\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விடியாத இரவென்று எதுவுமில்லை

Filed in கதை, வார வெளியீடு by on October 14, 2018 0 Comments

 

செப்டம்பர் மாத மாலை நேர வெயில் அந்த இடத்தைச் செம்மஞ்சளில் முக்கி எடுத்தது போல் மாற்றியிருந்தது. மினசோட்டாப் பனியை நன்கறிந்த வாத்துகள் கூட்டமாகப் பறக்கப் பழகிக் கொண்டிருந்தன. எட்டுக்குப் பனிரெண்டு அளவிலிருந்த அபார்ட்மென்ட் பால்கனியில் அமர்ந்திருந்தனர் சத்யனும்  நர்மதாவும். தூரத்தில் ராச்சஸ்டர் கேஸ்கேட் ஏரியில் ஒற்றையாக அலைந்து கொண்டிருந்த படகை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள் நர்மதா. அவள் கையிலிருந்த காஃபி இந்நேரம் ஆறிப் போயிருக்கும். லேசான குளிருக்குப் பயந்து பால்கனியின் பக்கவாட்டு சுவர் மறைப்பில் அவள் உட்கார்ந்திருந்தாலும், மெல்லிய காற்று அவளது தலைமுடியை முகத்தில் பரப்பி விளையாடிக் கொண்டிருந்தது. ஈரக் காற்றின் சிலுசிலுப்பு உண்டாக்கிய நீரா அல்லது அவளது கண்ணீர்த் துளியா, தெரியவில்லை, ஏதோ ஒரு துளி பறந்தது தெரிந்தது.

மேஜை மேலிருந்த செல்ஃபோனை எடுத்து அவசரமாகப் படமெடுத்தான் சத்யன்.

“ஏன் ஃபோட்டோ எடுத்த இப்போ?” ஒரு கையால் தலை முடியை ஒதுக்கிக் கொண்டே கேட்டாள் நர்மதா.

“ச்சும்மா .. எடுக்கணும்னு தோணுச்சு… இந்த வெயில்.. நேச்சுரல் லைட்டிங்.. காத்துல கலைஞ்சு முகத்தில பறந்த சின்ன கத்தை முடி .. ஓவியம் போல இருந்துச்சு..”

“முடிதானே .. நல்லா எடுத்துக்க .. இன்னும் கொஞ்ச நாள் தானே..”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. “

“இருபது வருஷத்துக்கு முன்ன நான் ஓவியமாத் தெரியலையா?” காஃபி கப்பை டீபாயில் வைத்தாள்.

“குளிருதா? உள்ளேயிருந்து ஷால் வேணா எடுத்துட்டு வரட்டுமா?”

“கேட்டதுக்குப் பதில் சொல்லு.. “

“சொல்றேன்..  மொதல்ல ஷால் வேணுமான்னு சொல்லு..”

“கொஞ்சம் ஜில்லுனு தான் இருக்கு .. ஆனா நல்லாருக்கு.. இன்னும் ஒரு பத்து நிமிஷம் கழிச்சி உள்ள போயிடலாம்.. நான் கேட்டதுக்குப் பதில் யோசிக்கத்தானே டைம் வாங்கினே .. இப்ப சொல்லு..”

“தெரில.. ரொம்பப் பக்கத்திலேயே இருந்ததால தோணல.”

“அழகாப் பொய் சொல்ற சத்தி..”

“பொய்யெல்லாம் இல்ல … நெஜமாத்தான் சொல்றேன்..”

“எனக்குத் தெரியும்.. உனக்கு மல்லிகாவைப் பிடிச்சிருந்துது இல்ல?” பக்கவாட்டில் திரும்பி அவன் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“ஹே.. என்ன நீ இப்படில்லாம் கேக்கற.”

‘நான் கேக்கலாம் சத்தி … யாரும் தடுக்க முடியாது… ஐ ஹேவ் த லைசன்ஸ்..” வெறுமையாகச் சிரித்தாள்.

தலை குனிந்து சிரித்தான் சத்யன்..

“உன் சிரிப்பு மாறவேயில்ல சத்தி .. அப்ப இருந்த அதே லாஃப் லைன்ஸ் .. மோகன்லால் மாதிரி .. லேசா எட்டிப்பார்க்கும் தெத்துப் பல் . ஏறத்தாழ அப்படியே தான் இருக்க .. தலைல கொஞ்சம் முடி.. அப்புறம்  அந்த’ விபூதி இதெல்லாம் மிஸ்ஸிங்.. “

“ஆறு வித்தியாசங்கள் சொல்லப் போறியா?”

“அந்த டைம்ல உன் மேலே எதோ ஒரு ஈர்ப்பு இருந்துது சத்தி.. இப்ப அதை எப்படிச் சொல்றதுன்னு தெரியல .. மனசில, மூளையில நிரம்பி வழிஞ்ச ..” சில நொடிகள் பேசுவதை நிறுத்திவிட்டு எதையோ யோசித்தவள் அவனைப் பார்த்து ..” ரெண்டு வருஷம் இருந்திருப்போமா டிஃபன்ஸ் காலனி வீட்டில?”

“ரெண்டு வருஷம் எட்டு மாசம்..”

“ச்சே .. என்ன சந்தோஷமான காலம் அது.. இப்போ கூட கண்ணு முன்னாடி வந்து நிக்குது .. உன் கிட்ட என்னென்ன கலர்ல ஷர்ட் இருந்துதுன்னு கூட எழுதி வெச்சிருந்தேன்.. கொடியிலே காயும்போது தொட்டுப் பாத்து சந்தோஷப்பட்டிருக்கேன்.. “ சட்டென்று பத்தொன்பது வயது நர்மதாவாக மாறி விட்டிருந்தாள் அவள். கண்களில் தோன்றிய பரவசத்தினூடே மெல்லிய வெட்க இழைகள்..

“வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா நீ எங்க வீட்டுக்கு ஆனந்த விகடன்ல ஸ்டெல்லா புருஸ் படிக்க வருவே ஞாபகமிருக்கா,, ஒரு தடவ அப்படி வரும்பொழுது உன்  மேல சிகரெட் ஸ்மெல் வந்துது.. வீட்ல மாட்டிக்கப் போறேன்னு நெனச்சு ரொம்பப் பயந்தேன்… என் தத்தி அம்மா அதைக் கண்டுபிடிக்கவேயில்ல.. அவங்களைப் பொருத்த வரைக்கும் நீ ‘பக்க இன்ட்டி மன்ச்சி வாடு’ தான்.

“இப்ப எதுக்கு இதெல்லாம் பேசிக்கிட்டு இருக்க ..’

“ஏன்? போரடிக்கிறேனா? அட்ஜஸ்ட் பண்ணிக்கோ .. இந்த ரெண்டு நாள். அவ்வளவுதான் ..

“இல்ல … அந்த மீனிங்ல சொல்லல .. பழசெல்லாம் எதுக்கு ..”

“எனக்குப் பேசணும் … எத்தனையோ வருஷத்துக்கு முன்னாடி பேசியிருக்க வேண்டியது… அப்போ சொல்லாம மனசுல ஓரத்துல பாரமா அழுத்திக்கிட்டு இருந்துது..

“சரி உள்ள போய்ப் பேசலாம். நான் போய் டின்னர் வாங்கிட்டு வந்திடறேன் . மழை வரப் போதுன்னு நெனைக்கிறேன்.. இருட்டிக்கிட்டு வருது.. “

“வரட்டும் .. ரெண்டு பேரும் மழையில நனையலாம்.. எப்பவோ நெனச்சி ஏங்கினது.. இப்பவாச்சும் நடக்கட்டுமே ..”

“விளையாடறியா … கோல்ட் வரும்.. சொன்னா கேளு .. உள்ள வா “ எழுந்து நின்று அவளை எழச் செய்ய கையை நீட்டினான்..

அந்தக் கையை இறுகப் பற்றி அண்ணாந்து அவன் முகத்தைப் பார்த்தவள் .. “கோல்ட் வந்தா சர்ஜரி தள்ளிப் போயிடுமேன்னு பயப்படறியா?” என்றாள்

*******************************************************************************************************

வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. பால்கனி நாற்காலியில் மழைத் துளி எழுப்பிய சடசடவெனும் ஒலியும், ஸ்பூன்கள் தட்டுகளில் உரசும் ஒலிகளும் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. நர்மதா சோஃபாவில் கால்களை மடித்து, சம்மணமிட்டு அமர்ந்து, தட்டைக் கையிலேந்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளது பார்வை, கண்ணாடிக் கதவு வழியே, இன்னமும் வெளியில் நிலைக்குத்தி நின்றிருந்தது.

“அந்த அணிலைப் பாரேன் .. மழையில நனைஞ்சு அவதிப்படுது..

“கேம் ஆஃப் நேச்சர் .. சரி அத விடு.. சாப்பிட்டு முடி”

அவன் தட்டைப் பார்த்தாள் நர்மதா… “நீ சாப்பிடறது கூட அழகுதான் சத்தி … தனித் தனியா ஒதுக்கி, ஒண்ணொண்ணா டேஸ்ட் பண்ணி, ரசிச்சு, சுவைச்சு சாப்பிடற .. ரெண்டு மூணு தடவை எங்க வீட்ல, அப்புறம் நம்ம காம்பவுண்ட் ஃபங்ஷன்ல பாத்திருக்கேன் .. இலைல சாப்பிடும் போது கூட உள்ளங்கைல சாதம் படாம, விரலால கலந்து. ஸ்பூன் போல யூஸ் பண்ணி , சத்தமில்லாம மென்னு சாப்பிடறது .. நளினமா இருக்கும்”

“வாவ்… அவ்வளவு தூரம் நோட்டிஸ் பண்ணியிருக்கியா…”

“ம்.. உனக்கு என்ன பிடிக்கும்… என்ன பிடிக்காதுன்னு தெரியும்..நாம இருந்த காம்பவுண்ட்ல கெணத்துக்குப் பக்கத்திலே ஒரு திண்ணை இருக்கும் தெரியுமா.. அங்க தான் நம்ப அம்மாக்களெல்லாம் மீட்டிங் போடுவாங்க … சில சமயம் உங்கம்மா எனக்குத் தலை வாரி விடுவாங்க .. “உனக்கு முடி அடர்த்தியா, நீளமா இருக்கு.. ஷேப் பண்றேன்னு முடியைக் கத்தரிக்கு கொடுத்திடாதே.. நீ சடை போட்டுட்டு போறதப் பார்த்து சத்தி கூட சொல்லிருக்கான் .நர்மதாவுக்கு எவ்வளவு நீளமான முடின்னு .. சோம்பேறித்தனம் பாக்காம தேங்காய் எண்ணெய் தடவுன்னு சொல்லிருக்காங்க”

“மை காட்..” உள்ளங்கையில் தலையைப் புதைத்துக் கொண்டான்.

“எனக்கும் அப்படித்தான் ‘மை காட்’னு தோணுச்சு அன்னைக்கு.. ஆனா சந்தோஷ ஃபீலிங்க்ல.” சன்னமாகச் சிரித்தாள்.

“சாரி நர்மதா ..”

“ச்சே ..ச்சே.. உன்னை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல .. என்னமோ அந்தக் குட்டி குட்டி அற்ப சந்தோஷங்கள் அப்படியே என் மனசில பதிஞ்சி போயிடுச்சி.. இந்த மாதிரியான அற்ப விஷயங்கள் தான் என் வாழ்க்கையை நகர்த்திகிட்டு வருது சத்தி..  இந்த இருபத்தியொரு வருஷத்தில பல தடவ அந்த ஞாபகங்கள் எட்டிப் பாக்கும் .. அப்பல்லாம் மனசு ஜிவ்வுன்னு ஆயிட்டு நானே பறக்கிற மாதிரி இருக்கும்… எத்தனையோ கவலைகளை, தூக்கம் வராத ராத்திரிகளை அந்த நெனைப்புகள் தான் தாண்டி வர வெச்சுது..”

“சத்தியமா உனக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்துதுன்னு எனக்குத் தெரியாது நர்மதா,,.”

“எக்ஸாக்ட்லி…. அந்த காம்பவுண்ட்ல தனியா சந்திக்கிற வாய்ப்பு ரொம்பக் கம்மி தான்..  அந்தச் சமயங்கள்ல மனசு படபடன்னு அடிச்சுக்கும்… இன்னைக்காவது அந்தப் பேச்சு வருமான்னு தினமும் அலை பாயும்.. ஜுரம் வந்த மாதிரி உடம்பச் சுத்தி ஒரு அனல் .. என்ன பேசறோம்னு ஊகிச்சு சுதாரிக்கறதுக்குள்ள யாராவது வந்துடுவாங்க… இல்ல ஏதாவது நடக்கும் … டாபிக் மாறி போயிடும்..”

தட்டில் மீதமிருந்த உணவை ஸ்பூனால் இப்படியும் அப்படியும் தள்ளியவாறு பேசினாள். “.. இன்னைக்குச் சொல்லிடுவே, நாளைக்குச் சொல்லிடுவேன்னு காத்துக்கிட்டேயிருந்தேன்..  மல்லிகாவோட உன்னை பஸ் ஸ்டாப்ல பார்த்த அந்த நொடி வரைக்கும் எனக்கு நம்பிக்கை இருந்தது.. “

சட்டென்று அவளை நிமிர்ந்து பார்த்தான் சத்தி.

நர்மதா தொடர்ந்தாள் .. “பயங்கரமா கோபம் வந்துச்சு.. மல்லிகாவைக் கூப்பிட்டுச்  சண்டை போடணும்னு தோணுச்சு.. ரெண்டு மூணு நாள் ரொம்பக் கஷ்டப்பட்டேன் …. ஆனா நிதர்சனத்தை மெதுவா உணர ஆரம்பிச்சேன்.. மல்லிகாவோட பேசறதை சுத்தமா நிறுத்திட்டேன்..  என்னைப் புரிஞ்சிக்கலையேன்னு உன் மேல கோபம் தான் இருந்ததே தவிர வெறுப்பு வரல.. நான் வெச்சிருந்த அன்பு, வன்மமா மாறவேயில்ல.. யாருக்குமே தெரியாத அந்த சிலகால நேசம் அப்படியே ஒரு ஓரத்திலே பத்திரமா இருக்கு..” தலை குனிந்தபடி இன்னமும் தட்டிலிருந்த உணவைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.

தன் நாற்காலியிலிருந்து இறங்கி அவளது நாற்காலியின் பக்கத்தில் முழங்காலிட்டு அமர்ந்த சத்தி அவள் முகத்தை நோக்கி “ஐ அம் ரியலி, ரியலி சாரி நர்மதா ..” என்றான்.

“யாரு, எங்க, எப்படி வாழணும்னு எழுதி வெச்சிருக்குல்ல .. “ மீதமிருந்த உணவைச் சாப்பிடாமல் சற்றுத் தள்ளியிருந்த சைட் டேபிளில் எட்டி வைத்துவிட்டு உள்ளங்கைகளைப் பரபரவென தேய்த்துத் தட்டிவிட்டுக் கொண்டாள்..

“எனக்கும் நல்ல வாழ்க்கைதான் அமைஞ்சுது .. நைன்ட்டி ஒன்ல அப்பாக்கு வேலை மாறினதால நாமக்கல் போனோம்.. அங்க யாரோ சொல்லி அலையன்ஸ் பாத்தாங்க… மதன் கோபால் .. நல்கொண்டா கேள்விப்பட்டிருக்கியா.. “ கண்ணாடி டம்ளரில் இருந்த நீரைக் குடித்தாள்.

“ம்ம்.. ஏ.பி  தானே.”

“இப்ப மாத்திட்டாங்க.. தெலுங்கானா .. நல்கொண்டால பதினாலு குவாரி…. மூணு தலைமுறையா கிரானைட் பிஸ்னஸ் .. நாலு பிள்ளைங்க.. மதன் தான் கடைசி .. அவர் மட்டும் எம்.பி.ஏ… மத்த மூணு பேரும் ஏழெட்டு வரைக்கும் தான் .. அடிதடியெல்லாம் அவங்க பாத்துப்பாங்க .. எக்ஸ்போர்ட் மட்டும் மதன் கண்ட்ரோல்.. சைனா, கட்டார், யு.எஸ்.னு பாதி நாள் வெளிநாட்டுப் பயணம் .. எல்லாம் சந்தோஷமாத்தான் போச்சு…. கொழந்த மட்டும் இல்லை .. செர்விக்ஸ் வலுவால்லே.. யுடரஸ் தாங்காது.. அப்படி இப்படின்னாங்க .. அதுவே ஒரு சிம்டம் தான்னு நினைக்கிறேன்.. எனக்கு அப்பத் தோணவே இல்ல..” துப்பட்டாவால் வாயைத் துடைத்துக் கொள்ளும் சாக்கில் அவள் கண்ணீரையும் துடைத்துக் கொண்டது புரிந்தது சத்திக்கு.

“இன்னும் கொஞ்சம் தண்ணி குடிக்கிறியா?”

வேண்டாம் என்பது போல் வலது கையால் சைகை செய்தாள்.

“பழகிக்கிட்டேன் சத்தி.. மதனோட நெறைய ட்ரிப் போனேன்.. யு.எஸ். கூட வந்தேன் .. இதே மேயோ கிளினிக்குக்கு செக்கப்புக்கு  வந்திருக்கேன்.. பிள்ளை இல்லைங்கிற குறையைத் தவிர வேறெந்தக் குறையுமில்ல… சில வருஷங்கள் அப்படியே ஓடுச்சு.. ஒரு தடவ தாய்வான் போயிட்டு ஊருக்குத் திரும்பி வந்த மதன் வீட்டுக்கு வரல.. ஏர்ப்போர்ட்லருந்து வர்ற வழியிலே ஆக்ஸிடென்ட்னாங்க…. ஹாஸ்பிட்டல் போறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடிச்சு…”

“டெரிபிள் .. உனக்குள்ள இவ்வளவு வலிகளிருக்கும்னு நான் நினைக்கவேயில்லை .. கேக்கவே கஷ்டமாயிருக்கு .. நான் சொல்றேன் பாரு.. இனி வரப்போற நாட்கள் உனக்கு சந்தோஷம் மட்டுந்தான் இருக்கும்… “

சட்டென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துச் மெலிதாகச் சிரித்தாள் .. “நெறயப் பேரு அப்படித்தான் சொன்னாங்க .. இப்ப நீயும் சொல்லிட்ட .. நேத்து நான் சொன்னதையெல்லாம் கேட்டுட்டு இப்படிப் பச்சையா பொய் சொல்றது உனக்கு நல்லால்ல சத்தி “

“இல்ல நர்மதா .. பிராமிஸ் .. விடியாத இரவென்று எதுவுமில்லை..”

“முடியாத பகலென்று எதுவுமில்லை .. அதுவும் தெரியுமில்ல உனக்கு?” நிறுத்தினாள்.  “பகல் முடியறதுக்குள்ள உன்னைப் பார்த்தது எனக்கு சந்தோஷமாயிருக்கு ..” சோஃபாவிலிருந்து இறங்கி தட்டுகளை எடுத்துச் சென்று கிச்சன் சிங்க்கில் வைத்துவிட்டுக் கை கழுவினாள்.

“அப்படியெல்லாம் பேசாத.. ப்ளீஸ் திங்க் பாசிடிவ்!”

அவனை ஆச்சரியத்துடன் பார்த்தவள், ஈரக் கையை அவன் முகத்தருகே நீட்டி கட்டை விரலால் நான்கு விரல்களை மடக்கி விரித்து தண்ணீரைத் தெளித்தாள். “பாக்கலாம் ..”

“தட்ஸ் குட்.. நவ் ரிலாக்ஸ் .. நெட் ஃபிளிக்ஸ்ல சினிமா எதாவது பாக்கறியா? .. “

“சினிமால்லாம் வேண்டாம்.. வெளில மழை விட்டுருச்சா.. குட்டி வாக் போலாமா? உனக்கு ஏதாவது வேலை இருக்கா?”

“வேலை ஒண்ணும் இல்லை.. கிவ் மி டென் மினிட்ஸ் .. ரேணுவுக்கு ஃபோன் பண்ணிட்டு வந்துடறேன்..”

“ஓ பெர்மிஷனா?”

**************************************************************************************************************

அபார்மென்ட் காம்ப்ளக்ஸின் நடுவே, இருபுறமும் மரங்கள் சூழ்ந்த நடைபாதையில் ஆங்காங்கே மஞ்சள் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மழை நின்று விட்டிருந்தாலும், காற்றிலிருந்த ஈரம் விளக்கொளியில் பனிமூட்டமாய்த் தெரிந்து குளிரூட்டியது. மர இலைகளிலிருந்து சொட்டிக்கொண்டிருந்த நீர்த்துளிகள் கூடுதல் சிலுசிலுப்பூட்டின.    குறுக்கே கைகளைக் கட்டியவாறு நடந்தாள் நர்மதா.

“ரூம்லருந்து பிளாங்கெட் கொண்டு வந்திருக்கணும்… துப்பட்டாவையாவது போத்திக்கோ.” என்றான் சத்யன்.

“ரொம்ப கேரிங்கா இருக்க சத்தி.. ஏஜிங் ஃபாக்டர் ரியலைசேஷனா.. இல்லை எப்பவுமே இப்படி இருந்தியா?”

“எனக்குத் தெரில..”

“ரேணு ஷூட் பி லக்கி .. ஆமாம் நீ  மல்லிகா பின்னாடி தானே சுத்திக்கிட்டுருந்தே?”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல..”

“புளுகாதே .. ரேணுகிட்ட சொல்ல மாட்டேன் ..”

“அவ கிட்ட மறைக்கிற அளவுக்கு பெருசால்லாம் ஒண்ணுமில்ல.. நான் மல்லிகாவோட பழகின விஷயம் வேற.. அது வொர்க்அவுட் ஆகல.. அதோட ஃபுல் ஸ்டாப் வெச்சது தான்..”

“ஃபுல் ஸ்டாப் அவ வெச்சாளா நீ வெச்சியா?”

“கமான் நர்மதா.. விட்றேன் ப்ளீஸ்.”

எதிரே கரங்களைப் பற்றியவாறு மெதுவே நடந்து வந்த மிக வயதான தம்பதியர் இவர்களைப் பார்த்து புன்னகைத்தனர். நர்மதாவின் நீண்ட தலைமுடியைப் பார்த்து வியந்த அந்தப் பாட்டி   “ஹேவ் எ ப்ளசன்ட் ஈவ்னிங்..” என்று சொல்லிப் புன்னகைத்துச் சென்றாள். பதிலுக்குப் புன்னகைத்து “சேம் டு யூ போத்” என்ற நர்மதா ஒரு கணம் சத்யனைப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள் ..” யூ ஆர் ரைட் சத்தி.. இவங்கள மாதிரி, என்னை மாதிரி, இனி ரொம்ப தூரம் நடக்க முடியாத ஆளுங்க வேணா மெமரி லேன்ஸ்ல நடந்து சந்தோஷப்பட்டுக்கலாம்.. நீ நடக்க வேண்டிய தூரம் நெறய இருக்கு.”

“ஐயோ .. இல்லம்மா .. நான் அப்படிச் சொல்லல. கடந்து வந்ததை நான் மறக்கல..  என்னால அவ்வளவு சுலபமா மறக்க முடியாது.. நீ சொன்னியே, அந்த டிஃபன்ஸ் காலனி வீட்டுத் திண்ணை.. மாலை நேரத் தென்றல், வேப்ப மரத்தில் கூடு கட்டியிருந்த பறவைகள்.. கரு நீல தாவணியில் நீ;  உட்கார்ந்தால் முடி தரையில் தவழுமென உன்னை நிக்க வைத்து தலை வாரி விடும் அம்மாக்கள்; அலைபாயும் உன் கண்கள் எதையுமே மறக்க முடியாது நர்மதா. முடி சிக்கலில் சீப்பு மாட்டிக் கொண்டு இழுத்தால் தலையைச் சாய்த்து, உதட்டைச் சுழித்து, கண்களில் நீ காட்டிய வேதனை எனக்கு வலிக்கும்… “

நடக்க மறந்து நின்றுவிட்டாள் நர்மதா  “உண்மையாவா சத்தி . நீ தான் பேசறியா?” ஆச்சரிய உணர்வுகள்  அவள் முகத்தில் தாண்டவமாடின.

அவள் நின்று விட்டதை அறியாமல் இரண்டடி முன்னே சென்றுவிட்டிருந்த சத்தி, திரும்பி அவளை அணுகி “சத்தியமாச் சொல்றேன் .. என்னோட தேவதையா இருந்தவ நீ..”

“அப்புறம் ஏன் சத்தி? ஏன் ..?” கண்களில் நீர் தளும்பி மஞ்சள் விளக்கொளியில் மின்னியது.

மெதுவே அவள் தோளைத்தொட்டு வலது கையை முன்னே நீட்டி அவளை நடக்குமாறு சமிக்ஞை செய்தான். “தெரில நர்மதா.. சொன்னா ஏத்துப்பியோ இல்லையோன்னு ஒரு தயக்கம்.. நேர்ல உன்னைப் பார்த்து சொல்ல பயம்.. என் மேல எனக்கே நம்பிக்கையில்லாத போச்சு..   ஆனா உள்ளுக்குள்ள உன் பிம்பம் அசுரத்தனமா வளந்துக்கிட்டு இருந்துது… எப்படியாவது உன்கிட்ட தெரியப்படுத்தணும்னு நான் செஞ்ச முயற்சி தான் மல்லிகா..”

“என்ன சொல்ற நீ..”

“யா.. உன்னைப் பத்தி மட்டுந்தான் நான் மல்லிகாகிட்ட பேசியிருக்கேன்.. எனக்கும் அவளுக்கும் வேற எந்தச் சம்பந்தமுமில்ல ..” அவன் குரலில் உண்மை தெரிந்தது. “..யூ நோ .. நான் உன் தலைமுடியைப் பத்தி சொன்னதை எங்கம்மா உன்கிட்ட சொன்னாங்க இல்ல? அது எடிடட் வெர்ஷன்.. அன்னைக்கு  நான் சொன்னதை மட்டுந்தான் சொல்லிருக்காங்க.. பதிலுக்கு அவங்க சொன்னது உனக்கு தெரிஞ்சிருக்காது.”

“என்ன சொன்னாங்க?” மறுபடியும் நின்று விட்டாள்.

“ஆர் யூ ஆல்ரைட்.. நடக்க முடியுமா இல்ல திரும்பிப் போயிடலாமா?”

அவள் அதைப் பொருட்படுத்தாமல் “என்ன சொன்னாங்க சத்தி?” என்றாள்.

“கவலைப்பட்டாங்க.. உன்னோட அம்மாவைப் பத்தி.. ‘அந்தம்மா நர்மதாவை நம்பிக்கிட்டுருக்காங்க.. அவங்க மூத்த பொண்ணுங்க ரெண்டும், அதது புருஷனைத் தேடிக்கிட்டுத் தொலைஞ்சுப் போச்சுங்க.. நர்மதாவுக்காவது அவங்களே மாப்பிள்ளை பாத்துக் கட்டி வைக்க நினைக்கிறாங்க.. அவளாவது அவங்க தலையில கல்லைத் தூக்கிப் போட்டுடாம இருக்கணும்’னு என்னை இன்டைரக்ட்டா எச்சரிச்சாங்க..”

“..”

“ரெண்டு வருஷம் கழிச்சி உங்கப்பாவுக்கு வரவேண்டிய ப்ரமோஷன் டிரான்ஸ்பருக்காகக் காத்துக்கிட்டிருக்காம ஏதோ ஒரு ஊருக்கு உங்க குடும்பம் மாத்தலாகிப் போக வேண்டிய கட்டாயத்துக்கு நான் உன்னை நேசிச்சதுதான் காரணம்.”

“இதெல்லாம் நெஜமா .. இல்ல நான் ஏதாவது கனவு காணறேனா?”

“அத்தனையும் நெஜம்.. இப்பவும் மல்லிகா என் காண்டாக்ட்ல இருக்கா.. அவகிட்ட வேணா கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கோ .. இன்ஃபாக்ட் நான் மினியாபொலிஸ்ல இருக்கற விஷயத்தை உன்னோட இன்னொரு ஃப்ரெண்ட் துளசி மூலமா உன்கிட்ட தெரிவிச்சதே மல்லிகா தான்.. அவ தான் நீ மேயோ வரப்போற விஷயத்தையும், மெடிக்கல் அபார்ட்மெண்டில் தங்கப்போற விஷயத்தையும்  எனக்குச் சொன்னவ…”

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரில சத்தி.. சந்தோஷம், சோகம், வேதனை எல்லாம் கலந்த ஃபீலிங்.. சாரி .. உன்னையும் மல்லிகாவையும் சேத்து வெச்சுப் பேசினத நெனச்சா வெக்கமாயிருக்கு..  எங்கம்மா ஒரு கேவலமான விஷயத்துக்காக நமக்குள்ள எவ்வளவு பெரிய பிரிவை உருவாக்கியிருக்காங்க .. மை காட், நெனச்சாலே கூசுது..”

“நீ சொன்ன மாதிரி யாரு எங்க எப்படி வாழணும்னு எழுதி வெச்சிருக்கு..  இதில மத்தவங்களைக் குறை சொல்றது நியாயமில்ல..”

“வேடிக்கை பாத்தியா சத்தி.. நீ என்மேல ஆசைப்பட்டதும், நான் உன்மேல ஆசைப்பட்டதும் நம்ம ரெண்டு பேரைத் தவிர மத்த எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கு.. ஆனா அவங்க எல்லாருமே இப்ப தோத்துப் போயிட்டாங்க.. நம்ம மனசில இருந்த அன்பு, லவ்.. அது ஜெயிச்சிடுச்சி.. இல்லைனா இத்தனை வருஷங்கள் கழிச்சி, ஏதோ ஒரு வகையில நாம சந்திச்சிருக்க முடியுமா?”

“ரைட்.. நாம அந்தச் சந்தர்ப்பத்திலே சேர்ந்திருந்தா கூட இந்த நேரம் நம்ம மனசில படிஞ்ச அந்த முதல் பிம்பத்தைத் தொலைச்சிட்டிருப்போம்.. ஆனா இத்தனை வருஷத்துக்கப்புறமும் அந்த இனிமையான நினைவுகள் நிலைச்சி நிக்குதுன்னா நீ சொன்ன அந்த உண்மையான அன்பு தான் காரணம்.. ..”

“மை காட் .. நான் இப்போ ரொம்ப சந்தோஷமாயிருக்கேன்.. ஏதோ ஒரு பெரிய ரிலீஃப்.. சொல்லத் தெரில.. அப்படியே நடந்துகிட்டே போய் ஒரு புள்ளில மறஞ்சிடணும்னு தோணுது.. “ அவனின் இடது கர விரல்களுக்கிடையே தன் வலது கை விரல்களைக் கோர்த்துக் கொண்டு ..”சின்னக் குழந்தையாட்டமா கத்தணும் போலிருக்கு..” என்று நிறுத்தியவள் நுனிவிரல்களில் எக்கி நின்று   அவன் காதருகில் நெருங்கிவந்து “..தேங்க்யூ சத்தி.. தேங்க்யூ ஃபார் பீயிங் வித் மீ” என்றாள்.

********

செவ்வாய்க்கிழமை…. மேயோ கிளினிக்கின் ஆன்காலாஜி பிரிவு லாபியில் அமர்ந்திருந்தான் சத்யன்.

காலை ஐந்தரை மணிக்கே நர்மதாவை அப்சர்வேஷனுக்காக அழைத்துச் சென்றுவிட்டிருந்தனர். அவ்வப்போது நர்ஸ்கள் வந்து நர்மதாவின் பணிப்பெண்ணிடம் அவளது பி.பி., பல்ஸ் ரேட் பற்றிய விவரங்களைத் தந்துவிட்டுச் சென்றனர்.

பதினோரு மணியளவில், மேயோவில் ஆன்காலாஜி ஃபிசிஷியன் அசிஸ்டெண்டாக இருக்கும் நர்மதாவின் மைத்துனர் மகள் ஷைலு, சர்ஜரி செய்யப்போகும் டாக்டர் பிரசாத் ஐயரை அழைத்து வந்தாள். “ஹலோ அங்க்கிள் திஸ் இஸ் டாக்டர். ஐயர். சித்திக்கு இவரு தான் சர்ஜரி பண்ணப்போறாரு .” என்று அறிமுகப்படுத்தினாள்.

“ஓ.. தமிழ் தானா? சாரி கொஞ்சம் லேட்டாயிடுத்து.. அனஸ்திசிஸ்ட் செக்கப்புக்காக வெயிட் பண்ணவேண்டியிருந்தது.. எவ்ரிதிங் அப்பியர்ஸ் டு பி ஒகே.. ஷி இஸ் ஹெல்தி அண்ட் ரெடி ஃபார் சர்ஜரி…. இன்னிக்கே பண்ணிடலாம்…. ஷைலஜா ஏற்கனவே சொல்லியிருப்பாங்க.. செர்விகல் கேன்சர் கொஞ்சம் ரேர் தான்.. இங்க யு.எஸ்.ல சீக்கிரமா டிடெக்ட் பண்ணியிருப்பாங்க.. எம்.ஆர்.ஐ. ரிப்போர்ட்ஸ் ஸ்கேர்டர்டா டிஷ்யூஸ் அஃபெக்ட் ஆகியிருக்க மாதிரி சொல்லுது.. வீ ஹேவ் டு ஓபன் அண்ட் ஸீ. எனி ஹவ் அவர் டீம் வில் டு த பெஸ்ட்.” என்று கைகுலுக்கிச் சென்றார்.  

அவர் சென்ற பிறகு நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தவன் தான்.. மூன்றரை மணியளவில் ஷைலஜா வெளியில் வந்தாள்.

“சித்திக்கு சர்ஜரி முடிஞ்சிருச்சி அங்க்கிள்.. சக்சஸ்ஃபுல்லா டியூமர ரிமூவ் பண்ணியாச்சு.. நெனச்சதை விட கொஞ்சம் பெரிய லம்ப்.. அடாப்ஸிக்கு அனுப்பியிருக்காங்க.. டாக்டர்ஸ் இன்ஸ்டிங்க்ட்படி ஸ்டேஜ் திரி இல்லன்னா ஃபோர் போலத் தோணுது.. அப்படி எதுவுமிருக்கக் கூடாதுன்னு வேண்டிக்கறதைத் தவிர என்ன செய்ய முடியும்னு தெரியல..”

எச்சில் விழுங்கினான் சத்யன்.  

“ஒன் மோர் திங் அங்க்கிள்.. கீமோ சமயத்தில பாத்துக்கலாம்னு நாங்க எவ்வளவு சொல்லியும் கேக்காம சித்தி கம்பெல் பண்ணாங்க.. அண்ட் ஷி வாண்டட் திஸ் டு பி கிவன் டு யூ” வெள்ளை நிறத்தில் பெரிய என்வலப்பை நீட்டினாள்.

அந்த என்வலப்பை வாங்கித் திறந்து கையை நுழைத்து, தட்டுப்பட்டதை வெளியே இழுத்தான் சத்யன். மூன்றடிக்கு மேல் நீளமிருந்த நர்மதாவின் தலைமுடி ..  இரு முனைகளிலும் ரப்பர் பேண்ட் போட்டு, பிளாஸ்டிக் ராப்பரில் சுற்றப்பட்டிருந்தது.

கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் லாபி ஜன்னல் வழியே வெளியில் பார்த்தான் சத்யன்.

சூரியன் மறைந்து, பகல் முடியத் தொடங்கியிருந்தது.

-மர்மயோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad