\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

யூ-ட்யூப் பிரபலங்கள்

சமூக வலைத்தளங்கள் நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ பலரது வாழ்வை மாற்றிப் போட்டுள்ளன. எல்லோரையும் போல் சராசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பலரை செலிப்பிரட்டிகளாக ஆக்கியுள்ளன. அவ்வாறு பிரபலமானவர்களைப் பற்றிய குறிப்புகளின் தொகுப்பே இது. குறிப்பாக, யூட்யூப் மூலம் தமிழில் பிரபலமானவர்களை இக்கட்டுரையில் காணலாம். சினிமா, அரசியல், சமையல், அறிவியல் எனப் பல துறைகளில் தங்கள் பதிவுகளை யூ-ட்யூப்பில் அளித்துப் பிரபலமானவர்கள் இவர்கள்.

ப்ளூ சட்டை மாறன்

கிட்டத்தட்ட 7 லட்சம் பேர் இவரது யூ-ட்யூப் சானலான ‘தமிழ் டாக்கீஸ்’க்கு சந்தாதாரர்கள். 2012 இல் இருந்து இவர் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகிறார். திரையுலக வினியோகத்தில் அனுபவம் கொண்டவர். ரொம்ப வழ வழ கொழ கொழ என விமர்சனம் இருக்காது. கட் ரைட்டாக மூஞ்சியில் அடித்தவாறு சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார். புதுப் பட வெளியீட்டின் போது திரையரங்கில் ரசிகர்கள் காத்திருந்தால், நெட்டிசன்ஸ்கள் இவரது சானல் முன் காத்திருப்பார்கள். பெரிய படங்களைப் பற்றிய இவரது விமர்சனங்கள், 20 லட்சங்களில் இருந்து 30 லட்சங்கள் வரை பார்வைகள் பெறும். முக்கிய இயக்குனர்களே இவரது விமர்சனத்தைப் பார்த்துப் பதில் பதிவு செய்திருக்கிறார்கள். ‘இருட்டறையில் முரட்டுக் குத்து’ படத்தின் ட்ரெய்லர், இவரது பின்னணி குரலில் வெளிவந்தது. யூ-ட்யூப் வீடியோ பதிவர் சங்கம், இலவச மரக்கன்று நடுவது என்று வேறு சில முகங்களும் இவருக்கு உண்டு.

https://www.youtube.com/user/tamiltalkiesnet

LMES பிரேமானந்த்

2006இல் பொறியில் படித்து அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த பிரேமானந்த், Let’s Make Engineering Simple என்ற யூ-ட்யூப் சானலை 2009இல் தொடங்கினார். அறிவியல் அம்சங்களைச் சுவைப்பட, குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் பெரியோருக்கும் புரியும்படி கூறுவது இவர் சிறப்பு. தற்போது, 5 லட்சம் சந்தாதாரர்கள் இவர் சானலுக்கு உள்ளனர். ஸ்டெர்லைட், காவிரி, ப்ளாஸ்டிக் அரிசி போன்றவை குறித்த இவரது வீடியோக்கள், சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. குறிப்பாக, ஸ்டெர்லைட் வீடியோ 9 லட்சம் பார்வைகளைப் பெற்று, பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. யூ-ட்யூப்பைத் தாண்டி மாணவர்களுக்கான அறிவியல் சார்ந்த பட்டறைகளைத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறார்.

https://www.youtube.com/user/premanand20081

“வில்லேஜ் புட் ஃபாக்டரி” ஆறுமுகம்

கிராமத்துப் பெரியவரான ஆறுமுகத்தின் மகன் கோபிநாத், தந்தை கிராமத்தில் சமையல் செய்யும் வீடியோக்களை யூ-ட்யூப்பில் வெளியிட, இன்று ஆறுமுகம் சமூக வலைத்தளப் பிரபல்யம் கொண்டவராகி விட்டார். சமையல் என்றால் ஒரு குடும்பத்திற்கான சமையல் அல்ல. ஒரு ஊருக்கே சமைப்பது தான் இவரது சிறப்பம்சம். கிராமத்துப் பின்னணியில் இவரது சமைப்பது அதே ஒலியுடன் படம் பிடிக்கப்பட்டிருக்கும். ஸ்பெஷல் எடிட்டிங் எதுவும் இருக்காது. கிராமத்து சமையல் மட்டுமில்லாமல் KFC சிக்கன் போன்றவையும் சமைப்பார். சமைத்தவற்றைத் தேவையானவர்களுக்குக் கொண்டு சேர்ப்பதுடன் இவரது வீடியோக்கள் நிறைவு பெறுவதைக் காணும் போது, பார்ப்போருக்கும் ஒரு நிறைவு ஏற்படும். இந்தச் சானல் ஆரம்பிக்கப்பட்டது 2015 இல் என்றாலும், இவரது சந்தாதாரர்கள் எண்ணிக்கை ஏற்கனவே 21 லட்சத்தைத் தாண்டிவிட்டது. அதற்குத் தமிழகத்தைத் தாண்டி உலகளவில் இவருக்கு ரசிகர்கள் இருப்பது ஒரு காரணம். இவர் KFC சிக்கன் செய்த வீடியோ 5 கோடி பார்வைகளைப் பெற்றது.

https://www.youtube.com/channel/UC-j7LP4at37y3uNTdWLq-vQ

“புட் சட்னி” ராஜ்மோகன்

சிந்திக்கத் தூண்டும் அரசியல் கருத்துகளுக்குச் சொந்தக்காரர், ராஜ்மோகன் ஆறுமுகம். நகைச்சுவைத் தொடர்களுக்குப் பிரபலமான “புட் சட்னி” சானலில் ராஜ்மோகனின் வீடியோக்களுக்கும் கணிசமான ரசிகர்கள் உண்டு. மீடியா பின்னணியில் இருந்து வந்தாலும், அவர் பிரபலமானது யூ-ட்யூப் வீடியோக்களாலும், பிற சமூக வலைத்தளங்களாலும். ஜல்லிக்கட்டு, அனிதா மரணம் போன்ற நிகழ்வுகளின் போது, அவர் எழுப்பிய கேள்விகள் தமிழகத்தின் குரலாக ஒலித்தது.

https://www.youtube.com/channel/UCn2wC753SXLd2BJYLss_jlA

ஸ்மைல் சேட்டை விக்னேஷ்

ரேடியோவில் தொகுப்பாளராக இருந்த விக்னேஷ் “ஸ்மைல் சேட்டை” என்ற நகைச்சுவை யூ-ட்யூப் சானலை 2015 ஆம் ஆண்டுத் தொடங்கினார். அதில் அடைந்த பிரபலம் மூலம் டிவி, சினிமா என்று மற்ற இடங்களிலும் கால் பதித்தார். தற்சமயம் ப்ளாக் ஷீப் சானலில் சில நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிடித்த வகையில் நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் விக்னேஷ். சின்னம்மாவைக் கலாய்த்து வெளிவந்த வீடியோ 17 லட்சம் பார்வைகளைப் பெற்றது.

https://www.youtube.com/channel/UCZCaRGGPtHFtp7X3FxtNKhA

இன்னும் பல யூ-ட்யூப் பிரபலங்கள் இருந்தாலும், இப்பகுதியில் துறைக்கு ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி யூ-ட்யூப் என்பது படைப்பாளிகளுக்குப் பொருள் ஈட்டும் களமாகத் தற்போது உள்ளது. தொடர்ந்து பார்வையாளர்களுக்குச் சுவையான படைப்புகள் வழங்கும் திறன் இருந்தால், நீங்களும் யூ-ட்யூபில் பிரபலமடையலாம். செல்வம் ஈட்டலாம். இங்குத் திறமைக்குத் தடையேதும் இல்லை.

  • சரவணகுமரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad