\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மதுரை

 madurai_352x341சில நகரங்கள் தோன்றும் மறையும் அது உலக இயல்பு. ஆனால் ஒரு சில நகரங்கள் மட்டுமே தொடர்ந்து மக்கள் வாழத் தகுதி உள்ளதாகவும் அதன் பெருமை குறையாமலும் இருக்கும். அத்தகைய ஒரு மாநகரம் மதுரை. கடைச்சங்கம் வளர்த்தப் பாண்டியத் தலைநகர், மல்லிகை நகரம், தூங்கா நகரம் என மக்களால் புகழப்படும் மாநகரம் மதுரை. எந்தப் பக்கச் சார்புள்ள வரலாற்று ஆசிரியர்களாலும் இதன் இருப்பைக் குறைந்தது 2500 ஆண்டுகளுக்குக் கீழ் சொல்ல இயலாது.

மதுரையின் வரலாற்றைச் சொல்லக் கி.மு,கி.பி என்ற இந்த இரண்டாயிரம் ஆண்டுக்கணக்கை வைத்து அளவிட முடியாது.இதன் வரலாறு பழைய கற்காலம் தொட்டே தொடங்குகின்றது. சுமார் இன்றைக்கு ஐந்திலக்க வருடங்கள் முன்பாகவே மக்கள் இப்பகுதியில் வாழத் தொடங்கியிருக்கின்றனர். புருசு ஃபுட் என்ற அறிஞர் வைகையின் வடகரையில் பழைய கற்காலக் கருவிகளையும் மதுரையின் தெற்கே வெள்ளாளன் குளத்தில் 10000 ஆண்டுக்கு முற்பட்ட புதிய கற்காலக் கருவிகளையும் கண்டெடுத்துள்ளார். மதுரையிலுள்ள கோவலன் பொட்டல் என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வில் நுண் கற்காலக் கருவிகளும் முதுமக்கள் தாழிகளையையும் கண்டுபிடித்துள்ளனர்.வரலாற்றுக்காலத்துக்கு முற்பட்ட கற்காலக் கருவிகளும் இப்பகுதியில் கிடைத்திருப்பதால் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்டே இப்பகுதியில் மக்கள் வாழ்திருக்கின்றனர் என்று தெரிகின்றது.

மௌரியப் பேரரசின் அமைச்சர் கௌடில்யர் (கிமு 370 – கிமு 283) மற்றும் கிரேக்கத் தூதர் மெகஸ்தெனிஸ்(350 கிமு – 290 கிமு) ஆகியோரின் குறிப்புகளில் மதுரை பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாபாரத்திலும், மகாவம்சத்திலும், அசோகரின் கல்வெட்டுகளிம் பாண்டி நாடு பற்றிய குறிப்புகள் உள்ளன

கி.மு 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய நெடுஞ்செழியன் கல்வெட்டு மதுரை அருகிலுள்ள மாங்குளம் மலையில் பொறிக்கப்பட்டுள்ளது.

கி.மு 7 ம் நூற்றாண்டைச் சேர்ந்த செமிட்டிக் கல்வெட்டில் பாண்டியர்களைப் படே என்றும் மதுரையைக் கூடல் என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.

அழகர்மலை மற்றும் பூலாங்குறிச்சி கல்வெட்டுகளில் மதுரை மதிரை என்றே குறிக்கப்பட்டுள்ளது.

 

மதுரை காஞ்சி என்னும் நூலில் மதுரை நகர அமைப்புப்பற்றி விரிவாகத் தரப்பட்டுள்ளது. மதுரை நகரில் அரண்மனை,பலகோவில்கள், நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்ட தெருக்கள்,இரு பெரும் கடைத்தெருக்கள், அரசன் நீதி வழங்க அறமன்றங்கள் ஆகியவை இருந்திருக்கின்ற.

மதுரை நகரின் கட்டிடக் கலையும் நகரமைப்பும் கிரேக்க நாட்டின் தலைநகரைப் போன்று இருந்ததால் ‘கிழக்கு நாடுகளின் ஏதென்ஸ்’ என்று மதுரையைப் பற்றி கிரேக்க யாத்திரிகர் மெகஸ்தனிஸ் கி.மு.3ஆம் நூற்றாண்டு தனது இண்டிகா எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை என்ற பெயரில் இன்னும் பல ஊர்கள் இருக்கின்றன்.  முதல் தமிழ்ச்சங்கம் இருந்த தென்மதுரையை கடல் கொண்ட செய்தி நாம் அறிந்ததே. இன்றய மதுரையின் அருகில் மானாமதுரை அல்லது மறவர் மதுரை என்ற ஊர் உள்ளது. இது பாண்டியன் படை தங்கிய இடம். வட இந்தியாவில் மதுரை என்ற ஒலிமைப்புக்கு ஒத்த மதுரா என்ற ஊர் உள்ளது. இந்தோனேசியாவில் சாவா தீவில் மதுரா என்ற ஊர் உள்ளது.

 மருத நிறைந்திருந்த காரணத்தால் இவ்வூர் மதுரை என்று அழைக்கப்பட்டது.

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகத் தன் வாலை வாயினால் கவ்வி கொண்டு இவ்வூர் எல்லையைக் காட்டியதால் ஆலவாய் என்ற பெயர் ஏற்பட்டது என்று ஒரு கதை கூறுகிறது.

மதுரையை அழிக்க வருணன் ஏவிய ஏழு மேகங்களையும் தடுக்கும் பொருட்டு சிவபெருமான் தன் சடையிலிருந்து விடுத்த நான்கு மேகங்களும் நான்கு மாடங்களாகக் கூடி மதுரையைக் காத்ததால் நான்மாடக்கூடல் என்ற பெயரும் மதுரைக்கு உண்டு என்கிறார்கள் சிலர்.

சங்கக் காலத்தில் தமிழ்ப்புலவர்கள் கூடிக் கலந்துரைடியதால் ‘கூடல்மாநகர்’ என்ற பெயராலும், திசைக்கொன்றாய்க் கோட்டையின் நான்கு வாசற்புறங்களைக்(மாடங்கள்) கொண்டு திகழ்ந்ததால் ‘நான்மாடக்கூடல்’ என்ற பெயராலும் மதுரை அழைக்கப்படுகிறது ‘

Madurai2_620x465இடைச்சங்கம் கண்ட கபாடபுரம் ஆழிப்பேரலையால் அழிவுற்ற போது பாண்டிய மன்னன் இயன்ற அளவு தமிழ் நூல்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு மதுரை வந்து சேர்ந்ததாக அறியப்படுகிறது. பாண்டியன் என்ற வார்த்தையே மதுரையின் பழமையை உணர்த்தும். பாண்டி என்னும் சொல் பண்டைய – பண்டு என்ற பழமையின் மூலச் சொல்லிலிருந்து வந்தது.

சங்க இலக்கியங்கள் வாயிலா தெரியவரும்  450 புலவர்களில் சுமார் 100 புலவர்கள் மதுரை பகுதியிலேயே இருந்திருக்கின்றனர். அவர்களில் சிலர்

துரை வேளாசன், மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன், மதுரை போத்தனார், மதுரை பெருமருதிளநாகனார், மதுரை பெருமருதனார், மதுரை பெருங்கொல்லன்.

இந்த ஊரைப் பாடாத இலக்கியங்கள்  இல்லை என்று சொல்லும் அளவிற்கு நீண்ட நெடிய இலக்கியப் பின்னணி கொண்ட ஊர். திருமுருகாற்றுப்படை, மதுரைக் காஞ்சி, நற்றிணை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,  சிறுபாணாற்றுப்படை, மதுரைக்காஞ்சி, புறநானூற்றில்  இவ்வூர் பாடப்பட்டுள்ளது. விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ணர் தமிழ் நாட்டின் மீது படையெடுத்து மதுரையைக் கைப்பற்றியதை அவர் மனைவி கங்கதேவி மதுரா விஜயம் என்ற சமஸ்கிருதக் கவிதை நூலில் எழுதியுள்ளார்.

சிலப்பதிகாரத்தில் மதுரையை ஓங்குசீர் மதுரை, மதுரை மூதூர் மாநகர், தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை, மாண்புடை மரபின் மதுரை, வானவர் உறையும் மதுரை, பதிவெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர் எனப் பல்வேறு அடைமொழிகளால் இளங்கோவடிகளும் சிறப்பிக்கின்றார்.

மதுரை நான்கு பக்கங்களிலும் மலைகளை அரண்களாகக் கொண்டவூர். கிழக்கே நாக மலை, மேற்கே ஆனைமலை, தெற்கே பசுமலை மற்றும் வடக்கே ராக்கமலை(வலிமை அல்லது சிங்கம்) என்கின்ற அழகர்மலை.ஒவ்வொரு திசையிலும் ஒர் மிருகம் இருந்து பாதுகாப்பதாக நம்பப்படுகின்றது.

பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டபொழுது இங்கு TVS பேருந்து தான் புக்கத்தில் இருந்துள்ளது. அப்போது குறிப்பிட்ட ஊர் செல்லும் பேருந்து என்று இல்லாமல் பொதுவாக ஒரு பேருந்து வந்து நிலையத்தில் நிற்கும். அனைத்து ஊர் செல்லும் பயனிகளும் ஏறிக்கொள்வர். பேருந்து புறப்படப் போகும்போது எவ்வூர் செல்லும் மக்கள் அதிகமாக இருக்கின்றார்களோ அந்த ஊருக்குச் செல்லும்.

மதுரையில் தான் காந்தியடிகள் 1921 செப்டம்பர் 21 நள்ளிரவில் மேலாடை களைந்து அரைமுழ ஆடை தரித்தார். 22 -ஆம் தேதி காந்திப்பொட்டல் என்று அழைக்கப்படும் இடத்தில் அரைமுழ வேட்டியுடன் உரையாற்றித் தன் வாழ்வின் புதிய அத்தியாயத்தைத் துவக்கினார்.

 

– சத்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad