அழகிய ஐரோப்பா – 7
(அழகிய ஐரோப்பா – 6/பயணங்கள் முடிவதில்லை)
அழகோ அழகு
மியூசியத்தை விட்டு வெளியே வந்ததும் பிள்ளைகளுக்கு பழரசம் வாங்கிக் கொடுத்துவிட்டு நாங்கள் டீ குடித்தோம். ஆங்கிலேயர்களின் டீ நல்ல சுவையுடன் இருந்தது.
சிறு நடைப்பயணத்துக்குப் பின்னர் ரெயில் ஸ்டேஷனை வந்தடைந்தோம். இப்போது கூட்டம் வெகுவாகக் குறைந்திருந்தது.
இரண்டு நிமிட ரெயில் பயணத்துக்குப் பின் இறங்கி வலப்புற வாசல் வழியாக வெளியேறினோம்.
கிட்டத்தட்ட மரங்கள் நிறைந்த சோலை போலவும் காடு போலவும் உள்ள ஒரு இடத்தில் நடை பாதை இருந்தது.
மற்றவர்களைப் பின்தொடர்ந்து நாமும் நடந்தோம். கிட்டத்தட்ட இருநூறு மீட்டர் தூரம் போனதும் பிரமிக்க வைக்கும் அழகுடனும் மிடுக்குடனும் எம்முன்னே தோன்றியது பக்கிங்காம் அரண்மனை.
உலகம் முழுவதையும் தன் கைப் பிடிக்குள் வைத்திருந்த பெரும் சாம்ராச்சியம் என் கண் முன்னே விரிந்து கிடந்தது. உலகின் வயதான ராணி வாழும் அரண்மனை முன் நிற்கிறோம் என்ற பெருமை எனக்குள்…
என்னதான் மாளிகை முன் நின்றாலும் அந்த மாளிகையின் மூடிய கம்பி கதவு வழியாகத்தான் அந்த மாளிகையின் வெளித்தோற்றத்தைக் காண முடியும். உள்ளே செல்ல முடியாது.
வெளியே நின்ற மக்கள் தங்கள் ஃபோன்களிலும் கேமராவிலும் படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். நாங்களும் விரும்பிய கோணங்களில் நின்று படங்கள் எடுத்துக் கொண்டோம்.
மாளிகையின் எதிரே நறுமணம் வீசும் வண்ண மலர்த் தோட்டமும் அழகிய நீரூற்றும் பார்ப்பதற்கு மிகவும் அம்சமாக அமைந்துள்ளன… வண்ண மலர்களின் மகரந்த வாசம் எங்கும் நிறைந்து எங்கள் இதயத்திலும் அப்பிக்கொண்டது.
மாளிகையின் இன்னொரு புறம் விக்டோரியா ராணியின் ஒரு நினைவாலயம் உள்ளது. அதில் விக்டோரியா ராணியின் குணாதிசயங்களைப் பிரதிபலிக்கும் வெற்றி தேவதையின் பொன்நிறத்திலான சிலை ஒன்று உயரத்தில் வைக்கப்பட்டு உள்ளது.
அதன் கீழேயே மஹாராணி விக்டோரியா அரியாசனத்தில் அமர்ந்து இருக்கும் ஒரு வெண்ணிறச் சிலை.
இந்த நினைவாலயத்தின் நான்கு புறங்களிலும் வெண்கலத்தினால் ஆன சிங்கத்தின் மேல் அமர்ந்திருக்கும் நான்கு ரோமானிய வீரர்களின் சிலைகள்.
பக்கிங்காம் அரண்மனை ராணியின் அதிகாரபூர்வ மாளிகையாக இருந்தாலும் இந்த மாளிகையில் ராணி அதிகம் வசிப்பதில்லை. பக்கிங்காம் அரண்மனையில் ராணி இருந்தால் அந்த மாளிகையின் மேற்கூரையில் உள்ள கொடிக்கம்பத்தில் கொடி பறக்கும். இன்றும் கொடி பறந்தது…
-தியா-