செக்கச் சிவந்த வானம்
எத்தனை தோல்விகள் கொடுத்தாலும், மணிரத்னம் என்ற கலைஞனுக்கு இருக்கும் மவுஸ் குறையாது என்று மீண்டும் நிருபித்து இருக்கிறது – செக்கச் சிவந்த வானம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ஜோதிகா எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளம் அவருடன் இப்படத்தில். எதிர்பார்ப்புக்குச் சொல்லவா வேண்டும்? எதிர்பார்த்ததைப் போலவே படத்திற்கு மாஸ் ஓப்பனிங். எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்திருக்கிறாரா மணிரத்னம் என்பதைப் பார்ப்போம்.
கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை என மணிரத்னத்தின் சமீபத்திய படங்களைக் கண்டவர்களுக்கு மணிரத்னம் எப்போது வேண்டுமென்றாலும் ஆப்படிப்பார் எனத் தெரிந்திருக்கும். அதனாலேயே, மணிரத்னம் படம் என்று ஒரு பக்கம் எதிர்பார்ப்பு இருந்தாலும், மணிரத்னம் படம் என்று மற்றொரு பக்கம் எச்சரிக்கையுணர்வும் இருக்கும். இருந்தாலும், இப்படத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி என இரு ரசிகப் பட்டாளம் கொண்ட நட்சத்திரங்கள் இருக்க, அவர்களை அவர் எப்படிக் கையாண்டு இருப்பார் என்பதைப் பார்க்க, அனைவரும் ஆவலுடன் இருந்தனர்.
இப்படத்தின் அனைத்து நட்சத்திரங்களிடம் இருந்து சிறந்த பங்களிப்பைப் படத்தில் கொண்டு வந்திருக்கிறார் மணிரத்னம். விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, பிரகாஷ் சாமி, ஜெயசுதா, தியாகராஜன், மன்சூர் அலிகான் என அனைவரின் நடிப்பையும் மணிரத்னத்தின் இயக்கத்தில் காண நன்றாக இருக்கிறது. ஆனால், முழுப்படமும் பார்ப்போரைக் கட்டிப் போடுகிறதா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மணிரத்னத்திடம் நாங்கள் எதிர்பார்த்தது இவ்வளவு தான் என்று பெரும்பாலான ரசிகர்களும், விமர்சகர்களும் நினைத்தார்களோ என்னவோ, படத்தின் முதல் நாள் விமர்சனம் செம பாசிட்டிவ்வாக வந்திருந்தது. அந்த முதல் நாள் பாசிட்டிவ் விமர்சனத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தைப் பார்த்தால் படம் திருப்தி அளிக்காது. அதனால் இனி படம் காணச் செல்பவர்கள் எக்ஸ்பெக்டேஷன் மீட்டரைக் குறைத்து வைத்துவிட்டுச் செல்லவும்.
சரி, படத்தின் கதையைப் பார்ப்போம். படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு பெரும் டான். அப்படி என்ன டான் வேலை செய்கிறார் எனத் தெரியாது. அவருக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் வரதனாக அரவிந்த் சாமி. இளையவர்கள் தியாகு, எத்தியாக அருண் விஜய்யும், சிம்புவும். அரவிந்த்சாமி தந்தையுடன் சென்னையில் இருந்து ‘பிஸினஸை’ கவனித்துக்கொள்கிறார். அருண் விஜய் துபாய் படகில் அழகிகளுடன் அரபு சேக்குகளிடம் சேர்ந்து ஒரு பிஸினஸ் செய்கிறார். அதுவும் என்ன என்று நமக்குத் தெரியாது. சிம்பு செம ஃபன்னுடன் செர்பியாவில் ஆட்டுக் குட்டி வயிற்றில் பையைக் கட்டி, போதைப் பொருட்களும், ஆயுதங்களும் கடத்துகிறார். மேட் இன் ரஷியாவாம். இப்படி வீட்டில் இருக்கும் ஆண்களெல்லாம் சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, வீட்டில் இருக்கும் மற்றவர்கள் எல்லாம் இல்வாழ்க்கையில் வளைகாப்பு, காது குத்து என்று என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தந்தைக்குப் பின் அவருடைய அதிகாரம் யாருக்கு என்ற போட்டி தான் படத்தின் கதை. இதில் வரதனின் தோஸ்த் ரசூலாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் கேரக்டரில் விஜய் சேதுபதி. அவரும் இவர்களுடன் சேர்ந்து கொள்ளச் செக்கச் சிவக்கிறது திரை. ஆம், படமெங்கும் துப்பாக்கிச் சத்தத்தில் தெறிக்கிறது ரத்தம். எல்லோரும் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் யார் மிச்சம் இருக்கிறார் என்பது தான் நாம் காப்பாற்ற வேண்டிய படத்தின் சஸ்பென்ஸ் கதை..
விஜய் சேதுபதியும், சிம்புவும் அவர்களாகவே வருகிறார்கள் என்பது போல் நடித்திருக்கிறார்கள். அதுவும் பெரிதாக சிரமப்படாமல் சாதாரணமாகப் பேசியே ஸ்கோர் செய்கிறார்கள். அதிலும் விஜய் சேதுபதியின் டயலாக் மாடுலேஷன் செம. படத்தைக் கலகலப்பாகக் கொண்டு செல்வது இவருடைய வசனங்கள் தான். இப்படத்தில் சிம்புவின் நடிப்பு நன்றாக எடுபட்டு உள்ளது. சிம்பு ஓடுவதற்குச் சிரமப்படுவதைக் காண்பதற்குத்தான் பரிதாபமாக இருக்கிறது. அருண் விஜய் செம ஸ்டைலிஷாக வருகிறார். நடக்கிறார். குதிக்கிறார். அரவிந்த்சாமி படம் முழுக்க எல்லாக் காட்சிகளிலும் இருக்கிறார். உடம்பை கிண்ணென்று வைத்திருக்கிறார். ஒரே ஆண் வாடையாக இருக்கக்கூடாதென்று ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், டயானா, ஜெயசுதா ஆகியோரும் வருகிறார்கள். இதில் ஜோதிகாவுக்கும் ஜெயசுதாவுக்கும் தான் நடிக்க வாய்ப்புக் கிடைக்கிறது. பார்க்கும் படங்களிலும், ட்ரெய்லர்கள் எல்லாவற்றிலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் வருகிறார். என்ன மாயமோ!
முக்கியக் கதாபாத்திரங்கள் மட்டுமின்றி, எதிர் முகாம் டானாக வரும் தியாகராஜன், சிம்புவின் கையாளாக வரும் மன்சூர் அலிகான், ஜோதிகாவின் தந்தையாக வரும் சிவா ஆனந்த் எனப் படத்தின் நடிகர்கள் கை கொடுத்த அளவுக்கு, காட்சிகளின் நம்பகத்தன்மை கை கொடுக்கவில்லை. கணவனின் செட்டப் வீட்டிற்கு சர்ப்ரைஸாக மனைவி வரும்போது யாரும் எந்தச் சலனமும் இல்லாமல் மீன் குழம்பு பற்றிப் பேசுவது, சண்டை போடுவதற்காக ரெஜிஸ்டர் ஆஃபிஸை அதிகாலையில் திறந்து வைத்திருப்பது, ஐஸ்வர்யா ராஜேஷ் துபாய் ஜெயிலுக்குச் சட்டெனச் செல்வது என யதார்த்தம் அவ்வப்போது மிஸ்ஸாகிவிடுகிறது.
இது எல்லாவற்றையும் மீறி படத்தைத் தாங்கி நிற்பது மணிரத்னமும், அவருடைய உதவியாளர் சிவா அனந்தும் எழுதியிருக்கும் வசனங்கள். கிழவியைக் கட்டி போட்டுறக்க, மாடில லூசு மாதிரி கத்திட்டு இருக்கான் எனத் தங்கள் படத்தின் காட்சிகளைத் தாங்களே கிண்டலடித்துப் பேசுவது ரசிக்கும்படி உள்ளது. மணிரத்னம் இலக்கியவாதிகளிடம் இருந்து தள்ளியிருப்பதுதான் நல்லதோ?
படத்தில் பாடல்கள் எல்லாம் பின்னணியில் வருவது திரைக்கதையின் வேகத்தைக் குறைக்காமல் உள்ளது. எல்லாப் பாடல்களுமே அந்த மாதிரி இருப்பது புதுவிதம். ரஹ்மானின் பின்னணி இசையும், சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கும் வழக்கம் போல் படத்தின் தரத்தை மேலே கொண்டு செல்கின்றன.
இந்தக் கதையைச் சமகால அரசியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ‘அட, அதுவோ’, ‘இல்லை எதுவோ’ எனத் தோன்றும். எல்லா இடங்களிலும் இருக்கும் அதிகாரப்போட்டி தான் கதை. வலுவில்லாத காட்சிகளுக்கு, நடிகர்களின் சிறந்த நடிப்புப் பலமளிக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் அக்மார்க் சினிமாத்தனம் என்றாலும் கதையை நன்றாக முடித்து வைப்பது உண்மை. படம் முடிந்து வெளியே செல்லும் ரசிகர்களுக்கு நல்ல படம் பார்த்த உணர்வைக் கொடுத்துவிடுகிறது. ஆனால், அதற்கு முன்னால் வரும் காட்சிகளெல்லாம் தொய்வே. எது எப்படியோ, மணிரத்னத்தின் மார்க்கெட்டை திரும்பத் தூக்கி நிறுத்தியுள்ளது இப்படம்.
செக்கச் சிவந்த வானம் – முழு பிரகாசமில்லாமல்.
- சரவணகுமரன்.