\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க இடைத்தேர்தல் 2018

ஏறத்தாழ இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அமெரிக்க இடைத்தேர்தல் சூடு பிடித்துள்ளது. பொதுத் தேர்தலைப் போலவே, இடைத் தேர்தலும் நவம்பர் மாதத்தில், முதல் திங்கட்கிழமையைத் தொடர்ந்து வரும் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும்.

ஆண்டுதோறும் இந்நாளன்று தேர்தல்கள் நடைபெறும். அதிகாரசபை அங்கத்தினர் (செனட்டர்) அல்லது பிரதிநிதியின் இறப்பு, துறப்பினால் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புதல், உள்ளாட்சித் தலைவர்கள், ஆளுநர்களுக்கான தேர்தல்கள் சிறப்புத் தேர்தல்களாகும்.  (Special elections)

இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான  (House Representative)பிர தேர்தல் அதிபர் தேர்தல்களுக்கிடையே நடைபெறும். இது இடைத்தேர்தல் எனப்படுகிறது. (Midterm elections).

அவ்வகையில் இந்தாண்டு 435 பிரதிநிதிகளுக்கான  தேர்தல்களும், 100 உறுப்பினர்கள் அடங்கிய அதிகாரச் சபையில்  35 அங்கத்தினருக்கான வெற்றிடங்களை நிரப்பும் தேர்தல்களும் நடைபெறவுள்ளன.  

தற்போது அதிகாரச் சபை, பிரதிநிதிகள் சபை என இரண்டிலும் பெரும்பான்மை பெற்றுள்ள குடியரசுக் கட்சி இப்பெரும்பான்மையை நிலைநிறுத்திக் கொள்ளுமா என்பது அரசியல் விமர்சிகர்களால் கூர்ந்து கவனிக்கப்பட்டுவருகிறது. இரண்டு அவைகளின் பெரும்பான்மை பலமிருந்தும் அதிபர் ட்ரம்ப் பல சந்தர்ப்பங்களில் சிரமப்பட வேண்டியிருந்த நிலையில், எக்காரணங்கொண்டும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மைப்  பெற்றுவிடக்கூடாது என்பதில் அதிபர் அலுவலகம் முனைப்புடன் செயலாற்றுகிறது. குறிப்பாக முன்னாள் அதிபர் ஒபாமா கொண்டு வந்த ‘அஃபோர்டபிள் கேர் ஆக்ட்’ எனப்படும் உடல்நலக்கப்பீட்டுத் திட்டத்தை முடக்குவதில் ஆர்வம் காட்டி வரும் ட்ரம்புக்கு இரண்டு அவைகளிலும் பெரும்பான்மையைத் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.

மினசோட்டாவில் ஆளுநர், துணை ஆளுநர், 2 அதிகார அவை அங்கத்தினர், 8 பிரதிநிதிகள் உட்பட மாநில அவைக்கான சில தேர்தல்களும் நடைபெறவுள்ளன.

ஆளுநர்

2011 முதல் 2 பதவிக்காலங்கள் ஆளுநராக இருந்த மார்க் டேய்ட்டனின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநருக்கான போட்டியில் குடியரசுக் கட்சி சார்பில் ஜெஃப் ஜான்சனும் (Jeff Johnson), ஜனநாயகக் கட்சி சார்பில் டிம் வால்ட்ஸும் (Tim Waltz) களமிறங்கியுள்ளனர்.

இருவருமே கல்வி, வேலை வாய்ப்பு, வரிக் குறைப்பு மற்றும் மாநிலத்தின் பொருளாதார  வளர்ச்சி குறித்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களின் உடல்நலக் காப்பீடு, குடியுரிமை மற்றும் துப்பாக்கிக் கட்டுப்பாடு கொள்கைகளே வெற்றியைத் தீர்மானிக்கப் போகிறது. தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் டிம் வால்ட்ஸ் முன்னணியில் இருந்தாலும், ஜெஃப் ஜான்சன் வேகமாக வளர்ந்து கடும் போட்டியை உருவாக்கி வருகிறார்.

அதிகார அவை அங்கத்தினர் (Senator)

மினசோட்டாவின் இரண்டு செனட்டர் பதவிகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளன.

சென்ற ஆண்டு, பாலியல் முறைகேடு தொடர்பான சர்ச்சை காரணமாக செனட்டர் அல் ஃப்ராங்கன் (Al Franken) பதவி விலகினார். தற்கால அடிப்படையில் பதவியேற்ற டீனா ஸ்மித் (Tina Smith), நிரந்தரப் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சி சார்பில் கரின் ஹூஸ்லி (Karin Housley) களமிறங்கியுள்ளார். இருவருக்குமிடையில் கடுமையான போட்டி நிலவினாலும், ஏற்கனவே மத்திய அரசளவில் அறிமுகம் பெற்றுள்ள டீனா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2007 முதல் செனட்டராகப் பணியாற்றிவரும் ஏமி க்ளோபுச்சார் (Amy Klobuchar), மூன்றாம் முறையாக அப்பதவியைத் தக்க வைத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜிம் நியுபெர்கர் (Jim Newberger) போட்டியிடுகிறார். நார்த் மெமோரியல் மருத்துவமனையில் செவிலியராக இருக்கும் ஜிம், தான் பின்தங்கியிருப்பதை உணர்ந்தாலும், காப்பீடு திட்டம் குறித்த தனது கொள்கை மக்களால் வரவேற்கப்படும் என நம்புகிறார்.

அவைப் பிரதிநிதிகள்  (House of Representatives)

மினசோட்டாவின் எட்டு காங்கிரஸ் மாவட்டங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளன.

முதல் காங்கிரஸ் மாவட்டம்

தெற்கு மினசோட்டா நகரங்கள் பலவற்றை அடக்கி, சவுத் டகோட்டா வரை விரிந்துள்ள இந்த மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி டிம் வால்ட்ஸ். அவர் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுவதால் ஜனநாயகக் கட்சி சார்பில் டான் ஃபீஹான் (Dan Feehan) மற்றும் குடியரசுக் கட்சி சார்பில் ஜிம் ஹெகர்டார்ன் (Jim Hagedorn) மோதிக் கொள்கின்றனர்.

இரண்டாம் காங்கிரஸ் மாவட்டம்

ஸ்காட், டகோடா, வாபாஷா போன்ற மாநகராட்சிப் பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி ஜேசன் லூயிஸ் (Jason Lewis) (கு). அவரை எதிர்த்து நிற்பவர் ஜனநாயகக் கட்சியின்  ஏஞ்ஜி க்ரேக் (Angie Craig)(ஜ).

மூன்றாம் காங்கிரஸ் மாவட்டம்

அனோகா, ஹெனப்பின், கார்வர் மாநகராட்சிப் பிரதேசங்கள் கொண்ட மூன்றாம் மாவட்டத்தின் தற்போதைய குடியரசுக்கட்சி  பிரதிநிதி எரிக் பால்சன் (Eric Paulsen) மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் டீன் பிலிப்ஸ்  (Dean Philips) போட்டியிடுகிறார்.

நான்காம் காங்கிரஸ் மாவட்டம்

நான்காம் மாவட்டம் ராம்சே, வாஷிங்டன் மாநகராட்சிகளைக் கொண்டது. பெட்டி மெக்கல்லம் (Betty Maccullum) (ஜ) தற்போதைய பிரதிநிதியாகவுள்ளார்.  அவரை கிரேக் ரயன் (Greg Ryan) குடியரசுக் கட்சி, சூசன் பெண்டர்காஸ்ட் தனிக்கட்சி ஆகியோர் எதிர்க்கின்றனர்.

ஐந்தாம் காங்கிரஸ் மாவட்டம்

எஞ்சிய அனோகா, ஹெனப்பின், ராம்சே பகுதிகளைக் கொண்ட ஐந்தாம் மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி கீத் எலிசன் (ஜ) (Keith Ellison) ஓய்வு பெற இலான் ஓமர் (ஜ) (Ilhan Omar) , ஜெனிஃபர் சீலன்ஸ்கி (கு) (Jennifer Zielinski) மோதுகின்றனர்.

ஆறாம் காங்கிரஸ் மாவட்டம்

பென்டன், ஷேர்பன் மாநகராட்சிப் பிரதேசங்களை உள்ளடக்கிய ஆறாம் மாவட்டத்தில் தற்போதைய பிரதிநிதி டாம் எம்மர் (கு) (Tom Emmer)

 மற்றும் இயன் டாட் (ஜ) (Ian Todd) களமிறங்குகின்றனர்.

ஏழாம் காங்கிரஸ் மாவட்டம்

பெரும்பான்மையான கிராமப்பகுதிகளைக் கொண்ட மினாசோட்டாவின் மேற்கு மாவட்டமான ஏழாம் மாவட்டம் பெக்கர், டக்ளஸ், கண்டியோஹி என ஏகப்பட்ட மாநகராட்சிகளை உள்ளடக்கியது.  காலின் பீட்டர்சன் (Collin Peterson) (ஜ) தற்போதைய பிரதிநிதியாகவுள்ளார்.  அவரை எதிர்ப்பவர் டேவ் ஹூயூஸ் (Dave Hughes) (கு).

எட்டாம் காங்கிரஸ் மாவட்டம்

துலூத் உட்பட, மிலாக்ஸ், ஐடாஸ்கா போன்ற பல பிரதேசங்களை உள்ளடக்கிய எட்டாவது மாவட்டத்தின் தற்போதைய பிரதிநிதி ரிக் நோலன் (Rick Nolan) (ஜ). இவர் ஒய்வு பெறப் போவதாக அறிவித்ததால் ஜனநாயகக் கட்சி சார்பில் நிற்பவர் ஜோ ரடிநோவிக் (Joe Radinovich). இவரை எதிர்த்துப் போட்டியிடப்போவது பீட் ஸ்டாபர் (கு) (Pete Stauber).

இப்படிப் பல பதவிகளுக்கான தேர்தல் என்பதால் ஊடகங்களில் பல பெயர்கள், கொள்கைகள் விமர்சிக்கப்படுகின்றன. மாநில மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் தானே என்று புறக்கணித்து விடாமல், நீங்கள் இருக்கும் மாவட்டத்தின் போட்டியாளர்கள் குறித்து அறிந்து தவறாது வாக்களியுங்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அதிகார அவை அங்கத்தினரும், பிரதிநிதியும் மத்திய அரசு எடுக்கும் முடிவுகளுக்குச் சாதகமாகவோ, சவாலாகவோ செயல்படக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.   

தெரியுமா?

ஏன் நவம்பர் மாதத்தில் தேர்தல்?

அமெரிக்கா உழவுத் தொழிலைப் பிரதானமாகக் கொண்டிருந்த காலத்தில், இளவேனிற் காலத்தில் விதைத்து, இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யும்வரை இடையறாது உழைத்துவந்தனர். நவம்பர் இறுதியிலிருந்து குளிர் பனிக்காலம் தொடங்கிவிடுமாகையால், தேர்தலை அதற்கு முன்பாகவே நடத்தி வருகின்றனர். சரி ஏன் செவ்வாய்க்கிழமை? பெரும்பாலான அமெரிக்கக் குடும்பங்கள் வாரஇறுதியில் வழிபாட்டுச் சேவைகளில் ஈடுபடுவர். நாடு முழுதும் புதன்கிழமை  சந்தை நாளாக அனுஷ்டிக்கப்பட்டு வந்தது. பலர் வாக்களிக்க பல மைல்கள் குதிரையில் பயணிக்க வேண்டியிருந்ததால், திங்கட்கிழமை பயணிக்கும் நாளாகக் கருதி செவ்வாயன்று தேர்தலை நடத்தி வந்தனர். இந்த வழக்கம் அரசியல் பாரம்பர்யமாக, கடந்த 180 ஆண்டுகளுக்கும் மேலாகப் பின்பற்றப்படுகிறது.

–        ரவிக்குமார்.

Tim Waltz

Jeff Johnson

Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad