\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

அமெரிக்க இடைத்தேர்தல் 2018 – முடிவுகள்

மிகுந்த எதிர்பார்ப்பு மற்றும் பரபரப்புடன் நடைபெற்ற இடைத்தேர்தலின் பெரும்பான்மையான
முடிவுகள், தேர்தல் நடந்த இரவே வெளிவந்தன.

கட்சிக்குள் சில மாறுபட்ட கருத்துகள் இருந்த போதிலும் பிரதிநிதிகளவை (House of Representatives) மற்றும் அதிகாரச் சபை (Senate) என்ற இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்த குடியரசுக் கட்சி அதை நிலைநிறுத்திக் கொள்ள மிகக் கடுமையாக முனைந்தது.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமெனில் இந்த இடைத்தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டுமென்ற கட்டாயத்தில் ஜனநாயகக் கட்சி போட்டியிட்டது.

அதிகார அவைத் தேர்தல் முடிவுகள் (Senate results)

செப்டம்பர் மாதக் கணக்கின் படி மொத்தமுள்ள 100 உறுப்பினர்களைக்  கொண்ட அதிகார அவையில் குடியரசுக் கட்சி 51 உறுப்பினர்களையும் ஜனநாயகக் கட்சி 49 உறுப்பினர்களையும்
(2 தனிக்கட்சியினர் உட்பட) வைத்திருந்தன. இதில் 35 இடங்களுக்கான போட்டிகள் இந்த இடைத்தேர்தலில் நடைபெற்றன. இறப்பு, பதவி விலகல், பனிக்காலம் முடிதல் போன்ற
காரணங்களால்  ஜனநாயகக் கட்சியினரின்   26 இடங்களும், குடியரசுக் கட்சியினரின் 9 இடங்களும் போட்டிக்கு உள்ளாயின.

தங்களது 26 இடங்களைத் தக்க வைத்துக் கொள்வதோடு, குடியரசுக் கட்சியினரின் 2 இடங்களையும் சேர்த்து வென்று 51 உறுப்பினர்களைப் பெற்றால் அதிகார அவையில் பெரும்பான்மை பெற்று விடலாம் என்று ஜனநாயகக் கட்சி முயன்றது. ஆனால் இந்தத் தேர்தலில் ஏற்கனவே இருந்த ஒரு சில இடங்களையும் அவர்கள் இழந்துள்ளனர். அதனால் ஜனநாயகக் கட்சியினரின் அதிகார அவைக் கனவு தகர்ந்துவிட்டது.

இன்னும் 3 இடங்களுக்கான முடிவுகள் இழுபறியில் உள்ள நிலையில் தற்போதைய நிலவரப்படி குடியரசுக் கட்சியினர் 51 இடங்களையும், ஜனநாயகக் கட்சியினர் 44 இடங்களையும், தனிக் கட்சியினர் 2 இடங்களையும் பெற்றுள்ளனர்.

ஒருவேளை மீதமுள்ள இழுபறி இடங்கள் மூன்றையும் ஜனநாயகக் கட்சியினர் பெற்றாலும் கூட
அவர்களால் 49 உறுப்பினர்களை (தனிக்கட்சியினர் உட்பட) காட்ட முடியுமே தவிர பெரும்பான்மை கிடைக்காது. அதிகார அவை குடியரசுக் கட்சியினரின் பிடியிலேயே இருக்கும்.

பிரதிநிதிகளவை தேர்தல் முடிவுகள்

இரண்டாண்டு பதவிக்காலம் கொண்ட 435 பிரதிநிதிகளுக்கான  தேர்தலும்
சென்ற ஆறாம் தேதி நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்பு குடியரசுக் கட்சி 240 பிரதிநிதிகளையும், ஜனநாயகக் கட்சி 195 பிரதிநிதிகளையும் பெற்றிருந்தனர். தேர்தல் முடிவுகள் வரத் துவங்கியதிலிருந்து ஜனநாயகக் கட்சியினர் முன்னிலை வகித்து வந்தனர். இறுதியில் ஜனநாயகக் கட்சியின்

228 பிரதிநிதிகள் வென்று பிரிதிநிதிகளவையைக் கைபற்றியுள்ளனர். குடியரசுக் கட்சியினர் 199 இடங்களிலும் தனிக்கட்சியினர் 8 இடங்களிலும் வென்றுள்ளனர்.

தாங்கள் ஏற்கனவே வைத்திருந்த 3 தொகுதிகளை (2 மினசோட்டா தொகுதிகள் உட்பட) ஜனநாயகக் கட்சியினர் இழந்தாலும் குடியரசுக் கட்சியினரின் 36 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவற்றில் சில தொகுதிகள் 2016 அதிபர் தேர்தலின் போது தற்போதைய அதிபர் டானல்ட் ட்ரம்ப்புக்கு பெரும்பான்மை ஆதரவை தெரிவித்த தொகுதிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் புறநகர், கிராமப்புற பகுதிகளில் இன்னமும் அதிபர் ட்ரம்ப் அலை மேலோங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

ஆளுநர் தேர்தல் முடிவுகள்

தேர்தலுக்கு முன்னர் 33 மாநிலங்களில் குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர் ஆளுநராகவும், 16 மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்தவர் ஆளுநராகவும் இருந்தனர்.

36 மாநிலங்களுக்கான ஆளுநர் தேர்தல் நடைபெற்றதில் 19 மாநிலங்களில்
குடியரசுக் கட்சியும் 16 மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியும் வெற்றிபெற்றுள்ளன. ஜார்ஜியா மாநிலத்துக்கான ஆளுநர் தேர்தல் முடிவுகள் இன்னும் இழுபறி நிலையில் உள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய நிலவரப்படி 26 மாநிலங்களில் குடியரசுக் கட்சியும் 23 மாநிலங்களில்
ஜனநாயகக் கட்சியும் ஆளுநர் பதவிகளைப் பெற்றுள்ளன.

காங்கிரஸின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றிருந்தபோதும் கூட அதிபர் பரிந்துரைத்த சில திட்டங்களை அமலுக்குக் கொண்டுவருவதில் சிக்கல்கள் இருந்தன. இப்போது பிரதிநிதிகளவையில் பெரும்பான்மை இழந்து விட்ட நிலையில், அதிபரின்
முடிவுகளுக்கு அவ்வளவு எளிதில் அங்கீகாரம் கிடைத்துவிடாது.

அடுத்த இரண்டாண்டுகளில் இடம்பெறும் அரசியல் நிகழ்வுகள் 2020ல் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை எதிர்நோக்கியே இருக்கக்கூடும்.  

அமெரிக்க மக்கள் மட்டுமல்லாது உலக நாடுகள் பலவும்  அமெரிக்க அரசியல் அரங்கைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.

   ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad