\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

வீட்டுத் தரகர்

Filed in கதை, வார வெளியீடு by on September 2, 2018 0 Comments

புகையிலைத்தரகர் , மாட்டுத் தரகர் , வெங்காயத் தரகர் , கலியாணத் தரகர் , காணித்தரகர் என்று பல தரகர் தொழில் புரிவோரைப் பற்றி நாம் அறிந்திருக்கிறோம். இத்தொழில்களில் வீடு வாங்கி விற்கும் தரகர் தொழிலானது அதிக இலாபத்தைத் தரக்கூடிய தொழிலாகும். குறைந்த அளவில், மூன்று சதவிதம் கொமிஷன் கிடைத்தால் கூட அதே ஒரு பெரிய வருமானமாகும். வீட்டுத் தரகர் கட்டிடக் கலையை பற்றி ஓரளவுக்கு தெரிந்திருந்தால் மட்டும் போதாது, சட்ட நுணுக்கங்களையும் , எவ்விதம் வங்கியில் வீட்டை அடைவு வைத்து குறைந்த வட்டியில் கடன் வாங்கலாம் போன்ற வழி முறைகளையும், எவ்விதம் இனிக்க இனிக்கப் பேசி வாடிக்கையாளரைத் தனது கைக்குள் வைத்திருப்பது என்பதையும் முழுமையாக அறிந்து வைத்திருப்பவர் வீட்டுத் தரகர் வேலாயுதபிள்ளை அவர்கள். பெயர் நீண்டு விட்ட காரணத்தால் எங்கே வாடிக்கையாளர் பயத்தில் பெயரைச் சரிவர உச்சரிக்கத்தெரியாமல் ஓடிப்போய் விடுவார்களோ என்ற பயத்தில வேல் – ரியல் எஸ்டேட் ஏஜன்ட் என்று பெயரைச் சுருக்கி வாடிக்கையாளர்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘தான் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் சிவில் என்ஜினியர் பட்டம் பெற்றவன்; அதோடு சார்டட் என்ஜினியர்’ என்று அவர் அடிக்கடி கூறிக்கொண்டாலும் ஒருவர் படித்துப் பெற்ற  சர்டிஃபிக்கட்டுகளை கனடாவில அதிகம் பார்ப்பதில்லை என்பது அவருக்குத் தெரியாமலா என்ன? ஆனால் தொழிலோடு சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளை அடிக்கடி பாவித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவர் திருவாளர் வேல் அவர்கள். வேலைப் போல் கூர்மையான நுண்ணறிவு உடையவர். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளக் கூடியவர். அதுதான் கனடாவில் பிசினஸ்காரர்களுக்கு வேண்டிய முக்கிய அம்சமாகும்.

ரியல் எஸ்டேட் தொழிலில் போட்டிகள் அதிகரித்து வரும் காலக்கட்டத்தில் வேல் தன் தாய் மொழியானத்  தமிழைத் தவிர ஐந்து மொழிகளைச் சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டார்;. அதுவும் அவர் அம்மொழியைப் பேசக் கற்றது கனடாவிற்கு வந்த பின்னர்தான் என்றால் ஒருவரும் நம்பமாட்டார்கள். கனடா வரும் போது ஓரளவுக்குத் தமிழ் சிங்களம் ஆங்கிலம் பேசுவார். ஆனால் கனடாவில் சீன மொழியும், ஹிந்தியும்  பிரெஞ்சு மொழியும் அவர் செய்யும் தொழிலுக்கு அவசியம் வேண்டும் என்பதை அறிந்தார். தமிழர்களை மாத்திரம் நம்பி தொழில் செய்யமுடியாது என்பது அவருக்குத் தெரியும். அதோடு தமிழர்கள் அனேகர் வீட்டுத் தரகராக இருப்பதால் அவர்களை விட அனுகூலம் பெற  பணம் செலவு செய்து சீனமும் , ஹிந்தியும் கற்றார். அதனால் சீன இந்திய  வாடிக்கையாளர்களும் அவரைத் தேடி வந்தனர்.

****

தொலைபேசி அடித்தது. கொம்பியூட்டரில் வீடுகளைப் பற்றிய விபரங்களைத் தேடிக்கொண்டிருந்த வேல், பக்கத்திலிருந்த தொலைபேசியை எடுத்தார்

தான் யார் எனபதை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திய வேல் தோலைபேசியில் தன்னுடன் தொடர்பு கொள்ள அழைத்தவர் ஒரு தமிழர் என்பதை அவரது ஆங்கில உச்சரிப்பிலிருந்து அறிந்து கொண்டார்.

நான் சிவப்பிரகாசம் பேசுகிறன் தம்பி. இரண்டு தரம் உம்மோடை தொடர்பு கொள்ள பார்த்தனான். நீர் இருக்கவில்லை. மூன்று தரம் நீர் என்னையும் மனுசியையும் கொண்டுபோய் ஸ்காபரோவிலை வீடு காட்டினீர். நினைவிருக்கே?”

ஓம் நல்லாய் நினைவிருக்கு. நீங்கள் முந்தி கிளிநொச்சியிலை உப அரசாங்க அதிபராக இருந்தனீங்கள் தானே?. அதோடை சிலோன் கிரிமினல் லோயர் சந்திரசேகனுடைய அண்ணர் தானே நீங்கள் ?”

அதெப்படி இவ்வளவு விபரமாய்ச் சொல்லுகிறீர்?”

முந்தி ஸ்காபரோவிலை வீடு பார்க்கக்கை என்னிடம் வந்தனீங்கள். அப்ப உங்களைப்பற்றிய விபரம் சொன்னனீங்கள். அந்த நினைவு தான்” என்றார் வேல்.”

நல்லாய் ஞாபகம் வைச்சிருக்கிறீர். அப்ப நான் மகளின்டை வீட்டு பேஸ்மென்டிலை நானும் மனுசியும் இருந்தனாங்கள். இப்ப மிசிசாகாவுக்கு வந்திட்டோம். ஒரு வீடு வாங்க வேண்டும் எண்டு யோசிக்கறோம். கலியாணம் முடிக்காத எங்கடை மகன் ரமேஷ்  இரண்டு வேலை செய்கிறான். இப்ப அப்பார்ட்மெண்ட ஒன்றிலை இருக்கிறம்.; அது தான் வீடு ஒன்று வாங்கிப்போவம் என்று யோசிக்கிறம்”

நல்ல யோசனை தான் அதற்கு காசு கொஞ்சம் முதல் போட வேண்டும். மாதா மாதம் மோர்ட் கேஜ் கட்ட வேண்டும். இதுக்கெல்லாம் உங்களாலை முடியுமே அய்யா”

உதென்ன கதை கதைக்கிறீர். என்னுடைய மகன்டை மாதச்சம்பாத்தியம்; கிட்டத்தட்ட 5000 டொலர். அதோடை நான் டியூசன் வேறை கொடுத்து கொஞ்சம் உழைக்கிறன். என்டை கொழும்பு வீடும் , யாழ்ப்பாணத்துக் காணியும் வித்து இங்கை 60,000 டொலர் பாங்கிலை போட்டு வைச்சிருக்கிறன். இதை விட என்ன வேண்டும்?”

உது போதும் மோட்கேஜிலை வீடு வாங்க. மிச்சம் நான் பாக்கிறன். அது சரி எவ்வளவுக்குள்ளை வீடு வாங்கப் பார்க்கிறீர்?”

மூன்று அறையோடை, டபிள் கராஜோடை தனி வீடாகப் பாக்கிறன். அதுவும் கரைச்சல் இல்லாத அமைதியான இடத்திலை வேண்டும். பக்கத்திலை எங்கடை சனம் இருக்கக் கூடாது . இருந்தால் பிறகு ஸ்காபரோ போலாகிவிடும்.”

அது பிரச்சனையில்லை. கிட்டதட்ட மூன்று இலட்சத்துக்கு மேலை முடியும். என்ன சொல்லுறியள்?”

அதுக்கென்ன . இப்ப வீடுகளிண்டை விலை கூடிப்போச்சு எண்டு எனக்கு தெரியும். அப்ப எப்ப போய் வீட்டை பாக்க ஒழுங்குச் செய்யப் போகிறீர்?”

நான் கொம்பியூட்டரிலை தேடிப் போட்டு, நாளைக்குக் காலை பத்து மணிக்கு உங்களுக்குப் போன் செய்யிறன். உங்கடை புது நம்பர் இதிலை விழுந்திருக்குது. இதுக்குப்  போன் செய்தால் சரிதானே?”

ஓம் உந்த நம்பருக்கு அடியும். அதோடை இன்னொரு விஷயம். எங்களிடம் கார் இல்லை. மகன் தடை காரிலை வேலைக்கு போயிடுவான். அவனுக்குத் தொந்தரவு கொடுக்கக் கூடாது.  நானும் மனுசியும் வருவம் வீடு பார்க்க. அதாலை நீர் தான் இங்கை வந்து எங்களை கூட்டிப் போகவேணும். என்ன முடியுமே?”

அது பிரச்சனையில்லை. அது சரி வீடு, வேலை செய்கிற உங்கடை மகன்டை பேரிலை தானே வாங்கப் போகிறியள்?”

ஓம் அவனடை பேரிலை தான். அனால் எங்கள் இரண்டு பேரிலையும் சீவிய உருத்து வைத்து எழுதவேணும்.”

அதைப் பற்றி நான் லோயாரோடை கலந்து ஆலோசித்து மறுமொழி சொல்லுறன்.”

நாங்கள் முதல் பணம் 60,000 போடுகிறம். அதாலை எங்களுக்கு ஒரு பிடி இருக்கவேண்டும். இல்லாட்டால் நாளைக்கு மகன் கலியாணம் முடிச்ச பிறகு வரப்போகிற மருமகள் எங்களை வெளியே போகச் சொன்னால் நாங்கள் என்ன  செய்வது?”

அதுவும் சரிதான். அது சரி உங்கடை மகன் வீட்டைப் பார்க்க வேண்டாமே?”

நாங்கள் பார்த்து ஓம் சொன்னால் அவன் ஒரு தடையும் சொல்லமாட்டான். அதோடை அவனுக்கு வீட்டை வந்து பார்க்க எங்கை தம்பி நேரம் இருக்குது?. நாங்கள் தானே முற்பணம் போடுறம்.”

நீங்கள் சொன்னால் எல்லாம் சரி. நாளை விடிய பத்துமணிக்கு வந்து மூன்று வீடு காட்ட கூட்டிக்கொண்டு போறன் ரெடியாய் இருங்கோ. என்ன?. அது சரி நீங்கள் இருக்கிற அட்ரசைத் தாங்கோ.”

சிவப்பிரகாசம் தான் இருக்கற அப்பார்ட்மெண்ட் விலாசத்தைக் கொடுத்தார்.

சரி ஐயா நாளைக்கு சந்திப்பம். நான் உங்கடை அப்பார்ட்மெண்ட் முன்னுக்கு காரை நிறுத்திப்போட்டு போன் செய்கிறன் நீங்கள் இறங்கி கீழே வாங்கோ என்ன?”

அதுக்கென்ன?. நல்ல அதிர்ஷ்டமான வீடு வாங்க உம்மை நம்பித்தான் இருக்கிறம். நம்பரும் சரியாக இருக்க வேண்டும் எனக்கு எட்டும் இரண்டும் ஒத்து வராது. மனுசிக்கு ஒன்று சரிபட்டுவராது. மகனுக்கு ஆறு பொருத்தமில்லை. கிழக்கு வாசலோடு இருந்தால் நல்லது. முச்சந்தி வீடு வேண்டாம். பிறகு எங்களை முச்சந்தியிலை கொண்டு போய் விட்டிடும். அதோடை வீட்டடிக்கு பக்கத்திலை ஹை வே இருக்க கூடாது. பவர் லைனும் இருக்கக் கூடாது. உதெல்லாம் சுவாசிக்கிற காற்றை அசுத்தப்படுத்திவிடும். பிறகு கன்சர் வந்தாலும் வரும். பக்கத்து வீட்டு சனங்கள் பிரச்சனையில்லாமல் இருக்க வேண்டும். வெள்ளையனாக இருந்தால் நல்லது. தாங்களும் தங்கடை பாடும் என்று இருப்பினம். ஊரிலை எண்டால் சாதி எப்படி எண்டு விசாரிக்கலாம். இங்கை உந்த வெள்ளைக்காரச் சனங்களுக்கு சாதி கிடையாது”.

அப்ப உங்களுக்கு வீட்டு நம்பரின் கூட்டுத் தொகை முன்று, நாலு, ஐந்து, அல்லது ஏழு அல்லது ஒன்பதாக இருக்க வேண்டும என்கிறியள். அப்படித்தானே ?”

ஒற்றைப்பட நம்பர் இருந்தால் நல்லது. லக்கி செவின் என்பினம். அது போல ஏழாம் நம்பர் வீடு கிடைத்தால் விட்டிடாதையும்”

ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ. என்னிடம் பொறுப்பை கொடுத்திட்டியள். எல்லாம் உங்கடை திருப்தி பட நடக்கும்.”

****

பாவம் வேல். குறைந்தது முப்பது வீடுகளாவது சிவாவுக்கும் அவர் மனைவிக்கும் காட்டிக் களைத்திருப்பார். பெட்ரல் செலவு தான் மிச்சம். என்ன செய்வது அந்த மனிதன் விட்டால் தானே. வார நாட்களில் வேலின் காரில் மிசிசாகா முழுவதும் சுற்றிப் பார்த்திருப்பார்கள்; சிவாவும் மனைவியும். பார்த்த ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு குறை சொல்லி விடுவார் சிவா. உண்மையில சிவா வீடு வாங்க ஆர்வம் உள்ளவரா எனபது வேலுக்குச் சந்தேகமாக இருந்தது. ஆனால் வந்த வாடிக்கையாளரை விடவும் விருப்பமில்லை.

****

து ஒரு அழகிய மூன்றரை வீடு. விலையும் சிவா சொன்ன தொகைக்குள் இருந்தது. வீட்டு சொந்தக்காரர் ஓரு இத்தாலிய நாட்டவன். உத்தியோகம் கிடைத்து ஒட்டாவாவுக்கு மாற்றலாகிப் போகிறான். அதனால் வீட்டை அவருக்கு வெகு விரைவில் விற்றாகவேண்டும். முன் பக்கத்திலும் பின் பக்கத்திலும் அழகிய சிறு பூந்தோட்டம். ஒரு பேஸ்மெண்ட வேறு. அதற்குப் போகும் வழி வெளிப்பக்கத்தில இருந்ததினால் வாடகைக்கு விட வசதியாக இருந்தது. சிவா கேட்டபடி வீட்டு எண்ணின் கூட்டுத் தொகை கூட ஏழு தான். இரண்டு நிமிடம் நடந்தால் பஸ் தரிக்கும் இடம். அதில் பஸ் எடுத்தால் பதினைந்து நிமிடங்களில் டவுன் சென்டருக்குப் போகலாம்.

என்ன ஐயா உங்களுக்கும் அம்மாவுக்கும் வீடு பிடித்திருக்கே.? நீங்கள் கேட்ட மாதரி எல்லாம அமைஞ்சிருக்கு”

எனக்கே வீட்டைப் பார்த்தவுடன் ஆச்சரியமாய் இருக்கு. வீட்டை துப்பரவாக வைத்திருக்கிறான்.”

வீட்டு வேலைகளைத் தானே செய்யக் கூடிய திறமைசாலி சொந்தக்காரன். அம்மா என்னவாம்?”

வீட்டிலை நாய் மயிர் தான் கூட இருக்குது போல கிடக்குது. “

ஓம் நாய் ஒன்றை வளர்த்தவன். அதை ஒட்டாவுக்கு அனுப்பிப்போட்டான. மயிர் பெரிய பிரச்சனையில்லை. ஹூவர் பிடித்தால் எல்லாம் சரி. சுவர் எல்லாத்தையும் பார்த்தியலே. ப்ரிஜ், வோசிங் மெசின், குக்கர் எல்லாம் வாங்கி இரண்டு வருஷம். அதுக்கும் சேர்த்து தான் விலை.”

“315,000 டொலர்  கொஞ்சம் கூடிப் போச்சு போல கிடக்கு தம்பி. மூன்று இலட்சம் கேட்டுப்பாருமேன்.”

வீட்டுக் கூரையும் முன் டிரைவ்வேயும் போட்டு ஒரு வருஷம். எயர் கொண்டிஷன் ,ஹீட்டர் எல்லாம் அவ்வளவு காலம் இல்லை. குசினையைப் பார்த்தியளே?. இரண்டு வருஷத்துக்கு முந்திதான் எல்லாம் புதுசாய் மாத்தினவன். சுவரிலை ஒரு வெடிப்பில்லை. உங்களுக்குக் குறைந்தது பத்து வருஷத்துக்கு வேலை ஒன்றும் வீட்டுக்குச் செய்யத் தேவையில்லை.”

எனக்கு விளங்குது. எதுக்கும் எட்டாவது குறைத்து கேளும். அப்பத்தான் 305,000க்கு சம்மதிப்பான்.”

ஒன்று மட்டும் சொல்லுறன். நாளைக்கு மூன்று போர் இந்த வீட்டை பார்க்க வருகினம். இது விளம்பரப்படுத்தி ஒரு கிழமை தான். மூன்று வீடு தள்ளி ஒரு வீடு விளம்பரம் செய்து இரண்டு கிழமைக்குள் கேட்ட விலைக்குப் போயிட்டிது. அதாலை இந்த ஏரியாவுக்கு நல்ல மதிப்பு.”

சரி சரி நாளைக்கு ஞாயிறு வசதி பட்டால் என்றை மகனையும் கொண்டு வந்து காட்ட ஒழுங்கு செய்ய முடியுமே. எப்படியும்; அவன் தானே மோட்கேஜ் கட்டப் போறான்.”

அது பிரச்சனையில்லை. அவருக்கும் இந்த வீடு பிடிக்கும். பத்து   நிமிஷத்திலை 403 ஹைவே . பிறகு பதினைந்து நிமிஷத்திலை உங்கடை மகன் வேலை செய்யும் இடத்துக்குப் போகலாம்.”

சரி சரி . 305,000 என்றால் பேசி முடியும்.”

ஏதோ தெண்டிக்கிறன். இத்தாலியர்கள் காசிலை கொஞ்சம் இறுக்கம்.”

கதைச்சுப்போட்டு கெதியிலை என்னோடைத் தொடர்பு கொள்ளும். என்ன ?. “

****

லமுறை முயன்றும்  சிவாவுடன் வேலால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் கேட்ட விலைக்கு வீட்டுச் சொந்தக்காரன் சம்மதித்துவிட்டான். இரண்டு நாட்களில் ஒப்பந்தம் எழுதவேண்டும் என்பது அவனது நிபந்தனை. வேலுக்கு அந்த  சந்தர்பத்தை இழக்க விருப்பமில்லை. காரணம் குறைந்தது கழிவு போக ஐயாயிரம் தேறும். ஆனால் பல தடவை சிவாவின் ஃபோனுக்கு அடித்தும் பதில் இல்லை. ஒரு வேளை மனுசன் காலை வாரி விட்டு விடுவாரோ?

****

வேலின் டெலிஃபோன் அடித்தது. ஓரு வேலை சிவாவாக இருக்குமோ என்ற எண்ணத்தில் போய் டெலிஃபோனை எடுத்தார் வேல்

“ஹலோ வேல் நான் இங்க ரவி கதைக்கிறன். எப்படி போகுது பிஸ்னஸ்?” பேசியது அவனுடன் ரியல் ஏஜன்டாக வேலை செய்யும் நண்பன் ரவிக்குமார்.

“அதை ஏன் பேசுகிறாய். ஒரு கிளையன்டுக்கு வீடு ஒன்ற பார்த்துப் பேசி முடித்தப் பிறகு அவருக்குப் பல தடவை ஃபோன் செய்தும் ஆளைப் பிடிக்க முடியாமல் கிடக்குது. சுமார் முப்பது வீடுகளுக்கு  மேலை அவருக்கு காட்டிப்போட்டன். கடைசியில் ஒரு பாடாக ஒரு வீடு அவருக்கு பிடிச்சுப்போட்டுது.”

“ஆர் ஆள் பெயரைச் சொல்லும். ஒரு வேளை எனக்குத் தெரியலாம்.”

“சிவப்பிரகாசம் பேர். முந்தி உங்கை ஸகாபரோவிலை மகளோடை இருந்தவர். இப்ப மிசிசாகாவுக்கு கலியாணம் முடிக்காத மகனோடை அப்பார்ட்மெண்டிலை வந்திருக்கிறார். முந்தி கிளிநொச்சியிலை ஏ ஜி  யாக இருந்து ரிட்டையரானவராம். ஊரிலை இருந்த காணி பூமிகளை வித்து 60,000 கையிலை இருக்காம். அது தான் விடு வாங்க என்னிடம் வந்தவர்.”

டெலிஃபோனில் ரவியின் சிரிப்புச் சத்தம் கேட்டது.

“ஏன் நான் சொன்னதைக் கேட்டுப் போட்டுச் சிரிக்கிறாய் ரவி?”

“ஒன்றுமில்லை.. நல்ல ஆளிடம் போய் அகப்பட்டுக்கொண்டீர்;. ஓசியிலை மிசிசாகா முழுவதும் உம்முடைய காரிலை போய் வீடு பாக்கிற சாட்டில் சுத்திப் பார்த்திருப்பாரே?”

“அப்படித்தான் யோசிக்க வேண்டிக் கிடக்குது. ஏன் உமக்கு ஆளைத்தெரியுமே?”

“ஏன் தெரியாது. எனக்கு தூரத்துச் சொந்தம் கூட அவர் இங்கை ஸகாபரோவிலையும் உந்த விளையாட்டு விட்டவர். இப்ப ஆள் கனடாவிலை இல்லை. மூன்று நாட்களுக்கு முந்தி  தான் அவர் மனுசியோடை ஊருக்குப் போயிட்டார். எப்பத் திரும்புவாரோ தெரியாது.”

“அடக் கடவுளே. இப்படியும் மனுசர் இருக்கினமே?. நான் உம்மிடம் ஆளைப் பற்றி முதலிலை விசாரித்து இருக்க வேண்டும் வீடு தேட முன்பு.”

“நீர் ஒன்றுக்கும் யோசிக்காதையும். எனக்குத் தெரிந்த ஒருவர் அமெரிக்காவில வேலை செய்து போட்டு இப்ப கனடாவுக்கு வந்திட்டார். ஏயர் போட்டிலை வேலை கிடைச்சிருக்கு அவருக்கு .. மிசிசாகாவிலை வீடு தேடுகிறார். எனக்கு இங்கை ஸ்காபரோவிலை இருந்து வந்து போகிறது கஷ்டம். நீர் பார்த்துச் செய்யும். சிவாவைப் போல் இல்லாமல நல்ல நம்பிக்கையான ஆள். கிடைக்கிற கொமிஷனிலை எனக்கு ஒரு பங்கைத் தாருமன் என்ன?”

வேலுக்கு ரவி சொன்னது மன ஆறுதலைக் கொடுத்து. போனது போகட்டும் நடக்கப்போவதைக் கவனி என்றது அவரின் மனம்.

“சரி உம்மை நம்பி இறங்கிறன். ஆளை எனக்கு ஃபோன் செய்யச் சொல்லும். நான் நல்ல வீடாகத் தேடிக் கொடுக்கிறன் என்ன?”

வேல் இது போன்ற பல அனுபவங்களைச் சந்தித்தவர். ஏஜன்ட் வேலை என்றால் பல ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும்.

  • பொன் குலேந்திரன்  – கனடா

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad