வேலை தேடுங்க !!!
அருளில்லார்க்கு அவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு!
என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிணங்க, ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது பொருட் செல்வமாகும். ஆசைகளைப் பெருமளவு அடக்கி, எளிமையான வாழ்வு நடத்துபவருக்கும் பொருள் என்பது இன்றியமையாததே. முற்றும் துறந்த ஞானியர் தவிர மற்ற அனைவரும், பொருளீட்டும் முயற்சியில் முழுவதும் ஈடுபடுவது புரிந்து கொள்ளக் கூடியதே. அதுபோன்ற பொருளீட்டும் முயற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அவரவரின் திறமைக்கும், தகுதிக்கும் ஒப்ப ஏதேனும் ஒரு அலுவலகத்தில் பணிபுரிவதும் உலக வழக்குகளில் ஒன்றே.
அவ்வாறு பணிபுரிகையில், ஈட்டும் பொருள் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழ்வது என்பது இயலாத ஒன்று. விழித்திருக்கும் தினப் பொழுதில், பெரும்பாலான நேரத்தைச் செலவிடுவது அலுவலகத்திலேயே என்பதால், பணம் என்ற ஒன்று மட்டுமின்றி, இன்னும் பல விளைவுகளை, அனுபவங்களை, இன்பங்களை அனுபவிப்பதற்கு ஏதுவாக அலுவகலம் இருப்பது அவசியம் ஆகிறது. ஆசைக்கு அதிகமாகப் பொருள் கிடைக்கும் பணியில் இருப்பினும், தேவையான அளவு பிற இன்பங்களும், நிம்மதி தரும் அம்சங்களும் அமையப் பெறாவிடின், அந்தப் பணமே வேண்டாமென்ற நிலை தோன்றுவதும் இயற்கையே. எனவே ஒரு வேலையில், பணமீட்டும் நிலை மட்டுமின்றி, பிற நிறைவுகளையும் தரும் சூழ்நிலை இருக்க வேண்டுமென்பது மிகவும் முக்கியத் தேவையாகிறது.
பல வருடங்களாக ஒரே அலுவலகத்தில் வேலையில் தொடர்வது என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிலையே. ஒரு காலத்தில், அதுபோல நீண்ட காலமாக ஒரே அலுவலகத்தில் வேலை செய்வது என்பது பெருமைக்குரியதாகக் கருதப்பட்டு வந்தது. அடிக்கடி ஒரு வேலையிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிச் செல்பவர்களின் மேல் பெருமளவு மரியாதை இல்லாத ஒரு நிலை இருந்த காலமும் உண்டு. தான் வேலை செய்யும் நிறுவனத்தின்மீது ஒரு விசுவாசம் காட்ட வேண்டுமென்பது எழுதப்படாத சட்டமாக இருந்து வந்தது. முதலாளிகளும், அதுபோலத் தங்களுடன் பல காலம் இருப்பவர்களை, மரியாதையுடனும் ஒரு பிரத்யேக அன்புடனும் நடத்தி வந்தனர். நமது பெற்றோரின் காலமும், அதற்கு முந்தைய காலங்களிலும் ஒரே அலுவலகத்தில் முப்பது, முப்பத்தைந்து வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெறுவது என்பது சர்வ சாதாரணமாக நிகழும் செயலாக இருந்தது.
ஒருவருடன் ஒருவர் துரித கதியில் போட்டியிட்டு, ஒவ்வொரு நிமிடமும் பொருளீட்டும் சந்தர்ப்பம் என்று மாறிவிட்ட இன்றைய போட்டி உலகில், இதுபோன்ற விசுவாசங்களும், பரிவுகளும், நீண்ட காலம் ஒரே வேலையிலிருக்கும் பழக்கங்களும் பெருமளவு குறைந்து வருகின்றன என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும், மேற்கத்திய உலகில் இந்த நிலை மேலும் இயந்திர கதியில்தான் மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக, கணினி தொடர்பான வேலைகளிலும், அலுவலகங்களிலும், ’நான் செய்யும் வேலைக்குச் சம்பளம் தருகிறார்கள். இதிலென்ன விசுவாசம் வேண்டிக் கிடக்கிறது’ என்ற மனப்போக்கு ஊழியர்களிடமும், ‘செய்யும் வேலைக்குத்தான் சம்பளம் கொடுத்து விடுகிறோமே, இதற்கு மேலென்ன மனித உறவுகளுக்கும், உணர்வுகளுக்கு பெருமிடம்’ என்ற மனப்போக்கு முதலாளிகளிடமும் மிகவும் பெருகி விட்டது. ஊழியர்களும் ஒரு வேலை விட்டு இன்னொன்றிற்குச் செல்கையில் கணிசமான அளவு சம்பள உயர்வு பெறுகின்றனர். முதலாளிகளுக்கும், ஒருவர் வேலையை விட்டுச் செல்கையில் அந்த இடத்தை மேலும் திறமையுள்ள இன்னொருவரை வைத்து நிரப்புவது என்பது அவரது வணிகத்தை உயர்த்தும் செயலாகிவிடுகிறது. பாரபட்சமின்றிக் கூர்ந்து கவனித்தால் இதுபோன்ற ஒரு மனப்போக்கையும், முறைமைகளையும் தவறென்றும், மனிதாபிமானமற்ற செயலென்றும் கூறிட இயலாது.
பல வருடங்களாக வேலை செய்த ஒரு நிறுவனத்திலிருந்து நீங்கி வேறு ஒரு வேலை தேடும் சந்தர்ப்பம் சமீபத்தில் ஏற்பட்டது. வேலை தேடும் முயற்சியில் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்களையும், மனப் போராட்டங்களையும், சந்திக்க நேர்ந்த எண்ணிலடங்காப் படிப்பினைகளையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்படும் கட்டுரை இது.
இந்தத் துரித கதி உலகினிலும், வேலை தேடுவது என்பது மிகவும் மன உளைச்சலுக்கு ஆட்படுத்துகின்ற அனுபவமாக இருக்கிறதென்பதும் உண்மையே. இந்த உளைச்சலுக்குப் பயந்து, இருக்கும் வேலையிலேயே – மன நிம்மதியில்லையெனினும் – தொடரலாம் என்று நினைத்திருப்பவர்கள் பலரை நாமறிவோம். இன்னும் சொல்லப் போனால், அதே நினைப்புடனே சில காலங்களை நாமும் கடத்தியுள்ளோம். அதாவது, வேலை தேடும் இந்த முயற்சியை இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னரேயே தொடங்கியிருக்கலாம் என்பது நமது ஆதங்கம். நாம் அவ்வாறு தொடங்காமலிருந்ததற்குக் காரணமான அச்சம், அந்த அச்சம் அர்த்தமற்றது என்ற இன்றைய ஞானோதயம் இவற்றைப் பற்றியும் எழுதலாம் என்ற ஆசை நமக்குள்ளது. இதற்கு முக்கியமான நோக்கம், அதுபோன்ற அச்சத்திலுள்ளவர்களை அந்த அச்சத்திலிருந்து துரத்துவதே. ஒரு மனிதனால் ஒன்றைச் செய்ய இயலுமென்றால் இன்னொருவருக்கும் அதனைச் செய்வது சாத்தியமே, இல்லையா? உண்மையைச் சொல்லப் போனால், அனைவரும் ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு வேறொரு வேலை தேட வேண்டுமென்று உறுதியாகச் சொல்வோம். இதற்கான காரணங்களையும், அவற்றாலாகும் பயன்களையும் ஒரு நடுநிலையான பார்வையிலிருந்து விளக்கிவிட வேண்டுமென்ற ஆர்வத்துடன் தொடங்குகின்றோம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தக் கட்டுரையின் நோக்கங்களெனக் கீழ்க்கண்டவற்றை முன்னுரையாகக் கூறலாமென்று தொன்றுகின்றது.
- தினம் எழுகையில், இந்த வேலைக்கு இன்றும் போக வேண்டுமா என்ற வெறுப்பு உணர்வு தோன்றினாலும், வேறொன்று தேட வேண்டுமெனில் ”காலம் பல ஆகுமே, நமக்குப் பிடித்தது கிடைக்குமா, கிடைத்தாலும் அந்த வேலையிலும் இதுபோன்ற தொல்லைகள் இருக்காதென்று என்ன உறுதி?” என்றெல்லாம் பல காரணங்களைத் தங்களுக்குள்ளேயே விதைத்துக் கொண்டு அதே வேலையில் வெறுப்போடு தொடரும் நண்பர்களை மூளைச் சலவை செய்து வேறு வேலை தேட வைப்பது
- சில பல காரணங்களால், பார்த்துக் கொண்டிருந்த வேலையைத் துறக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டு, கண் முன்னே பிரம்மாண்டமான தடைக்கல் தோன்றி எதிர்காலத்தையே கேள்விக்குறியாக மாற்றிவிட்டதுபோல் உணர்பவர்களுக்கு, உற்சாகமூட்டும் விதமாக அமைவது
- தன்னிச்சையினாலோ, அல்லது சந்தர்ப்பத்தினாலோ வேறு வேலை தேடத் தொடங்கியவர்களுக்கு அவரவர்களின் நிலைக்கேற்ப, தங்களது கனவுகளுக்கு விடையளிக்கும் விதமான நல்ல வேலையில் அமர்வதற்குத் தேவையான சிறிய, பெரிய செயல்களைச் செய்து சதுரங்கக் காய் நகர்த்துவதுபோல் செய்வது எப்படி என்று நமது அனுபவம் கொண்டு விளக்கிடுவது
- வேலை தேடும் முயற்சி, வேலை தேடுபவர் மட்டுமின்றி அவரின் உறவுகளையும் எப்படியெல்லாம் பாதிக்கலாம், அந்தப் பாதிப்புகளைப் பெருமளவு சமாளித்து, தினசரி வாழ்வின் மகிழ்ச்சிகளையும், கடமைகளையும் இழக்காமல் இருப்பதற்கான தந்திரங்களை எடுத்துரைப்பது
- இந்த முயற்சியில், இழந்த விடயங்கள் என்னவென்று மனதளவில் ஆராயாமல், அடைந்த அனுபவங்களும் அவை தரும் நெடுங்காலப் பயன்களும் என்னவென்று ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலிருந்து எடுத்து இயம்புவது
மொத்தத்தில், உழைக்கும் வர்க்கத்திற்குத் தேவையான அளவு பயனுள்ளதாக அமைவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். எழுதவிருக்கும் அனைத்தும் சொந்த அனுபவங்களின் வெளிப்பாடே. முடிந்தவரையில், பாரபட்சமின்றி எழுதுவதாக உறுதி கொண்டுள்ளோம். தனிப்பட்ட, சர்ச்சைக்குரிய விஷயங்களைத் தவிர்த்து, படிப்பவருக்குப் பயன்படும் விதத்திலும், சற்று ரசிக்கப்படும் விதத்திலும் எழுதுவதே நோக்கம். வாசகர்களின் கருத்துக்களையும், அனுபவங்களையும் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறோம். பல கைகள் சேர்ந்து தட்டுகையில் வரும் ஓசை இன்னும் அதிகமானது என்பது நாமனைவரும் அறிந்ததே.
நமது இந்த சமீபத்திய வேலை தேடும் படலம், பல நண்பர்களின் உதவியுடன் நடந்தேறியது. நண்பர்களாவது நம்மேலிருக்கும் அக்கறையில் உதவினர். நண்பர்களின் நண்பர்கள், அவர்களின் நண்பர்கள், சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமானவர்கள் என்று எத்தனையோ முகம் தெரியாதவர்களின் உதவியும் இதில் அடக்கம். அவர்களனைவருக்கும் தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்தாகிவிட்டது எனினும், நமக்கு முகம் தெரியாதவர்களிடமிருந்து கிடைத்த உதவிகளைப் போல, நாமும் முகம் தெரியாதவர்களுக்கும் நாமாகக் கொடுப்பதே சரியான நன்றி நவிலலாக இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதப்படும் இதற்கு வேறெந்த சுயநல நோக்கும் காரணமல்ல!
தொடர்ந்து எழுதுவோம்.
வெ. மதுசூதனன்.