\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஆமென்!

Filed in கதை, வார வெளியீடு by on October 28, 2018 0 Comments

ண்டி லக்‌ஷ்மி…. நியூஸ் கேட்டியா?”, மூச்சிறைக்க பேஸ்மெண்டிலிருந்து மேலேயிருக்கும் சமையலறைக்கு ஓடி வந்தான் கணேஷ். அப்பொழுதுதான் ஃபோன் பேசி முடித்து, அந்த ஃபோனையும் கையிலேயே எடுத்துக் கொண்டு வந்திருந்தான்… “என்னன்னா, என்ன நியூஸ், யாரு ஃபோன்ல?”. வழக்கமாக அவ்வளவாகப் பதற்றமடையாத கணவன் பதறுகிறானே என்று அவளுக்குப் பதற்றம். இந்தியாவிலிருந்த வயது முதிர்ந்தவர்களெல்லாம் ஒரு முறை அவளது மனக்கண் முன்னே வந்து சென்றனர். ”யாருக்கும் எதுவும் ஆகியிருக்கக்கூடாது ராகவேந்திரா” என்று தனது இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டாள்.

”ஜோஸஃப் ஃபோன் பண்ணினாண்டி.. அவா அப்பா,,, அங்க்கிள் போய்ட்டாராண்டி…..” சொன்ன குரலில் கரிசனமும், தழுதழுப்பும் அதிகரித்தது. கேட்ட மாத்திரத்தில், எங்கேதான் ஒளிந்து கொண்டிருந்ததோ, அவளின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டு, மெதுவாக வழியத் தொடங்கியது.

******************

ஜோஸஃப் அவன் மனைவி மேரி, கணேஷ் லக்‌ஷ்மி தம்பதிகளின் வீட்டிலிருந்து நான்கு வீடு தள்ளி வீடு வாங்கியவர்கள், கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு. இவர்கள் தமிழகத்திலிருந்து வந்த இந்துக்கள், அவர்கள் கேரளத்திலிருந்து வந்த கிறிஸ்துவர்கள். மிகச்சொற்ப தினங்களிலேயே நல்ல நண்பர்களாகிப் போயினர். ஜோஸஃப் அதிகமாகப் பேசமாட்டான்; அவனுக்கும் சேர்த்து மேரி பேசுவாள். கணேஷின் வீட்டில் இருவரும் வாயரட்டை அடிப்பதை வழக்கமாகக் கொண்டவர்கள். இரண்டு குடும்பங்களும் கூடுகையில், ஜோஸஃப் மட்டும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருக்க, மற்ற மூவரும் நிறுத்தாமல் அரட்டை அடித்துக் கொண்டிருப்பர். இந்தியாவை விட்டு வந்து பல வருடங்களாகி, முழுவதுமாக அமெரிக்கனாகி விட்டிருந்தாலும், ஜோஸஃபிற்கு இந்திய அரசியலில் ஆர்வம் அதிகம். கணேஷிற்குந்தான்… கிரிக்கெட், தமிழ் சினிமா எனப் பல விஷயங்களில் இருவரின் ரசனைகளும் ஒரே தரமானவை. ஒவ்வொரு முறை கூடும்பொழுதும், இருவரும் உள்ளத்தால் சம்பாஷிக்கும் அளவு நல்ல நண்பர்களாகிவிட்டிருந்தனர்.

ஜோஸஃப் குடும்பம் அந்த வீட்டிற்குக் குடியேறும் பொழுது, அவர்களின் பெற்றோரும் உடன் வந்திருந்தனர். எல்லாக் குடும்பங்களையும் போல, கோடை விடுமுறைக்காக வந்திருக்கின்றனர் என்று நினைத்த கணேஷும் லக்‌ஷ்மியும், அவர்கள் அங்கேயே தங்கிவிட முடிவு செய்திருக்கின்றனர் என்று தெரிந்து கொண்டபோது சற்று ஆச்சரியமும், பயமும் கொண்டனர். வயதான காலத்தில், இந்த ஊரில் மருத்துவ உதவியையும், அதற்கான செலவையும் நினைத்தால் அவர்களின் பயம் நியாயம் என்று புரியும்.

ஆனால் அங்க்கிளும், ஆண்டியும் மிகவும் ஆரோக்கிய நிலையில் இருந்தனர். அவருக்கு அப்பொழுது எழுபத்தி மூன்று வயது. பார்த்தால் அறுபதுக்கு ஒரு வயது கூடுதலாக யாரும் சொல்ல மாட்டார்கள். ஆண்டி, மேரியின் பெரிய அக்காள் போல இருப்பார்கள். கல்லூரி லெக்சரராக இருந்த அவர்தான் குடும்பத்தில் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர். அழகான குடும்பம். மதம் மற்றும் பழக்க வழக்கங்களை மீறி, இரண்டு குடும்பங்களும் மனதால் ஒன்றாகிப் போயினர். இருவர் வீட்டிலும் புதிதாய் ஒரு பண்டம் சமைத்தால் மற்றொரு வீட்டிற்குக் கொடுத்தனுப்புவது என்பது வழக்கமாகியிருந்தது. கிறிஸ்துமஸுக்கும், ஈஸ்டருக்கும், புது வருடப் பிறப்புக்கும் அவர்கள் வீட்டிலும், தஸராவுக்கும், தீபாவளிக்கும், பொங்கலுக்கும் இவர்கள் வீட்டிலுமென பண்டிகைப் பலகாரங்களும் பரிமாறப்பட்டன. “ஹே.. மேரி.. அந்த பாத்திரத்தக் கொறச்சுத் தள்ளி வை.. அவங்க வெஜிடேரியன்ஸ்”… ஆண்டி அவர்களை வீட்டுக்கு அழைத்த நாட்களிலெல்லாம் மறக்காமல் சொல்லும் அறிவுரை.

“ஏன்னா, அது என்ன அப்டி ஒரு வாசனை… என்ன சமைச்சிருந்தா அவாத்துல” ஒவ்வொரு முறையும் அவர்கள் வீட்டுச் சாப்பாடு முடிந்து திரும்பி வரும் வழியில் லக்‌ஷ்மி கேட்கும் கேள்வி. அழைக்கப்பட்ட பல பேர்களில் ஒரே வெஜிடேரியன்ஸ் இவர்களே. இவர்களுக்காக வெஜிடேரியன் உணவுகள் செய்யும் அதே பட்சத்தில், மற்றவர்களுக்காக மாமிச உணவு சமைக்கப்பட்டிருக்கும். வீட்டின் மெயின் கேட்டைத் திறந்தவுடனேயே வாசனை குடலைப் புறட்டும். ஆனாலும், மனிதர்களின் மேலிருந்த நட்பாலும், அன்பாலும் அவற்றைச் சமாளிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர் இருவரும். ஆனாலும், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்கும் லக்‌ஷ்மிக்கு, கணேஷ் பதில் சொல்லியதே கிடையாது.

******************

ன்னா… நீங்க சொன்னத இன்னுங்கூட நம்ப முடியலன்னா” எண்பத்தியேழு வருடங்களைக் கடந்து, கடந்த ஓராண்டிற்கும் மேலாக உடல்நலக் குறைவால் அவதியுற்றிருந்த அங்க்கிள் இறந்து போய்விட்டார் என்பதையே அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுசரி, எந்த வயதில்தான் “இறந்தால் பரவாயில்லை” என்று இருந்துவிட முடியும்!

”ஏன்னா, இப்ப என்ன பண்றது.. என்ன ப்ரொஸிஜர்ஸ்… அவா ஆத்துக்குப்போலாமா, ஆஃபிஸ் லீவ் போட்டுடவா?” மூச்சு விடாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சத்த ஆசுவாசப்படுத்திக்கோ லக்‌ஷ்மி.. நான் ஜோஸஃபண்ட கேட்டுட்டேன்… ஹாஸ்பிடல்ல இறந்துட்டாராம்.. நடு ராத்திரில.. அப்டியே மார்ச்சுவரிக்குக் கொண்டு போய்ட்டாளாம்.. அடுத்த சனிக்கிழம விஸிடேஷனாம், அப்ப வந்தா அங்க்கிள் உடம்பப் பாக்கலாமாம்”

“என்னன்னா சொல்றேள்… என்ன அபச்சாரம்னா இது.. பத்து நாளுக்கு உடம்ப வச்சுப்பாளா? அதுவரைக்கும் நம்ம பாக்க முடியாதா?.. பக்கத்தாத்துல இருக்கா உடனே போய்ப் பாக்கமுடியலனா என்ன உறவு!”, காட்டன் டாப்பின் அடிப்பாகத்தைச் சற்றே வயிற்றுப்பகுதி மட்டும் தெரியும் வண்ணம் உயர்த்தி, ஒழுகும் மூக்கைச் சரிசெய்து கொண்டாள் லக்‌ஷ்மி! அவளுக்கு மீண்டும் அங்க்கிளின் நினைவு….

******************

ம்மா… இந்தச் சாமி என்னத்தக் காணிச்சுக் கொடுக்குது” மலையாளம் கலந்த அறைகுறைத் தமிழில், நவராத்திரி கொலு பொம்மைகளில் ஒவ்வொன்றாய்க் காட்டி, அங்க்கிள் லக்‌ஷ்மியைக் கேட்பார். கொலு பெண்களுக்கான பண்டிகை என்ற விபரமறிந்ததால் மற்றவர்கள் யாரும் இல்லாத சமயங்களில் தன்னை அழைக்குமாறு அவரே கேட்டுக் கொண்டு, பொதுவாக யாரும் இல்லாத மத்தியான நேரங்களில் அவர்கள் வீட்டிற்கு வருவார். அப்பொழுது ஒவ்வொரு சிறு விஷயமாக விரிவாகப் பார்த்து, கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வார். ஒவ்வொன்றையும் வானளாவப் புகழ்வார். லக்‌ஷ்மியின் கைவண்ணம், பொறுமை அது இது  என்று அவர் பாராட்டாத விஷயங்களே இல்லை. இருவரும் கிட்டத்தட்ட அப்பா மகள் போன்ற உறவு கொண்டிருந்தனர்.

லக்‌ஷ்மிக்கு அவர்கள் குடும்பம் முழுவதையும் மற்றவர்களுடன் சேர்த்து, கொலு நேரங்களில் அழைத்து, விருந்து படைப்பதில் நாட்டமதிகம். அதற்கும் வருவார் அங்க்கிள். அவர் மிக நன்றாகப் பாட்டு பாடுவார் என்பது முதல் கொலுவுக்கு அவரை அழைத்தபோதுதான் தெரிந்தது. வந்து அமர்ந்திருந்தவர், எல்லாப் பெண்டிரும் பக்திப் பாடல்களைப் பாட, கொலுவுக்குச் சம்மந்தமில்லா விட்டாலும் “ஹரிவராசனம்” பாடலை, யேசுதாஸின் குரலில் அருமையாகப் பாடிவிட்டு, “எனக்குத் தெரிந்த இந்து சாமி சாங்காணு…” என்று கூறிச் சிரிப்பார்.

******************

றுபடியும் உலக நினைவு வந்தவளாக, “ஏன்னா… நேக்கு ரொம்ப மனசப் போட்டுப் பிசையறது… அங்க்கிளேத் திரும்பத் திரும்ப மனசுக்குள்ள வந்து போயிண்டிருக்கார்.. எவ்வளவு லவ்வா நம்மளண்ட பேசுவார்… கொழந்தேளோட எவ்வளவு அந்நியோன்யமா வெளயாடுவார்…. நேக்கு முடியலன்னா… நான் இன்னக்கு ஆஃபிஸ் போகல.. நீங்களும் லீவ் போட்டுடுங்கோ…” அவளின் இளகிய மனம் புரிந்த கணேஷ், மறுப்பேதும் சொல்லாமல் லீவ் என பாஸிற்கு டெக்ஸ்ட் அனுப்பி விட்டான். ஜன்னல் வழியாக ஜோஸஃபின் வீடு பார்க்க, அவர்களெல்லோரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு அலுவலகம் சென்று விட்டனர். அவர்களே அலுவலகம் சென்றுவிட, நாம் விடுப்பு எடுத்திருக்கோமே என்று நினைத்துத் தனக்குள் நகைத்துக் கொண்டே தொலைக்காட்சியை ஆன் செய்தான் கணேஷ்.

******************

நான் நன்னா கூகிள் பண்ணிப் பாத்துட்டேன்… ப்ளாக் ட்ரெஸ் வேண்டாம்னுதான் எல்லா சைட்டும் சொல்றது….” இதற்கு முன்னர் எந்த ஃப்யூனரலும் போய் அனுபமில்லாத கணேஷும், லக்‌ஷ்மியும் கூகிளை நாடியது ஆச்சரியமில்லை. “நன்னாப் பாத்தியா? நம்ம மாத்திரம் ஆடாத் தெரியப் போறோம்…” ஹாலிவுட் சினிமாக்களைப் பார்த்து ஒரு புரிதல் வைத்திருப்பதனால் கருப்புப் பேண்ட், கருப்புக் கோட்டுடன் வெள்ளைச் சட்டை அணிவது தவறோ என்று தொடர்ந்தது இந்தக் கேள்வி. “என்னடி இது, இதப்போல ட்ரெஸ்ஸெல்லாம் பண்ணிண்டு காரியத்துக்குப் போறதா?..” வெற்றான மேலுடம்புடன், கச்சை வேட்டியுமாய் அப்பாவிற்குப் பிண்ட சாஸ்திரம் செய்தது நினைவிற்கு வந்தது.

ஒவ்வொரு மதத்திற்கிடையிலும் பழக்க வழக்கத்தில்தான் எத்தனை வேறுபாடுகள். ஆனாலும், கணேஷின் மனதில் அப்பாவின் பிண்டப் பிரதான நினைவுகள்தான் இப்பொழுதும். அதாவது, மதத்தின் பழக்க வழக்கங்கள் வேறாக இருப்பினும், உள்மன நினைவுகளில் வேற்றுமை எதுவுமில்லை. அங்க்கிளின் மறைவும், அவனுக்கு அப்பாவின் மறைவுபோலவே தெரிந்தது.

வரிசையாய், அழகாய் நிறுத்தப்பட்ட கார்களும் ஒரு சோகத்தை மௌனமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தன. கணேஷும் அவற்றிற்கு மத்தியில் தனது காரைக் கொண்டு நிறுத்தினான். இறங்கி, தனது கோட்டைச் சரிசெய்து கொண்டு, அந்த ஃப்யூனரல் ஹோமின் வாசற்கதவுகளில் உள்ளே நுழைந்த அவனை அங்கிருந்த ஒழுங்காய் வடிவமைக்கப்பட்ட அனைத்து விஷயங்களும் வரவேற்றன. வருபவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்வதற்கான ரெஜிஸ்டர் வைக்கப்பட்ட ஒரு இடம், வருபவர்களின் க்ரீட்டிங்க்ஸ் கார்ட் வைப்பதற்குப் பிரத்யேகமான ஒரு பலகை, பூங்கொத்துக்கள் வைப்பதற்கு ஒரு இடம், ரீத் எனப்படும் மலர்வளையம் வைப்பதற்கு இன்னொரு இடம் என்று அனைத்தும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு, அமைக்கப்பட்டிருந்தன. அந்த ஹாலைத் தாண்டியபின் இன்னொரு கதவு, அதனைத் திறந்தவுடன் எல்லோரையும் வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தான் ஜோஸஃப். இவர்களைப் பார்த்ததும், மெலிதாகப் புன்னகைத்தான். அருகில் வந்து கைகுலுக்கி, “தேங்க்ஸ் ஃபார் கமிங்க்” என்றான். அவனைப் பார்த்த நொடி, கரைந்து போனாள் லக்‌ஷ்மி. அவளையும் அறியாமல் சற்று சத்தம் அதிகமாக அழத் தொடங்கினாள். சற்றுத் தொலைவில், வரிசையாகப் போடப்பட்ட நாற்காலிகளில் அமைதியாக அமர்ந்திருந்த பலரும், சத்தம் வந்த திசையை நோக்கிச் சட்டெனத் திரும்பினர். கணேஷிற்கு ஒரு மாதிரியாக இருந்தது. “கண்ட்ரோல் யுவர்ஸெல்ஃப் லக்‌ஷ்மி” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாகக் கூறிவிட்டு, ஒரு நாற்காலி தேடி அமரச் சென்றான்.

நாற்காலியில் அமர்வதற்கு முன்பு, அங்க்கிளின் உடல் கேஸ்கட்டில் கிடத்தப்பட்டு, அந்த ஹாலின் பிரதானமான இடத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்ததைக் கவனித்தான். சற்றுத் திரும்பி, அங்குமிங்கும் பார்த்துவிட்டு, பக்கத்து ஊரிலிருந்து வந்திருந்த மேரியின் தம்பியை அடையாளம் கண்டுகொண்டான். அவனருகில் சென்று கை குலுக்கிவிட்டு, அங்க்கிளின் அருகில் சென்று பார்க்கலாமா எனக் கேட்டான். அவனும் பார்க்கலாம் என்று சொல்ல, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, மெதுவாக அருகே சென்றான். பதப்படுத்தப்பட்டு, பெட்டியினுள் படுக்க வைக்கப்பட்டிருந்தார் அங்க்கிள். இந்திய சராசரிக்கு அதிகமான சிவப்பு நிற முகம், அவரின் ஆறடி உயரத்திற்கு ஏற்றாற்போல் நீளமான, களையான முகம். சுத்தமான வெண்ணிற மீசை.. கோல்டன் ஃப்ரேம் போட்ட அவரின் மூக்குக் கண்ணாடி. மொத்தத்தில், உயிரோடு இருக்கையில் இருந்த அதே களையோடு, படுத்து உறங்குவதுபோல இருந்தது. சத்தமேதுமில்லாமல் கணேஷின் கண்களிலும் கண்ணீர் உருண்டோடியது..

******************

ணேஷ்… எனக்கு இன்னொரு லார்ஜ்’பா..”…. பண்டிகை இல்லாத சாதாரண தினங்களில், சில குடும்பங்களை அழைத்து டின்னர் பார்ட்டி கொடுக்கும் வழக்கமுமுண்டு. பெண்கள் மெயின் லெவலில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்க, ஆண்கள் பேஸ்மெண்ட் பாரில் ஐக்கியமாவது வழக்கம். அந்தச் சந்தர்ப்பங்களிலெல்லாம் அங்க்கிள் உரிமையுடன் கணேஷிடம் ஸ்காட்ச் கேட்பார். கணேஷின் பார்ட்டெண்டிங்க் கெஸ்ச்சர் அவருக்கு மிகவும் பிடிக்கும். இதைத் தெரிந்து வைத்திருந்த ஆண்டியும் அவ்வப்பொழுது அருகே வந்து “கணேஷ், வாட்ச் அவுட்… முன்ன மாதிரி இல்லே” என்று எச்சரிப்பார். அவர் சொல்லாவிட்டாலும், அங்க்கிளின் வயது கருதி, ஸ்காட்ச் குறைவாகவும், ஐஸ் க்யூப்ஸும் அதிகமாகவும் கலந்துதான் கொடுப்பான்.

******************

ங்க்கிள் தலையைத் தூக்கி, இன்னொரு லார்ஜ் என்று கேட்பது போலிருந்தது கணேஷிற்கு. கண்ணீரின் அளவு பன்மடங்கு அதிகரிக்க, சுற்றியிருந்த சிலருக்குச் சற்று ஆச்சரியம். மெதுவாகப் பெட்டி அருகே நடந்து சென்று, அங்க்கிளின் கால்மாட்டுப் பக்கம் பெட்டியின்மீது கை வைத்து, கண்ணில் ஒற்றிக் கொண்டான். கண்களை மூடி, மனதில் காயத்ரி மந்திரம் ஜெபிக்கத் தொடங்கியிருந்தான். ”ஓம்.. புஹுர்… புவஹ.. ஸ்வாஹ்.. தத்ஸவிதுர்வரேண்யம்… பர்கோ தீவஸ்யதீமஹீ.. .. திய்யோயோனஹப் பிரஜோதயாத்…”  

மெதுவாக, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அருகில் வந்து நின்ற லக்‌ஷ்மி, அவன் கையைப் பிடித்துக் கொண்டே அங்க்கிளின் முகத்தைப் பார்த்தாள். பார்த்தவுடன் அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, கணவனின் தோளை முழுவதுமாகப் பற்றி, ஆதரவு தேட, “லக்‌ஷ்மி, அங்க்கிள் காலைத் தொட்டு, சேவிச்சுக்கோ….” மந்திரத்தின் மத்தியில் மனைவிக்கும் நல்ல ஆசிர்வாதம் கிடைக்கட்டும் என்ற நினைப்பில் சொல்லிக் கொண்டிருந்தான். “நோ… நோன்னா… இவா ப்ரொஸீஜர்ஸ் நேக்குப் புரியலை… ஆனா.. ஷூவெல்லாம் போட்டுண்டு… நான் அங்க்கிளைத் தொடமாட்டேன்… பித்ருக்கள் கடவுளுக்கு சமானம்… பூஜையறையில ஷூ போட்டுண்டு போவோமா?” சொல்லிவிட்டு, திரும்ப நடந்து வந்து அமர்ந்தாள்.

அனைவரும் அமைதியாக அமர, கருப்புக் கலர் கோட் போட்டுக் கொண்டு, கழுத்துப் பகுதியில் மட்டும் வெண்ணிற க்ளெரிகல் டேப் (tab) போட்டுக் கொண்டு முன்னர் வந்து நின்றார் பாஸ்டர். தலை நிமிர்ந்து பார்த்த கணேஷிற்கு, பஞ்சபாத்திரமும் உத்தரணியும் ஏந்திக் கொண்டு, பஞ்சகஞ்சம் அணிந்து கொண்டு, பெரிய தொப்பையும் பூணலும் தெரியும் வெற்றுடம்பாய் வந்து நிற்கும் ஆச்சார் மனதிற்கு வந்தார்.

பாஸ்டர் மெதுவாக, முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் ஆண்டியைப் பார்த்து “ரேச்சல், தெர் வாஸ் அன் ஏப்ரஹாம் இன் பைபிள் ஜஸ்ட் லைக் திஸ் ஏப்ரஹாம் ஆஃப் மினசோட்டா…” என்று ஆரம்பித்தார். ”அவர் ஒர்ஷிப் சர்விஸ் திஸ் டே, இன் விச் வி கிவ் தேங்க்ஸ் டு த லார்ட் ஃபார் ஹிஸ் ஹாண்டி வொர்க் இன் த லைஃப் ஆஃப் ஏப்ரஹாம்…..” என்று ஆரம்பித்து, பல விஷயங்களைச் சொல்ல, கூடியிருந்த அனைவரும் ஓரிரு விஷயங்களைத் திரும்பச் சொன்னார்கள். கணேஷிற்கு அப்படியொரு ஆச்சரியம். சிரார்த்தம் செய்து வைக்கும் ஆச்சார், இதையேதான் செய்யச் சொல்வார், இல்லையா? “அபிவாதயே வைஸ்வாமித்ர…. அர்ஸேய பிரவரன்வித…. ஜமதக்னி கோத்ராஹ்…. ஆபஸ்தம்ப ஸூத்ராஹ்….” தன்னையும், தன் முன்னோர்களையும் கடவுளர்களுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டு, மந்திரங்களைத் தொடர்வதுபோல் இவரும் சொல்கிறாரே? எல்லா மதங்களும் அடிப்படையில் நம்புவது ஒன்றைத்தானோ?

பாஸ்டர் பல விஷயங்களைக் கதைபோலக் கூறிக்கொண்டே போனார். அவ்வப்பொழுது ஆண்டியை முகம் பார்த்து ஆறுதலாய்ப் பேசினார். சற்றே சிரித்தார். இதுபோல நடத்துவதைத்தான் கல்யாணச் சாவு என்கின்றனரோ இந்து மதத்தில்? பாஸ்டரைத் தொடர்ந்து சொல்ல வேண்டிய விஷயங்களையெல்லாம் விடாமல் சொன்னார்கள் கணேஷும், லக்‌ஷ்மியும். அங்கே அவை ப்ரிண்ட் செய்யப்பட்டு, வைக்கப்பட்டிருந்தது வசதியாக இருந்தது. நாமும் ஆச்சாரிடம் சான்ஸ்கிரீட் ஸ்லோகங்களைப் பிரிண்ட் செய்து வாங்கிக்கொண்டால் உதவியாக இருக்கும் என எண்ணிக்கொண்டான்.

“ஓ மெர்ஸிஃபுல் ஸேவியர்….. யூ ஹேவ் ஆல்ரெடி ரிஸிவ்ட் ஹிம் இன் டு த க்ளோரியஸ் கம்பெனி ஆஃப் யுவர் ப்ரெஸன்ஸ்…..” என்று பாஸ்டர் முடிக்க, “ஆமென்” என்று அனைவரும் சொல்லி முடித்தனர். தானும் சேர்ந்து ஆமென் சொல்லும்பொழுது, கணேஷின் மனதில் ரீங்காரமாய் ஒலித்த மந்திரத்திற்கும் கிட்டத்தட்ட இதே பொருள்தான். “ம்ருத ஆத்ம்யாஸ் ஸத்கதி லபோஹ்…..”

ன்னா… எவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுடுத்து…. நம்மாத்துல பத்து, பதினொண்ணெல்லாம் முழுநாள் ஆகுமே….” அங்கலாய்த்துக்கொண்டே காரில் வந்த லக்‌ஷ்மிக்கு, முழுவதும் அங்க்கிளின் முகந்தான் நினைவில்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன், சோஃபாவில் அமர்ந்து தொலைக்காட்சியை ஆன் செய்யப்போனவனை அவசர அவசரமாய்த் தடுத்து “ஏன்னா, போய் தலை முழுகிண்டு வந்திடுங்கோ.. குளிச்சப்புறந்தான் எதையும் தொடலாம்… இண்டியாவா இருந்தா ஆத்துக்குள்ளயே விட்டிருக்க மாட்டேன்.. புழக்கடைப் பக்கமாப்போய் கிணத்தடில குளிச்சுட்டு…..” இவள் விடமாட்டாள் என்று புரிந்த கணேஷ், போட்டுச் சென்ற துணிமணிகள் அனைத்தையும் (கோட் உட்பட) தண்ணீரில் நனைத்து விட்டு, நேராகச் சென்று குளிக்கத் தொடங்கினான். குளித்துவிட்டு வெளியே வந்தவனைப் பார்த்து, “அப்டியே பூணலையும் மாத்திண்ட்ருங்கோ” என்றாள் லக்‌ஷ்மி.

சாமியறையில் அமர்ந்து பழைய பூணலை விசர்ஜனை செய்துவிட்டு, “யக்யோபவீதம் பரமம் பவித்ரம்….” என்று மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே புதுப் பூணலை மாட்டிக் கொண்டான். பூஜையை முடித்து, மந்திரப் புத்தகங்களை மூடி வைத்து விட்டு, எழுவதற்கு முன்னால் கடைசியாகக் கடவுளைக் கைகூப்புகையில் அவனையும் அறியாமல் அவன் வாய் முணுமுணுத்த மந்திரம்: “ஆமென்!”

–    வெ. மதுசூதனன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad