நட்புக்கான நந்நாள்
பசியென்றால் பகர்ந்திடலாம் அன்னையிடம் – அவளும்
புசியென்றே படைத்திடுவாள் அறுசுவை விருந்து!!
படித்தாலும் புரியவில்லை, கோரிடலாம் தந்தையிடம்
அடித்தாவது விளக்கிடுவார் அரும்பொருள் அவரும்!!
மன்மதனின் பாணமது மார்நோக்கிப் பாய்கையிலே
மறுகேள்வி ஏதுமின்றி மகிழ்விப்பாள் மனைவியவள்!!
வீதியில் செல்கையில் வீணர்களுடன் சண்டை – அண்ணன்
பாதியில் ஓடிவந்து பகைவர்களைத் துரத்துவான்!!
வளர்ந்தபின் மனதிலே சிற்சில கிலேசம் – அக்காள்
தளர்ந்திடாதே தம்பியென நம்பிக்கை தந்திடுவாள்!!
பற்றாக் குறையெனப் பகந்திட்டால் தம்பியவன்
வற்றாத செல்வத்தை வாரி வழங்கிடுவான்!!
அன்பிற்குச் சிலநாள் ஏங்கி நிற்கையிலே – தங்கை
அருகினில் வந்தணைத்தே அழகாய்க் கோதிடுவாள்!!
கண்டிட்ட பலகனவு கற்பனையாய்ப் பொய்த்திடாமல் – நம்மக்கள்
மண்ணிட்ட விதையென மரமாகி மகிழ்த்திடுவர்!!
பற்பல உறவுகளும் பாங்குடனே சுகம்சேர்க்கும்
சிற்சில நிகழ்வுகளும் சிந்தையிலே சிகரமாகும் !!
நன்று இவையெல்லாம், நயமிக்க நல்லுறவு
நின்று நினைக்கையிலே உண்மையொன்று ஒலித்திடுது!
பாடிய இவ்வுறவு அனைத்தும் உடலில்
ஓடிய ரத்தத்தால் விளைந்த தன்றோ!
குருதியின்றி, தொப்புட் கொடியுமின்றி, கடமையின்றி
உறுதியொன்றே மனம் முழுதும் உணர்வாய்ப் பெற்று
இறுதிவரை உடன்வரும் உறவொன்று என்றால்
அருதியிட்டுச் சொல்லிடலாம் அது நட்பென்றே !!!
– வெ. மதுசூதனன்!
Tags: Friendship Day, நட்பு, நட்புக்கான நந்நாள்