சர்க்கார்
உண்மையில் ஜெயிக்க இதுதான் சக்சஸ் பார்முலா என்று ஒன்று இல்லாவிட்டாலும், அப்படி ஒன்று இருப்பதாக எண்ணிக் கொண்டு தமிழ்த் திரையுலகினர் ஒரு வரைமுறையில் படம் எடுப்பார்கள். அஞ்சு பாட்டு, நாலு ஃபைட்டு, இரண்டு செண்டிமெண்ட் சீன், நடுநடுவே காமெடி என்று போகும் அவர்களது ஃபார்முலா. தற்போது அதில் சேர்ந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தும் வசனங்கள் மற்றும் காட்சிகள். ஒரு பிரிவினரைக் காயப்படுத்துவது, ஒரு கட்சியினைத் தாக்குவது, கதைத் திருட்டு வழக்கு என்ற சர்ச்சைகளும் தற்போது படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. படத்தின் டிஸ்கஷனின் போது இதையும் உட்கார்ந்து பேசுவார்கள் என்று நம்பத் தோன்றுகிறது.
சர்க்கார் படத்தின் வெற்றிக்கு இவை அனைத்தும் உதவியிருக்கிறன. இது தவிர, படத்தில் எதுவும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. இதற்கு மேல், மாஸ் காட்டும் விஜய், சமீபத்திய பிரச்சினைகளை ஆங்காங்கே காட்சிப்படுத்திப் பார்ப்போரை எளிதில் உணர்ச்சி வசப்படுத்திருக்கும் முருகதாஸின் இயக்கம், நிஜ அரசியல்வாதிகளை நினைவுபடுத்தும் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி போன்றோரின் கதாபாத்திரங்கள் ஆகியவையும் படத்திற்கு உதவியிருக்கிறன.
தினசரி தமிழ்ச் செய்திகளைக் கடந்து வந்திருந்தால், பாக்யராஜ் உபயத்தில் இப்படத்தின் கதை, திரைக்கதை போன்றவற்றைப் படம் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அறிந்திருக்கலாம். வருண் என்பவர் எழுதிய செங்கோல் என்ற கதையை உருவித் தான் சர்க்கார் படமெடுத்திருக்கிறார் முருகதாஸ் என்பது பெரும் சர்ச்சையாகி முடிவில் அவுட்-ஆஃப்-தி-கோர்ட் செட்டில்மெண்ட் நடந்து, படத்தின் தொடக்கத்தில் ஒரு மாதிரியான ஒரு கிரெடிட்டை வருணுக்கு முருகதாஸ் கொடுத்திருக்கிறார். படத்தின் உள்ளே மக்கள் பணத்தைத் திருடி மக்களுக்கே இலவசப் பொருட்களாகக் கொடுக்கும் அரசியல்வாதிகளைச் சாடி இருக்கிறார். சூப்பர்ல!!
கூகிள் சுந்தர் பிச்சையைக் கொண்டு விஜயின் சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார் முருகதாஸ். அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு ஓட்டுப் போட வரும் விஜயின் ஓட்டை, யாரோ கள்ள ஓட்டாகப் போட்டு விடுகிறார்கள். ஒருவர் தன் ஓட்டை கள்ள ஓட்டாக இழந்தால், அவருக்கு என்ன உரிமைகள் உள்ளன என்று புதிதாக 49-P பற்றி நமக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள். ஒருவர் தன் ஓட்டை இழந்தால், தகுந்த அடையாளத்தைக் காட்டி, திரும்பவும் ஓட்டுச்சீட்டில் வாக்களிக்கலாம் என்று அந்தச் சட்டம் சொல்கிறது. அவ்ளோ தான் சொல்கிறது. இயக்குனரும் அவரது பட்டாளமும் அதைச் சீவி சிங்காரித்து, சர்க்காரையே பிடிக்கும் அளவுக்கு சீன்கள் அமைத்துப் படமெடுத்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி படமெடுக்கும் போது, ரசிகர்களைப் படத்தோடு ஒன்றவிட்டு, எந்தக் கேள்வியும் அப்போதைக்கு எழாதவாறு காட்சிகளை அமைப்பது ஒரு கலை (உ.தா. முதல்வன்). இதில் நன்றாகக் கதைவிடுகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. ஆங்காங்கே நிகழ்காலத்தின் நிழலாகக் காட்சிகளையும் கதாபாத்திரங்களையும் அமைத்திருப்பது மட்டும் தான் இப்படத்தின் சுவாரஸ்யமாக இருக்கிறது. தவிர, சுந்தர் பிச்சை போன்ற ஒரு கார்ப்பரேட் திறமையாளர், தன்னுடைய தந்திரங்கள் மூலம் தமிழகத்தில் நடக்கும் கேடுகெட்ட ஆட்சியை, தமிழகத்தில் மக்களுக்காக உழைக்கும் சிறந்த தன்னார்வலர்களின் கையில் கொடுத்துவிட்டுச் செல்வது போன்ற ஒரு கனவைத் திரையில் பார்க்க நன்றாகவே இருக்கிறது.
விஜய் தனது எல்லைக்குள் நடிக்கிறார். ஆட்சியாளர்களைச் சீண்டும் கதையில் நடிக்கும் தைரியமிருக்கிறது. வருங்கால அரசியலுக்கு அடித்தளமிடும் படங்களாக நடிக்கிறார். வயது ஏறினாலும் உடம்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதால், இளமையாக இருக்கிறார். நரைக்கும் முடிக்கு டை அடித்துவிட்டால், காலேஜ் ஸ்டூடண்ட் கதாபாத்திரத்தில் நடித்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது. நடனம் ஆட வாய்ப்புக் குறைவே. ஆக்ஷனில் ஸ்டைல் காட்டியிருக்கிறார். விஜய் ரசிகர்களுக்கு இப்படத்தில் செம தீனி.
கீர்த்தி சுரேஷ் படத்தில் ஏன் வருகிறார், விஜய்யுடன் ஏன் எல்லா இடங்களிலும் சுற்றுகிறார் என்பது இப்படத்தின் மிகப் பெரிய, விடையில்லாத சஸ்பென்ஸ். வரலட்சுமிக்குப் படத்தில் முக்கிய கதாபாத்திரம். அவருடைய குரல் இம்மாதிரிக் கதாபாத்திரங்களில் அவருக்கு உதவுகிறது. திமுகவின் பழ. கருப்பையாவும், ராதாரவியும் இது திமுகவுக்கும் ஆப்படிக்கும் படம் என்று தெரிந்தோ, தெரியாமலோ நன்றாக நடித்திருக்கிறார்கள். தமிழ்ப் படங்களின் லக்கி ஸ்டாராகிவிட்ட யோகிபாபு, இதிலும் வருகிறார். யோசித்துப் பார்த்தால் இவர்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரம். ஏனென்றால், இவர் தான் விஜயின் ஓட்டைப் போட்டவர். ஆனால், கதையில் இவர் காமெடியனாகிவிட்டார்.
பெரிதாகப் புகழும் அளவுக்கு ரஹ்மான் இசை இப்படத்தில் இல்லை என்பது தான் உண்மை. அடுத்த படத்தில் ரஹ்மான் வேண்டாம் என்று விஜய் ரசிகர்கள் மன்றாடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளவும். ராம் லக்ஷமண் இரட்டையர்களின் சண்டைக்காட்சிகள் செம. ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை போன்றவை சேர்ந்து, சண்டைக்காட்சிகளைப் பார்க்க அட்டகாசமாக இருக்கிறது. எழுத்தாளர் ஜெயமோகன் முருகதாஸுடன் இணைந்து வசனங்களை எழுதியிருக்கிறார். முன்பே சொன்னதுபோல், படத்திற்குத் தேவைப்பட்ட சச்சரவுகளை அவை எழுப்பியுள்ளன.
இப்படத்திற்கு ஆளும் கட்சியினர் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்குப் பதிலடியாக, விஜய் ரசிகர்கள் டிவி, மிக்சியைப் போட்டுடைத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வீடியோக்கள், படத்தில் இல்லாத நகைச்சுவையை மக்களுக்கு வெளித்தளத்தில் அளித்தன. இலவசப் பொருட்கள் தேவையா, இல்லையா என்ற விவாதத்தையும் சில நாட்களுக்கு ஏற்படுத்தியது. இது மசாலாப் படம் என்ற அளவில் பார்த்துவிட்டு நகர வேண்டியது தான். ரொம்பவும் யோசித்து விவாதிக்கும் அளவுக்குப் பொருட்படுத்த வேண்டியதில்லை. படமெடுத்த சன் பிக்சர்ஸ், முருகதாஸ், விஜய் போன்றவர்களுக்கு இருநூறு கோடிகளை அள்ளத் தெரிந்த வழி இது. அடுத்து முன்னூறு கோடிக்கு என்ன வழி என்று யோசித்துக்கொண்டிருப்பார்கள். நாமும் படத்தைப் படமாகப் பார்த்துவிட்டுக் கடந்து செல்வோம்.
- சரவணகுமரன்.