கமலின் விஸ்வரூபம்
பலமுறை பலராலும் பலவிதமாகப் பாராட்டப்பட்டது கமலஹாசனின் கடின உழைப்பு, விடா முயற்சி, படைக்கும் கலையின்மீது அவர் கொண்டுள்ள மாறாக் காதல், எல்லாவற்றையும் செய்யத் துடிக்கும் அவரின் ஆர்வம் – சொல்லிக் கொண்டே போகலாம். இந்தப் படமும் அவரின் இக்குணாதிசயங்களைக் காட்டுவதில் விதி விலக்கல்ல.
விஸ்வரூபம் முதல் பகுதி வெளிவந்த தினத்திலேயே கமல் சொன்னதாக வெளிவந்த செய்தி, பகுதி இரண்டுக்குத் தேவையான அளவுக்கு பல காட்சிகளும் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டது என்பதாக நினைவு. 2014ஆம் ஆண்டிலேயே வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. வழக்கம் போல, பல சோதனைகளையும் எதிர் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு, கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக, பட வேலைகள் கிடப்பில் போடப்பட்டு, 2017ஆம் ஆண்டும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகே வெளிவந்த இந்தப் பகுதியை ரசிகர்கள் பெருமளவும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர் என்றால் அது மிகையாகாது. படத்தின் பல காட்சிகளும் முதல் பகுதி எடுக்கப்பட்ட போதே படமாக்கப்பட்டதுபோல் தோன்றவில்லை. அவ்வளவு அழகாக பொருந்தி வந்துள்ளது. உண்மையாகவே அப்படி எடுத்திருந்தார்களானால், இவர்களுக்கு இருந்த தொலை நோக்கு மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
கதை என்று பெரிதாக, பகுதி ஒன்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் புதிதாக, ஏதுமில்லை. ரா ஏஜண்ட்டான கமலஹாசன், அல் கொய்தா தீவிரவாதி ஒமார் மற்றும் அவனின் ஜிஹாதிகளை எவ்வாறு வளைத்துப் பிடித்துக் கொலை செய்கிறார் (சட்டத்தின்முன் நிறுத்துகிறார் என்று சொன்னால் நாம் பத்தாம்பசலி ஆகி விடுவோம்.) என்பதே கதை. கமலின் பரிவாரங்களான சேகர் கபூர், ஆண்ட்ரியா போன்றவர்களுடன் கூட, கமலின் தாயாக ஒரு கதாபாத்திரம் புதிது. பெரிதாகக் குறை சொல்வதற்கு ஏதுமில்லையெனினும், ’மதர் செண்டிமெண்ட்’ பாதை கமலுக்கும் தேவையா என்று கேட்கத் தோன்றுகிறது. பல கோடிகளின் செலவில், பலரின் கடின உழைப்பில், இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான திரைப்படத்தை, இது போன்று ஓரிரு வரிகளில் அடக்குவது முறையில்லைதான், ஆனால் அவ்வளவுதான் கதை. அவ்வாறு இருப்பதுவும் தவறாகத் தோன்றவில்லை. முதல் பகுதியில் நிகழ்ந்த நிகழ்வுகளின் ஃப்ளாஷ் பேக்காக சிற்சில விஷயங்கள் இங்கேயும் அங்கேயும் தெளித்து விடப்பட்டிருக்கின்றன. இவற்றைப் பெரும்பாலும் கவனமுடனும், லாஜிக்கை ஏற்றுக் கொள்ளும் விதமாகவும் அமைத்திருப்பது பாராட்டக் கூடியது. ஒரு சில நிகழ்வுகளைப் பார்க்கையில், மீண்டும் பகுதி ஒன்றைப் பார்த்து உறுதி செய்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது. காட்சியமைப்புக்களுக்காகப் பெருமளவு மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பதை முதல் காட்சியிலிருந்தே சொல்லிவிடலாம்.
கமலஹாசனின் நடிப்பு மற்றும் ஈடுபாடு குறித்துச் சொல்லவே வேண்டியதில்லை. மனிதர் எப்பொழுதும் போல இந்தப் படத்திலும் உயிரைக் கொடுத்து நடித்துள்ளார். பல ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாகத் தெரிகின்றன. ஓரிரு இடங்களில் கணினியின் துணை தெளிவாகத் தெரிந்தாலும், பல காட்சியமைப்புகளும் ஹாலிவுட்டை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளன. (இப்பொழுதெல்லாம் இந்தியத் திரையுலகம் பல பிரம்மாண்டங்களையும், புதுமைகளையும் தயார் செய்து கொண்டிருப்பதால், நாமும் இந்த காமெண்ட்டை விரைவில் நிறுத்துவது நல்லது எனத் தோன்றுகிறது). கமல் ரொமாண்டிக் டூயட் என்று வழக்கம்போல் பெருமளவு செய்யவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு மூன்று இடங்களில் இழையோடும் காதலும் அழகாகப் படமாக்கப்பட்டுள்ளன.
வில்லனாக வரும் ராஹுல் போஸ் மிகவும் அருமையாக நடித்துள்ளார் என்றே கூற வேண்டும். பகுதி ஒன்றிலும் பிரமாதமாக நடித்த இவர், இந்தப் படத்தில் மேலும் அருமையாகப் பரிமளித்திருக்கிறார். விகாரமான மேக்கப்பில் முகத்தை வைத்துக் கொண்டு, அழிந்து ஒடுங்கிப் போன குரலுடன் அசத்தி இருக்கிறார் மனிதர். ஆண்டிரியாவும், பூஜா குமாரும் 2013ல் தொடங்கி, இன்று வரை அப்படியே இருப்பது எப்படி? உண்மையாகவே, ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது தலைப்பு இது. இருவரும் அழகுப் பதுமைகளாகத் தோன்றியிருப்பது மட்டுமின்றி, அழகாக நடித்துள்ளனர் என்றே கூற வேண்டும். இருவருக்கும் நடிப்பதற்கு வேண்டுமளவு வாய்ப்புக்கள், இருவருமே அவற்றை அருமையாகப் பயன் படுத்திக் கொண்டுள்ளனர். நடிப்பு மட்டுமின்றி, கவர்ச்சியிலும் கலக்கியுள்ளனர். ஆண்ட்ரியா ஆடைகளனைத்தையும் முழுமையாய் அணிந்து கொண்டு கவர்ச்சி காட்டுகிறார், பூஜா சற்று அதிகமாகச் சென்று ஓரிரு இடங்களில் குழந்தைகளுடன் திரைப்படம் பார்க்கச் சென்றவர்களை முகம் சுழிக்க வைக்கிறார். சென்ஸார் போர்டு என்பது இன்றுக்கும் இருக்கிறதுதானே? கமலைக் கேட்டால், அது ‘சர்ட்டிஃபையிங்க் அதாரிடி, கட் செய்யும் அதாரிடி அல்ல’ என்பார். அது சரிதான் என்று வைத்துக் கொண்டாலும், நம்மூரில் சர்ட்டிஃபிகேட் பார்த்து, சரியானவர்களை மட்டும் திரையரங்குக்குள்ளே செல்ல அனுமதிக்கின்றனரா? யோசிக்க வேண்டிய பிரச்சினை.
ஆஸ்கர் பிக்சர்ஸ் வீ. ரவிச்சந்திரனின் தயாரிப்பு. நிஜமாகவே முதலீடு செய்வதைத் தவிர தயாரிப்பாளர்கள் என்ன செய்வார்கள் என்பதை அறிய ஆவலாயுள்ளோம். கதையெழுதி, இயக்கியுள்ளவர் நம்மவர் கமலஹாசனே. அந்தத் தொழிலையும் செவ்வனே செய்துள்ளார் என்றே கொள்வோம். இசையமைப்பாளர் கிப்ரான், மூன்று பாடல்களும் ஓ,கே. ரகம், ’நானாகிய நதிமூலமே’ பாட்டின் கவிதை மிக அருமை, கமலஹாசனே எழுதியுள்ளார் (சொல்ல வேண்டுமா?). பின்னணி இசை அருமை.
ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், சௌண்ட் எஃபக்ட்ஸ் எனப் பலவிதங்களிலும் அசத்தியுள்ள இந்தப் படத்தில், நிறைய விஷயங்கள் கேள்விக்குறியாகத்தான் உள்ளன.. ஆமாம், என்ன அது? ஆயிரத்து ஐநூறு டன் எடையுள்ள நியூக்ளியர் சரக்குகளை இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் கப்பலில் அனுப்பி வைத்தானா? அது லண்டனுக்குப் பக்கத்தில் கடலுக்கடியில் மூழ்கி விட்டதா? கிட்டத்தட்ட எழுபது வருடங்களாக ஒருவர் கண்ணுக்கும் தெரியாத அது இன்றைய தீவிரவாதிகளிடன் பிடிபட, அவர்கள் பாம் வைத்து விட்டு, ஒரே ஒரு ஆளை அனுப்பி அதை டெட்டொனேட் செய்ய வைக்க, கமலஹாசன் ஒருவராய் கடலுக்கடியில் போய் அந்த ஒரே ஒரு ஆளுடன் பல மணி நேரம் சண்டை போட்டு…. சரி விடுங்கள், இதற்கு மேல் எழுதுவது கடினம், படிப்பதும் கடினம் என்று உணர்கிறோம்…. அல் கொய்தா தீவிரவாதிகளின் தலைவனின் பிள்ளைகளை ரா ஏஜண்ட் கமலஹாசன் டாக்டராகவும், இஞ்சினியராகவும் மாற்றுகிறாரா? பொறுங்கள், இது கமலஹாசன் தான், விஜயகாந்த் இல்லை….
இதுபோன்ற குறைகள் இருந்தாலும், மொத்தத்தில் பெருமளவு ஏமாற்றமளிக்காத திரைப்படம். வழக்கம்போல கமலின் டெடிகேஷனுக்கு நமது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். வழக்கம்போல, ப்ரெடிக்டபிள் டயலாக்ஸ் அவாய்ட் பண்ணுங்க கமல் சார்…
விஸ்வம் முழுவதும் பார்க்குமளவு ரூபம் கமல் நம்பாத அந்தக் கடவுளுக்கு மட்டும்தான் என்று சர்வ நிச்சயமாக நம்பும்
ரசிகன்…
Tags: Kamal, Kamal Hassan, viswaroopam 2, விஸ்வரூபம் 2