பூப்பனை என்றாகி..
நான் பூப்பனையானேன்
பூத்துக்கொண்டே வளர்கிறேன்
எனது பூவில் அழகில்லை
எனது பூவில் இனிமை இல்லை
எனது பூவில் ஒரு கனவும் இல்லை
கடல் ஓரத்து மணல் வெளியில் உயர்ந்து நிற்கிறேன்
கடற் காற்றின் தடவுதலில்
நான் வளர்ந்து போகிறேன்.
எனது முகத்தில் உதயசூரியன்
உப்பு நீரைத் தெளித்துவிடுவான்
உப்புக் காற்றைச் சாமரத்தோடு கலப்பான்
கானலை விசிறுவான்
போதையோடு சரிந்துகிடக்கும்
மனிதக் கட்டைகள் என்னைத் தூரமாய்ப் பார்த்து உரையாடுவர்.
நான் பூப்பனையானேன்
எள்ளிநகைக்கும் தூக்கணாங்குருவிகள் என்னில் கூடுகளுக்குச்
சொருகும் புல்களின் வலிமை எனது ஓலையின் ஈர்க்குகளில் தெரிகிறது என்பதைக்
காய்ப்பனை அறிந்திருக்கிறது.
காய்க்கும் பனைகளில் எத்தனைப் பழங்களைக் காகம் உதைத்திருக்கிறது
நிலவு தள்ளியிருக்கிறது
பனி உசுப்பியிருக்கிறது
நான் காய்க்கும் பனைகளுக்குள் ஒரு பூக்கும் பனை என்றாகி.
–டீன்கபூர்