உலகின் முதன்மொழி
உலகின் முதன்மொழி தமிழ் மொழியாக இருக்குமோ?
சமீபத்திய செய்தியில் 15,000 ஆண்டுகளாகச் சில சொற்கள் மாறவில்லை என்ற செய்தியைத் தொடர்பு படுத்திப் பார்க்கும் போது, மொழிக்குடும்பங்களின் வீச்சும் அவற்றின் படர்த்தியும் காண முடிந்தது. ஆசிய ஐரோப்பா மொழிக்குடும்பங்களைப் பற்றிய இந்தச் செய்தியில் புதைந்து கிடக்கும் பிற உண்மைகளையும் நாம் இங்கே பார்ப்போம்.
கீழ்க்கண்ட உலக வரைபடத்தைப் பாருங்கள், திராவிட மொழிக்குடும்பத்தின் ஆதி மொழி தமிழ் என்பது நாம் அறிந்தது, இதைத் தென் இந்தியா முழுவதும் பயன்படுத்தினார்கள் (நீல வண்ணத்தில் உள்ளது). இந்தியாவின் மற்ற இடங்கள் அனைத்திலும் இந்தியா – ஐரோப்பா மொழிக்குடும்பத்தில் உள்ள சமசுகிருத மொழியை ஒட்டிய மொழிகளைப் பயன்படுத்தினார்கள் என்பது விளங்குகிறது.
\
தமிழ் மொழி கல் தோன்றி மண் தோன்றிய காலத்திற்கு முன் தோன்றிய மொழி என்று முன்னோர்கள் சொன்னாலும், அறிவியல் பூர்வமாகவும் இதை நாம் அணுக வேண்டியுள்ளது.
அனைத்து மொழிகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ள சொற்கள் பலவற்றின் மூலம் தமிழ் என்பதைப் பற்றிய பல குறிப்புகளை நீங்கள் படித்திருப்பீர்கள், பனிப்பூக்கள் இதழிலும் இதனைப் பற்றிய கட்டுரைகள் வெளிவந்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் போவதற்கு முன்பு, கடந்த இரண்டாயிரம் ஆண்டு நிலவரத்தைப் பார்ப்போம். உலகச் செம்மொழிகளில் ஒன்றான தமிழ்மொழிக்குச் சங்க இலக்கியங்களுக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே இலக்கணம் வகுத்த தொல்காப்பிய இலக்கணத்தைத்தான் நாம் இன்றும் பயன்படுத்தி வருகிறோம்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் மொழி தமிழாக இருக்க வேண்டும் என்று மற்றுமொரு சமீபத்திய மொழியாராய்ச்சி கண்டுபிடிப்பு கூறுகிறது.
நியூயார்க் நகரில் உள்ள சிமித்சோனியன் அருங்காட்சியகம் உலக மக்கள்தொகை கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக எப்படி வளர்ந்து தற்போதைய 7 பில்லியன் இலக்கை அடைந்தது என்பதை ஒரு காணொளி வாயிலாக விளக்கியுள்ளனர்.
கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இருந்து 10 இலட்சத்திற்கும் மேலாக மக்கள் வாழ்ந்த பகுதிகளைப் புள்ளியாகக் குறித்து அது எப்படி வளர்ந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது என்று பிரமிப்பாக
இந்த 6 நிமிடக் காணொளி அமைத்துள்ளது. இதே செய்தி ஒரு பல்கலைக்கழக இணையத்திலும் உள்ளது.
இந்த ஆராய்ச்சி உண்மைகளை உற்று நோக்கும் பொழுது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியே உலகின் தலையாய மொழியாகவும் பரந்த அளவில் பேசப்பட்ட மொழியாகவும் இருந்திருக்கவேண்டும்.
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பான்மையான மக்கள் பேசிய மொழி தமிழ் மொழியாகத்தான் இருந்திருக்க வேண்டும். திராவிட மொழிகளான மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் 1500 ஆண்டுகள் முன்பு வரை தோன்றவில்லை.
கிட்டத்தட்ட கி.பி. 1000 ஆண்டு வரை உலக மக்கள்தொகை பெரும் கட்டுப்பாட்டில் தான் இருந்தது, அதுவரையில் இந்தியா மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தமிழ் மொழியே பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.
பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் ஒரு பகுதியில் மிகவும் அடர்த்தியாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தனர் என்றால் அது மிகவும் உயரிய பண்பாடாக இருந்திருக்க வேண்டும். 2000 ஆண்டுகளுக்கு முன்பே பத்து இலட்சத்திற்கும் மிகுந்த மக்கள் வாழ்ந்த பகுதி தென்னிந்திய கடற்கரையோரமும் ஈழமும் ஆகும். இவற்றின் பெரும்பகுதியைக் கடல்கொண்டது இருப்பினும் இந்தப்பகுதிகளில் தொடர்ந்து அடர்த்தியாக மக்கள் வாழ்கின்றனர்.
தற்போதைய மாமல்லபுரத்துக்கும் பூம்புகாருக்கும் இடைப்பட்ட கடல்பகுதியில் ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான ஆழத்தில் ஒரு பெரும் நகரம் இருப்பதற்கான சான்றுகள் உள்ளது. இதனைத் தொடர்ந்து கடலாய்வு செய்ய இந்தியத் தொல்பொருள் கழகம் முயற்சிகளையும் எடுப்பதில்லை அவற்றுக்கு அனுமதியும் தரமறுக்கிறது.
மனித இனம் ஆப்பிரிக்காவில் இருந்து உருவாகியது என்பது நாமறிந்தது, அதன் பின்னர்த் தென் தமிழகத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் மனிதயினம் குடியேறியது. மதுரையில் மாறாத மரபணுக்களைக் கொண்ட விருமாண்டி என்பவரின் குடும்பம் இருக்கிறது, இது ஏறத்தாழ 60,000 ஆண்டுகள் மக்கள் அதே இடத்தில் வாழ்ந்துவருவதை உறுதி செய்கிறது.
http://indiafirsthand.com/2010/07/22/history-of-india-the-first-indians/
மேற்கூறிய காரணிகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது, தமிழ் மொழிதான் உலகின் முதல் பண்பட்ட இலக்கணக் கூறுகளை உள்ளடக்கிய மொழியாக இருக்க வாய்ப்புள்ளது. நம் மொழி இலக்கணம் 2000 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே பிறழாமல் இருந்து வருகிறது.
-மா.சிவானந்தம்
Tags: featured