இதுவும் கடந்து போம்
மனதிற்கு இனிய மழலையாய் வந்துதித்தேன்..
மழலையும் மெதுவாய்க் கடந்தே போனது……
கொள்ளை அழகுக் குழந்தையாய்த் தவழ்ந்திருந்தேன்
கொடுத்ததை எடுத்ததுபோல் கடந்தே போனது….
படிப்பதில் பிடிப்பால் பள்ளிக்குச் சென்றிருந்தேன்..
பள்ளிப் பருவமதுவும் கடந்தே போனது..
கட்டிளங் காளையாய்க் கல்லூரியை வலம்வந்தேன்..
கல்லூரி நாட்களும் கடந்தே போனது…
காளைப் பருவத்தில் காதலிக்காகத் தவமிருந்தேன்
காதலும் மறைந்து கடந்தே போனது..
துயரத்தின் மத்தியில் தொழில்பல புரிந்திருந்தேன்
துயரமும் கூட கடந்தே போனது….
மனையாளின் சுகமதை மலரென நுகர்ந்திருந்தேன்
மனத்தாங்கலால் சுகமது கடந்தே போனது….
சண்டையின் இடையினில் சல்லாபம் தொடர்ந்திருந்தேன்
சல்லாபக் களிப்பும் கடந்தே போனது…
பிள்ளைகள் பிறந்ததால் பூரிப்பு எய்தியிருந்தேன்
பிணக்குகளால் பூரிப்பும் கடந்தே போனது….
வியாபாரத்தில் உயர்வடைய கர்வமும் கொண்டிருந்தேன்
விதிவிளையாட கர்வமது கடந்தே போனது…
ஆயிரம் துன்பங்கள் அருகாமை வந்தன
ஆயினும் அவைகூட கடந்தே போயின..
நடுத்தர வயதிது நிம்மதியாய்க் கழியுது
நலமான பொழுதிதும் கடந்தே போய்விடுமோ?
நாளைய வாழ்வது விழிப்பதில் தொடங்கிடுமோ?
நாட்டமான உறவுகளின் விழிநீராய் முடிந்திடுமோ?
பயனில்லா நினைப்பிதும் நெஞ்சத்தை விழுங்குது
பதைத்திடும் இந்நினைப்பும் கடந்தே போய்விடட்டும் !!!
– வெ. மதுசூதனன்
மிகவும் அருமையான யதார்த்தமான கவிதை