பள்ளிக்கூட வழித்தடம்
ஊருக்குக் கிழக்கால, கோயிலுக்குப் பக்கத்துல
அமைதியா இருக்குற என் பள்ளிக்கூடம் ..
மேற்கால இருக்குற மேட்டுத் தெரு வீதியில
ஓலக் குடிச தான் என் வீடு…
ஒத்தயடிப் பாத ஒண்ணு ,
வளைஞ்சு நெளிஞ்சு போயிருக்கும்!!
குண்டும் குழியுமா
கல்லெல்லாம் நெரஞ்சிருக்கும்.
காலையில விடியு முன்ன
கால் நடையா நடந்தாத்தான்
வகுப்பறை மணிக்கு முன்ன
வாசலில் சேர முடியும்
ஏரிக்கரையோரம் போகயில
தாமரப் பூ வாசம் வரும்!
கரையோரப் பனமரத்துல
இளப்பார நிக்கத் தோணும்…
புளியங்காப் பதம் பாக்க
கல்லெரிவேன் குறி பாத்து –
அதப் பாத்த கொக்கெல்லாம்
பறந்தோடும் வயக்காட்டில்!
பால்காரர் சைக்கிள் மணி
கல கலன்னு கேட்டதுமே
மணிபாத்து தெரிஞ்சுக்குவேன்
எத்தனை கல் தூரமுன்னு…
மாரிமுத்து தோட்டத்து மாங்காய
திருட்டுத்தனமா பறிச்சிகிட்டு
காவக்காரன் வர்றதுக்குள்ள
பறந்துடவேன் இடத்தவிட்டு…
கிழக்குத்தெரு முருகனும்,
என்னோட சேந்துக்குவான்
பொடி நடையாக் கதபேசி
பொறி உருண்ட பகிர்ந்துக்குவோம்..
முனியப்பன் கோயில் வந்ததுமே
துள்ளிக் குதிச்சி கத்திடுவோம்
குதிரை மேல ஏறிகிட்டு
ஊர் சுத்தி வந்திடுவோம்…
திண்ணையில உக்காந்து
புளி மாங்கா பிரிச்சிகிட்டு
எண்ணி எண்ணிச் சரிபாத்து
பைக்குள்ள போட்டுக்குவோம்.
பள்ளிக் கூட மணியடிக்கும்
சத்தங் கேட்டு
ஓடியாந்து நின்னுக்குவோம்
வகுப்பு வரிச பாத்து…!!
– ந.ஜெகதீஸ்வரன்