\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழ்ப் படம் 2.0

இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல வசூலைப் பெற்றது.

டிவியில் வந்து கொண்டிருந்த “லொள்ளு சபா“ போன்ற நிகழ்ச்சிகளின் திரைப்பட வடிவம் தான் என்றாலும், முழுக்க முழுக்கவே சினிமாவில் சினிமாவைக் கேலி செய்வது அப்போது புதிதாக இருந்தது. வழக்கமான திரைப்பட வடிவில் இல்லாமல் புதுவகையாக இருந்தது. இந்தியாவில் வெளிவந்த முதல் ஸ்பூஃப் திரைப்படம் அதுதான் என்கிறார்கள்.

தற்சமயம் இதன் இரண்டாம் பாகம் “தமிழ்ப் படம் 2.0” வெளியாகிவுள்ளது. ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுக்குத் தான் காலை 5 மணிக் காட்சி இதுவரை இருந்தது. பெரிய நடிகர்கள் இல்லாத, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு 5 மணிக் காட்சிப் பெருமை கிடைத்திருப்பது, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பைக் காட்டுவதாக அமைகிறது. அந்த எதிர்பார்ப்பிற்கு முதல் பாகம் ஒரு காரணம் என்றால், இப்படத்திற்கு இவர்கள் வெளியிட்ட தொடர் விளம்பரங்கள் இன்னொரு காரணம் எனலாம். இன்னமும் வராத படங்களை எல்லாம் கலாய்த்து விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

இதுதான் கதை என்று பெரிதாக எதையும் சொல்லமுடியாது. ஒரு போலீஸ் அதிகாரி வாழ்வின் அத்தியாயங்கள் என்று பல நகைச்சுவைக் காட்சிகளின் தொகுப்பாக இப்படம் வந்துள்ளது. மிர்ச்சி சிவா செய்யும் காமெடி ரொம்ப இயல்பானது. நேரில் பேசுவது போல் தான் படத்திலும் பேசுகிறார். அவர் பேசும் வசனங்களுக்கும், பெரிய உணர்ச்சி வெளிப்பாடு இல்லாத முகபாவத்திற்கும் தியேட்டரில் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது.

தேவர் மகன், வேட்டையாடு விளையாடு, துப்பாக்கி, மங்காத்தா, வேதாளம், ரெமோ, விக்ரம் வேதா, 2.0 என்று வந்த, வரவிருக்கும் படங்களை மட்டுமின்றி, இதில் தமிழ் சினிமாவிற்கு வெளியே நடிகர்கள் பேசும் பேச்சுகளையும் கலாய்த்து இருக்கிறார்கள். நான் வெளிநாட்டுக்குப் போயிடுவேன், நான் எப்ப வருவேன்.. எப்படி வருவேன்’ன்னு தெரியாது.. ஏன்னா வரவே மாட்டேன், என் தயாரிப்பாளரிடம் காரே இல்லை என்று பாரபட்சம் பார்க்காமல் கலாய்த்து இருக்கிறார்கள். அடுத்ததாக, இதில் அரசியல்வாதிகளையும் விட்டு வைக்கவில்லை. அதிக டேமேஜ் தற்போதைய ஆளும்கட்சிக்குத் தான். இந்தியாவைத் தாண்டி ஆங்கிலப் படங்கள், கேம்ஸ் போன்றவையும் இவர்களின் கலாய்ப்பில் இருந்து தப்பவில்லை.

இம்மாதிரிப் படங்களில் பொதுவாகப் பெரிய செலவு இருக்காது. ஆனால் இப்படத்தில் கிராஃபிக்ஸ், வெளிநாட்டுப் படப்பிடிப்பு, செட் ஆர்ட்ஸ் என்று எதிர்பார்ப்பிற்கு மேல் செலவு செய்திருப்பது படத்தின் தரத்தில் தெரிகிறது. கலாய்த்திருக்கும் விஷயம் காட்சியில் மேம்போக்காக வசனத்தில் மட்டும் இல்லை. காட்சியின் பின்னணியில், துணை நடிகர்களின் ஓர வசனத்தில் என்று ரொம்பவே நுணுக்கமாகப் பார்த்துச் செய்திருக்கிறார்கள். ஆனால், இவையெல்லாம் அதிகம் கவனத்தில் படாமல் போகவே வாய்ப்பதிகம். இன்னொரு முறை காணும் போதும், டிவியில் அடிக்கடிப் போடும் போதும், இவை ரசிகர்களால் கவனிக்கப்படும்.

முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவா, திஷா பாண்டே தவிர சதீஷ், மனோபாலா போன்றோரும் இதில் உள்ளனர். சதீஷுக்கு இதில் சிவாவிற்கு அடுத்தபடியான பெரிய கதாபாத்திரம். பல கெட்டப்புகளில் வருகிறார். எப்போதும் போல் காமெடி சுமாராகவே செய்கிறார். சேத்தன், சந்தான பாரதியின் காமெடி எடுபட்டிருக்கிறது. முதல் பாகத்தில் வந்தார் என்பதற்காகவே ஒரு பாடலில் கஸ்தூரியை மீண்டும் நடனமாடச் செய்திருப்பதை மன்னிக்க முடியாது.

முதல் பாகத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் தான் இப்பாகத்தையும் இயக்கியுள்ளார். அதே போல், அதே இசையமைப்பாளர் – கண்ணன். கவனிக்கத்தக்க பாடல்களை, பின்னணி இசையை அளித்துள்ள கண்ணனுக்கு ஏன் வேறு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை என்று தெரியவில்லை. முதல் பாகத்தில் ஒளிப்பதிவு செய்த நிரவ்ஷா, அப்படத்தில் காட்சிகளின் தரத்திற்குப் பெரும் காரணமாக இருந்தார். அது போலவே, இப்படத்திலும் ஒளிப்பதிவில் குறை சொல்ல முடியாத தரத்தில் காட்சிகளைக் கொடுத்துள்ளார், ஒளிப்பதிவாளர் கோபி.

தமிழ்ப்படம் என்று ஒரு பிராண்ட் உருவாகியுள்ளது. இப்படிக் கலாய்த்துப் படம் எடுத்து ரசிகர்களின் கவனத்தைப் பெறுவது வெற்றி தரும் விஷயம் என்றாலும், தொடர்ந்து சலிப்பில்லாமல் காட்சிகளை அமைப்பது கவனத்திற்குரிய விஷயம். ஆங்காங்கே, அந்தத் தொய்வு இருக்கிறது. பிற நடிகர்களின் ரசிகர்களை இது போன்ற கலாய்ப்புகளால் எரிச்சலடைய விடாமல் பார்த்துக் கொள்வதும் தேவை எனும் போது, அவற்றை எல்லாம் சி.எஸ்.அமுதன் – மிர்ச்சி சிவா கூட்டணி திறம்படக் கையாண்டு இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.

இப்படிப் பிற படங்களைக் கிண்டல் செய்து குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், நீண்ட காலத்திற்குப் பிறகு தற்சமயம் தமிழ் சினிமாவில் இரு மடங்கு லாபம் பார்த்த படம் என்கிறார்கள். இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கான செய்தி இருக்கிறது.

–          சரவண குமரன்.

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad