\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருவேறு படங்கள், ஒரே தாக்கம்…

மனித இனத்தில், அன்றாட வாழ்வில், தான் உண்டு தன் சொந்த வாழ்க்கையுண்டு என்று வாழ்பவர்கள் அதிகம். இவர்களின் கவனம் அசாதாரணச் சூழ்நிலைகளைச் சற்றேனும் உற்று நோக்குவதில் சிறிதளவேனும் திளைப்பதில்லை. இவர்களின் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் சக்தி சில படங்களுக்கும் நிகழ்வுகளுக்கும் உண்டு. அவற்றில் இரண்டு படங்களையும் நிகழ்வுகளையும் ஒப்பு நோக்குவதுதான் இந்தச் சிறிய கட்டுரை.

twophotos_same_interpretation_2_420x263வியட்நாம் போரின் உச்சத்தில் 1972ஆம் ஆண்டு புகைப்பட நிபுணர் நிக் உட் அவர்கள் எடுத்த இந்தக் கருப்பு/வெள்ளை படம் ஒரு பெரும் தாக்கத்தை இவ்வுலகிற்கு ஏற்படுத்தியது என்றால் அது மிகையில்லை.

உடலிலே சிறிதளவேனும் ஆடையின்றிப் பயத்துடன் சிதறி ஓடும் ஒரு சிறு பெண் மற்றும் நான்கு குழந்தைகளின் படம் உலகப்புகழ் பெற்றது. பெரும்பாலான அமெரிக்கர்கள் அடுத்த ஊரில் என்ன நடக்கிறதென்றே அறியாதவர்கள், அடுத்த மாநிலத்திற்குக் கூடப் பயணம் செய்யாத பண்புடையவர்கள். அவர்களுக்கு மூன்றாம் நாடுகளின் அடிப்படை வாழ்க்கை தரமும், சிக்கல்களும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அமெரிக்க/உலக மக்களின் கவனத்தை ஈர்த்த இந்தப்படம் போரின் கொடுமைகளை ஒரே நொடியில் உணர்த்தியது. அது நாள் வரையில் பொதுவுடமை கொள்கைகளை எதிர்த்துதான் வியட்நாம் போர் நடப்பதாக எண்ணிக்கொண்டிருந்த அமெரிக்க மக்கள் விழிப்புற்றனர்.

அதனைத் தொடர்ந்து போருக்கு எதிரான பல போராட்டங்கள் அமெரிக்க மண்ணில் நடக்கத் தொடங்கி விரைவில் அந்தப்போர் முடிவுக்கும் வந்தது.

twophotos_same_interpretation_1_420x236மக்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு கிட்டினால் அது பெரும் மாற்றங்களை விதைக்கும் என்பதற்கு மற்றுமொரு சமீபத்திய சாட்சி, பனிரெண்டு வயது பாலச்சந்திரனின் வெகுளியான பயந்த முகமும் அதனைத் தொடர்ந்த படுகொலையும். 2009 நடைபெற்ற போரில் கிட்டத்தட்ட நூறாயிரம் தமிழ் மக்கள் இறந்து போயினர், அதற்காக 26 மைல் கல் தொலைவில் உள்ள தமிழகத்துப் பொது மக்கள் பெரிய போராட்டம் எதையும் செய்யவில்லை. ஊடகங்கள் சிலவற்றை மூடி மறைத்து வந்தன.

ஆனால் நான்காண்டுகளுக்குப் பிறகு ஒரு 12 வயது பிள்ளையினைக் கொடூரமாகக் கொன்றதன் பின்புலம் தெரிய வந்தபின் நூறாயிரம் மக்கள் இறந்த போது கூட வராத சீற்றம் உடன் வெளிவந்தது.

சினிமா மக்களின் மனதில் நிறைந்திருப்பதன் காரணம் பெரிய அளவிலான விளம்பரங்களும் எங்கும் நிறைந்திருப்பதும் தான். பெரும்பாலான மக்கள் தங்களின் கவனத்துக்கு எட்டும் வரையில் ஒரு நிகழ்வைப் பற்றித் துளியேனும் கவலை கொள்ள மாட்டார்கள்.

21ஆம் நூற்றாண்டில், சனநாயகம் கடைபிடிக்கப்படும் நாட்டில், கற்றறிந்த பெருமக்கள் வாழும் நாட்டில், உலக இனத்தில் கூரிய அறிவுடைய இந்திய மக்கள் மிக அண்டை நாட்டில் நடந்தேறிய நூறாயிரம் கொலைகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தனர். பாலச்சந்திரனின் கொலையுண்ட படத்தைவிட அதற்குச் சற்றுமுன் எடுக்கப்பட்ட உயிருள்ள படம் பெரிய தாக்கத்தையும், சராசரி மக்களின் மனதைச் சிறிதளவேனும் மாற்றி இருக்கிறது.

நிக் உட் எடுத்த படம் வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது, பெயர் தெரியாத நபர் எடுத்த படம் நூறாயிரம் கொலைகள் புரிந்தவரை தண்டிக்கும் என்று நம்புவோமாக.

நூறாயிரம் தமிழ் மக்கள் கொலையுண்டு நான்காண்டுகள் நிறைவடையும் இந்த வாரத்தில் அவர்களின் நினைவாக ஓரிரு நிமிடங்கள் நினைவஞ்சலி இருப்போம்.

 

-மா.சிவானந்தம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad