பரதேசிகள்
நாற்றங்காலில்
புற்களுக்கிடையில் முளைத்திருக்கும்
நாற்றுகளைத் தப்பாமல் எடுத்து
முடிபோடுவார் தாத்தா
நடவுநட்டு மீந்த நாற்றுகளை
யாருக்காவது தானமளிப்பர் விவசாயிகள்
நெற்கட்டுகளைத் தூக்க
இன்னும்நாங்கள் வளராததால்
தப்புகதிர்களைப் பொறுக்கும்
வேலை எங்களுக்கு
களத்துமேட்டில் சிதறிக்கிடக்கும்
நெல்மணிகளை
ஒன்றுவிடாமல் பொறுக்கிடுவாள் பாட்டி
கமிட்டியில் அநியாய விலைக்கு
எடுத்தாலும் எடைபோட்டப்பிறகும் இனி நமக்கென்ன லாபம் என்றெண்ணாமல்
கொட்டிக்கிடக்கும் நெற்களை அள்ளி மூட்டையில் போட்டுவிட்டு வெளியேறுவார் அப்பா
குழந்தை சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் தம் உணவோடு சேர்த்துத்திண்பாள் தாய்
பட்டினிச்சாவறியா
பரதேசிகள்
கை கழுவிடுகிறார்கள்
தட்டுச்சோற்றில்.
–ஸ்ரீரங்கராஜபுரம் துளசி.