கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்
வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்
வென்றுவிடக் கனவுகளால் கோட்டை கட்டி
வேகமாய் ஏற்றம் காணும் ஏக்கத்தோடு
வையகத்து வந்துதித்த உன் செல்வத்திற்கு
ஒன்று இரண்டு போதும் என்றில்லாமல்
ஓயாமல் நீ ஈன்ற மக்களாலே மிஞ்சுவது
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்
-சச்சிதானந்தன் வெ