\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

துணுக்குத் தொகுப்பு-2

புலன் புறத்தெரிவு (Extra Sensory Perception)

பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகளைத் தாண்டி மன உணர்வு எனும் ஆறாம் புலன் மனிதனை மற்ற உயிரினங்களிலிலிருந்து வித்தியாசப்படுத்துகிறது. மனித மனங்களில் இயற்கையாக நடைபெறும் இந்தத் தொடர் நிகழ்ச்சி, சிந்தித்து முடிவெடுத்து செயல்படும் திறனை அளிக்கிறது. இவ்வகை சிந்தனைகள் பெரும்பாலும்  அறிவு (கற்றல், கேட்டல் போன்றவை மூலம் பெறுவது) அல்லது அனுபவ அடிப்படையில் அமைகிறது.

சில சமயங்களில் அறிவு, அனுபவம் இவற்றைக் கடந்த உள்ளுணர்வு ஒன்று செயல்படுகிறது. உதாரணத்துக்கு மேகம் சூழ்ந்து இருட்டிக்கொண்டு வரும் நேரத்தில் குடை எடுத்துச் செல்வது அறிவும் அனுபவமும் தந்த பாடம்.  ஆனால் பலத்த மழை பெய்து வழியிலிருக்கும் பாலம் உடைந்துவிடும் எனத் தோன்றுவதும் அது அப்படியே நடந்துவிடுவதும் ‘கூடுதல் புலனறிவு’ அல்லது ‘புலன் புறத்தெரிவு’ எனப்படுகிறது. வருங்காலத்தில் நடக்கவுள்ள சம்பவத்தை  முன்னரே அறியும் சக்தியை ஆங்கிலத்தில் ஈ.எஸ்.பி (ExtraSensory Perception – ESP) என்கிறார்கள்.  இந்தக் கூடுதல் புலனறிவு கோடியில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்குமென்றாலும் நம்மைப் போன்ற சாமான்ய மனிதருக்கும் இச்சக்தி சிறிதளவாவது இருக்கிறதெனலாம். ஆனால் நாம் அந்த ஆற்றலைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. ஒரு நபரைப் பற்றி நாம் நினைத்து அவர் நம்முன் வந்து நின்றாலோ, தொலைபேசியில் பேசினாலோ ‘நூறு ஆயுசு உனக்கு… இப்பத்தான் உன்னைப் பத்தி நினைச்சேன்’ என்று சொல்லி அந்தச் சம்பவத்தை அதோடு மறந்து விடுகிறோம். இது ஈ.எஸ்.பி.யின் எளிமையான உதாரணம்.

புலன் புறத்தெரிவின் வகைகள் பல இருந்தாலும், அவை தொலையுணர்வு, முன்னுணர்வு, ஞானதிருஷ்டி எனும் முப்பெரும் பிரிவுகளில் அடங்குகின்றன.

தொலையுணர்வு (Telepathy)

ஒருவர் மனதில் நினைக்கும் கருத்தை, தகவலை அவருடன் எந்தத் தொடர்பும் இல்லாத மற்றொருவர் ஐம்புலன்களின் உதவி ஏதுமின்றி  அறிவது தொலையுணர்வு எனப்படுகிறது. இரு மனங்களிடையே பாலமேதுமின்றி நடைபெறும் தகவல் பரிமாற்றம் இது.

ஞான திருஷ்டி (Clairvoyance)

ஒரு இடம், பொருள், நபர் பற்றிய தகவலை ஐம்புலன் துணையின்றி, இருந்த இடத்திலிருந்து ஆழ்மனதில் அவதானித்து அறியக்கூடிய தன்மை ஞான திருஷ்டி.  

 

முன்னுணர்வு (Precognition)

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை மனதில் உணரும் திறன். வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இந்த உணர்வு அதிகமிருந்ததாகச் சொல்லப்படுகிறது. ஒரு முறை, சாப்பிட்டுக் கொண்டிருந்த சர்ச்சில் திடிரென சாப்பாட்டு மேஜையை விட்டு எழுந்தது மட்டுமல்லாமல் அங்கிருந்த எல்லோரையும் ‘பாம் ஷெல்டருக்கு’ அழைத்துச் சென்றாராம். சில நிமிடங்களில் விமானத் தாக்குதல் நடந்ததில் குண்டு வீசப்பட்டு அவர்கள் இருந்த உணவறை சின்னாபின்னமானதாம்.

முற்காலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வை, சம்பவத்தை, தகவலறியும் முறை ஏதுமின்றி, ஐம்புலன்கள் அறிவின்றி,  மனதால் உணரும் திறன்; ஒரு இடத்துக்குச் சென்றவுடன் அங்கு நடைபெற்ற சம்பவத்தை மனதால் அறிவது போன்றவை இறந்தகாலவுணர்வு (Retrocognition) எனப்படுகிறது.

ஆன்மா, ஆவிகளுடன் உரையாடுவது வளியுலக உணர்வு (Mediumship).

ஒரு பொருளைத் தொடுவதன் மூலமே ஏதோவொரு இடம், பொருள், நபர் பற்றி அறிய முடிவது உற்றறி பண்பாற்றலாகும் (Psychometry)

இரும்பை வளைப்பது (Psychokinesis), மற்றொருவர் மனதைப் படிப்பது (Psychic), வருங்காலத்தைக் கணிப்பது (Prophecy), காற்றில்  பொருட்களை மிதக்க விடுவது அல்லது தானே மிதப்பது (Levitation) போன்ற பல விஷயங்களை ஆழ்மனக் கட்டுப்பாட்டின் மூலம் நிகழ்த்தமுடியும்.

இன்றைய அவசர உலகத்தில், நிகழ்வுகள் யாவும் சாதாரண உணர்வு நிலையிலேயே நுகரப்படுகின்றன. நாம் இந்த நிகழ்வுகளால் உந்தப்படும் உயிர்களாகவே வாழ்கிறோம். அவசரமும், அமைதியின்மையும் நம்மை ஆட்டுவிக்கின்றன. மனதை ஒருமுகப்படுத்தும் தியானம்,  மூச்சுப் பயிற்சி போன்றவை ஆற்றல் மிக்க ஆழ்மனத் திறனைப் பெற ஓரளவுக்காவது உதவும்.

  • தொகுத்தவர்: சாந்தா சம்பத் –

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad