கேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம்
உலகில் அருகி வரும் உயிரினமான புலிகளைப் பற்றிய தகவல் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்தக்கூடும். உலகிலுள்ள காடுகளில் உள்ள புலிகளை விட, அமெரிக்காவில் தனியார் வசம் சிக்கியுள்ள புலிகள் அதிகமாம். வெளிநாட்டில் இருந்து வரும் மனிதர்களுக்கு ஆயிரதெட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் புலிகள் போன்ற காட்டுவிலங்குகளுக்கென பாதுகாப்புச் சட்டங்கள் ஏதும் இல்லை. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வீடுகளில் செல்லப்பிராணியாகவும், காட்சிப்பொருளாகவும் இவ்விலங்குகள் பல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இவற்றால் ஆபத்து ஏற்படுவதும் நிகழ்கிறது.
நிலைமை இப்படி இருக்க, சட்டப்பூர்வமாகக் காட்டு விலங்குகளைப் பராமரித்து, மக்களுக்கு அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்புகளும் நாடு முழுக்க இருக்கின்றன. கேன்சஸில் இருக்கும் சீடர் கோவ் பாதுகாப்பகம் (Cedar Cove Feline Conservatory & Sanctuary) அப்படியொரு அமைப்பாகும். இங்குச் சைபீரியப் புலிகள், இந்தியப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், நரிகள் போன்றவைப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பெரிய மிருகக்காட்சிச்சாலை என்று சொல்ல முடியாத அளவில் இருக்கிறது. ஒரு மணி நேரத்தில் சுற்றிப்பார்த்துவிட்டு வந்து விடலாம். ராஜா, மோகன் என்று இங்கிருக்கும் பெங்காலி புலிகளுக்குப் பெயர் வைத்திருக்கிறார்கள். சனி, ஞாயிறுகளில் சாயங்கால வேளைகளில் பார்வையாளர்கள் முன்னிலையில் உணவு அளிக்கிறார்கள். அவற்றுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது போன்ற தகவல்களை லைவ்வாக அளிக்கிறார்கள்.
ஒவ்வொரு புலிக்கும் பிரத்யேகமாக உணவு எடுத்து வைத்து பரிமாறுகிறார்கள். மாட்டுக்கறி, பன்றிக்கறி, கோழிக்கறி ஆகியவற்றைக் கலந்துக்கொடுத்தாலும், இந்த விலங்குகளுக்குப் பிடித்தமானவை, கொழுப்பு அதிகம் இருக்கும் பன்றிக்கறி தானாம். கோழிக்கறியை எல்லாம் வேறு வழியில்லாமல் தான் சாப்பிடுகிறதாம். முன்னதாக, தண்ணீர் அடித்து, குளிப்பாட்டி குளிர்ச்சிப்படுத்துகிறார்கள்.
வெயில்காலம் என்பதால் ஆங்காங்கு மின்விசிறிகள் வைத்து வெயிலின் தாக்கத்தைக் குறைக்கப் பார்க்கிறார்கள். குளிர்காலத்திலும் திறந்து இருக்கும் இந்தச் சரணாலயத்தில் வாழ்ந்து வரும் விலங்குகளுக்குக் குளிர்காலம் தான் பிடித்த காலமாம்.
ஒரு பக்கம் வேட்டைக்காரர்களால் பாதிப்பு, இன்னொரு பக்கம் கடத்தல்காரர்களால் பாதிப்பு என்று இருக்கும் புலிகளை, இது போன்ற சரணாலயங்களில் போய்ப் பார்ப்பது அவற்றுக்கு உடனடியாக எந்த நன்மையையும் கொண்டு வரப்போவதில்லை என்றாலும், புலிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அடுத்தத் தலைமுறையினருக்கு அளிப்பதில் உள்ள நன்மையைக் கருத்தில் கொண்டு, நாமும் புலிகள் குறித்த விழிப்புணர்வில் பங்குப் பெறலாம்.
- சரவணகுமரன்.