96 – திரைப்பட விமர்சனம்
ஒரு மாமாங்கத்திற்கு ஒருமுறை மெச்சிக் கொள்ளும்படி ஒரு காதல் திரைப்படம் தமிழில் வெளியாகும். அப்படி ஒரு படம் இம்மாதம் வெளியாகி உள்ளது. விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வந்துள்ள 96 தான் அப்படம். பிரிந்த காதலர்கள் சந்தித்தால் என்னவாகும் எனும்போது அதற்குப் பல பதில்கள் உருவாகலாம். அறிமுக இயக்குனர் பிரேம்குமார் பார்ப்போரை நெகிழச்செய்யும் வண்ணம் ஒரு பதிலை இப்படத்தில் கூறியிருக்கிறார்.
இயற்கை புகைப்படக் கலைஞராகவும், புகைப்படக் கலை ஆசிரியராகவும் இருக்கும் விஜய் சேதுபதி ஒரு சமயம் தனது சொந்த ஊரான தஞ்சையைக் கடக்கும் போது, தான் படித்த பள்ளிக்குச் செல்கிறார். தனது பள்ளி நண்பர்களைச் சந்திக்க நினைக்கிறார். வாட்ஸ்-அப் குழுவில் தனது ஆசையைத் தட்டி விடுகிறார். அவரது நண்பர்களான பக்ஸும், தேவதர்ஷிணியும் அதற்கான ஏற்பாட்டைத் தொடங்குகிறார்கள். அந்தச் சந்திப்பிற்காக த்ரிஷா சிங்கப்பூரில் இருந்து வருகிறார். பள்ளிக்காலத்தில் த்ரிஷாவைக் காதலித்த விஜய் சேதுபதி அன்றிரவு முழுக்க அவருடன் பயணிக்கிறார். பால்ய காலத்து நினைவுகளுடன் ராமுவும் ஜானுவும் உரையாடும் தருணங்கள் ரசிகர்களைத் தங்களுடைய காதல் காலத்திற்குக் கொண்டு செல்லும். இந்த நிகழ்வு அவர்களை எங்கு கொண்டு சென்று நிறுத்தும் என்று பரிதவிப்பை ஏற்படுத்தி, இறுதியில் நிம்மதியளிக்கும் அதே சமயம் மனதில் பாரத்தையும் ஏற்றும் முடிவுடன் படம் முடிகிறது.
விஜய் சேதுபதி வாரத்திற்கொரு படம் கொடுக்கிறார். இம்மாதிரியான மனதை வருடும் படமென்றால் கொடுத்துக் கொண்டே இருக்கலாம். ஒரே மாதிரி நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டைத் தாண்டி இதில் நடிப்பில் சில மாற்றங்களைக் காட்டுகிறார். பெரிய ஹீரோவாயிட்டோம் என்று மாஸ் படங்களில் மட்டும் நடிப்பேன் என்று கெட்டுப் போகாமல், இது போல் அழகிய தருணங்களைக் கொண்ட படங்களில் அவ்வப்போது தொடர்ந்து நடிக்க வேண்டும்.
த்ரிஷாவைப் பிடிக்காதவர்களுக்குக் கூட த்ரிஷாவை இந்த ஜானு கேரக்டருக்காகப் பிடித்து விடும். அவ்வளவு பாந்தமாக அந்தக் கேரக்டரில் உட்கார்ந்து விடுகிறார். பாடகி ஜானகியின் பாதிப்பில் ஜானு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் அந்தக் கேரக்டருக்கு த்ரிஷாவுடன் சேர்ந்து, அவருக்குக் குரல் கொடுத்திருக்கும் சின்மயியும் உயிர் கொடுத்திருக்கிறார். அவ்வப்போது இளையராஜாவின் பாடல்களைப் பாடும் போது புல்லரிக்கச் செய்கிறார்.
படத்தின் இசையமைப்பாளரான கோவிந்த் வசந்தாவின் பாடல்களை விட, இளையராஜாவின் பழைய பாடல்கள் படத்தின் உணர்வைப் பிரதிபலிப்பதாக உள்ளன. விஜய் சேதுபதி பலமுறை கேட்டு மறுக்கப்படும் “”யமுனை ஆற்றிலே“ பாடலைப் பின்பு, மின்சாரம் இல்லாத சமயம் த்ரிஷா பாடும் போது அது எழுப்பும் உணர்வெழுச்சியை என்னவென்று விவரிப்பது? காதலே காதலே பாடல் மூலமும், அந்த வயலின் பிட் கொண்ட பின்னணி இசை மூலமும் தனது இருப்பைக் காட்டியிருக்கிறார் “தாய்குடம் ப்ரிட்ஜ்” கோவிந்த்.
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும்” படத்தின் ஒளிப்பதிவாளரான ப்ரேம்குமார், இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். ஒரு க்ளீன் காதல் படத்தைக் கொடுத்ததற்காக அவருக்குப் பாராட்டுகள். பள்ளிக் காதலை இவ்வளவு மதிப்பூட்டிப் புனிதமாக்குவது இன்னொரு பக்கம் நல்லதும் இல்லை. அதுதான் ஆங்காங்கே நெளிய விடுகிறது. பள்ளிக் காலத்தில் பிரிந்த இருவர், இருபது வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது, இப்படியொரு காவியக் காதலை வெளிப்படுத்துவார்களா என்று ஒரு பக்கம் கேள்வி எழுந்தாலும், இப்படி எந்த லாஜிக்குள்ளும் அடங்காதது தான் காதல் என்பதால் ஒரு ஃபீலிங்கோடு ரசித்து விட்டு வரலாம்.
படத்தில் நாயகன், நாயகி தவிர வெகுசில கதாபாத்திரங்களே உள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் இப்படத்தில் நடித்திருக்கிறார். பள்ளி வாட்ச்மேனாக சில காட்சிகளே வருகிறார். நெருங்கிய தோழர்களாக வரும் பக்ஸ், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் கலவரப்படும் காட்சிகள் கலகலப்பூட்டுகின்றன. இளம் விஜய் சேதுபதியாக, த்ரிஷாவாக வரும் ஆதித்யாவும் (எம்.எஸ்.பாஸ்கர் மகன்), கெளரியும் கவர்கிறார்கள். சிறுவயது தேவதர்ஷிணியாக அவருடைய மகளே நடித்திருப்பது ஒரு சுவாரஸ்யத் தேர்வு. மகேந்திரன் மற்றும் சண்முகத்தின் ஒளிப்பதிவு, படத்தின் தரத்தை உயர்த்துகிறது. பாதிப் படத்திற்கு மேல் விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் மட்டுமே வந்தாலும், அது படத்தைச் சலிப்படையச் செய்யவில்லை. அதில் இயக்குனர் வெற்றியடைந்துவிடுகிறார்.
சில படங்கள் தான் படம் பார்த்த சில நாட்களுக்கு மனதில் நிற்கும். ஏதேதோ நினைவுகளைக் கிளப்பும். திரும்ப இன்னொரு முறை பார்க்கத் தூண்டும். வேண்டாம், பார்க்கவே கூடாது என்று தவிர்க்கவும் தோன்றும். 96 அப்படி ஒரு படம் தான். காதல் அனுபவம் உள்ளவர்கள், காதலில் பிரிந்து சென்றவர்கள், உணர்ச்சிவயப்படுபவர்கள், குடும்பத்துடன் இப்படத்தைக் காண்பதைத் தவிர்க்கவும். அப்புறம் மாட்டிக் கொள்வீர்கள்.
– சரவணகுமரன்.
Go watch ..should have been titled 1996..