அழகிய ஐரோப்பா – 9
(அழகிய ஐரோப்பா – 6/சிங்கார நதி)
திருவிழா
லண்டனில் காலை ஏழு மணிக்கே வெயில் போட்டு வாங்கத் தொடங்கியிருந்தது. இரவு முழுவதும் வீசிய குளிர் காற்று சற்றுத் தணிந்து வெளியில் ஒருவகையான உஷ்ணம் தெரிந்தது
லண்டனில் இருந்து ஏனைய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவென ஒன்பது சீட் உள்ள வேன் ஒன்றை ஒரு வார வாடகைக்கு எடுத்திருந்தோம். லண்டனில் இருக்கப் போகும் கடைசி நாளான அந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையைச் சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும், லண்டனில் மிகவும் பிரசித்தமான ஈலிங் அம்மன் கோயில் தேர் திருவிழாவைக் காண புறப்பட்டோம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்த போது பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பிள்ளையார் கோயில் தேர் திருவிழாவுக்குச் சென்றிருந்தேன். இன்றுவரை அவர்களால் அதனை மறக்க முடியவில்லை.
ஈலிங் அம்மன் கோயிலை நெருங்க நெருங்க ஊர் ஞாபகம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. வீதியெங்கும் லண்டன் போலீசார் காவலுக்கு நின்று போக்குவரத்தைச் சீர் செய்துக்கொண்டிருந்தனர்.
எங்கள் ஊர் போலவே இங்கும் ஏகப்பட்ட கடைகள், கூட்டம் என எல்லாம் தாண்டி கோயிலின் முகப்பை அடைவதற்குள் பெரும் பாடாகி விட்டிருந்தது.
இதற்கிடையில் எனது சொந்த ஊரைச் சேர்ந்த நண்பன் ஒருவரை சந்திப்பதற்காகக் கோயிலுக்கு வரச் சொல்லியிருந்தேன். அந்த நேரம் பார்த்து சரியாக அவன் ஃபோன் செய்தான்
“எங்கேடா இருக்கிறாய்…”
என்று கேட்ட பின் சரியாக நான் நிற்கும் தெருவின் அடையாளம் சொன்னேன்
“பாலம் தாண்டி வந்துட்டேன் இன்னும் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்கோ…” எனச் சொல்லி விட்டு ஃபோனைத் துண்டித்தான்.
இதமான காற்று வீச பெண்களும் ஆண்களும் இளைஞர்களும் முதியவர்களும் குழந்தைகளும் என எல்லோரும் ஒன்று கூடி கோயிலை நோக்கி போய்க்கொண்டிருந்தனர்.
வேனை பார்க்கிங்கில் விட்டு வெளியே வரவும், அவன் வரவும் சரியாக இருந்தது.
அவன் சிறு வயதில் இருந்து மிகவும் மாறிப் போயிருந்தான். லண்டன் சூழல் அவனைச் சரியாக மாற்றியிருந்தது. அது சரி அவன் இப்போது இரண்டு பிள்ளைகளின் தந்தையல்லவா.
ஊர் கதை உறவு பழைய கதைகள் பேசிய பின் அவன் விடைபெற்று சென்றான். நாங்கள் கோயிலை நோக்கி விரைந்தோம். கோயிலில் தேர் இழுக்கத் தொடக்கி விட்டார்கள் என்பதை தவில் மற்றும் நாதஸ்வர சத்தம் உணர்த்தியது.
தேரை, பக்கத்தில் இருந்து பார்ப்பதை விட தூரத்தில் இருந்து ரசிப்பது தனி அழகு. கடைகள் தாண்டி ஒரு முடக்கு திரும்பிய போது தேரின் கலசம் தெரிந்தது. பக்தர்களின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில் தேர் அசைந்தாடி நகர்ந்தது.
தேருக்கு முன்னாலே கற்பூர சட்டி எடுப்பவர்களுக்கு காவடி எடுப்பவர்களுக்கு என நூற்றுக் கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்தில் இருந்தனர்.
தேரின் பின்னாலே தேரடி அழிப்பவர்கள், அங்கப் பிரதட்டை செய்பவர்கள் என ஆயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ நகர்ந்து கொண்டிருந்தது அந்த அழகிய ரதம்.
தேரை வணங்கி விட்டு விபூதியை எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டோம். தேர் கிழக்குத் தெருவுக்கு வந்த போது இன்னும் பக்தர் கூட்டம் அதிகமாகியிருந்தது.
ஊர் போலவே பால்காவடி எடுப்பது, அலகு குத்துவது, அங்கப் பிரதட்டை செய்வது என எல்லா விதமான நேர்த்திக் கடன்களையும் செய்வதைப் பார்க்க வியப்பாக இருந்தது.
நீண்ட நேரமாக கால் கடுக்க நிற்க முடியவில்லை. நானும் என் மகனும் தனியாக வந்து ஒரு கடையருகில் இருந்தோம்.
மதிய வெயில் தரையைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. தேர் முட்டிக்கு வர இன்னும் இரண்டு மணி நேரமாவது ஆகும் என அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்.
இதற்கிடையில் என் சின்ன மாமனார் தனக்கு தெரிந்தவர்களின் கடை ஒன்றுக்கு உதவிக்குச் சென்றுவிட, நாங்கள் மூன்று பிரிவாகப் பிரிந்து விட்டோம்.
சற்று நேரம் கழித்து அம்மா வேணும் என்று அடம் பிடித்தான் என் மகன்.
“இந்தா ஃபோன்… நீயே எடுத்து கேள்… “ என்றபடி ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினேன்.
“அம்மா வாங்கோ போகலாம்… “ என்றான் மகன்
சத்தம் அதிகமாக இருந்ததால் அவனால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஃபோனை வாங்கிய நான்
“ என்னாச்சு ஏன் இன்னும் வரலை… “ என்றேன்
“ஒரே சனம்… வெளியேற இடம் இல்லை… “
“ஓ…அன்னதானம் தொடங்கி விட்டது, வேளைக்குச் சாப்பிட்டுட்டு வெளிக்கிடலாம்” என்றேன்.
“எப்பிடி வெளியிலை வாறது என்று தெரியலை… கொஞ்சம் பொறுங்கோ… “ என்றபடி ஃபோனைக் கட் பண்ணினாள்.
பொறுமை இழந்துபோய் மகன் கத்தத் தொடங்கினான்… அதற்கிடையில் அருகில் உள்ள கடையில் சென்று நானும் அவனும் யூஸ் குடித்தோம். .
சரியாக ஒரு மணியளவில் சித்தப்பா வந்து எங்களுடன் சேர்ந்தார்.
“என்ன இன்னும் ரெடியாகலையோ? நேரம் ஒரு மணி ஆச்சுது… பின்னேரம் ஃபெரிக்கு போக வேணும்…” என்கிறார்.
“ அவையள் கூட்டத்துக்கு நடுவில சிக்கிட்டினம்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்கோ வந்திடுவினம்” என்றேன்.
பொறுமை இழந்தவராக, தேர் வரும் திசையை நோக்கி நடக்கத் தொடங்கினார். அவர் போய் ஓரிரு நிமிடங்களில் என் மனைவியும் மற்றயவர்களும் வந்து சேர்ந்தனர். இப்போது சித்தப்பாவைத் தேட வேண்டிய கட்டாயம்.
மூன்று நான்கு தடவைகள் ஃபோன் அடித்தாகி விட்டது ஆனால் அவர் எடுப்பதாக இல்லை. பத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார்.
“இனி அன்னதானம் சாப்பிட நேரம் காணாது. முதல்ல வீட்டைப் போவோம்” என்றபடி வேன் நிற்குமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அவர் சொல்வதை ஆமோதித்தவர்களாக நாங்களும் வேனை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
ஒன்றரை மணி நேர டிரைவிங் என வீடு வந்து சேர்ந்த போது மணி மூன்றரையைத் தொட்டிருந்தது.
ஆறு மணிக்கு முன்னதாக டோவர் போக வேண்டியிருந்ததால் அவசர அவசரமாகத் தக்காளி சாதம் செய்து சாப்பிட்டோம்.
-தியா-