\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மாங்குளம் வன்னியின் சுவை உணவகம்

வன்னிக் காட்டுக் சாலையில் இருந்து விடுபட்டு அயல் புழுதி கூடிய சிறு பாதையில் திரும்பி வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தினார் வாகனச் சாரதியார் ராஜா. “அண்ணை இங்கேயும் ஒருக்கால் சாப்பிட்டுப் பாருங்கோவன்” என்றார் அவர். நாம் அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு வன்னிக் காட்டுப் பகுதிகள் சென்று மதியமளவில் வெய்யிலில் வந்ததால் பசி வேறு வயிற்றைத் துளைத்தது. சரி சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே என்று கூறி உடன் வந்த நண்பர்களுடன் அழகான அயல் பூஞ்செடிகள் பார்த்தவாறு விசாலமான ஓட்டுக் கூரையுடனான கட்டடத்தின் உள்ளே நுழைந்தோம்.

அங்கே மற்றைய பயணிகளும் ஆங்காங்கு மேசைகளில் இளைப்பாறி உணவருந்திக் கொண்டிருப்பதை அவதானித்தோம். பரந்த காற்றோட்டமான இடம். வந்த வழியில் நீண்ட காட்டு சாலைப் பாதையில் பார்த்த தொடுவானம் போன்ற நீலச் சாரிகள் அணிந்த பெண்கள் எம்மை வரவேற்றனர். உணவு அருந்தும் மண்டபத்தின் பின் பகுதியில் – ஓடர் எடுத்துக் கொள்ள சேவை யன்னல்கள்(service windows) காணப் பட்டன அங்கு போய் நமக்கு விருப்பமான பல வகை இலங்கை ஊர் சமையலைக் கேட்டு ஓடர் பண்ணினோம்.

மேசையில் அமர்ந்தவுடன் அருஞ்சுவை உணவுகள் வந்து விட்டன. சுடச் சுட குத்து அரிசிச் சோறு, தேங்காய் சேர்த்த பொன்னாங்கண்ணி  கீரை வறை, மிருதுவான பருப்புக் கறி, ஊர்க் கோழிக்கறி, உடன் பொரித்த இந்து சமுத்திர ஆழ் கடல் மீன், அவித்த முட்டை இரண்டு; யாவற்றையும் பினைந்து சாப்பிட பச்சடி வேறு. இதனுடன் பழைய காலத்தை ஞாபகப்படுத்திக் கொள்ள இலங்கை நெக்டோ குளிர்பானம்.

இத்துடன் வன்னி ஊர்க் கதை பேசிடவும், உணவகம் தாபகம் பற்றி விவரிக்கவும் இனிமையாகப் பேசும் உபசரிப்புப் பெண்மணிகள் மீண்டும் வந்தார்கள். வெளியே இலங்கை வன்னிக்காட்டு சுடு வெய்யில் அடித்தாலும், உள்ளே  இதமான இளைப்பாறுதல் சுகமளித்தது. இந்தப் பெண்மணிகள் வாழ்வில் எவ்வளவு பாதிப்புக்களை எதிர்கொண்டிருப்பினும், சிரித்த முகத்துடன் வந்தவர்களை வரவேற்பது வாழ்க்கையில் அவர்கள் மனத்திடத்தை எமக்குக் காட்டியது எனலாம்.

கொழும்பில் இருந்து வடக்கு நோக்கிப் பயணிப்பவர்களுக்கும், அந்தப் பயணத்தில் இருந்து மீள்பவர்களையும் தமிழ்ப் பிரதேசத்தில் வரவேற்கிறது, மாங்குளம் பெண்களால் நடத்தப்படும் வன்னியின் சுவை உணவகம்.

இது மாங்குளம் சந்தியில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் , கிளிநொச்சியை நோக்கிப் போகும் போது A9 எனப்படும் யாழ்ப்பாணம் – கண்டி இணைப்புச் சாலை வீதிக்கும், யாழ்ப்பாணம் – கொழும்பை இணைக்கும் ரயில் பாதைக்கும் மத்தியில் வரும் தரிப்பிடம்.

