\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அழகிய ஐரோப்பா – 2

முதல் பாகம்

அவளும் நானும்

மத்தியானச் சாப்பாடு பதினோரு மணிக்கே முடிந்தாகி விட்டதனால் பயண முன்னேற்பாடாக என் துணைவி, பாத்திரங்களைக் கழுவி வைப்பதிலும் மற்றும் சில பல துப்புரவு வேலைகளிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள்.  

ஒரு மாத காலப் பயணம் என்பதனால் தண்ணீர் லீக் ஆகி “பேஸ்ட்மென்ட்” பழுதாகி விடுமோ என்ற பயம் எனக்கு…  அதனால் வீட்டை விட்டுக் கிளம்புவதற்கு முன்னதாக முழு வீட்டுக்குமான வாட்டர் சப்ளையை “சட் ஆஃப் ” செய்துவிடும் முனைப்பில் இறங்கியிருந்தேன்.

“நேரம் வேற போகுது இன்னும் ரெடியாகலையா…” பிள்ளைகளை அதட்டும் மனைவியின் குரல் கேட்டது.

“யெஸ் ஐம் ரெடி…” என்றான் மகன்

“மீ… டூ…” என்றாள் மகள்

“அப்பா எங்கே…?” விசாரிப்பு கொஞ்சம் கடுமையாக இருந்தது

“ஹீ இஸ் இன் த பேஸ்மெண்ட்…” என்றாள் மகள்

“ஹீ இஸ் ஷட்டிங் டவுன் த வாட்டர்…” என்றான் மகன்

“ஏன் உங்களுக்குத் தமிழ் தெரியாதோ…” மீண்டும் அதட்டும் மனைவியின் குரல் கேட்டது

“யெஸ் வி நோ தமிழ்” என்றாள் மகள்

“அப்ப தமிழில் கதை… போற இடத்திலை தமிழ் ஆட்களுடன் தமிழில் மட்டும் தான் கதைக்க வேணும்” என்று தமிழ் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி.

“இனி தண்ணி வராது… ஷட் ஆஃப் பண்ணி விட்டேன்…” என்றபடி மேலே வந்தேன்.

“நேரம் ரெண்டரை ஆகுது இன்னும் நீங்கள் வெளிக்கிடலை…என்ன பிளான்…” என்றாள் என்னைப் பார்த்து.

என் மனைவி நேர முகாமைத்துவத்தில் படு வீக் ஆனால் இன்று எனக்கே கிளாஸ் எடுக்குமளவுக்கு உற்சாகமாக இருப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

தெரிந்த நண்பர் ஒருவருடன்தான் ஏர்போர்ட் போவதாகச் சொல்லி வைத்திருந்தோம்.

சரியாக மூன்றரை மணியளவில் காலிங் பெல் சத்தம் கேட்டது.

“வாங்க நல்லாய் இருக்கிறீங்களா…” என்றபடி கதவைத் திறந்து அவரை வரவேற்றேன்.

“நல்லாய் இருக்கிறேன்… கிளம்பலாமா…” என்றபடி லக்கேஜ்களை எடுத்துக் காரில் வைத்தார்.

“ஓகே ஐந்து நிமிஷம் வெயிட் பண்ணுங்கோ…”  என்றபடி உள்ளே சென்று எல்லாவற்றையும் சரிபார்த்து மீண்டும் வந்து காரில் அமர்ந்தேன்.  

பத்துப் பதினைந்து நிமிட டிரைவிங் தூரத்தில் விமான நிலையம் இருந்ததாலும் முதல் நாளே செக்-இன் பண்ணி விட்டதாலும் பதற்றமின்றி மாலை நாலு  மணிக்கு, பத்து நிமிஷம் இருக்க விமான நிலையத்தைச் சென்றடைந்தோம்.

சரியாக மாலை 5:50 க்கு KLM விமானம் லண்டன் நோக்கிய பயணத்தைத் தொடங்கியது.

எட்டு மணி பத்து நிமிட நேரம் பறந்து லண்டன் ஹீத்துரு விமான நிலையத்தில் இறங்கும் போது மறுநாள் காலை எட்டு மணியாகியிருந்தது. இடையில் ஆறு மணி நேரத்தை யார் கொள்ளையிட்டுப் போனார்களோ தெரியவில்லை .

அவரவர் ஹாண்ட் லக்கேஜ்களை எடுத்துக் கொண்டு இமிகிரேஷன் ஏரியா நோக்கி விரைந்தோம்.

என் முதுகுப்பையும், ஹாண்ட் லக்கேஜ்ஜும் ஒரு புறம் மகனின் ஹாண்ட் லக்கேஜ் மறுபுறம் என என்னிடம் இப்போது மூன்று பைகள்…

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் பிரித்தானியா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு வரிசையிலும் ஏனைய நாடுகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் இன்னொரு வரிசையிலும் வருமாறும் எழுதப்பட்ட அறிவித்தல் பல இடங்களில் இருந்தது.

வரிசைகளை முறையாக ஒழுங்கமைக்க பல பெண்கள் பணியில் இருந்தனர். அவர்களில் சிலர் இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதை அவர்களது நிறம் மற்றும் முகபாவம் உணர்த்தியது.

ஏனைய நாடுகளுக்கான பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் வரிசை மிகவும் பெரிதாக நீண்டு வளைந்திருந்தது. பாம்பு நெளிவது போல் பல வளைவுகளைக் கொண்ட வரிசையை நீட்டிப் பார்த்தால் அரை கிலோ மீட்டர் தாண்டும்.

சரியாக ஏழு வளைவுகள் தாண்டியதும் என் மனைவி;

“ என்ன அந்த இமிகிரேஷன் லேடி உங்களையே பாக்கிறாள்”

“பாத்தா என்ன சத்தம் போடாமல் இரும்மா”

“அவளுக்கு உங்களைத் தெரிஞ்சிருக்குமோ”

“சும்மா இரும்மா நான் என்ன முன்ன பின்ன லண்டனுக்கு வந்தனானோ… “

என் கெட்ட காலம் இப்போது அந்தப் பெண் லேசாக என்னைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்ன அவள் உங்களைப் பார்த்து சிரிக்கிறாள்” என மனைவி மெதுவாக சொல்லிக்கொண்டிருக்கும் போதே… அவள் எங்களை நோக்கி வரத் தொடங்கினாள்..

பயணம் தொடரும்…

-தியா-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad