வனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம்
பலவகை வண்ணத்துப்பூச்சிகளை பார்த்திட ஓரிடம் கனேடிய கேம்பிரிஜ் சரணாலயம்.
கோடையில் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்திலிருந்து ரொறான்ரோ மாநகர் நோக்கி 401 பெருஞ்சாலையில் (highway) செல்லும் போது பரந்த பச்சைப் பசேல் நிலங்கள் இருபுறமும் காணப்படும். இது சனநெருக்கடியான சிமெந்து கட்டடக் காடுகளால் ஆன டெட்ராயிட் நகரையும் , மத்திய ரொறான்ரோ நகரையும் விட மிகவும் இதமான காட்சி ஆகும்.
இந்தப் பெருஞ்சாலையில் செல்லும்பொழுது சாலையோர அறிவுப்புப் பலகைகள் பல வரும். இவற்றில் குவெல்ஃப், வாட்டலு பல்கலை ஊடாக வரும் போது ஒரு அறிவிப்புப் பலகை எனது கண்களைக் கவர்ந்தது. கேம்பிரிட்ஜ் வண்ணத்துப் பூச்சிகள் சரணாலயத்துக்கு இங்கு வெளியேறவும் என்ற அறிவிப்பு அது.
வட அமெரிக்க நீண்ட சாலைப் பிரயாணங்களில் சலிப்பை முறிக்க இடையிடையே பல விடுதிகள், சாவடிகள் காணப்படும். எனினும் பெருஞ்சாலைகளை ஒட்டியுள்ள சிறு ஊர்கள் உற்சாகமான, உசிதமான பல உள்ளுர் பொக்கிஷங்களைக் கொண்டுள்ளன.
ரொறான்ரோ மாநகர் சென்றடைய சில மணி நேரங்கள் ஆகலாம் என்பதால் சிறு இடைவெளி எடுத்து வண்ணத்துப்பூச்சிகளைப் போய்ப் பார்த்து வரலாமே என்று உத்தேசித்தேன்.
401 பெருஞ்சாலைப் பயணத்தில் இருந்து வெளியேறி நாட்டுப்புறப் பாதையில் எனது வாகனத்தைச் செலுத்த ஆரம்பித்தேன். மூன்று திருப்பங்களுக்குப் பின் வந்த சிறிய சந்தில் சற்றுத் தூரத்தில், பயிர் நிலங்கள் மத்தியில் தெரிந்தது ஒரு வெள்ளை நிறக் கட்டிடம். சற்று நெருங்கி சென்ற போது கேம்பிரிட்ஜ் வண்ணத்துப் பூச்சி சரணாலயம் என்ற அறிவிப்புப் பலகை கண்ணில் பட்டது\.
வெளியிலிருந்து பார்க்கும் போது சாதாரண வர்த்தக் கட்டடம் போன்று காட்சி தந்தது. இதற்குள் எப்படி வண்ணத்துப் பூச்சிகள் இருக்கமுடியுமென்று யோசித்தேன். சரி வந்தாகி விட்டது உள்ளே போய்ப் பார்க்கலாமே என்ற சிந்தனையுடன் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தேன். வாகனத் தரிப்பு இடத்தில் இருந்து உள்நோக்கி நடந்து கட்டத்தின் பின்புறத்தை நோக்கினேன். அப்போது முழு வெள்ளை மற்றும் நீல முன் பகுதியும் வித்தியாசமான பல யன்னல்கள் உடைய தாவரங்கள் உள்ளேயே வளரும் பசுங்குடில் பகுதி தெரிந்தது.
மெதுவாக இரண்டு கண்ணாடிக் கதவுகளைத் தாண்டி கட்டத்தின் உள்நுழைந்தேன். அப்போதுதான் உள்ளே அழகிய வெப்ப வலய தாவரங்கள் மத்தியில், பெரிய சுவர் அலங்காரங்களில் அழகிய வண்ணத்துப்பூச்சிகள் பல நூறு காணப்பெற்றன. எந்தப் பக்கம் திரும்பினாலும் கண்கவர் வண்ணங்களில் வகை வகையான வண்ணத்துப் பூச்சிகள்!! ஆனாலும், ஒன்று கூட உயிருடன் இல்லை. ஆம். அங்கிருந்த கண்காட்சி அறைகளில் பற்பல விதமான வண்ணத்துப் பூச்சிகளும் அவற்றின் இறகுகளும் கவனமாகப் பேணப்பட்டுக் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
நாம் வண்ணத்துப்துக்கள் சரணாலயத்திற்குப் போனால் என்ன இது இறந்த பூச்சிகளை வைத்துள்ளார்களே என்று மனதில் கேள்வி எழுந்தது. அப்போதுதான் முன் வாசலில் இருந்த குறிப்பை வாசித்தேன். அது வண்ணத்துப்பூச்சிகள் சரணாலயம் உள்ளிட அனுமதிச் சீட்டை இடது பக்கமுள்ள கடையில் வாங்குங்கள் என்றிருந்தது.
அந்தக் கடை மிகவும் நூதனமாக இருந்தது. வண்ணத்துப்பூச்சி படங்கள் கொண்ட ஆடை, அணிகள், அலங்காரப் பொருட்கள், வீட்டுத் தோட்டங்களில் வண்ணத்துப்பூச்சிகளையும், தேன் குருவிகளையும் வரவழைக்க சாதனங்கள், புத்தகங்கள் என பல பொருட்கள் காணப்பெற்றன. அனுமதிச் சீட்டை வாங்கிகொண்டு நீண்ட பாதையினூடு சென்று அறைக் கதவைத் திறந்தேன்.
சொப்பனம் காண்பது போல, பல் திசையிலும், வித விதமான, பறக்கும் பல வண்ணப்பூச்சிகள் மனம் நிறையும் சந்தோசத்தை உடன் தந்தது. எங்கு துவங்கி, எவ்வழி நடப்பது என்று ஒன்றும் புரியாமல், வர்ண ஜாலத்தில் மயங்கித் தடுமாறினேன். வலம், இடம், நேரே என அனைத்துப் பாதைகளிலும் பல வண்ணப் பூக்கள், தாவரங்கள், அழகிய நீர் வீழ்ச்சி, ஒடும் அருவி என பல அமைப்புக்கள் காணப்பட்டன.
இந்தச் சரணாலயத்தில் ஏறத்தாழ 220 வகை வண்ணத்துப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. நான் சென்ற தருணம் வசந்த காலம் என்பதால் 2000 – 3000 பூச்சிகளைக் காணமுடிந்தது. பூச்சிகளின் செளகரியத்திற்காக வெட்ப தட்பம் 25-30 செண்டிகிரேடிலும் 85% ஈரப்பதத்துடனும் வருடம் முழுவதும் பேணப்படுமாம். அவ்விடம் வழிகாட்டும் ஒரு பெண் கூறினார் வண்ணத்துப்பூச்சிகள் வெயில் வந்தால் உற்சாகமாகச் செட்டையடித்துப் பறந்து மகிழுமாம்.
இங்கிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் தென் அமெரிக்காவிலிருந்து, ஆசியாவிலிருந்தும் மசுக் குட்டிகள், கூடு கட்டும் தருவாயில் கொண்டு வரப்பட்டு பின்னர் அவை முதிர்ந்து வண்ணத்துப்பூச்சிகளாக மாறிய பின்னர் சரணாலயத்தில் விடுவிக்கப்படுகின்றனவாம்.
யோகி