பூரிக்க வைக்கும் மஞ்சள் பூசணியும் பச்சிலையும்
வட அமெரிக்கக் குளிர் மாதங்களில், பனிக் காலத்தில் எம்மை உற்சாகப்படுத்த உணவு வகை உதவி தரும். பனிக் காலத்தில் எமது உடலின் நோய் தடுப்புத் தன்மையை உந்து செய்ய மஞ்சள் (turmeric) திரவியமும், சற்று இதமான இனிப்புத் தன்மையான மஞ்சள், செம்மஞ்சள் நிறப் பூசணியும். சிறு கருநீல கேல் (kale), கீரை போன்ற இலை தழையும் இனிமையாகும்.
குளிர் காலத்தின் வெயில் இல்லாத் தன்மை நுண்கிருமிகள் ஆதிக்கம் அதிகரிக்க வாய்ப்புக்களை உருவாக்குகிறது.
பூசணி பற்றிய சிறு வரலாறு
பூசணிக்காயை உலகிற்கு முதன் முதல் தந்தது அமெரிக்கக் கண்டமே. பூர்வீக மக்கள் பண்டையக் காலத்திலிருந்து இதைத் இலையுதிர் காலத்தில் அறுவடை செய்து பனிக்காலத்துக்குச் சேகரித்துப் பயன்படுத்தினர். இதைப் பார்த்து சுவைத்த ஜரோப்பியர் தமது நாடுகளுக்கும் எடுத்துச் சென்றனர். இதிலிருந்து போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் இந்திய உபகண்டத்திற்கும் சில பூசணி வகைகளை அறிமுகப்படுத்தினர். பறங்கியர் கொண்டு வந்த மரக்கறியாகையால், தமிழில் பறங்கிக் காய் என்ற சொற்பிரயோகம் உருவாகியது.
சரி அடுத்து நாம் சமையல் முறையைப் பார்க்கலாம்
தேவையானவை:
½ கரண்டி மஞ்சள் பொடி
1 சிறிய பூசணி அல்லது பட்டர் நட் ஸ்குவோஷ் (Butternut Squash)
2-5 கேல் (kale) இலைக் கோவா, அல்லது ஒரு சிறு கைப்பிடி பசலைக்கீரை
5 சிறு வெங்காயங்கள்
1 பச்சை மிளகாய் (வேண்டுமானால்)
1 கிளை கறிவேப்பிலை (வேண்டுமானால்)
3 நகங்கள் / அலகுகள் உள்ளிப் பூண்டு
2 மிளகு
1 கறுவாப்பட்டை
¼ தேக்கரண்டி வெந்தயம்
½ தேக்கரண்டி சீரகம்
½ தேக்கரண்டி கடுகு
¼ கொத்தமல்லிப் பொடி
1 கோப்பை தேங்காய்ப் பால்
தேவையான அளவு உப்பு
செய்முறை
பூசணியை சுமார் ½ அங்குலச் சதுரங்களாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அடுத்து வெங்காயங்களையும் தோல் உரித்து மிகச் சிறிதாக நறுக்கி, மிளகாயையும் குறுக்காகப் பிளந்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து உள்ளி, மிளகைத் தட்டி, வெந்தயம், சீரகம், கறுவா, போட்டு அடுப்பில் ஒரு தட்டையான பாத்திரத்தில் மத்திம சூட்டு அடுப்பில் எற்றவும். அடுத்து சமையல் எண்ணையை விட்டு வெங்காயம், பூசணிக்காய் இட்டு குறைந்த வெப்பத்தில் வைத்துக் கிளறவும்.
பூசணிக்காய் சமைப்பதில் நாம் முக்கியமாக அவதானிக்க வேண்டியது, இலையுதிர் காலத்தில் அறுவடையான பூசணி இயற்கை இனிப்புத் தன்மையைக் கொண்டிருக்கும். இது வெப்பம் காட்ட சிறிதாக வதங்கி பூசணித் துண்டுகளின் மேற்பாகத்திற்கு வரும். இந்தத் துண்டுகள் மஞ்சள் பொடி., கருவாப்பட்டையிலிருந்து வரும் வாசனைத் திரவியத் தைலம் சேர சுவையும், கம கமப்பும் அதிகரிக்கும். உடனே உப்பு சேர்ப்பது இயற்கைச் சுவை வெளி வருதலை நிறுத்திவிடும்.
பூசணித் துண்டுகள் நிறம் பளபளத்தவுடன் மஞ்சள், மல்லிப்பொடியிட்டு, உப்புச் சேர்த்து, பக்குவமாகக் கிளறி, ஒரத்தில் வைத்திருந்த இலைகளை இட்டு 5-7 நிமிடங்களில், தேங்காய்ப் பாலை விட்டுக் கிளறி அடுப்பை அணைத்து விடலாம். தாமதித்து உப்பு சேர்த்தல் அறுவடைப் பூசணியை அழகாக சுவைத்திட உதவி செய்யும்.
பூசணிக்காய்க் கறியை, பதமான வெள்ளை, அல்லது நாட்டரிசி சோற்றுடன், அல்லது இட்லியுடன் சாப்பிடலாம். இந்த உணவு உடலுக்கு உறுதி தருவது மட்டுமல்லாமல் நம்மூர் ஊர் பாட்டி வைத்தியத்தின்படி எதிர்ப்பு அழற்சி/ வீக்கம் குறைதல் (anti-inflammatory) சுகத்தையும் தரும்.
- யோகி