அழகிய ஐரோப்பா – 1
உல்லாச உலா
அமெரிக்காவில் பனியும் பணியுமாக வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. பூட்டிய அறைகளிலேயே பிள்ளைகள் நாளாந்த வாழ்க்கையைக் கடந்து போகிறார்கள்.
பிள்ளைகளின் மகிழ்வுக்காகச் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெளியூர் பயணம் மேற்கொள்வது என்பதை ஒரு நோக்கமாக வைத்துள்ளோம்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் கனடா சென்றிருந்தோம். அமெரிக்கா வந்தபின் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் அது என்பதால் மறக்கமுடியாத நினைவாக இன்றும் இருக்கிறது. இரண்டு வருடம் முன்பு துபாய் மற்றும் இலங்கை சென்றிருந்தோம். இவ்வருடம் ஐரோப்பா போவதென முடிவெடுத்திருந்தோம்.
ஐரோப்பிய பயணம் நெருங்க நெருங்க பயண ஆயத்தங்களும் தானாகவே வேகம் பிடிக்கத் தொடங்கியிருந்தது. அமெரிக்கன் ‘பாஸ்போர்ட்’ என்பதனால் ‘வீசா’வுக்கான தேவை எதுவும் எமக்கு இருக்கவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே மொத்தக் குடும்பத்துக்குமான ‘டிக்கெட்’ எடுத்திருந்தமையினால் முன்னேற்பாட்டுக்கான நாட்கள் அதிகமாகவே இருந்தது.
என் பிள்ளைகள் சொந்தங்களைப் பார்க்கும் ஆவலில் ‘கவுண்ட் டவுனை’ ஆரம்பித்திருந்தார்கள். விடுமுறை பற்றி தம் பள்ளியிலும் பகிர்ந்திருந்தார்கள்.
நாட்கள் நெருங்க நெருங்க ஆவல் மிகுதியால் கைகளை உயர்த்திக் கொண்டு ‘ய்ய்யெய்’ என்று குதிப்பதும் ஓடுவதுமாக தமது குதூகலத்தை வெளிப்படுத்த தொடங்கியிருந்தார்கள்
இதற்கிடையில் லண்டன் முதல் சூரிச் வரையான பூகோளம், சரித்திரம், பொருளியல், சட்டம் எல்லாவற்றையும் மேலோட்டமாக எனக்கு படிக்க வேண்டியதாயிருந்தது. முன்னேற்பாடாக சில பிரெஞ்சு, டொச்சு சொற்களையும் கூகுள் உதவியுடன் தேடி வைத்திருந்தேன் .
நான் வாங்க விரும்பும் பொருட்கள் இங்கிலாந்து, யேர்மனி, பிரெஞ்சு மற்றும் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் என்ன விலை விற்கிறது என்பதையும் ஆய்வு செய்தேன்.
பிள்ளைகள் இருவரும் ஞாயிறு மாலையே தமக்கான பயணப் பொதிகளை ஒழுங்கு செய்திருந்தனர். எல்லா பெட்டிகளையும் மீள ஒழுங்கு பார்த்துப் பயணத்துக்கு ஆயத்தமாக வைத்திருந்தேன்.
இரவு முழுவதும் நித்திரை வர மறுத்தது. திங்கள் மாலை 5:50 க்கு விமானம் புறப்படுவதாக இருந்தது.
ஆனாலும் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து மீண்டும் ஒருமுறை பெட்டிகளைச் சரிபார்த்துக் கொண்டேன். ஆர்வக் கோளாற்றில் பிள்ளைகள் ஏதும் வைத்து விடக் கூடாது என்ற வீண் பதற்றம் எனக்கு.
கோடை விடுமுறை என்பதால் பிள்ளைகள் இருவரும் தாமதமாகவே எழுந்திருப்பது வழக்கம்… இன்று வழமைக்கு மாறாக ஏழு மணிக்கே எழுந்து விட்டார்கள்.
கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல அன்றைய நாள் ஆரம்பமாகியது.
காலையிலேயே என் மனைவி கிச்சனில் மும்முரமாக எதோ செய்துகொண்டிருந்தாள். நானும் பலதடவை சொல்லி விட்டேன்…
“இன்று சமையல் வேண்டாம், ஏதாவது இந்தியன் ரெஸ்டாரண்ட்டில் மத்தியானச் சாப்பாட்டை முடிக்கலாம்” என்றேன்
அவளோ “பயணம் போவதற்கு முதல் ரெஸ்டாரண்ட் சாப்பாடு வேண்டாம்” என்பதில் குறியாக இருந்தாள்.
இதற்கிடையில் இரண்டு தடவைகள் ஃபோன் ரிங் ஆகி கட்டானது. மூன்றாவது முறையாக ஃபோன் ரிங் ஆனபோது;
“உந்தப் போன் அடிக்கிறது யாருக்கும் காதிலை கேட்கலையோ” என அதட்டினாள்.
“அம்மா நான் பிஸி…” என்றாள் மகள் மேலே தன் அறையில் இருந்தபடி…
“நானும் பிஸி…” என்றான் என் ஆறு வயது மகன்.
நான் கதவைத் திறந்து ஃபோனை நோக்கி ஓடி அதை எடுப்பதற்கு முன் மூன்றாவது தடவையாக வந்த அழைப்பும் நின்று போனது.
தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புக்களை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை.
ஆனால் “பயணம் போகும் நாளில் யாராவது தெரிந்தவர்களாக இருக்கலாம்…” என்ற சிந்தனையுடன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்தேன்… .
பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து மீண்டும் போன் ரிங் பண்ணியது. இம்முறை முதலாவது ரிங்கிலேயே ஃபோனைத் தூக்கி விட்டேன். அதே நம்பர்…
“ஹலோ” என்றேன்
“…………..”
“ஹலோ… ”
நீண்ட மௌனத்தின் பின் மறுமுனையில் ஒரு பெண் குரல் “ ஹலோ “ என்றது. அவள் என்னை எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது மௌனம் உணர்த்தியது. எதோ வாயில் நுழைய மறுக்கும் பெயர் ஒன்றைச் சொல்லி அவருடன் பேச வேண்டும் என்றாள்.
“ ஐ ஆம் ஸாரி… திஸ் இஸ் ராங் நம்பர்…”
என்றபடி போனைச் சட்டெனக் கீழே வைத்து விட்டு அதன் கேபிள் லைனை டிஸ் கனெக்ட் பண்ணத் தொடங்கினேன்…
பயணம் தொடரும்… பாகம் – 2
-தியா-
தேவையற்ற தகவல்களை எழுதுகிறீர்கள் .
கருத்துக்கு நன்றி