ஐந்தாம் தூண்
“மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்”. ஜனங்களை (மக்களை) பிரதானமாகக் கொண்ட இந்த ஆட்சிமுறை பின்னர் மக்களாட்சி என்றானது. நிர்வாகக் கிளை (executive), சட்டமன்றம் (legislative), நீதித்துறை (judicial) என்ற மூன்று கூறுகளாக மக்களாட்சி நிறுவப்பட்டது. ஜனநாயகத்தின் தூண்கள் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் செயல்களைத் திறனாய்வு செய்து விமர்சிப்பதோடு, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவதும் செய்தித்துறையின் முக்கியப் பொறுப்பு.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘லண்டன் கஸட்’ (The London Gazette) என்ற பத்திரிக்கை, அரசாங்கம் குறித்த மக்களின் கருத்துக்களையும் வெளியிடத் தொடங்கிய போது அரசாங்கத்தின் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது. அரசின் பல அடக்குமுறைத் தடைகளைத் தகர்த்தெறிந்து சட்ட ரீதியாக வெற்றி கண்டது அப்பத்திரிக்கை. அன்று லண்டன் கஸட் பெற்ற பத்திரிக்கைச் சுதந்திர வெற்றி, செய்தித்துறையை (Press) ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்ற நிலைக்கு உயர்த்தியது.
பல நாடுகளின் அரசியல் மாற்றங்களில் இந்த நான்காம் தூண் பெரும்பங்கு வகித்துள்ளது என்றால் அது மிகையில்லை. இந்தியாவில் சுதந்திரப் போராட்டங்கள் வலுப்பெற்ற சமயத்தில் செய்தித்துறை வளரத் தொடங்கியது. சுதந்திரத் தலைவர்களின் கருத்துக்களையும், புரட்சிகரப் பேச்சுகளையும் நாட்டின் பல மூலைகளுக்குக் கொண்டுசேர்த்தன பத்திரிக்கைகள்.
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
என்று பத்திரிக்கை உலகைப் பாராட்டிப் பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
சுதந்திரக் கொள்கையோடு மட்டுமே இயங்கிய பத்திரிக்கைகள், சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் சார்ந்த கொள்கைகளைத் தத்தெடுத்து வளர்த்துக் கொண்டன. வானொலி, தொலைக்காட்சி வந்த பின்பு செய்திகள் உடனுக்குடன் மக்களைச் சென்றடைந்துவிட, பல மணிநேரத் தாமதத்திற்குப் பிறகு வரக்கூடிய பத்திரிக்கைகள் மக்களைக் கவரும் உத்திகளில் இறங்கின. செய்திகளைச் செய்தியாக மட்டும் சொல்லி, மக்களை விழிப்படையச் செய்ய வேண்டுமென்ற பத்திரிக்கை அறம் தளர்ந்து போனது. மக்களின் விருப்பு, வெறுப்புகளைப் பொறுத்துச் செய்திகள் புது ‘வடிவங்களை’ எடுத்தன. அரசியல் அமைப்புகளும், பெரும் வர்த்தக நிறுவனங்களும் விரித்த வலைகளில் சிக்கி ஊடகத்துறை ‘நடுநிலை’ என்ற கோட்பாட்டிலிருந்து விலகிப் போனது.
எழுபதுகளில் தோன்றிய புலனாய்வு ஊடகவியல், ஊடகத்துறையில் ஏற்பட்ட புரட்சி எனலாம். அரசியல் பலங்களைப் பின்னுக்குத் தள்ளி, பேனா முனை கூர்மையானது என்பதை உறுதி செய்தது புலனாய்வு ஊடகவியல். 1972 ஆம் ஆண்டு ‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளிக்கொணர்ந்த ‘வாட்டர்கேட்’ ஊழல் அமெரிக்க அரசியலைப் புரட்டிப் போட்டது மட்டுமல்லாது உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்தது.
இந்தியாவில் ‘தி இந்து’ பத்திரிக்கையின் என்.ராம், சித்ரா சுப்பிரமணியம் ஆகியோர் போஃபார்ஸ் – இந்தியா ஒப்பந்தத்தைப் புலனாய்வு செய்து வெளியிட்ட செய்தியினால் ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. ராம்நாத் கோயங்காவின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையும் பல ஊழல்களை அம்பலப்படுத்தியது. இதன் அஸ்வினி சரின் எமெர்ஜென்சி காலக் கொடுமைகள் பற்றி எழுதிய கட்டுரைகள், அருண் ஷோரி அரசாங்கத்தின் சிமென்ட் கட்டுப்பாடுகள் குறித்து எழுதிய கட்டுரைகள் அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தின. ‘ஒப்பன் மேகஸின்’ வெளியிட்ட அரசியல் தரகர் நிரா ராடியாவின் ஒலிநாடாக்கள் 2G ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிப்படப் பெரும்பங்கு வகித்தன.
தமிழ்ப் புலனாய்வுப் பத்திரிகைகளின் முன்னோடி நக்கீரன் எனலாம். சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அரசாங்கங்களின் அத்துமீறல் தொடங்கி, சமீபத்திய நிர்மலாதேவி விவகாரம் வரையில் நக்கீரன் அதிகார வர்க்க அக்கிரமங்களை அலசி ஆராய்ந்தது.
செய்திகளுக்குப் பின்னாலிருக்கும் உண்மையைத் தோண்டித் துருவி வெளிக்கொணரும் இவ்வகை ஊடகங்களுக்குப் பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே. அரசாங்கங்கள், ஜாதிய அமைப்புகள், அரசியல் அமைப்புகள் எனப் பலவகை அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் இவர்கள் உள்ளாகிறார்கள். எமெர்ஜென்சி காலம் தொடங்கிப் பல பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. எம். ஜி. ஆர் முதலமைச்சராக இருந்தபோது தமிழ் நாட்டின் பாரம்பரியம் மிக்க பத்திரிக்கையான ஆனந்த விகடன் ஆசிரியர் வி. பாலசுப்ரமணியம், அந்த இதழில் வெளியான கார்ட்டூனுக்காகக் கைது செய்யப்பட்டதும், சமீபத்திய ஈ. பி. எஸ் ஆட்சியில் நெல்லை கந்துவட்டி தற்கொலைச் சம்பவம் குறித்துச் சித்திரம் தீட்டிய கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதும் அரசாங்க எதேச்சிகாரத்துக்கு ஓவியங்களும் விலக்கல்ல என்று நிரூபித்தன. ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது பாய்ந்த 200க்கும் மேற்பட்ட அவதூறு வழக்குகளுக்காக இன்றும் பலர் நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர்.
இவையெல்லாவற்றுக்கும் உச்சமாக இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் 58 பத்திரிக்கை, ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிலை வழிபாடு குறித்து எழுதி சாகித்ய அகாடமி பரிசு வென்ற எம். எம். கல்புர்கி, இந்திய ஜாதி அமைப்புகளால் தலித்துகள் படும் அவதிகளை எழுதிய தபோல்கர், வலதுசார் இந்துத்துவ அமைப்புகளின் எதேச்சிகாரத்தைக் கண்டித்த கௌரி லங்கேஷ், மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்ஸே பாராட்டப்படுவதை ஆட்சேபித்துக் கட்டுரை எழுதிய கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகள் தேசிய அளவில் பத்திரிக்கைச் சுதந்திரம் குறித்த கேள்விகளை எழுப்பின.
மத்தியப் பிரதேசத்தில் மணல் மாஃபியா கும்பலிடம் 25000 ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் அதிகாரியைப் பற்றி எழுதிய சந்திப் ஷர்மா, பீகார் கோவிலொன்றில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி எழுதிய நவீன் நிஷால், விஜய் சிங் ஆகியோர் அடுத்தடுத்த நாட்களில் கொலை செய்யப்பட்டது பெருமளவில் பேசப்படவில்லை. தமிழ்நாட்டில் நக்கீரன் பத்திரிக்கையின் செல்வராஜ் திருச்சியில் நடைபெறும் அரசியல் அட்டூழியங்களை ஆராய்ந்த காரணத்தினால் பெரம்பலூர் பஸ் நிலையத்தில் வைத்து 12 நபர்களால் கொல்லப்பட்டார். சில நொடிகளில் 20க்கும் அதிகமான கத்திக்குத்துக்களால் இவர் மாண்டது பரிதாபத்துக்குரியது. கொலையாளிகள் அனைவரும் அன்றைய தினமே பிடிபட்டபோதிலும், இக்கொலைக்கான மூலகாரணத்தைத் தேடுவதில் பத்திரிக்கையுலகம் கவனம் செலுத்தவில்லை என்பது மிகக் கொடுமையான விஷயம்.
இது போன்ற பாதுகாப்பற்ற, சுதந்திரம் மறுக்கப்படும் நிலையில் ஊடகங்கள் அரசியல் பக்கச்சார்பு எடுப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது. இன்றைய தினத்தில், நடுநிலை ஊடகம் என்று ஒன்று கூடக் கிடையாது எனலாம். அனைத்துப் பத்திரிகை ஊடக நிறுவனங்களும் நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஏதேனும் ஒரு கட்சியை அல்லது அதன் கொள்கைகளை ஆதரித்துச் செயல்படுகின்றன. பல பத்திரிகையாளர்கள், கட்சிகளுக்கு அரசியல் வியூகம் அமைத்துத் தரும் ஆலோசகர்களாக மாறிவிட்டனர்; தேர்தல் நேரங்களில் கூட்டணி பேரம் பேசும் தரகர்களாக உருவெடுக்கின்றனர்.
தொலைக்காட்சி ஊடகங்களின் நிலை இன்னும் மோசம். இந்தியாவில் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பும் பிரத்யேக சேனல்கள் 106 உள்ளன. இவை அனைத்தும் ஒரே செய்தியை 1௦6 கோணங்களில் சொல்லி, பார்வையாளர்களைக் குழம்பச் செய்கின்றன. இது போதாதென்று, விவாதம் என்ற பேரில் நான்கைந்து பிரமுகர்கள் அமர்ந்து பேச, மூலச் செய்தி 530 கோணங்களில் சின்னாபின்னப்படுகிறது. இதனைப் பார்த்தே பழகிவிட்ட பொதுமக்களும் உணர்ச்சி மிகுதியில் இவற்றில் ஒன்றுக்கு அடிமையாகி விடுவதுதான் வேதனை. ஒரு செய்தியைப் பார்க்கும் அல்லது படிக்கும் சராசரி மனிதன் கூட அதனை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், தனக்குச் சாதகமான கோணத்தில் உருவகப்படுத்திப் பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டான்.
தொலைக்காட்சி சேனல்கள் டி. ஆர். பி (Target Rating Points – TRP) எனும் மதிப்பீட்டுப் புள்ளிகளுக்காக ஊடகத் தர்மங்களை அடமானம் வைத்து விடுகின்றன. அரசியல், ஜாதியம், சினிமாவுலகம் என்ற மிகச்சிறிய வட்டத்துக்குள் பார்வையாளர்களைப் பரபரப்புடன் சுற்ற வைத்து வியாபாரம் செய்ய முனையும் இவர்கள் செய்திகளை ஆய்வுக்குட்படுத்துவதில்லை. மேலும் இவர்கள் முந்தைய தினம் தெரிவித்த செய்திகளை அன்றைய தினத்தோடு கடந்து சென்றுவிடுகிறார்கள். புதுப்புதுச் செய்திகளை அறிய விரும்பும் மக்களும் அன்றைய தினம் மட்டும் உணர்ச்சி வயப்பட்டுப் பேசி, மறுநாள் அதனை மறந்து விடுகின்றனர். பழைய நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்பதையோ அல்லது அவற்றைப் பாராட்டி மகிழ்வதையோ மக்கள் விரும்புவதில்லை. செய்திகள் ஒரே நாளில் மரித்து விடுகின்றன. அவை வரலாற்றுக் குறிப்புகளாக மாறுவதில்லை! தற்கால நாட்டு நடப்புகள் வரலாற்றுப் பக்கங்களில் குறிப்பிடுமளவுக்கு உகந்தவையல்ல என்பது நிஜமெனினும், இது போன்ற அவலங்கள் வருங்காலத்தில் ஏற்படாமல் தவிர்க்க உதவுமல்லவா?
தேசிய ஒருமைப்பாட்டைக் குலைக்கும் இனம், மொழி, மதம் என்ற சுமைளைத் தாங்க முடியாமல் முதல் மூன்று தூண்களும் விரிசல் கண்டுவிட, அந்தச் சுமைகள் கரைந்து போகும் வரை முட்டுக் கொடுக்க வேண்டிய நான்காவது தூணும் தளரத் தொடங்கியது.
அதே சமயத்தில், இணையத் தொழில்நுட்பம் வசப்பட்டதால், மரபு சாரா நவீன ஊடக உத்திகள் பெருகின. எந்தவித அச்சுறுத்தலும், அழுத்தமும் இல்லாது இத்துறை, ஜனநாயகத்தின் ஐந்தாம் தூணாக விளங்கும் என்ற நம்பிக்கை துளிர்த்தது. இத்தூணின் பலத்தினை அடுத்த இதழில் காணலாம்.
(தொடரும்)
– ரவிக்குமார்.