வருக வருக 5ஜி
2ஜி, 3ஜி, 4ஜி… இது 5ஜி.. என்று ஆறுச்சாமி மாடுலேஷனிலும், ஓங்கி கீ-போர்டுல அடிச்சா ஒன்றரை ஜிபி டவுன்லோடுடா… என்று சிங்கம் போல் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டும் இணையத்தின் அடுத்தத் தலைமுறையான 5ஜி ரெடியாகிக்கொண்டு இருக்கிறது. 5ஜியைப் பற்றி பார்ப்பதற்கு முன்பு அதன் மூதாதையர்களைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம்.
ஜி என்பது ஜெனரேஷன் என்று ஒரு தலைமுறையைக் குறிக்கிறது. ஒயர் மூலம் போன் பேசிக்கொண்டிருந்த கற்காலம் தான் 0ஜி காலம். அதாவது, 1940 காலக்கட்டம். அதன் பின்பு, 1980களில் 1ஜி அறிமுகமானது. செங்கல் போன்ற சைஸில் இருக்கும் செல்ஃபோன்கள் நினைவிருக்கிறதா? அதே தான். இந்தியாவில் தொண்ணூறுகளின் மத்தியில் இவ்வகைச் செல்ஃபோன்கள் அறிமுகமாகின. 1ஜி ஃபோன்களில் பேசும் வசதி மட்டுமே இருந்தது. அதுவரை 0ஜி, 1ஜி என்றெல்லாம் பேசிக்கொள்ளவில்லை.
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் உருவாகிய தொழில்நுட்பம், 2ஜி.அதுவரை அனலாக் முறையில் செயல்பட்டு வந்த செல்ஃபோன் தொழில்நுட்பம், 2ஜியில் டிஜிட்டலுக்கு மாறியது. செல்ஃபோன் மூலம் பேசுவது மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ். (SMS) எனப்படும் மெசேஜ் அனுப்பும் வசதியும் வந்தடைந்தது. தொண்ணூறுகளில் முன்னேறிய நாடுகளில் பயன்பாட்டில் வந்த இந்தத் தொழில்நுட்பம், இந்தியாவுக்கு 2008 இல் தான் வந்தது. ஆ. ராசாவால் 2ஜி லைசன்ஸ் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உண்டாகி, இந்திய மக்களுக்கு 2ஜி என்ற வார்த்தை பரவலாக அறிமுகமாகியது.
இதன் பிறகு, 2.5, 2.75 போன்ற 2ஜியின் மேம்பட்ட வகைகள் வந்தன. இவற்றில் எம்.எம்.எஸ்., WAP போன்ற தகவல் பரிமாற்ற வசதிகள் கொண்டு வரப்பட்டன. 2ஜியின் ஜி.பி.ஆர்.எஸ்ஸிற்கு (GPRS) அடுத்த அவதாரமான எட்ஜ் (Edge) 3ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகமாகியது. 3ஜியின் மூலம் செல்போனில் இணையப் பயன்பாடு அதிகமானது. நொடிக்கு 2 எம்பி டேட்டா என்ற நிலவரம் உண்டானது. போன்கால், மெசேஜ் மட்டுமின்றி இணையத்தின் மூலம் இமெயில், வீடியோ கால், வீடியோ ஸ்ட்ரீமிங்க், வீடியோ கேம்ஸ் போன்றவை சாத்தியமானது.
3ஜியிலும் 3.5, 3.75 போன்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் வெளிவந்தன. இவற்றில் 3ஜியை விட வேகம் அதிகமானது. இணைய வேகம் நொடிக்கு 8 எம்பி வரை சென்றது. இதற்கு, அடுத்ததாக நாம் தற்போது பயன்படுத்தும் 4ஜி வந்தது. 3ஜியை விடப் பத்து மடங்கு வேகம் கொண்டது – 4ஜி. இணையத்தில் சுலபமாக லைவ் வீடியோக்கள் அப்லோட் செய்யப்பட்டன.5 மணி ஷோ பார்த்துவிட்டு, ஆறரைக்கு இண்டர்வெல்லின் போது வீடியோ விமர்சனம் பதிவு செய்யும் விமர்சகர்கள் உருவான காலமிது. வாட்ஸ்-அப்பில் வீடியோக்கள் வந்துக்கொட்டின. புத்தம் புதுப் படங்கள், திரையரங்கின் அதே தரத்தில் ஒளிபரப்பு செய்யும் சேவைகள் உருவாகின. ஆண்டெனாவோ, கேபிளோ இல்லாமல் பளிச்சிடும் தரத்தில் டிவி பார்க்க முடிந்தது. 4ஜி நெட்வொர்க் பெரும் நகரத்தில் தான் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. 4ஜியின் வாக்குறுதிபடி நொடிக்கு 1ஜிபி வரை டேட்டா டவுன்லோட் சாத்தியமாகியிருக்க வேண்டும். ஆனால், 100 எம்பிக்கே எம்ப வேண்டியுள்ளது. 5ஜி வரும் போது தான், 4ஜி கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் போல.
5ஜியில் நொடிக்கு 1 ஜிபியில் இருந்து 200 ஜிபி வரை சாத்தியம் என்கிறார்கள். அதாவது, ஒரு முழுப்படத்தை 2-3 நொடிகளில் டவுன்லோட் செய்துவிடலாம். 3ஜி காலத்தில் இதற்கு ஒரு நாள் தேவைப்பட்டது என்பது நினைவிருக்கட்டும். தற்காலத்தில் கணினியும், செல்ஃபோனும் மட்டும் இணையத்தைப் பயன்படுத்தவில்லை. டிவி, ப்ரிட்ஜ், ஏசி, லைட், வேக்யூம் க்ளீனர், கார் என நாம் பயன்படுத்தும் அனைத்தும் ஸ்மார்ட் ஆகி வருகிறது. அதனால் இணையத்தேவை மிகவும் அதிகமாகி வருகிறது. வரும் ஆண்டுகளில் தேவை மேலும் அதிகமாகும். அதற்கு ஈடுக்கொடுக்கும் வகையில் 5ஜி உருவாகிக்கொண்டு வருகிறது. 4ஜியை விட ஆயிரம் மடங்கு அதிகத் திறன் கொண்டதாக 5ஜி தயாராகி வருகிறது.
5ஜி நெட்வொர்க்கிற்கு ஏற்ப தேவைப்படும் சாதனங்களை, தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன. வருங்காலத்தில் அனைத்து மின்னணு இயந்திரங்களும் இணையம் மூலம் தொடர்பு கொண்டு பேசிக்கொள்ளும் வசதிக்கொண்டதாக இருக்கும். எப்ப, எதைச் செய்ய வேண்டும் என்று நாம் சொல்லத் தேவையிருக்காது. எப்ப, என்ன செய்ய வேண்டும் என்று இயந்திரங்கள் மனிதனுக்குச் சொல்லிக்கொடுக்கும். மனிதனை விடத் திறமையாகக் கார் அதுவே ஓட்டிக்கொள்ளும். இதற்குத் தேவைப்படும் சக்தியை இயந்திரங்களுக்கு 5ஜி வழங்கும்.
5ஜி ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் வகையில் அனுசரித்துச் செயல்படும். வேகம் தேவைப்படுவோர்க்கு வேகம், பாதுகாப்பு தேவைப்படுவோர்க்குப் பாதுகாப்பு என இணையப் பயன்பாட்டுப் பந்தியில் சேவை பதார்த்தங்கள் பார்த்து பார்த்துப் பரிமாறப்படும். 2020இல் பொதுப் பயன்பாட்டுக்கு 5ஜி வரும் என்கிறார்கள். 5ஜி வேகத்தில் முன்னதாக வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. மில்லிமீட்டர் அலைகள், சிறு செல்ஃபோன் டவர்கள், MIMO, பீம்ஃபார்மிங் போன்ற சமாச்சாரங்கள் 5ஜி காலத்தில் அதிகம் பேசப்படும். ஆர்வமிருப்போர் இணையத்தில் இது குறித்துத் தேடி படிக்கலாம்.
மனிதனின் தேவைக்கேற்ப சாதனங்களும், சாதனங்களின் தேவைக்கேற்ப இணையத் தொழில்நுட்பமும் மாறி வருகின்றன. அடுத்து, தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மனிதனும் மாற வேண்டி வரும். இப்போது இருக்கும் தொலைதொடர்பு வசதிக்கே, மனித மனம் வெகுவாக மாறி வந்துள்ளது. இணையப்பயன்பாட்டின் மூலம் விழிப்புணர்வு, ஆலோசனை உதவிகள், எதிர்ப்புப் போராட்டங்கள் என்று ஒரு பக்கம் ஆக்கப்பூர்வ செயல்பாடுகள் அதிகரித்து வந்தாலும், இன்னொரு பக்கம் ட்ராலிங், நேர இழப்புகள், வதந்தி மற்றும் தவறான கருத்துகளை வேகமாகப் பரப்புவது போன்ற சமூகத்திற்குத் தேவையில்லாத விஷயங்கள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 5ஜி சமூகத்திற்குக் கொண்டு வரும் மாற்றம் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் காண வேண்டும்.
- சரவணகுமரன்.
Tags: 5ஜி, இணையம், தகவல் தொலைத்தொடர்பு