\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 10 சாங்ஸ் (அக்டோபர் 2018)

இவ்வருடத்தின் முந்தைய பகுதிகள்.

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (மார்ச் 2018)

காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஜூன் 2018)

காற்றில் உலவும் கீதங்கள் மூலம் உங்களைச் சந்தித்து வருவதில் சின்ன  இடைவெளி விழுந்துவிட்டதால், அதை ஈடுகட்டும் விதமாக, நமது இந்த லிஸ்ட்டில் பத்துப் பாடல்கள்.

கோலி சோடா 2 – பொண்டாட்டி

கோலி சோடாவின் இரண்டாம் பாகம் முதல் பாகம் ஓடிய அளவுக்கு ஓடவில்லை. படத்தில் சமுத்திரக்கனி, கெளதம் மேனன் போன்ற சீனியர்கள் நடித்திருந்தாலும், கதை சில இளையவர்களைப் பற்றியது. இசை – அச்சு. படத்தில் உள்ளதில் இந்தப் பொண்டாட்டி பாடல் நன்றாக இருக்கும். பாடலைப் பாடியது இசையமைப்பாளர் அச்சு. பாடல் நன்றாக இருப்பதால் இசையமைப்பாளரே பாடுகிறாரா அல்லது இசையமைப்பாளர் பாடுவதால் பாடல் நன்றாக இருக்கிறதா என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

மிஸ்டர் சந்திரமெளலி – ஏதேதோ ஆனேனே

முன்பு கார்த்திக் நிறையப் பாடல்களில் பீச் மணலில் புரண்டிருக்கிறார். இது கெளதம் கார்த்திக் முறை. வரிசையாகப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் கெளதமுக்கு சுமாராக ஓடிய படம். இசையமைப்பாளர் சி.எஸ்.சாமும் , சின்மயியும் பாடிய இப்பாடலில் ரெஜினாவிற்குப் போட்டியாக கெளதமும் அவர் பங்கிற்குக் கவர்ச்சி காட்டியிருப்பார். கவனிக்கத்தக்க இசையமைப்பாளராக சி.எஸ். சாம் வளர்ந்து வருகிறார்.

கடைக்குட்டிச் சிங்கம் – தண்டோரா

சூர்யா தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்க, கார்த்தி நடிப்பில் வெளிவந்த கடைக்குட்டிச் சிங்கம், இந்தாண்டு வெளிவந்த திரைப்படங்களில் வெற்றியடைந்த ஒன்று. பெரிய குடும்பம், விவசாயம் என்று கதைக்களத்தில் காதல், பாசம், நகைச்சுவை கலந்து ஒரு பெரும் நட்சத்திரப் பட்டாளத்தையே இயக்குனர் களமிறக்கி இருந்தார். படத்திற்குத் தேவையான இசையை இமான் வழங்கி இருந்தார். யுகபாரதி எழுதிய இப்பாடலைப் பாடியவர், வி.வி. பிரசன்னா.

பியார் பிரேமா காதல் – ஏ பெண்ணே

யுவன் சங்கர் ராஜாவிற்கு ஒரு லவ் மியூசிக்கல் படம் கொடுக்க வேண்டும் என்று ஆசை. மார்க்கெட் முன்பு போல் இல்லை. அப்படி ஒரு படமும் அமையாததால், அவரே ஒரு படத்தைத் தயாரித்து வெளியிட்டு விட்டார். யுவனின் இசை, பிக் பாஸ் ஜோடி என்று படத்திற்கு ஒரு மதிப்பு சேர்ந்து, யுவனின் கை கடிபடவில்லை. இந்தப் பாடலில் யுவன் – ஸ்ரீராம் ஜோடி ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

கோலமாவு கோகிலா – கல்யாண வயசு

சிவகார்த்திகேயன் பாட்டெழுத, அனிருத் இசையமைத்து பாட, நயன்தாரா பின்னால் யோகிபாபு டாவடிக்க எனப் பட்டாசு காம்பினேஷனில் பாடல் யூ-ட்யூபில் தற்போதைய நிலவரப்படி 56 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. (சில நாட்களுக்கு முன்பிருந்து இந்த வீடியோவைக் காணவில்லை. ஏதும் சதியோ?) நயன்தாராவிற்கு அடுத்ததாக இப்படத்தை அனிருத்தின் இசை தூக்கிப் பிடித்தது.

(அதிகாரப்பூர்வ வீடியோ இல்லாததால், நீங்களே தேடிப் பார்த்துக்கொள்ளுங்கள்!!)

சீமராஜா – உன்னை விட்டா யாரும் எனக்கில்லை

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்கு அடுத்ததாகச் சிவகார்த்திகேயன் – பொன்ராம் – இமான் – பாலசுப்பிரமணியெம் கூட்டணியில் அதே போன்ற நகைச்சுவைப் படம் தான் சீமராஜா. ராஜா எபிசோடும், அதற்கான பில்டப்பும் இதில் கூடுதல் போனஸ். ஒரே மாதிரி இருக்குது என்ற விமர்சனத்தை எழுப்புவதற்கு முன்பே, டைட்டில் சாங்கில் அரைச்ச மாவை அரைக்கவே திறமை வேண்டும் என்று கான்ஃபிடென்ஸாகப் பாடுகிறார்கள். படம் சரியாகப் போகவில்லையென்றாலும், பாடல்கள் ஹிட். முந்தைய படங்களின் ரெசிப்பித் தான் இதிலும் என்பது தான் குறை.

செக்கச் சிவந்த வானம் – மழை குருவி

மணிரத்னம் அடிக்கடி சொல்லுவார். இந்தப் படத்திற்குப் பாடலே தேவையில்லை என்று ஆரம்பித்தேன் என்று. வெளியிடும் போது அருமையான பாடல்கள் அதில் வந்து சேர்ந்திருக்கும். அவர் படத்திற்கு பாடல்கள் தேவையில்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் தேவை முக்கியம். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் காட்சிகளுக்குப் பின்னணியாகவே வந்து செல்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, நட்சத்திரக் கூட்டணி படமெடுத்து அதில் ரசிகர்களின் பாராட்டையும், கமர்ஷியல் வெற்றியையும் பெற்றிருக்கிறார். படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் சிறப்பா என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். சிறந்த பாடல்களுள் இந்த மழை குருவியும் ஒன்று.

சாமி ஸ்கொயர் – அதிரூபனே

வழக்கமாக டி.எஸ்.பி யின் இசையில் இருக்கும் ஒரு ஆர்பாட்டம், இப்படத்தில் இல்லை. ஓப்பனிங்கில் வரும் மிளகா பொடி பாட்டு, மசாலா பட ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும். மானசி பாடிய அதிரூபனே நல்ல மெலடி. ஒரு மெல்லிசை பாடலைச் சண்டைக்காட்சிக்குப் பின்னணியாக வைக்க ஹரியால் தான் முடியும்.

இமைக்கா நொடிகள் – நீயும் நானும் அன்பே

நயன்தாரா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வரிசையாக வெளிவரும் படங்களில் இதுவும் ஒன்று. அதர்வா, நயன்தாராவின் தம்பியாக நடித்திருக்கிறார். இன்றைய தலைமுறை இளம் நாயகர்கள், நயன்தாராவுடன் நடிக்கும்போது அப்படித் தெரிவார்கள். இதில் கதையிலேயே தம்பி என்பதால் பிரச்சினையில்லை. கௌரவப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நயன்தாராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். த்ரில்லர் திரைப்படமான இதற்கு இசையமைத்தவர், ஹிப்ஹாப் தமிழா.

96 – காதலே காதலே

அவ்வப்போது ஒரு தூய்மையான காதல் திரைப்படம் வந்து ரசிகர்களை நெகிழச் செய்துவிட்டுச் செல்லும். காதலுக்கு மரியாதை, காதல் கோட்டை, அழகி, ஆட்டோகிராஃப் போல 96 திரைப்படத்தைச் சொல்லலாம். ராம் – ஜானுவாக விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் அந்தக் கதாபாத்திரங்களில் ஒரு மேஜிக் செய்திருந்தனர். ரசிகர்களது காதல் அத்தியாயத்தை நினைவுப்படுத்திச் சென்ற இப்படத்தை இயக்கியவர் பிரேம்குமார். இசை – கோவிந்த் வசந்தா.

நிறையப் புது இசையமைப்பாளர்களது பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. இசைக்கு face value தேவையில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. பாடல்கள் கேட்க நன்றாக இருந்தால் ரசிகர்கள் கொண்டாடத்தானே செய்வார்கள்?

  • சரவணகுமரன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad