\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஒரு நாள் இரவு ..

Filed in கதை, வார வெளியீடு by on October 28, 2018 0 Comments

மணி பதினொன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. மாலை சுமார் நான்கு மணியளவில் தொடங்கிய பனிப்பொழிவு இன்னும் நிற்கவில்லை. சுழன்று, சுழன்று அடித்த காற்று ஜன்னல் கண்ணாடியைச் சடசடவென அதிரச் செய்தது. தெருவோர மஞ்சள் விளக்கில் நாலாபுறமும் பறந்த பனித்துகள்களுடன், ஏற்கனவே தரையில் விழுந்திருந்த பனியும் கிளம்பி பெரிய பனிப்படலத்தை உருவாக்கியிருந்தது தெரிந்தது. இதுவரையில் ஏழெட்டு அங்குல பனி விழுந்திருக்கலாம். நாளை மாலை வரை இந்நிலை நீடிக்குமெனவும், மேலும் சுமார் ஒண்ணரை அடிக்கான  பனிப்பொழிவு தொடருமெனவும் ரேடியோவில் சொன்னார்கள்.

டேபிளிலிருந்த  மது பாட்டில்களை டவலால் துடைத்துப் பின்னாலிருந்த ரேக்கில் அடுக்கிக் கொண்டிருந்தான் ஜெகபதி. கவுண்டரை ஒட்டியிருந்த ஸ்டூலில் வந்தமர்ந்தான் ஷாம்சுந்தர், அந்த பாரில் அவர்கள் இரண்டு பேரைத் தவிர  யாருமில்லை.

‘நல்ல ஊர்ல ‘பார்’ தொறந்தடா நீ.. ‘

‘ஏன்? இந்த ஊருக்கு என்ன? ட்வின் சிட்டிஸ்லேருந்து 2 மணி நேரம் .. 2100 பேர் இருக்காங்க இந்த ஊர்ல.. 75 பெர்சன்ட் மக்கள் தினமும் குடிக்கிறவங்க .. ‘பார் டெண்டர் லைசன்ஸ்’ வாங்கின   கையோட வேற எந்த ஊர்லயும் பார் வைக்க முடியாது .. எல்லாத்துக்கும் மேல, இருந்த காசுக்கு இந்த மாதிரி சீரியல் லைட்டெல்லாம் போட்டு பார் பிசினஸ் நடத்த முடியற ஒரே ஊரு மிலாகா தான் .. என்ன, நீ வந்த நேரம் ஒருத்தனும் வெளிய வர முடியாத அளவுக்கு இப்படி ஸ்னோ ..’

‘சரி .. சரி.. ஒரு ரவுண்டு ஊத்து..’

‘இதான் கடைசி, சரியா… ஒரு  ஃபுல்ல தனி ஆளா காலி பண்ணியிருக்கே .. நான் நாளைக்கு கடை நடத்த கொஞ்ச சரக்காவது மிச்சம் வை ..’

அவன் கிளாசில் ஊற்றி ஷாமை நோக்கித் தள்ளியபோது சொல்லி வைத்தாற்போல் கரெண்ட் போனது..

‘நல்ல வேளை நீ ஊத்தி முடிச்சப்புறம் கரெண்ட் போச்சு.. இல்லைன்னா இதைச் சாக்கா வெச்சு எனக்கு எதுவும் கொடுத்திருக்க  மாட்டே ..’

‘சீக்கிரம் குடிச்சு முடி.. இந்த ‘லாக்ஸ்’ எரிஞ்சுடுச்சுன்னா தடவிகிட்டு தான் வீட்டுக்குப் போகணும் ..’ சொல்லிக்கொண்டே  இரண்டு பெரிய கட்டைகளை எடுத்து, லாவகமாகக் குனிந்து, மூலையில் எரிந்துகொண்டிருந்த ஃபயர் பிளேஸில் செருகினான் ..

சடாரென சத்தத்துடன் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் ஒருவன் ..வாசல் கதவருகே இருந்த எமெர்ஜென்சி விளக்கொளியில் அவன் நடுத்தர வயதுடைய, சற்றே மேல்தட்டு வர்க்க காக்கேஷியன்   போலத் தெரிந்தான். சர்க்கரையும் மைதாவும் போட்டு கலந்த உலர் கலவையில் போட்டுப் புரட்டி எடுத்தது போல் அவன் உடல் முழுதும் பனித்துகள் ஒட்டியிருந்தது.. புஸு புஸு வென்று மூச்சு விட்டதில் அவனது பதட்டம் புரிந்தது.. புறங்கையால் மூக்கிலிருந்து வழிந்த நீரைத் துடைத்தவாறு, இன்னொரு கையை உயர்த்தி ‘ஹலோ..’ என்று  முனகலாய்ச் சொன்னான்..

‘சார்… வீ ஆர் க்ளோஸ்ட் ஃபார் த டே … சாரி அபௌட் தட் ..  நாளைக்கு சாயந்திரம் திறந்திருப்போம்.. ’ ஜக்கி சொல்லி முடிப்பதற்குள்

‘என் மனைவி .. குழந்தை .. ‘ என்று குழறியபடி பேசிக்கொண்டு உள்ளே நடந்தவன்  தடாலெனச் சரிந்து கீழே விழுந்தான்…

‘சரிதான் .. இது வேறயா?’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டு   ”ஆர் யு ஒகே மிஸ்டர் ?’ என்று கேட்டவாறு அவனை நோக்கி நடந்தான் ஜக்கி.

‘தொடாதே ..  எதுக்கு வம்பு ..’ என்று எச்சரித்த ஷாம், மேஜை மேலிருந்த ஒரு க்ளாஸை எடுத்து நீர் ஊற்றி ‘இந்தா … மூஞ்சில தெளி’ என்று கொடுத்தான்.

மூஞ்சியில் நீரைத் தெளித்துக் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் உரக்க ‘சார் … சார் ..’ என்று கத்திய பின்னர் மெதுவே கண் திறந்தான் வந்தவன்.

அவன் பக்கத்தில் முட்டியிட்டு அமர்ந்த ஷாம் .. ‘ஓகேவா இப்போ .. அங்க ஃபயர் பிளேஸ் கிட்ட நகர்ந்து உட்கார முடியுமா? தண்ணி குடிங்க .. மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்குங்க..’ என்று மாறி மாறிப் பேசினான்.

ஷாம் சொல்லியபடி மெதுவே நகர்ந்து ஃபயர் பிளேஸை ஒட்டியிருந்த சுவரில் சாய்ந்து அமர்ந்தான் வந்தவன்.. ஜக்கி ஊற்றிக் கொடுத்த விஸ்கியை ஒரே மூச்சில் விழுங்கியவன் அந்தத் திரவம் தொண்டையில் ஏற்படுத்திய விறுவிறுப்பைத் தாங்க முடியாது கமறிக் கொண்டான்..

‘வழி தெரியாமத் தேடறீங்களா? இங்க எப்படி வந்தீங்க..’ என்றான் ஜக்கி..

‘இல்ல .. வண்டி ஸ்னோல சிக்கிக்கிச்சு .. என்னென்னவோ பண்ணிப் பாத்துட்டேன் … வீல் ஸ்பின் ஆகி இன்னும் உள்ள அமுங்குதே தவிர ஒரு அங்குலம் கூட நகரவேயில்லை\ .. என் பெண்டாட்டியும் புள்ளையும் கார்ல இருக்காங்க .. ’ பதட்டம் அடங்காததால் விட்டு விட்டுத்தான் பேச முடிந்தது அவனால்.

‘என்னது?. கார்ல இருக்காங்களா? கார் எங்க மாட்டிகிச்சு ..’

‘சரியா சொல்லத் தெரில .. காடும் மேடுமா இருந்தது .. மூணு நாலு மைல் இருக்கும்னு நினைக்கிறேன் ..’

என்ன ஆளு இவன் என்பது போல் ஷாமைப் பார்த்தான் ஜக்கி… அவனுக்குள்ளும் அதே கேள்வி ஓடுவது போலிருந்தது அவனது முகம்…

‘மூணு நாலு மைலா … நீ அங்கேருந்து நடந்து தான் வரியா?’  அவனது செய்கையால் அவனை ஒருமைக்குத் தாழ்த்தி விட்டிருந்தான் ஜக்கி..

ஆமாம் என்பது போலத் தலையை மேலும் கீழுமாக ஆட்டியவன் வேதனை  பொறுக்க முடியாமல் முகத்தைச் சுளித்தான்.

‘என்ன ஆளுய்யா நீ … இத்தனூண்டு ஜாக்கெட்ட போட்டுக்கிட்டு, ஃபேன்சி ட்ரெஸ் ஷூஸ் போட்டுக்கிட்டு மூணு நாலு மைல் நடந்தேன்னு சொல்ற.. கை கால் வெரலெல்லாம் துண்டாயிருக்குமேய்யா .. ‘

‘இடத்தோட அடையாளம் ஏதாவது ஞாபகமிருக்கா?’ என்றான் ஷாம்..

‘ஆங்.. குட்.. குட் தண்டர்னு ஒரு சைன் போர்ட் .. அதைத் தாண்டி தான் நடந்து வந்தேன்..’

‘குட் தண்டரா ? அப்போ ‘ஹாலோ ராக் ஆர்ச் தாண்டி வந்தியா?’

‘ஆமாமாம்.. ஏதோ ஆர்ச் மாதிரி இருந்துது.. பேரெல்லாம் தெரில .. அங்க தெரு விளக்கெல்லாம் கூட எதுவுமில்ல’

‘மை காட் .. ‘ தலையில் கை வைத்துக் கொண்டு முழுங்காலிட்டு அமர்ந்தான் ஜக்கி..

‘ஏன்? எதாவது  மோசமான இடமா அது?’ ஷாம் கேட்டான்.

‘ஆமாம் .. ‘ஹோலோகாஸ்ட் வேலி’ன்னு சொல்லுவாங்க ..செங்குத்தான  மலைச் சரிவு .. நல்ல நாள்லேயே கொஞ்சம் சறுக்கினா இருநூறு அடி பள்ளத்தாக்கில தான் போய் விழணும்.. இந்த வெதர்ல..’ சடாரென வந்தவன் பக்கம் திரும்பி ‘எதுக்குய்யா அந்தப் பக்கம் போனீங்க ..’ என உரத்த குரலில் கத்தினான்.

ஜக்கி முகத்தைப் பார்த்து சற்றே அரண்டு போனவன் .. ‘சாரி .. என் வொய்ப்போட ஹாஃப் சிஸ்டர் வீட்டுக்கு வந்துட்டு, ஊருக்குத் திரும்பப் போயிகிட்டிருந்தோம்.. கனெக்ஷன் சரியில்லாம ஜி.பி.எஸ் சரியா வேலை செய்யலை .. ‘

அவன் பேசி முடிக்குமுன் ‘எந்த ஊரு நீ?’ என்றான் ஜக்கி.

‘சைரன் .. விஸ்கான்சின்… இங்கேருந்து கிழக்கால எழுபது மைல் இருக்கும்.’

‘பேரு?’

‘கிறிஸ் .. ‘ ஒரு கணம் நிறுத்தி ஆழமாக மூச்சை இழுத்துக் கொண்டவன் ..’கிறிஸ்டோஃபர் சீகல்’ என்றான்.

‘ஃபோன் வெச்சிருந்தீங்களே .. காப்ஸ் கூப்பிட்டிருக்க வேண்டியது தானே ..’ ஷாம் கேட்கும் போதே மேலும் கொஞ்சம் விஸ்கி ஊத்தி  கிரிஸ்ஸிடம் தள்ளினான் ஜக்கி.

க்ளாஸை  கையிலெடுத்துக் கொண்டவன் ‘ஃபோன் சிக்னல் இல்ல .. எமெர்ஜென்சி கால் கூட போகல ..’ என்று சொல்லி விஸ்கியை உறிஞ்சினான்.

‘ஏதாவது சாப்பிட வேணுமா ..’

‘இல்ல வேணாம்  .. என் பெண்டாட்டி பிள்ளையை அங்கிருந்து  காப்பாத்த உதவி செஞ்சீங்கன்னா போதும் .. ப்ளீஸ் .. கூட வந்து என் காரை வெளிய எடுத்துக் கொடுங்க..’

ஷாமைப் பார்த்தான் ஜக்கி..

‘காப்ஸ் கூப்பிடலாம்… என் ஃபோன் சார்ஜே ஆகலை .. உன் ஃபோன் எங்கேருக்கு?’

‘உன் பின்னாடி, கவுண்டர் டாப்புக்கு மேலே சின்ன லெட்ஜ் இருக்கும்.. அதில லெப்ட் கார்னர்ல இருக்கும் பாரு..’

இருட்டில் தடவித் தடவி தேடிய ஷாம் எதையோ தட்டி விட தடால் தடாலென விழுந்த ஐந்தாறு  பொருட்களில் ஒன்றாக செல்போனும் விழுந்து இரண்டு பகுதிகளாகிச் சிதறியது.

‘போச்சு .. இருந்த ஒரு ஃபோனும் போச்சா ..உன் ஃபோனைப் பத்திரமா எடுத்து வெச்சுக்க … கார்ல சார்ஜ் பண்ண முடியுதான்னு பாக்கலாம் ..\ பின்னாடி ரூம்ல ஓரு ஷவல் இருந்துது .. இருக்கான்னு பாத்து எடுத்துட்டு வரேன்..’

‘தண்ணி பாட்டில்கள், சின்னதா ஏதாவது ஸ்நாக்ஸ்  இருக்குமா.. பாவம் குழந்தை தவிச்சுப் போயிருக்கும்.. அப்புறமா நான் மொத்தமா செட்டில் பண்ணிடறேன்..’ என்றான் கிறிஸ்.

ஒரு கணம் திரும்பி, அவனை வெறித்துப் பார்த்த ஜக்கி, பதிலேதும் சொல்லாமல் பின் கதவை நோக்கி நடந்தான்.

**

நிலவொளியின் வெளிச்சம், பனியால் மூடப்பட்டு ஏற்கனவே வெள்ளைப் போர்வை போர்த்தியிருந்த பகுதியை மேலும் வெண்மையாக ஒளிரச் செய்தது.  ஜக்கி தான் அந்த பிக்கப் ட்ரக்கை ஓட்டினான். சுழன்றடித்த காற்றில், யாரோ எதிரே நின்று செயற்கைப் பனித்துகள்களைப் பீச்சியடிப்பது போல பனி  கிடைமட்டமாக வந்து விழுந்துகொண்டிருந்தது. காரின் விளக்கை ஹை பீமில் போட்டாலும், அவர்களால் சில அடி தூரத்துக்கு மட்டுமே பார்க்க முடிந்தது.  ரோட்டுக்கும், பக்கத்திலிருந்த புல்தரைப் பகுதிக்கும் வித்தியாசம் தெரியாமல், குத்து மதிப்பாக ஓட்டினான் ஜக்கி. கார் சக்கரங்கள் ‘க்கரக்.. க்கரக்’ என்று ஒலியெழுப்பினால் ரோடு என்பதும் அந்த ஒலிச்சத்தம் நின்றால் புல்தரைக்குப் போய் விட்டோம் என்பதே அவனது அனுமானம்.  வண்டிக்குள், குலுக்கல்களால் அவ்வப்போது தண்ணி பாட்டில்கள் மோதிக் கொள்ளும் சத்தத்தைத் தவிர வேறு சத்தமில்லை. ஷாமுக்கு மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. கிரிஸ்ஸின் முகத்தில் தெரிந்த பரிதவிப்பு அவனுக்குப் புரிந்தது.

‘பத்திரமா இருப்பாங்க கவலைப்படாதீங்க .. இதோ கிட்ட வந்துட்டோம்’ என்றான் ஷாம்.

‘கிட்ட வந்துட்டமா ? தெரியுமா உனக்கு? இன்னொரு நாலு மைல் போகணும் அவன் சொன்ன ஆர்ச் வரதுக்கு ..’

‘நீ வண்டியப் பார்த்து ஓட்டு.. சீக்கிரம் போயிடலாம்..’

‘பிள்ளைக்கு என்ன வயசு?’

‘எட்டு வயசு .. தைரியமாத்தான் இருந்தா.. ஆனா இப்ப எப்படி இருக்காளோ ? எனக்குப் பயமெல்லாம் அவங்க கார்லருந்து எறங்காம இருக்கணுமேன்னு தான் …’

‘அவங்க கிட்டயாவது ஃபோன் இருக்கா?’

‘இருக்கு .. வேலை செய்யுதான்னு தெரியல ..’

‘வெதர் தான் இப்படியிருக்குன்னு தெரியுமில்ல .. நீங்க மெதுவா கிளம்பி வந்திருக்கலாம்..’

‘நான் இவ்வளவு மோசமாயிருக்குமின்னு நினைக்கல .. அதுவுமில்லாம அந்த டிச்சில மாட்டிக்காம இருந்திருந்தா இந்த அவஸ்தை இருந்திருக்காது..’

பத்து நிமிடங்கள் கடந்து வந்திருப்பார்கள்.. வண்டியை மிக நிதானமாக ஓட்ட ஆரம்பித்திருந்தான் ஜக்கி..

‘அதோ தெரியுதே அந்த ஆர்ச் தாண்டித்தான் வந்தியா? நல்லா ஞாபகப்படுத்திப் பாரு .. ‘

‘ஆமா.. நல்லாத் தெரியும் .. நான்  வரும் போது அந்த ஆர்ச்சுக்கு வலது பக்கத்தில நடந்து வந்தேன்..’

‘இங்கேருந்து இன்னொரு கால் மைல் தூரத்தில ஹோலாகாஸ்ட் வேலி .. லெஃப்ட்ல போனா குட் தண்டர் எஸ்டேட்ஸ்..  நீ வரும் பொது சைன் போர்டு உனக்கு லெப்ட்ல இருந்துதா, ரைட்ல இருந்துதா ..’

‘ரைட் சைட்ல ..’

‘சுத்தம் .. அப்போ நீ ஹோலாகாஸ்ட் வேலி காட்டுப் பகுதில தான் மாட்டியிருக்கே….’

வண்டி சமதளப் பிடிப்பில்லாமல், சாய்வாகப் போவது போலத் தோன்றியது..

‘வந்துட்டோம்னு நினைக்கிறேன் .. சரிவுப் பாதை ஆரம்பிச்சிடுச்சு..’

‘ஜக்கி.. இங்கேயே வண்டியை நிறுத்திடலாம்.. இல்லன்னா நம்ம வண்டியும் மாட்டிக்கப் போகுது..’

‘கரெக்டு தான் .. இவன் வண்டிய எங்க விட்டான்னு தெரியலையே . ‘சைட் சீயிங்’. பாசஞ்சர் மாதிரி சைலண்டா உக்காந்துகிட்டு வரான் .. ‘

‘வண்டிய  நிறுத்து…. இறங்கிப் பார்க்கலாம்..’

மரங்கள் மூடாது வெளிச்சமாக இருந்த சமதளப் பகுதியில் வண்டியை நிறுத்தினான் ஜக்கி.

வெளியே இறங்க கதவைத் திறக்கவே அவர்கள் மிகவும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது. கதவின் கீழ் விளிம்பு வரை பனி முட்டிக் கொண்டிருந்தது. கதவைத் திறந்த இடைவெளியில்  நுழைந்த காற்று அவர்கள் அணிந்திருந்த கோட்டுகளைத் துளைத்துக் கொண்டு தேகமெங்கும் சில்லென்ற ஊசியைக் குத்தியது.

‘ஓகே .. கிறிஸ் .. இனிமே நீ தான் சொல்லணும் .. சரியா 20 நிமிஷம், லொகேட் பண்ண முடியலைன்னா திரும்பப் போயிடறோம் என்ன?’

திகிலுடன் அவனைப் பார்த்த கிறிஸ் ..’ஓகே ..’ என்று சொல்லியவாறு முன்னே நடந்தான்.

‘ஏண்டா இப்படியிருக்கே .. அவனே கஷ்டத்தில சிக்கிக்கிட்டு இருக்கான்.. அவனை இன்னும் ப்ரெஷர் பண்ணிக்கிட்டு .. என்ன நடந்தாலும் அவங்கள காப்பாத்திக் கூட்டிட்டுப் போறோம்..’

‘தெரியுண்டா .. மூணு பேருக்குமே ஒரு டார்கெட் வெச்சிக்கணும்.. இல்லைனா நம்மளத் தேடிக்கிட்டு இன்னம் முப்பது பேரு வரவேண்டியிருக்கும் நாளைக்கு .. ‘

அவர்கள் நடக்கும்போது ‘பொதக் பொதக்’கென்று கணுக்கால் வரை பனிக்குள் முங்கியது. நான்கு புறமும் மரங்கள் சூழ்ந்த காட்டுப் பகுதி தொடங்கிவிட்டிருந்தது. இலைகள் முற்றிலும் கொட்டியிருந்தாலும், நிலவின் ஒளிவெள்ளம் மரக்கூட்டங்களின் அடர்த்தியால் மட்டுப்பட்டிருந்தது.

‘கிறிஸ்.. நீங்க நடந்து வந்த காலடித் தடம் ஏதாவது தெரியுதா?’ கையில் எடுத்து வந்திருந்த பிளாஷ் லைட்டை அங்குமிங்கும் அலையவிட்டான் ஷாம்..

எதுவும் பேசாமல் புதைமணல் போல் அமுங்கிக் கொண்டிருந்த பனியில் முன்னால் நடந்துகொண்டிருந்தான் கிறிஸ்.

‘நிமிஷத்துக்கு அரை இன்ச் ஸ்னோ விழுது .. அதில காலடித் தடம் தேடறியா நீ?’   

உருளையாயிருந்த ஏதோ ஒன்றின் மீது கால் வைத்து அது உருட்டி விட, ‘ஸ் .. ப்பா ..’ என்ற வலியுடன் இடறி விழப் போனான் ஷாம்.

‘பாத்துடா.. உணர்ச்சிவசப்படாதே .. ஜாக்கிரதையா வா .. அப்படியே சைட் வேஸ்ல லைட் அடிச்சுப் பாரு.. ஸ்னோ லெவல் சரிவா இருக்கிறது தெரியுதா ..ரொம்ப வலது பக்கம் போகாதே சரிவான இடம் .. கொஞ்சம் மிஸ் ஆச்சுனா ‘ஹோலாகாஸ்ட் வேலி’ல தான் லாண்ட் ஆகணும்..’

‘கிறிஸ் பாத்துப் போங்க … இது ஸ்லோப்பி ஏரியாவாம்.. கவனமா இருங்க ..’

‘அவன்  இதையெல்லாம் பொறந்ததிலேர்ந்து பார்த்த மாதிரி ஜாலியா  நடந்து போறான்.. பாரு,, அவன் பெண்டாட்டி பிள்ளைக்கு நாமதான்  சாப்பாடு கொண்டு போறோம்.. அவன் ஆட்டிக்கிட்டுப் போறான்..’

‘விட்ரா.. அவன்  பயங்கரமாக் குழம்பிப் போயிருக்கான்.. அவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறானே .. இந்தக் குளிர்ல மூளை எல்லாம் கூட ஃப்ரீஸ் ஆயிருக்கும்… ‘

மரக்கிளைகளின் இடைவேளியில் தோன்றி மறைந்த நிலவொளி முற்றிலும் மறையத் தொடங்கியிருந்தது.. கரும் இருள் அப்பிக்கொண்டு விட ஷாமின் ப்ளாஷ் லைட் மட்டும் அவனது அசைவைப் பொறுத்து  வட்டமாகவும், நீள் வட்டமாகவும் ஒளியை உமிழ்ந்தது. இலைகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்த கிளைகள் துளியும் அசையாத போதும் ‘ஷ்ஷ் ஷூ’ என்று அடித்த குளிர் காற்று மட்டும் நின்ற பாடில்லை.

லேசாக வியர்க்கத் துவங்கியிருந்தது ஜக்கிக்கு.. ‘இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு ஏதாவது ஐடியா இருக்கா.. நடந்துகிட்டே இருக்கோமே ..’ என்று கத்தினான் ஜக்கி.

இவர்கள் இருவரின் ஷூக்கள் ஸ்நோவில் புதைந்தெழும் ஓசை மட்டும் கேட்டது..

‘யோவ் கிறிஸ் .. கேக்குதா .. இன்னும் எவ்வளவு தூரம் போகணும்’

இவர்களின் பூட்ஸ் சத்தத்தைத் தவிர தொடர்ந்து அமைதியே நிலவியது..

‘நில்லு மாம்ஸ் .. அவனோட சத்தத்தையே காணோமே .. சரியா அவனைப் பின் தொடர்ந்து தான் போறோமா இல்லை அவனை விட்டுட்டு நாம வேற வழியில வந்துட்டமா?’

‘சொல்லச் சொல்ல கேக்காம விஸ்கியா ஊத்திக் கொடுத்தே அவனுக்கு.. எங்கயாவது மட்டையாகி விழுந்து கிடக்கிறானா பாரு ‘ என்றவாறு பிளாஷ் லைட்டை எல்லாப் பக்கங்களிலும் சுழற்றினான் ஷாம்..

‘கேடி பகர் மாதிரி இருக்கான்.. ரெண்டு மூணு ரவுண்டுக்கெல்லாம் சரியுற கேஸ் கிடையாது.. மூஞ்சைப் பாத்தே சொல்லிடுவேன்..’ தனது இத்தனையாண்டு பார் டென்டிங் அனுபவத்தில் ஆணித்தரமாக அடித்துச் சொன்னான் ஜக்கி.

‘அப்போ என்னாகியிருக்கும் அவனுக்கு?’ விளக்கைச் மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டே ‘கிறிஸ் .. கிறிஸ்டோபர் சீகல் ’  என்று அலறினான் ஷாம்.

சடாரென்று தூரத்தில் ஒரு சிறிய ஒளிப் புள்ளி தோன்றி மறைந்தது போலிருந்தது..

‘ஏய்.. கவனிச்சியா ஏதோ வெளிச்சம் தெரிஞ்ச மாதிரி இருந்துதில்ல ..’

’உஷ்… ப்ளாஷ் லைட்டை ஆஃப் பண்ணு’

‘என்ன …’

;ஆஃப் பண்ணு..’

முப்பது நாப்பது வினாடிகள் ஒரு  கையை உயர்த்தி ஷாமை அமைதிப்படுத்திய ஜக்கி .. ‘ரெட் ஃபாக்ஸ்’ ன்னு நினைச்சேன் ..  பனிக்காலத்திலே வெளிய வரும்… அதனோட கண்ணு தான் பளபளன்னு லைட் போட்ட மாதிரி மின்னும் ..’

அடிவயிற்றிலிருந்து ஏதோவொன்று  கிளம்பி உருண்டு தொண்டைக்கு வருவது போலிருந்தது ஷாமுக்கு. அவர்கள் அப்படியே நின்றிருந்தார்கள். தரையோடு வீசிய காற்று பனியைத் தட்டி எழுப்பி புகை மண்டலமாகக் கிளப்பிவிட்டது.

‘இப்போ லைட்டை ஆன் பண்ணு பாக்கலாம்…’

‘இந்தா நீயே ஆன் பண்ணு .. அந்த பேக்கை நான் வெச்சுக்கிறேன்.. ‘ ஃப்ளாஷ் லைட்டை ஜக்கியிடம் கொடுத்துவிட்டு சாப்பாட்டுப் பையை வாங்கிக் கொண்டான் ஷாம்.

கையை உயர்த்தி விளக்கை எறியவிட்டு வேகமாக ஒருமுறை ஆட்டி அணைத்துவிட்டான் ஜக்கி.

சில நொடிகளில் அந்த இடத்திலிருந்து சிறிய வெளிச்சம் புள்ளியாகத் தோன்றி மறைந்தது. ஆனால் இந்த முறை இரண்டு வெளிச்சப் புள்ளிகள் ..

‘ரெண்டு லைட் டாட்ஸ் தெரிஞ்ச மாதிரி இருக்குல்ல..’

‘எனக்கும் அப்படித்தான் தோணுது..’ மீண்டும்  விளக்கை ஏறிய விட்டு அசைத்தான் ஜக்கி.

அதே இடத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் தோன்றின…ஏறத்தாழ ஒரு நிமிடம்  அணையாமல் நிலைத்து நின்று பின்னர் அணைந்து விட்டது.

‘கார் ஹெட் லைட்டுன்னு நினைக்கிறேன், இல்ல?’

‘ரைட்… ஆனா ஏன் அணைச்சுடறாங்க.. அப்படியே ஏரிய விடலாமே ..’

‘கேஸ், பேட்டரி லெவல் எல்லாம் எப்படியிருக்குன்னு தெரியல … அதுவும் தவிர கண்டினுயஸா எஞ்சினை ஓட விடறது சேஃப் இல்லை.. கார்பன் மோனாக்ஸைட் பில்ட் அப் ஆகும்..  இந்த நேரம் பார்த்து எங்க போயிட்டான் நம்மாளு .. யோ.. கிறிஸ் ..’ கத்தினான் ஜக்கி.

‘மொதல்ல கார் கிட்ட போகலாம்…’ சொல்லியபடியே முன்னால் நடக்க ஆரம்பித்தான் ஷாம்.

‘நிதானமா நட .. கண்ணு தரையில இருக்கட்டும்.. முதலடியை அழுத்தமா வைக்காதே .. கால் தரையில பட்ட பின்னாடி அழுத்தம் கொடு.. சரிவான இடம் இது. சொல்லிட்டேன் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்..’ என்று அடிக்கோடிட்டுச் சொன்னான்.

அடிபட்ட பனிச்சறுக்கு வீரன் எழுந்து நடப்பது போன்று, ஒரு பக்கமாகத் திரும்பி பக்க வாட்டில் காலை எடுத்து வைத்து, மரங்கள் அங்கங்கே நீட்டிக்கொண்டிருந்த கிளைகளை மாற்றி மாற்றிப் பிடித்துக் கொண்டு நடந்தான் ஷாம்.

அவ்வப்போது ‘கிறிஸ்..’, ‘கிறிஸ்டோபர் ..’ எனக் கத்திக்கொண்டு பின்தொடர்ந்தான் ஜக்கி.

சிறிது நேரத்துக்குப் பிறகு மறுபடியும் விளக்கை எரிய விட்டார்கள்.. எதிர் புறத்தில் இரண்டு வெளிச்சப் புள்ளிகள் தோன்றி மறைந்த போது, ‘சரியாத்தான் போயிட்டிருக்கோம்னு நினைக்கிறேன்.. இன்னும் கால் மைல் இருக்குமா?’

நீண்ட நேரம் சுவாசித்த குளிர் காற்று நுரையீரலுக்குச் செல்லும் ரத்தக்குழாய்களை உறையச்செய்து மூச்சுவிட சிரமப்பட்டான் ஜக்கி. எச்சில் விழுங்கி, உதட்டை ஈரப்படுத்தி, பதில் சொல்லச் சிறிது நேரமெடுத்துக் கொண்டான்.  

‘ரைட் .. சீக்கிரம் போயிச் சேர்ந்துடலாம்.. எங்கன்னு கேக்காத..’ வேடிக்கைக்காகச் சொன்னாலும் அவன் சொன்னதில் லேசாக ஒளிந்துகொண்டிருந்த நிரந்தரமின்மையை ஷாம் ரசிக்கவில்லை.

அவர்கள் பத்துப் பதினைந்து அடி தூரத்தில் காரை நெருங்கிவிட்டார்கள் .. மனிதர்கள் தான் வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டு காரின் விளக்கை நிரந்தரமாக எரிய விட்டிருந்தார்கள்.

‘அப்பாடி .. ஒரு வழியா வந்துட்டோம்.. கார் இன்னும் ஓடிக்கிட்டு இருக்குன்னு நினைக்கிறேன் இல்ல ..’

‘எஞ்சின் சத்தம் எதுவும்  கேக்கலையே ..’

ஹெட் லைட்டைப் பனி மூடியிருந்ததால் ஒளிக்கற்றை மிகச்  சின்னஞ்சிறு கீற்றுகளாகச் சிதறிக்கிடந்தன.. அவர்கள் வண்டியை அடைய சில அடி தூரம் இருந்தபோது.. காரில் இருந்து .’ ஊ … ஊ.. ‘ ஒரு ஓலம் கேட்டது.. இங்கிருக்கிறோம், காப்பாற்றுங்கள் எனும் உற்சாக வேண்டுகோளா அல்லது அருகே வராதீர்கள் ஆபத்து எனும் எச்சரிக்கை அறிகுறியா? இருவருக்கும் புரியவில்லை – ஏதோவொரு பயம் மனதில் கவ்வத் தொடங்கியிருந்தது இருவருக்கும்.. வண்டியில் குறைந்தபட்சம் ஒருவர் உயிரோடு உள்ளார் என்பது மட்டுமே அவர்களுக்குச் சற்றே நம்பிக்கை தந்தது.

காரை நெருங்கிவிட்டனர். கிறிஸ் சொன்னது போல வலதுபுற முன் சக்கரம் பனிக்குழியில் சிக்கிவிட்டிருந்தது. ஏறத்தாழ ஓரடிக்கு மேல் உள்ளிறங்கியிருக்கக் கூடும். விளக்கு எரிந்தது. வலது புறமிருந்து காரை அணுகிய  ஷாம் கதவைத் திறக்க முற்பட்டான்.

‘கேர் ஃபுல்… மொதல்ல விண்டோல இருக்க ஸ்னோவை தள்ளிவிட்டுட்டு உள்ளே என்ன நிலவரம்னு  பாரு ‘ என்ற ஜக்கி, முன்புறமாகச் சென்று ஹெட்லைட்டை சுற்றியிருந்த பனியைத் துடைக்க முற்பட்டான்.. வெப்பநிலை மிகவும் மோசமடைந்திருந்ததால் பனி உறையத் தொடங்கியிருந்தது. கதவையும் திறக்க முடியவில்லை.  ஷாமின் முதுகிலிருந்து பையை இறக்கிய ஜக்கி, முன்பக்க ஜிப்பைத் திறந்து கை விட்டுத் துழாவி, சிறிய ஸ்விஸ் நைஃப்பை வெளியே எடுத்தான். அதிலிருந்து கூர்மையான கத்தியை வெளியே இழுத்து கதவிடுக்கில் நுழைத்து மேலும் கீழுமாகச் சுரண்டி ஸ்னோவை தள்ளிவிட்டான். அதனால் ஏற்பட்ட இடைவெளியில் ‘சேவ் மை சைல்ட் .. சேவ் மை சைல்ட்’ என்று அடித்தொண்டையிலிருந்து கத்தும் பெண்குரல் மெலிதாகக் கேட்டது.. இன்னமும் கதவைத் திறக்க முடியவில்லை..

பையிலிருந்து சிறிய மல்டிபர்பஸ் எமெர்ஜென்சி   கிட்டை எடுத்த ஜக்கி, அதிலிருந்து ஒரு பொருளை எடுத்து அதன் முன்னும் பின்னும் மடக்கப்பட்டிருந்த பாகங்களை விரித்தான்.. அரை அடி நீளமுள்ள   ஒரு சிறிய பனிக் கோடரி விரிந்தது..

‘ஏய்.. மெர்சிடிஸ் வண்டி பாத்து ..’ என்ற ஷாமை திரும்பி முறைத்த ஜக்கி பலங்கொண்ட வேகத்துடன் குத்துமதிப்பாக கதவின் விளிம்பில் இறக்கி நெம்பினான்… லேசாகக் குலுங்கியது வண்டி. இரண்டு மூன்று முறை அப்படிச் செய்தபின்னர் ‘ க்ரக் .. கரக்’ என்ற ஒலியுடன் கதவு லேசாகப் பிளந்து, இடைவெளி ஏற்படுத்தியது. அந்த இடைவெளியில் விரல்களை நுழைத்து, உள்ளங்காலை வண்டியில் முட்டுக் கொடுத்து, மூச்சை உள்ளிழுத்துக்கொண்டு இழுத்த ஜக்கி, அவனது பலம் தாளாமல் கதவு திறந்த போது, நிலை தடுமாறிப் பின்னால் சரிந்தான்..

‘ஓ’வென்று கத்தினாள் உள்ளிருந்த பெண்.. கலைந்து போன பொன்னிறத் தலை முடியோடு ஒரு பெண் குழந்தை  அவளது மார்பில் சரிந்து கிடந்தது.. பின் சீட்டில் பார்பி கேர்ள் ஸ்குவாட் பொம்மைகள் இரண்டு கிடந்தன..  தனது

இருகைகளாலும் குழந்தையை அணைத்தபடி இட வலமாக ஆடிக்கொண்டிருந்த பெண் பெரிய ஓலத்துடன் அலறினாள்.. ‘ஹெல்ப் இஸ் ஹியர் ஜெனி.. வேக் அப்.. வேக் அப்.. ‘ என்று சொல்லியவாறு அந்தக் குழந்தையின் தாடையில் தட்டி எழுப்ப முயன்றாள்.

‘மேடம்.. மேடம்.. வி ஆர் நாட் ப்ரஃபொஷனல்ஸ்.. பட் வீ வில் ட்ரை டு ஹெல்ப் யூ’ என்ற அறிமுக உரையுடன் வண்டிக்குள் ஏறினான் ஜக்கி..

வெளியில் நின்று வாயின் இரண்டு புறத்தில் கையை அண்டைக் கட்டி ‘கிறிஸ்.. கிறிஸ்டோபர்.. வீ  ஃபௌன்ட் தெம்.. ‘ என்று அனைத்து பக்கமும் சுழன்று கத்தினான் ஷாம்…

உள்ளிருந்து கதவை மூடிக்கொண்டு குழந்தையை அவளிடமிருந்து வாங்கிய ஜக்கி குழந்தையை மடியில் கவிழ்த்துப் படுக்க வைத்து, தனது க்ளவுஸைக் கழட்டிவிட்டு, குழந்தையின் கோட்டைத் தளர்த்தி முதுகில் பரபரவென்று தேய்த்தான்.. கதவைத் திறந்து ஷாமை பின்னால் அமருமாறு கத்தினான்..

பின்னால் அமர்ந்த ஷாம் பையிலிருந்து தண்ணீர் பாட்டில்களை எடுத்து நீட்டினான்..

அதை வாங்கி அவசர அவசரமாக சில மடக்குகள் குடித்த அவள் .. ‘இஸ் ஷி ஒகே .. வேக் அப் வேக் ஜெனி’ என்று அழத் துவங்கினாள்.. ஃபர்ஸ்ட் எய்ட் கிட்டிலிருந்து பாடி வார்மிங் ஆயிலை எடுத்து குழந்தையின் முதுகில்  தடவினான் .. சாக்லேட்டை உடைத்து குழந்தையின் உதட்டைத் திறந்து தடவி விட்டான் .. கேஸ் லெவலை உறுதி செய்துகொண்டு, கண்ணாடி ஜன்னலை கால் அங்குல இடைவெளி ஏற்படுமாறு இறக்கி, என்ஜினை உயிர்ப்பித்தான்.. முதல் சில நிமிடங்கள் குளிர்ந்த காற்றை உமிழ்ந்த ஹீட்டர் மெதுவே வெதுவெதுப்பான காற்றைப் பரப்பியது..

‘நல்ல வேளை கேஸ் முழுதையும் வேஸ்ட் பண்ணாம இருந்தீங்க.. குழந்தை உடம்புல சூடாயிகிட்டுருக்கு பயம் வேண்டாம்… ஷி இஸ் ஆல்ரைட் .. நீங்க ஏதாவது சாப்பிடுங்க .. அதில க்ரனோலா பார்ஸ் இருக்கு .. ’ என்று பேக் பேக்கை சுட்டிக் காட்டினான் ஜக்கி..

‘தேங்க்யூ கைஸ்.. நீங்க ரெண்டு பேரும் தான் எங்க மீட்பர்கள் .. நீங்க மட்டும் வரலேன்னா இங்கேயே செத்து போயிருப்போம்..’ என்று கண்களில் நீர் வழிய விம்மினாள்.

‘நாங்க இங்க வரதுக்கு காரணமே உங்க கணவர் க்றிஸ் தான்.. ஆனா இப்ப ..’ என ஷாம் முடிக்குமுன்னரே ..

‘உங்களுக்கு கிரிஸ்சை  தெரியுமா.. நீங்க அவரோட நண்பர்களா.. மலர் வைக்க வந்தீங்களா?’

மனதில் ஏதோ சொரேரென்றது ஷாமுக்கு.. படபடத்த இதயத் துடிப்புடன், கண்களை விரித்து ஜக்கியைப் பார்த்தான்.

அவனுக்குள்ளும் திகில் பரவியிருந்தாலும், குழப்ப ரேகைகளால் அதை மறைக்க முயன்று கொண்டிருந்தான்.

‘நீங்க .. இங்க.. நீங்க எதுக்காக இந்த வழியா வந்தீங்க…’

‘இன்னைக்கு ரெண்டாவது  நினைவு தினம்.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி   என்னோட தங்கை வீட்டுக்குப் போயிட்டு இதே ரோடில திரும்பி வரும் போதுதான்  அந்த விபத்தைப் பார்த்தோம்.. அவங்களுக்கு உதவி செய்ய இறங்கிப் போன கிறிஸ் அவங்களுக்குள்ள நடந்த கைகலப்பை விலக்க முயற்சி செய்து கால் இடறி அந்தப் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரை விட்டான்.. தன் அப்பா  உயிர் விட்ட அந்த இடத்தைப் பாக்கணும்னு ஜெனி விரும்பினா .. அவனோட கல்லறைக்கு மலர் வைக்கத்தான் இன்னைக்கு இங்க வந்தோம்.. வந்த இடத்தில இப்படிச் சிக்கிப்போம்னு நான் நினைக்கவேயில்லை.. நல்லவேளை கிறிஸ் எங்களை ஞாபகம் வைச்சிகிட்டு, இப்பவும் எங்களைக் காப்பாற்றியிருக்கிறான்.. நீங்க இங்க தான் இருக்கீங்களா .. கிறிஸ்சை எப்படித் தெரியும் உங்களுக்கு ..’  என்னென்னவோ பேசிக்கொண்டே போனாள் அவள்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால், அவனது கண் முன் நடந்த அந்த விபத்து படாரெனக் கன்னத்தில் அறைந்து ஜக்கியை உறைய வைத்திருந்தது.

–  மர்மயோகி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad