திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள் – 2
சென்ற மாதக் கட்டுரையில் கண்ணதாசனின் வியத்தகு பாடல்களில் ஒன்றான ‘பேசுவது கிளியா பெண்ணரசி மொழியா’ என்று ஐய வினாக்களால் தொடுக்கப்பட்ட பாடலைப் பார்த்தோம். ஐய வினாக்கள் (சந்தேகக் கேள்விகள்) பொதுவாக ‘ஆ’ என்ற விகுதியுடன் முடிவடையும். இது மலரா, அது மலையா போன்ற கேள்விகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இந்த வகைக் கேள்விகளின் நீட்சியாக ஏதோ ஒரு வகையில் தொடர்புடைய இரண்டு பொருட்களைக் குறிப்பிட்டு இதுவா, அதுவா என்று கேட்பதுமுண்டு. ‘பழம் இனிக்கிறதா, கசக்கிறதா?’, ‘அது சிலையா அல்லது வெறும் கல்லா?’ போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.
சந்தேக வினாக்களால் ஆன திரைப் பாடல்கள் தமிழில் நிறைய உண்டு. அதில் பெரும்பாலானவை நாயகனும், நாயகியும் பாடும் காதல் பாடல்கள். ஒரு வகையில் காதல் மனவுணர்வுகளின் கேள்விகளுக்கான தேடல் தானே! சில பாடல்கள் பல்லவி மட்டுமே வினாக்களால் அமையப் பெற்று சரணம் அவ்வினாக்களுக்கு விடையாகவோ, அல்லது வேறொரு பொருளைக் குறிப்பதாகவோ புனையப்பட்டதுண்டு. கவியரசு கண்ணதாசன் மட்டுமல்லாது ஏனைய சில கவிஞர்களும் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளனர்.
”மொழி” திரைப்படத்தில், வித்யாசாகரின் அருமையான இசையில் உருவான வைரமுத்துவின் வரிகள் அதில் குறிப்பிடத்தக்கவை. வாய் பேச முடியாத நாயகியின் நிலையை, அது குறையல்ல என்பதைச் சொல்ல இயற்கைப் பொருட்கள் எவ்வாறு பேசுகின்றன என்று சுட்டிக்காட்டி மிக அழகாக உவமைப் படுத்தியிருப்பார் வைரமுத்து.
என்ன காரணத்தாலோ தமிழ்த் திரையிசை அன்பர்களால் அதிகம் கவனிக்கப்படாமல் விட்டுப் போன வித்யாசாகர் உணர்வுகளைக் குழைத்து மெல்லிசைப் பாடல்களாக வார்த்தெடுப்பதில் தேர்ந்தவர்.
காற்றின் மொழி ஒலியா இசையா?
பூவின் மொழி நிறமா மணமா?
கடலின் மொழி அலையா நுரையா?
காதல் மொழி விழியா இதழா?
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை
காற்று வீசும் போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது
பேசும் வார்த்தைபோல மௌனம் புரியாது
கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது
வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்
உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்
பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் சாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும்
ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும்
தெளிவான உச்சரிப்பில், மென்மையும் ஆண்மையும் கலந்த குரலில் உணர்வுப் பூர்வமாக பாடியிருப்பார் பல்ராம். சுஜாதா பாடிய பெண்குரல் பதிப்பு தனியாக இருந்தாலும் பல்ராம் பாடிய பதிப்பு மிகப் பிரபலமடைந்தது.
பாடலின் பல்லவி வினாக்களாகவும், அனுபல்லவி, சரணம் ஆகியவை ஆறுதலான தீர்வுகளாகவும் வடிக்கப்பட்டிருக்கும் இந்த பாடலுக்கும் கண்ணதாசனின் ஒரு பாடல் முன்னோடியாக இருந்துள்ளது.
1979ஆம் ஆண்டு கிருஷ்ணன் பஞ்சு ஆகியோரின் இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி பிரதான வேடங்களில் நடிக்க வெளிவந்த படம் நீலமலர்கள். பார்வையில்லாத நாயகி இயற்கையைப் பற்றியதான வினாக்களைக் கேட்க, நாயகன் அவைகளுக்குப் பதில் தருவதான பாடல் சூழ்நிலை. மேலே சொன்ன இரண்டு பாடல்களிலும் நாயகியின் குறையைப் பொருட்படுத்தாத தனது காதலை நாயகன் நயமாகச் சொல்லுவது தான் மையக்கரு. ஆனால் அதில் கண்ணதாசன் ஒரு படி மேலே சென்று நாயகியின் கேள்விகளுக்கான விடைகளை எதிர்கேள்விகளாக (COUNTER QUESTIONS) வைத்து புனைந்துள்ள சாமர்த்தியத்தைப் பாருங்கள். பலவகை உவமையணிகளும் இந்த வரிகளில் ஒளிந்துள்ளன.
நாயகி : இது இரவா பகலா?
நாயகன் : நீ நிலவா கதிரா?
நாயகி : இது வனமா மாளிகையா?
நாயகன் : நீ மலரா ஓவியமா?
நாயகி : மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
நாயகன் : உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பது அறிவா இல்லையா?
நாயகி : இது கனியா காயா?
நாயகன் : அதைக் கடித்தால் தெரியும்
நாயகி : இது பனியா மழையா?
நாயகன் : எனை அணைத்தால் தெரியும்
நாயகி : தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி எதனால் அசைந்தது?
நாயகன் : தன்னை மறந்து காதல் கனிந்து ஒன்றாய் இணைந்தது
நாயகி : இது குயிலா குழலா?
நாயகன் : உன் குரலின் சுகமே
நாயகி : இது மயிலா மானா?
நாயகன் : அவை உந்தன் இனமே
நாயகி : பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றாய்க் காணுமா?
நாயகன் : பூவை கன்னமும் கோவை இதழும் ஒன்றாய் ஆகுமா?
நாயகி : இங்கு கிளிதான் அழகா?
நாயகன் : உன் அழகே அழகு
நாயகி : இந்த உலகம் பெரிதா?
நாயகன் : நம் உறவே பெரிது
பார்வையற்ற மனிதர்க்கு இயற்கையின் பரிமாணங்களை விளக்குவது சற்றுக் கடினம். தொட்டு உணர்ந்து கொள்வதில் அவர்கள் மிகவும் தேர்ந்த வல்லவர்கள். அஃதல்லாதவற்றை எப்படி விளக்குவது? இதில் தான் கவிஞரின் திறன் வெளிப்படுகிறது.
இது இரவா பகலா என்று கேட்கும் நாயகியிடம் இரவு, பகல் மாற்றங்கள் வெளிப்புற பார்வைத்திறன் படைத்த சாதாரண மனிதர்க்குத்தான். அகப் பார்வை படைத்த உனக்கு நீ நினைத்தால் இரவாகவும், பகலாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பதைச் சொல்ல நீ நிலவென்றால் இது இரவு, கதிரென்றால் இது பகல் என்கிறார்.
வனத்தை அழகுபடுத்துபவை மலர்கள்; மாட மாளிகைகளை அழகுபடுத்துபவை ஓவியங்கள் சிலைகள். உன்னைப் பொறுத்தே நீ இருக்கும் இடம் பெயர் பெறும். நீ மலரென்றால் இது வனம்; நீ ஓவியமென்றால் இது மாளிகை.
ஏற்கனவே அழகு பெற்ற உன் கூந்தலில் பூச்சரம் வைப்பது தான் என்னைப் பொறுத்தவரை மேகமும் மின்னலும் – இதில் மற்றவர் மூலம் உண்டான அறிவுணர்வை விட நானே உணர்ந்த பொறியுணர்வை (self awareness) நம்புகிறேன் என்கிறான் நாயகன்.
தென்றலால் பூங்கொடி அசைவது இயற்கை நிகழ்வு; அதே போன்று தன்னை மறந்து காதலிக்கும் மனங்கள் ஒன்றாய் இணைவதும் இயற்கை.
பூவின் நிறமும் தேனின் நிறமும் ஒன்றா எனக் கேட்கும் நாயகிக்கு பூ போன்ற மென்மையான கன்னங்களும் தேன் சுரக்கும் கோவை இதழ்களும் வெவ்வேறு இயல்புகள் கொண்டவையல்லவா அவை எப்படி ஒன்றாகும் என்று எதிர் வினா வைக்கிறான் நாயகன்.
குயிலோசை குழலோசை என்பதும் எனக்குத் தெரியாது, என்னைப் பொறுத்தவரை உன் குரல் தான் சுகமானது ; மான், மயில் இரண்டும் உனது இனம் தான் ; கிளியின் அழகைவிட நீ தான் அழகானவள் என்று நாயகி இயற்கை பற்றி கேட்கும் விஷயங்களுக்கு, அவளின் அழகையும் குணங்களையும் உவமையாக்கி நாயகன் பதில் சொல்வது இந்தப் பாடலின் அழகு.
மலருக்கு இணையான மென்மையான அதே சமயம் கூர்மையான குரலில் வாணி ஜெயராமும், தீர்க்கத்துடன் திண்மையான குரலில் கே.ஜே. ஏசுதாஸும் குழைந்து குழைந்து பாடியிருப்பார்கள்.
தனது அசாத்திய மெல்லிசைத் திறனால் இந்த வரிகளுக்கு ராகமமைத்துள்ள மெல்லிசை மன்னர் இசைக் கோர்ப்பில் பல புதுமைகளைச் செய்திருப்பார். சரணங்களில் பின்னால் மெலிதாய் ப்ராஸ் இழையோடுவதும், வாணியின் குரலுக்கு ஏசுதாஸின் குரலோசை பின்னணியாய் அமைந்திருப்பதும் அவரது கற்பனையின் உச்சம்.
கண்ணதாசன், எம்.எஸ்.வி கூட்டணியில் அதிகம் பிரபலமடையாமல் போன அருமையான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று.
சரி வினாக்களால் தொடுக்கப்பட்ட வேறேதேனும் பாடல் உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? இயற்கையின் வினோதங்களைப் பாராட்டி வியந்து வியந்து நாயகனும் நாயகியும் கேள்வி கேட்கும் பாடல் அது. ‘எதனால் எது’ என்பது அந்தப் பாடலின் கரு. கண்டுபிடித்தால் சொல்லுங்கள்.
– ரவிக்குமார்
Tags: Kannadasan, vairamuthu, கண்ணதாசன், கவிதை, பாடல், வைரமுத்து