ஆயிரங்காலத்துப் பயிர்
“கணேஷ், நோக்கு நெனவிருக்கா… நாம மொதமொதல்ல பாத்துண்டது இந்த மரத்தடியிலதான்”…. பாரதி இந்த வாக்கியத்தைச் சொல்கையில், அவளின் கண்கள் பனித்ததைக் கணேஷ் கவனிக்கத் தவறவில்லை. “யெஸ் பாரதி, கோல்டன் டேஸ்” என்று பொதுவாய்ச் சொல்லி வைத்தான்.
“லைஃப் எப்படிப் போயிண்ட்ருக்கு, கணேஷ்” பாரதி தொடர்ந்தாள். தங்களது இருபத்தி ஐந்தாம் வருடக் கல்லூரி நிறைவைக் கொண்டாடுவதற்காகக் கூடியிருந்த அனைத்து முன்னாள் மாணவர்களின் குடும்பங்களிலிருந்தும் சற்று நழுவி, தனிமையில் இவர்களிருவர் மட்டும் சந்தித்துப் பேசத் தொடங்கியிருந்தனர். நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் இவர்களிருவரும் தங்களது கல்லூரிப் பருவ நினைவுகளை அசைபோடத் துவங்கியிருந்தனர். கணேஷ் தூரத்தில் தன் மனைவி லக்ஷ்மி, நண்பனின் மனைவி சுனிதாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதையும், குழந்தைகள் அருகில் விளையாடிக் கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டே பாரதியின் எதிரில் நின்று கொண்டிருந்தான்.
“என்ன கணேஷ், தனியா பேசிண்டிருக்குறது சங்கோஜமா இருக்கா?” என்று அமைதியாகக் கேட்டாள். “நோ, நோ.. என்ன சொல்றதுன்னு நேக்குப் புரியல..” என்று இழுக்க, “என்னைப் பத்தி எப்பவாவது நினைச்சுக்கறது உண்டா, கணேஷ்” என்ற பாரதியிடம், ”என்ன இப்படி சொல்லிட்ட? நினைக்காத நாளேயில்லன்னுதான் சொல்லணும்” என்றான். “பாரதி, என்னைப்போல அதிருஷ்டக்காரன் இந்த லோகத்திலயே யாருமில்ல தெரியுமா.. எப்படி எல்லாம் பழகினோம், எவ்வளவு சந்தோஷமான நாட்கள், மனசுலயே குடும்பம் நடத்தி, கொழந்தேள் பெத்து, பேரு வச்சு, பேரப்புள்ளேள் கூட கெடச்சமாதிரி நெனச்சுண்டோமே” சொல்லி முடிக்கையில் அவனுக்கும் குரல் தழுதழுக்கத் தொடங்கியது. முகத்தை மறுபக்கம் திருப்பிக் கொண்டாள் பாரதி, அழுவது அவனுக்குத் தெரியக்கூடாது என்பதற்காக. ஆண் குழந்தை பிறந்தால் சந்தோஷ் என்று பெயர் வைக்க வேண்டும் என்பது கணேஷின் விருப்பம். பெண் குழந்தை பிறந்தால் சங்கீதா என்றும் பெயர் வைக்க வேண்டுமென்பது பாரதியின் விருப்பம்.
பாரதியின் இந்நாள் கணவன் அங்கு வந்திருக்கவில்லை, வந்திருந்தால் இதுபோல் அவளால் சந்திக்க முடிந்திருக்குமா எனத் தெரியவில்லை. காலச்சக்கரம் அவளின் வாழ்க்கையை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டுவிட்டது. தனக்கு இவன் தான் என எண்ணி மூன்று வருடங்களைக் கழித்தவள். பாசத்தின் எல்லையைத் தொட்டவர்கள் இருவரும், அதனாலேயே தன்னை அவனிடம் முழுவதுமாக அர்ப்பணித்திருந்தாள். உள்ளத்தால் கணவன் மனைவியாய் வாழ்ந்த அவர்கள், உடலாலும் ஓரிரு முறை இணைந்திருந்தனர். கொச்சைப் படுத்துதல் ஏதுமின்றி, இதனை யாரிடமும் விளக்கிட இயலாது. ஆணுக்கு இந்தச் சமுதாயத்தில் இருக்கும் பலவித சுதந்திரங்களில் ஒன்றிரண்டுகூடப் பெண்ணுக்கில்லையெனத்தான் சொல்ல வேண்டும். இவர்களின் இந்த உறவு குறித்து, பாரதி ஒருமுறைகூடத் தன் கணவனிடம் பகிர்ந்து கொண்டதில்லை. அவளின் கணவரும் மிக நல்ல மனிதர், ஆனாலும் பெரும்பாலான இந்தியக் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்களால் தன் மனைவி வேறெருவருடன் உறவு கொண்டவள் என்பதை ஏற்பதற்கு இயலாது என்பதே நிதர்சனம். கணவனால் இதனைத் தாங்கிக் கொள்ள இயலாது என்பதாலேயே, அவரிடம் அவள் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால் அந்தக் குற்ற உணர்வு அவளைக் கொல்லாத நாட்களே இல்லையெனச் சொல்லி விடலாம்.
கணேஷ் தான் அதிர்ஷ்டக் காரன் என்று சொன்னதற்கு முக்கியக் காரணம், அவனால் நடந்த அனைத்தையும் தன் மனைவி லக்ஷ்மியிடம் பகிர்ந்து கொள்ள முடிந்தது. தான் யாரென்றே அறிமுகம் ஆகாத காலத்தில் வைத்திருந்த உறவு என்பதால், அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பக்குவம் அவளிடமிருந்தது. கணேஷிற்கு ஆரம்பத்திலிருந்த குற்ற உணர்வு பெருமளவு குறைந்து, நாளடைவில் இல்லாமலே போயிருந்தது. இதற்கு முக்கியக் காரணம் லக்ஷ்மி அதனை எடுத்துக் கொண்ட விதமும், அவனுக்கு அவள் வழங்கிய ஆறுதல்களும்தான்.
இருபத்தி ஐந்தாம் வருடக் கொண்டாட்டங்களுக்கு வருவதாக எண்ணமே இல்லை அவனுக்கு. வந்தால் பாரதியைச் சந்திக்க வேண்டியிருக்கலாம் என்ற பயமே காரணம். அவர்களிருவரின் காதல் அந்தக் கல்லூரி முழுவதும் பிரபலம். பார்க்கும் அனைத்துப் பொது நண்பர்களுக்கும் அவர்களிருவரின் சந்திப்பு நிச்சயமாக உறுத்தும் என்பதே அவனது மனப்போராட்டத்திற்குக் காரணம். “ஏன்னா, நீங்க சொல்றத வெச்சுப் பாக்கறச்ச, அவா உங்கள அவ்வளவு லவ் பண்ணியிருக்கா, சந்தர்ப்ப சூழ்நிலை, பிரிஞ்சுட்டேள், அதுனால இருந்த காதல் இல்லன்னு ஆயிடுமா.. அவா நன்னா இருக்காளா, இல்லையான்னு பாக்கறதுக்கு இது ஒரு பெரிய சந்தர்ப்பம். ரெண்டு பேருக்கும் இவ்வளவு ஏஜ் ஆயிடுத்து, பக்குவமாப் பேசி ஒருத்தருக்கொருத்தர் ஃப்ரெண்ட்ஷிப் வளத்துக்கோங்கோ.. ஏதானும் ஹெல்ப் தேவைப்பட்டாக்கூட பண்ணலாமே…” சொன்ன மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்தான். வழியில் போகும் பெண்ணை இரண்டாவது முறையாகத் திரும்பிப் பார்த்தாலே, சந்தேகப்பட்டு முழுதினமும் சண்டை போடும் பெரும்பாலான பெண்களுக்கு மத்தியில், இப்படியும் ஒருத்தியா என்று நினைக்கையில் கணேஷிற்குப் பெருமையும் ஆச்சரியமுமாக இருந்தது. அதே நேரத்தில், அவளுக்கு உண்மையாக நடந்து கொள்கிறோமா என்ற குற்ற உணர்வும் தொடர்ந்து கொண்டே இருந்தது.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களாக இருவரும் ஒன்றும் சொல்லவில்லை. தூரத்தில் விடாமல் கரையை வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. “பாரதி, ஹவ் இஸ் யுவர் லைஃப்? எத்தன கொழந்தேள்” என்று கேட்ட கணேஷிடம், நேரடியான பதில் தராமல், “ஸோ கணேஷ், ஐ ஹியர் யு ஹேவ் பிகம் அ ரைட்டர்.. நேக்கு அப்பவே தெரியும், யூ வில் பிகம் சக்ஸஸ்ஃபுல் இன் எனிதிங் யூ எம்பார்க் ஆன்” என்று இழுத்தாள். “பாரதி, மை இங்க்ளிஷ் இஸ் ஆல் யுவர்ஸ்… நம்ம ஃப்ரெண்ட்ஷிப் இருந்திருக்கலன்னா நான் ஒரு வர்ட் இங்க்ளிஷ் பேசியிருப்பேனாங்க்றது சந்தேகந்தான்…” கணேஷ் முடிப்பதற்கு முன், குறுக்கிட்ட பாரதி, “நோ, நோ… யூ வேர் அ வெரி ஸ்மார்ட் பாய்… எல்லாத்தயும் கத்துக்குற ஆர்வமும் ஸ்மார்ட்னஸும் நோக்கு உண்டு…” சொல்லிவிட்டு, “பை த வே, டாக்டரேட் முடிச்சுட்டியா?” என்றாள் பாரதி. திடீரென இந்தக் கேள்வியை எதிர்பார்த்திராத கணேஷ், கல்லூரிப் பருவத்தில் தனக்கிருந்த அந்த ஆர்வம் முழுவதுமாக மறைந்து விட்டதை எண்ணிப் பார்த்தான். சொல்லப் போனால், அது போல ஒரு ஆர்வம் இருந்ததென்பதே மறந்து விட்டிருந்தது அவனுக்கு. என்ன சொல்வதென்றே தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவனிடம் மெதுவாக, “மகாகவியின் தத்துவங்கிற தலைப்புல ஒரு தீஸிஸ் சப்மிட் பண்ணி, மெட்ராஸ் யுனிவர்ஸிடியில பி.ஹெச்.டி முடிச்சுட்டேன்” சற்றும் ஆரவாரமில்லாமல், அவனுக்குப் பிடிக்குமென்பதற்காக மட்டுமே ஒரு இன்ஃபர்மேஷனாகச் சொன்னாள். ஒரு வினாடி அவன் மனதில் இடி இடித்து ஓய்ந்தது.
கல்லூரிக் காலங்களில், அவன் மகாகவி பாரதியைப் பற்றிப் பேசாத நாட்களே இல்லை. பலமுறை இந்த பாரதியைக் காதலிப்பதற்கு அவளின் பெயரும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்வான். பல பாடல்களை மேற்கோளாகக் காட்டுவான். தனது வாழ்நாளின் ஒரே குறிக்கோள் அவரின் ஞானப்பாடல்கள் குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெறுவதே என்று பேசுவான். ஆங்கில முறைக் கல்வியிலேயே சிறு வயது முதல் பயின்று, நகர்ப்புற பழக்க வழக்கங்களையே கொண்டிருந்த பாரதி, கல்லூரிப் படிப்பிற்காக அந்தக் கிராமத்தில் தாத்தாவின் இல்லத்திலிருந்து படிக்க வருகையில், தமிழ் பேசுவதை மிகவும் கடினமாக உணர்ந்தவள். அவளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக மாறியிருந்த அவன், அவளிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டான். அவர்கள் காதலித்த நேரங்களில் பெரும்பாலும் பேசிக் கொண்டது இந்த இரண்டு மொழிகளில் ஆழங்களைப் பற்றியே என்றால் அது மிகையாகாது.
“சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, காடுகமழ வந்த கற்பூரச் சொற்கோ” – மகாகவி பாரதி குறித்து, கல்லூரிப் பேச்சுப் போட்டியில் அவன் கனலாய்க் கக்கிய வசனங்கள். அந்தப் பேச்சின் பெரும்பாலானவற்றின் பொருள் புரியாவிடினும், அதனை ரசித்துச் சிலாகித்தவள் பாரதி. இப்பொழுது நினைக்கையிலும் நெஞ்சில் தேனூறுகிறது இருவருக்கும்.
பேசிக் கொண்டேயிருக்கையில் கணேஷின் மகள் ஓடி வருகிறாள். “அப்பா, அம்மா கால்ஸ் யூ ஃபார் டின்னர்..” என்றவளைப் பார்த்த பாரதி, “திஸ் இஸ் யுவர் டாட்டர்?” என்று கேட்க, “யெஸ், சே ஹய் டு ஆண்ட்டி, சங்கீதா…” என்றான் மகளைப் பார்த்து. அவளின் பெயரைக் கேட்டதும் பாரதியின் முகத்தில் வெளிச்சமாகத் தெரிந்ததந்த அதிர்ச்சி. “அப்பா, யூ ஷுட் டாக் டு திஸ் அண்ணா, ஹி சீம்ஸ் இண்ட்ரஸ்டட் இன் டமில் ஜஸ்ட் லைக் யூ” பேச்சுத் தமிழ் புரிந்தாலும், ஒரு வார்த்தையும் பேச இயலாத, அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த, கணேஷின் மகள் தன்னுடன் வந்த பதிமூன்று வயதே நிரம்பிய இளைஞனைக் காட்டினாள்.
திரும்பிப் பார்க்கையில், கண்களுக்கு நிறைவான, தீட்சண்யமான பார்வையுடன் நின்று கொண்டிருந்தான் அந்த இளைஞன். “வர்ற திங்கட்கிழம எங்க ஸ்கூல்ல பேச்சுப் போட்டி, அதுக்குப் படிச்சிண்டிருந்ததை ஃப்ரெண்ட்ஸண்ட சொல்லிண்ட்ருந்தேன்” ஸ்பஷ்டமான தமிழில் அவன் பேசியதைக் கண்டு ஆச்சரியமுற்ற கணேஷ், அவனிடம் “அத நானும் கேக்கலாமா?” என்று வினவினான். “கண்டிப்பா..” என்று சொல்லிவிட்டுத் தான் மனப்பாடம் செய்த வசனங்களைச் சொல்லத் தொடங்கினான்.
“சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, காடு கமழ வந்த கற்பூரச் சொற்கோ” என்று தொடங்கி, மடை திறந்த வெள்ளமென மகாகவி குறித்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தான் அவன். பேசுகையில் அவன் இடது புருவம் மேல் நோக்கி வளைவதைப் பார்த்த கணேஷால் அவன் கண்களை அவனாலேயே நம்ப இயலவில்லை. ஏனென்றால், அது கணேஷின் மேனரிஸங்களில் ஒன்று, கல்லூரிக் காலங்களில் பாரதியைப் பெரிதும் கவர்ந்த மேனரிஸமும் அதுவே.
கணேஷ் திரும்பி பாரதியைப் பார்க்க, அவளும் ஆம் என்பதுபோல் தலையசைக்க அவளின் மகன் என்று புரிந்து கொண்டான். அவன் பேச்சை முடிக்க, பாரதி கணேஷிடம் அவனை ஒற்றை வார்த்தையில் அறிமுகம் செய்தாள்.
“சந்தோஷ்”…
– வெ. மதுசூதனன்
அன்புடையீர், வணக்கம்.