மாங்குளம் கிராமிய அபிவிருத்தி சமூகத்தின் உதவியுடன் தொழிலார்வம் வாய்ந்த பெண்மணிகள் ஆரம்பித்த உணவகம் இந்த வன்னியின் சுவை. இது பயணிகள் தரித்து உணவு, உடன் செய்யப்பட்ட பழரசம், தேநீர், காப்பி, குளிர்பானங்கள் உட்கொண்டு செல்லக் கூடிய இடம். மேலும் இவ்விடம் உள்ளுர் கைவினைப் பொருட்கள் பலவும் விற்பனைக்கு உண்டு.

இந்தத் தரிப்பிடம் காலை 6 மணிக்கு ஆரம்பித்து இரவு 1 மணி வரை பயணிகளை வரவேற்கிறது. உள்ளுர் போர்களினால் எவ்வளவு அல்லல்கள், அவதிகளிற்கு உட்பட்டு இவ்விடங்கள் பாதிக்கப்படினும் வருவோரைச் சிரித்து வரவேற்று உபசரித்துப் பணிவிடை செய்வது வன்னி மக்களின் சிறப்பு. உபசரிப்பில் அவர்களுக்கு  நிகர் அவர்களே தாம்.

1978 இல் 48 அங்கத்தினருடன்  ஆரம்பிக்கப்பட்டதாம்.மாங்குளம் பெண்கள் கிராமிய அபிவிருத்தி சபை  The Mankulam Women’s Rural Development Society (MWRDS) பின்னர் 1984 இல் தாபிக்கப்பட்டது. இவ்விடம் வாழ்ந்த பெண்கள், பல ஆண்டுகள் நடந்த  இலங்கை உள்ளுர் போர்களினால் , இருக்கும், இடமிழந்து, பல குடும்பத்தவரையும் போர் முனையில் பறிகொடுத்து, பல தரம் புலம் பெயர்ந்தவர்கள் ஆயினர். இந்தப் பல்லாயிரம் விதவைகளுக்கு வாழ்வு தர, 2014 இல் ஆக்கப்பட்ட ஒன்றே இந்த வன்னி சுயவிருத்தி அமைப்பு  the Vanni Resource Self Development Organization Guaranteed Ltd. (VaReSDO Gte. Ltd.). இன்று 2018 இல் 170 அங்கத்துவர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.

மேலும். இந்த அமைப்பு,  அமெரிக்க USAID அதன் கிளை உதவு தாபனத்தாலும், சுவிஸ் சமூக அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தானம், மற்றும் இலங்கை பனை அபிவிருத்திச் சபையினாலும் வழங்கப்பட்டது. கட்டட தொழிநூட்ப உதவிகள்  சுவிஸ் அரசுசார்பற்ற சர்வதேச சுவிஸ் தொழில் உதவி அமைப்பினால் International Non-Governmental Organization Swiss Labour Assistance (SAH) வழங்கப்பட்டது.

உலகம் எங்கும் ஹோட்டல்களில் சாப்பிடுவது நம்மில் பலருக்கு சகஜம். ஆனால் அடுக்களை வாசத்துடன், வீட்டு அடுக்களை சூழலில்  சாப்பிடுவது இன்னொரு தனி அனுபவம். வன்னியின் சுவை, தமிழ் மணம் கலந்த நாட்டுப்புறச் சிறப்பில் ஒன்றாகும். வெளிநாட்டில் இருந்து பல்லாண்டுகளிற்குப் பின்னர் பயணிக்கும் யாவருக்கும் இது அவர்கட்கு பரீட்சயமான ஞாபகங்களைக் கொண்டு வரும் என்பதில் ஐயமே இல்லை. கூடவே  முதல் தர உணவகங்களுக்குப் பழக்கப்பட்ட உல்லாசப் பிரயாணிகளுக்கும் இது நிச்சயம் உவகை தரும்.

நீண்ட பயணத்தில் இளைப்பாறி சுடச் சுட அடுக்களையில் இருந்து வரும்  தமிழ் உணவை சுவைத்திடவும், சற்று தரித்து செல்லவும் இது சிறந்த இடம். அதே சமயம் அவ்விடம் நாம் உண்பதால் ஏற்படும் வர்த்தகப் பயனை மறுவாழ்வு நோக்கியிருக்கும் தமிழ்ப் பெண்மணிகளிற்கு தந்திடவும் மாங்குளம் வன்னியின் சுவை உணவகம் நல்ல இடம்.

மேலதிக விபரம் அறிந்து கொள்ள தொலைப்பேசி

இலங்கையில் 0773137407

வெளி நாட்டிலிருந்து +94 77 313 7407.

  • யோகி

Tags: , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad