அன்னையர் தினக் கவிதை
Podcast: Play in new window | Download
Subscribe: Apple Podcasts | Spotify | Email | RSS
கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
சூல்சுமந்து சதை பிண்டமதை தான்வளர்த்து
சுகந்துறந்து சரீரப் பிம்பமிதை தான்கொடுத்தாள்,
சிறைவிடுத்து சகம் பார்த்து யான்சிரிக்க – தன்
சுயம்மறந்து முகம் பார்க்கத் தாவிஎடுத்தாள்.
உதிரத்தை உணவாக்கி உடலுக்கு ஊட்டியே
உருவத்தை உருப்படுத்தி உலகுக்குக் காட்டினாள்.
ஊக்கத்தை உணர்வாக்கி உள்ளத்தில் ஊட்டியே
உலகத்தில் உய்த்திட உதவிக்கரம் நீட்டினாள்!
முகவாய் சிரித்தேன் முத்தமழை பொழிந்தாள்
முட்டியிட்டுத் தவழ்ந்தேன் முகமலர்ந்து சிலிர்த்தாள்!
முதலடி வைத்தேன் மூச்சினை மறந்தாள்
முதற்சொல் சொன்னேன் முக்திநிலை அடைந்தாள்!
புத்தம்புது வெண்பூவாய் நித்தமொரு வகையன்பும்
புத்தனவன் பெண்வடிவாய் நின்றதொரு பொறுமையும்
புவியிடை வெண்ணிலவை நிகர்த்தவொரு தூய்மையும்
புடமிட்ட தங்கமாயவள் நிலைத்ததொரு அதிசயம்!
மாதவளை மாதாவாய்ப்பெற மாதவம் செய்தேனோ!
மானுடத் தெய்வத்தின் மகத்துவம் மறப்பேனோ!
மாற்றீடில்லா மாணிக்கத்தின் மாசறு பாசம்
மாறாமல் மிளிர்ந்திடும் மறுபிறவியிலுமது நிசம்!
முகவரி தந்தவளுக்கின்று முகம்முழுதும் வரிகள்!
முதிர்வு கண்டளுக்கின்று முப்பொழுதும் வலிகள்!
மூப்பவளை மிரட்டினாலும் மிரளாத மகனுணர்வு
முடிவவளை துரத்தினாலும் மறையாத மெய்யுணர்வு.
அக்கரை வாழ்பவளின் அன்பெனும் அரவணைப்பில்
அகமகிழ்ந்தே வாழ்வேன்நான் அனுதினம் அவள்நினைப்பில்
அவனி போற்றும் அன்னையர் தினமதனில்
இவனும் வணங்கினேன் அவளொத்த அன்னையரை!
– ரவிக்குமார்.
ஒவ்வொரு வரியும் சிறப்பு…
வாழ்த்துக்கள்…