சாமி ஸ்கொயர்
தமிழின் தலை சிறந்த இயக்குனர்களான மணிரத்னம், ஷங்கர் போன்றோர் கூட ஆங்கிலப் படங்கள் பார்த்து இன்ஸ்பையர் ஆவதுண்டு. உள்ளூர் சரக்கோடு மட்டுமே படம் எடுத்து கமர்ஷியல் ஹிட் கொடுத்துக் கொண்டிருப்பவர் இயக்குனர் ஹரி. அவ்வப்போது, கூடவே கொஞ்சம் தலைவலியும் கொடுப்பார். 2003 இல் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன சாமி படத்தின் இரண்டாம் பாகத்துடன் இப்போது களம் இறங்கியிருக்கிறார். சிங்கத்தின் மூன்று பாகங்களை இயக்கியவருக்கு சாமியின் அடுத்த பாகத்தை எடுக்க ஆசை வராதா? நமக்கும் தான்.
விக்ரமின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது சாமி. ஹரிக்கு இரண்டாவது படம். த்ரிஷாவிற்கு முதல் ஹிட் படமாக அமைந்த படம். சிநேகன் எழுதிய “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?” சர்ச்சையைக் கிளப்பி பின் ஹிட்டடித்தது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பிற பாடல்களும் நல்ல கவனத்தைப் பெற்றது. அப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினி அந்த கேரக்டரில் தனக்கு இருந்த விருப்பத்தை வெளிப்படுத்தினார். அதன் பின், இப்படம் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது அதன் தொடர்ச்சியான சாமி ஸ்கொயர் வெளியாகியுள்ளது. முதல் பாதியில் செங்கல் சூளையில் பெருமாள் பிச்சையை ஆறுச்சாமி எரிப்பதில் படம் தொடங்குகிறது. இலங்கையில் இருந்து அவரைத் தேடி வரும் அவரது மூன்று மகன்கள் ஆறுச்சாமியைப் பழி தீர்க்கிறார்கள். அத்துடன் ஆறுச்சாமி கதையை முடித்து வைக்கிறார்கள். ஆறுச்சாமிக்குப் பிறந்த குழந்தையை, டெல்லிக்கு எடுத்துச் சென்று சாந்தசொரூபியாக வளர்க்கிறார் தாத்தா டெல்லி கணேஷ். அந்த ராம்சாமி இந்த பிச்சைப் பெருமாள் வம்சாவழி வாரிசுகளை தன் வழியில் கடக்க நேரிட, எப்படி தன் பெற்றோரைக் கொன்றவர்களைப் பழி வாங்குகிறார் என்பதை மீதிப் படத்தில் தனது பரபர திரைக்கதையில், மேப், ஃபோன் போன்றவற்றின் துணையோடு ஐடியாக்கள் நிறைந்த காட்சிகளோடு காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரி.
முதல் பாகம் போல் இருந்ததா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றாற்போல், நடிகர்களுக்கு ஏற்றாற்போல், கதையை வளைத்து, நெளித்துக் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர். இரண்டாம் பாகம் வரும் எந்த படத்திற்கும் இது நடக்கும் தான்.
சிங்கம் 2, சிங்கம் 3 என ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தவர், இப்படத்தில் கொஞ்சம் வேகத்தைக் குறைத்திருக்கிறார். விமர்சனங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லதுதான். அது போல், இப்படத்தின் ட்ரெய்லரில் வந்த வசனங்களைக் கண்டு எழுந்த ட்ரால் எதிர் வினையையும் படத்தில் ஏற்றுக் கொள்ளுமாறு அமைத்திருக்கிறார். சாமி கதாபாத்திரமும் சிங்கம் போன்ற ஆக்ஷன் போலிஸ் கதாபாத்திரம் தான் என்றாலும், இரு கதாபாத்திரங்களையும் வெவ்வெறு குணாதியசங்களோடு வேறுபடுத்தி வடிவமைத்திருக்கிறார்.
விக்ரம், போன படங்களை விட இதில் கொஞ்சம் இளமையோடு தெரிகிறார். உடம்பை ஃபிட்டாக வைத்திருத்திருக்கிறார். அவர் கூடிய விரைவில் பேரன், பேத்தி எடுத்து, தாத்தா ஆகப் போகிறார் என்பதையும், அவருடைய பையன் ஹீரோவாக நடித்த படம் விரைவில் வெளிவரப் போகிறது என்பதையும் கணக்கில் கொண்டால் இளமையோடு தான் இருக்கிறார். படத்தில் ஆறுச்சாமிக்கும், ராம்சாமிக்குமே வித்தியாசம் காட்டுகிறார். சாமி முதல் பாகத்தில் வில்லனிடம் சவால் விடும் காட்சியில் அடிபட்ட புலி கொண்ட ஆக்ரோஷத்தை அட்டகாசமாய்க் காட்டுவார். அந்த நெருப்பை மீண்டும் இதில் காண முடிகிறது.
ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை மாற்றி விட்டு, இன்னொரு நடிகரை வைத்துத் தொடரும் டெக்னிக்கை, சீரியலில் இருந்து சினிமாவுக்கு இறக்கியிருக்கிறார்கள் இப்படத்தில். ஸ்கோப் இல்லை என்பதால் த்ரிஷா நடிக்க மறுக்க, அவர் கதாபாத்தித்தில் ஐஸ்வர்யா ராஜேஷ். நிஜமாகவே ஸ்கோப் இல்லையென்பதால், சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை. மெயின் நாயகியாக கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகத்தில் தனது திறமையைக் காட்டியவருக்கு, இதில் லூசுத்தனமான கேரக்டரில் வந்து செல்லும் வாய்ப்பு. அழகு கூடியிருக்கிறது. தனது சுமாரான குரலில் விக்ரமுடன் சேர்ந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த பாபி சிம்ஹா, இதில் மீண்டும் வில்லனாக நடித்து பலம் சேர்த்திருக்கிறார். பெருமாள் பிச்சையாக நடித்துக் கலக்கிய கோட்டா சீனிவாசராவ், இதில் ஆங்காங்கே தலையைக் காட்டியிருக்கிறார். பிரபுவும், ஐஸ்வர்யாவும் நாயகியின் பெற்றோராக வருகிறார்கள். அதாவது விக்ரமுக்கு ஐஸ்வர்யா மாமியார். “ஓ! பட்டர்ப்ளை” பாடல் கண்முன்னே வந்து போகுமா, இல்லையா!!
படத்தின் முக்கிய குறை பாடல்கள். முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பாக வந்திருந்தது. இதில் இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி இல்லை. அதிரூபனே பாடல் மட்டும் ஓகே. தேவிஸ்ரீபிரசாத்தின் வழக்கமான எனர்ஜி படத்தில் சுத்தமாக மிஸ்ஸிங். ஹரியின் ஸ்பீட் ஒளிப்பதிவாளர் ப்ரியன் இப்படத்தின் போது துரதிஷ்டவசமாக மறைந்துவிட, மிச்சப்படத்தை நன்றாகவே முடித்து வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ். படத்தின் சண்டைக்காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கின்றன. ஸ்டண்ட் சில்வா அந்தப் பாராட்டுக்குரியவர்.
கமர்ஷியல் ஆக்ஷன் பட பிரியர்களுக்கு இப்படம் பிடிக்கும். முதல் பாகம் போல் இருக்குமென எதிர்பார்ப்புக் கொண்டர்களுக்கு ஏமாற்றம் அளித்தாலும், ஒருமுறை பார்க்கலாம் டைப் படம்.
- சரவணகுமரன்
Tags: Saamy square, Vikram, விக்ரம், ஹரி