சிரிப்பதில் பிள்ளை

பனிபோல் அணைப்பதில் கன்னி

கண்போல் வளர்ப்பதில் அன்னை

அவள் கவிஞனாக்கினாள் என்னை  (காலங்களில் அவள் வசந்தம்)

இன்னொரு பாடலில் அமைந்திருக்கும் உவமையின் சிறப்பைக் காணுங்கள். முத்தமிடுதலை எவ்வளவு நாசூக்காகச் சொல்லியுள்ளார். இந்தப் பாடலின் இசைச் சிறப்பை ‘பேரழகு’ என்ற ஒற்றை வார்த்தை விளக்கிவிடும்.

கண்களில் நீலம் விளைத்தவளோ

அதைக் கடலினில் கொண்டு கரைத்தவளோ

பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்

பேரழகெல்லாம் படைத்தவளோ – அவள்

செந்தமிழ்த் தேன் மொழியாள்

நிலாவெனச் சிரிக்கும் மலர்க் கொடியாள்

பைங்கனி இதழில் பழரசம் தருவாள்

பருகிடத் தலை குனிவாள்’                  (செந்தமிழ் தேன் மொழியாள்)

இப்படி வருணனையில் கவிஞர் எல்லை மீறிவிடுவதுமுண்டு.

கண்டாங்கி முன்னாட கன்னி மனம் பின்னாட

கண்டு கண்டு நானாட  செண்டாக நீ ஆடு!

பச்சரிசிப் பல்லாட பம்பரத்து நாவாட

மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு!

வள்ளி மனம் நீராடத் தில்லை மனம் போராட

ரெண்டு பக்கம் நானாட சொந்தமே நீ ஆடு!  (கட்டோடு குழலாட ஆட)

இந்தப் பாடலை கேட்டு விட்டு ஒரு ரசிகர், ‘பச்சரிசி போன்ற பல் ஆடுகிறது என்றால் அது கிழவியைக் குறிப்பதாக ஆகிவிடாதா? அப்படி என்றால் இந்தக் காதலே தப்பென்றாகிவிடுமே என்று கேட்டு எழுத, கவிஞர் அந்த ரசிகனுக்கு ‘தவறைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி என்றும் இனியும் அவ்வாறு நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும்’ பதிலெழுதினாராம்.

ஒரு முறை வளரும் உறவு …

தான் இறந்த பின்பு மனைவி வேறு மணம் செய்து கொள்ள வேண்டுமெனக் கேட்கும் கணவன், கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதாலும் ஏற்றுக் கொள்ள நினையாத மனைவி. இந்தச் சூழ்நிலைக்கான, அந்தக் காலப் பாடல்

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?

ஒருகொடியில் ஒருமுறைதான் மலரும் மலரல்லவா?

ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?  (சொன்னது நீதானா)

இந்த அசாதாரணச் சூழ்நிலைக்குப் பாடல் வரிகள் அமைந்தது ஒரு சிறப்பென்றால், இசையரசர் சிதார், சாரங்கி, சரோட், தபேலா என்ற கூட்டணியில் ஹிந்துஸ்தானி அற்புதத்தை நிகழ்த்தியிருப்பார். நினைத்தாலே சிலிர்க்கும் இந்தப் பாடல் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்த பாடலென்றால் அது மிகையில்லை.

சோர்வு ..

தான் சென்னை வந்த முதல் நாள் தனக்கு அடைக்கலம் தந்த சென்னை மெரீனா கடற்கரையின் பின்னணியில் பாடல். விடுவாரா கவிஞர்?

மனம் இருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்

வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்

துணிந்து விட்டால் தலையில் எந்தச் சுமையும் தாங்கலாம்

குணம்! குணம்! அது கோவிலாகலாம்…  (மனிதன் என்பவன் தெய்வமாகலாம்)

வாழ்வில் பல சோதனைகளைக் கண்டு சோர்வுற்ற ஒருவன் பாடுவதான பாடல். அந்த மனதின் தனிமையை, சோர்வை எவ்வளவு நம்பிக்கையுடன் பியானோ பின்னணியில், சாரங்கியுடன் குழைத்தெடுத்துத் தந்துள்ளார் எம்.எஸ்.வி.

சந்தமும் சங்கீதமும் …

கண்ணதாசன், எம்.எஸ்.வி. இணைந்து பாடல் உருவாக்கும் முறையை கண்டு பல முறை வியந்த பாலச்சந்தர், இசையைக் காதலியாகவும், கவியைக் காதலனாகவும் உருவாக்கி தந்த அற்புதமானதொரு பாடல் சூழல்.

மழையும் வெயிலும் என்ன

உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன

ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்

கவிதை உலகம் கெஞ்சும்

உன்னைக் கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்

கொடுத்த சந்தங்களில் என் மனதை

நீ அறிய நான் உரைத்தேன்

சிப்பி இருக்குது முத்தும் இருக்குது

திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது.

இந்த அற்புதக் கூட்டணியின் படைப்புகளில் பல்லாயிரம் முத்துகளும், மாணிக்கங்களும் புதைந்துள்ளன. அவற்றைத் திறந்து பார்க்க நமக்குத் தான் நேரமில்லாது போய்விட்டது. ஆனால் அவை அழிந்துபோய் விடக் கூடியவை அல்ல.

இசை செவியளவில் முடிந்து விடுகிறது என்ற கொள்கை பரவி வரும் இன்றைய சூழ்நிலையில் இம்மேதைகள்  உருவாக்கிய பாடல்கள் உள்ளத்தில் ஊடுருவி செல்கின்றன; மனதுக்கு இதமளிக்கின்றன. உறக்கமில்லாது தவித்திடும் இரவுகளில், இவர்களின்  ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடலின் சுகத்தில் உருகி, நிம்மதியாக உறங்கும் பலர் இன்றும் உள்ளனர்; காலத்துக்கும் இருப்பர்.

–      ரவிக்குமார்.

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad