\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

2.0

நடப்பதைக் காணும் போது ரஜினியின் மவுசு குறைந்து விட்டது போல் தான் தெரிகிறது. சூப்பர் ஹிட் படமான எந்திரனின் ‍தொடர்ச்சி, பெரும் பொருட்செலவு, VFX என பரபரப்பைக் கிளப்ப ஏகப்பட்ட சங்கதிகள் 2.0 க்கு இருந்தாலும், படத்தின் ரிலீஸ் அந்தளவுக்கு எதிர்பார்ப்பைக் கிளப்பவில்லை. அதாவது ரஜினி, ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், அக்ஷய் குமார் என இத்தனை பெரும் தலைகள் இருக்கும் போது, அதற்கேற்ற பெரிய ஓப்பனிங் இல்லை. படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொண்டு படம் பார்க்கலாம் என்பது தான் பலரின் எண்ணமாக இருந்தது. அதற்கு காரணம், படத்தைப் பற்றியதான எதிர்மறை செய்திகளும், பட தாமதமும் தான். தீவிர ரசிகர்களும், மக்கள் மன்றத் தொண்டர்களும் தமிழ்நாட்டில் முதல் நாள் கூட்டம் சேர்த்தார்கள். பின்னர், நேர்மறை விமர்சனங்கள் வெளிவந்து படத்தின் ஓப்பனிங்கைக் காப்பாற்றியது. ஆனாலும் பழைய ஃபயர் இல்லையே!

சரி, படம் எப்படி? அதே வசீகரன், அதே சிட்டி. புதிதாக பக்ஷிராஜன், நிலா மற்றும் 3.0 குட்டி. அதனால், எந்திரன் போல் தான் இருக்கிறது என்று சொல்லிவிட முடியாது. எந்திரனிலேயே பல வித்தைகளைக் காட்டிவிட்டதால், புதிதாக ஏதாவது காட்டவேண்டிய கட்டாயம், ஷங்கருக்கு வந்துவிட்டது. நாமும் புதிதாக ஏதாவது காட்டுவார் என்று பார்த்தால், தனது டெம்ப்ளேட் கதையை எடுத்து வந்துவிட்டார். லஞ்சம் கேட்டால் குத்து, பகலில் பார்க்கில் தூங்கினால் குத்து என்று காட்டிக்கொண்டிருந்தவர், இதில் செல்ஃபோன் வைத்து ஃபோன் பேசினாலே தூக்கிப் போட்டு பந்தாடுகிறார். ஷங்கருக்கு கதை பண்ண கஷ்டமே வரப் போவதில்லை. ஆறு பேர் போகும் காரில்  ஒருவர் சென்றால், தண்ணீரைத் திறந்து வைத்துக்கொண்டே பல் தேய்த்தால், காஸ்கோவில் கொடுக்கும் சாம்பிளை இரண்டாவது முறை போய் எடுத்தால் என ஒவ்வொரு வித குற்றத்திற்கும், அவர் பாணியில் விதவிதமாகக் கொன்று குவிக்கும் வகையில் கதைகள் எழுதிக்கொண்டேயிருக்கலாம்.

இதில் செல்ஃபோன் வைத்திருப்பவர்களை வில்லனாக்கிவிட்டார். செல்ஃபோன் வைத்திருப்பவர் எல்லோரையும் கொன்று குவித்தால், கதை கந்தலாகிவிடும் என்பதால்,செல்ஃபோன் சேவை வழங்கும் நிறுவனத்தின் தலைவர், அதற்கு உரிமம் கொடுக்கும் அரசியல்வாதி, அதை விற்கும் கடைக்காரர் ஆகியோரைப் பிரமாண்டமாக கொல்லுவதில் படம் தொடங்குகிறது. யார் கொல்கிறார், எதற்கு கொல்கிறார் என்பதைத் தனது பிரத்யேக ப்ளாஷ்பேக் மூலம் காட்டுகிறார். இப்ப, படம் பார்க்கும் நமக்கு யார் வில்லன், யார் ஹீரோ என்ற குழப்பம் வந்துவிடுகிறது. ரஜினி படமென்றால், நல்லது நினைக்கும் எதிராளியும் கூட வில்லன் தானே! ரெண்டு மணி நேரப் படத்தில் அரை மணி வில்லனுடன் சண்டை போட்டு உலகத்தைக் காப்பாற்றுகிறார் தலைவர்.

படத்தின் ப்ளஸ் என்று 3டியைச் சொல்லலாம். ஆங்கிலத்தில் வருகிற பாதி படங்கள் 3டியில் வந்தாலும், அவற்றில் 3டிக்கான சிறப்பம்சங்கள் இருப்பதில்லை. எல்லோரும் குட்டி குட்டியாகத் தெரிவார்கள். அதற்கு 2டியிலேயே பார்த்திருக்கலாமே என்று எண்ணத் தோன்றும். இதில் 3டியை சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முக்கியமாக, அந்த டைட்டில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. என்ன, அந்த 3டி கண்ணாடி படத்தை இருட்டாக ஆக்கிவிடுகிறது. பொதுவாக, ஷங்கர் படத்தில் இருக்கும் அந்த பளிச், இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்.

ஒரு ரஜினி ரசிகனாக, இப்படத்தில் ரஜினியைப் பார்க்க கஷ்டமாகவுள்ளது. இம்மாதிரியான ஆக்ஷன் படத்தின் ஹீரோ, இளமையுடன், வலிமையுடன் இருந்தால் காண அம்சமாக இருக்கும். எண்பது தொண்ணூறுகளில் ரஜினி-கமல் ரசிகர்கள், எம்ஜிஆர்-சிவாஜி படங்களைப் பார்த்து கிண்டலடித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நிலைமையில் ரஜினியும், கமலும் இக்காலக்கட்டத்தில் இருக்கிறார்கள். ஹாலிவுட் ஸ்டைலில் எடுக்கிறோம் எனும்போது, நமது எதிர்பார்ப்பும் அதையொட்டி இருக்கிறது. தமிழில் இந்த பட்ஜெட்டில் படம் எடுக்கும் போது, அதைத் தாங்கும் சக்தி ரஜினிக்குத் தான் தற்சமயம் இருப்பதென்பதால், வேறு வழியில்லை, அட்ஜஸ்ட் செய்து பார்க்க வேண்டியுள்ளது. அதுவும், அந்த 3.0 குட்டி கெட்டப், அப்படியே சக்திமானை நினைவுப்படுத்துகிறது.

முன்பே சொன்னதுபோல், படத்தின் முக்கிய கேரக்டர் – அக்ஷய் குமார் ஏற்று நடித்திருக்கும் பக்ஷிராஜன் கதாபாத்திரம். படத்தில் ரொம்பவும் நிறைவாக நடித்திருப்பது இவர்தான். ஐம்பது வயதுகாரரான அக்ஷய், தாத்தா வேடத்தில் வருகிறார். எழுபது வயது தாத்தா, நாற்பது வயதுக்காரராக வருகிறார். ப்ரஸ்தடிக், டெக்னாலஜி, சித்து வேலை, மப்ளர் என பலவாறு சமாளிக்க வேண்டி இருக்கிறது. பக்ஷிராஜன் வேடத்தில் உருக்கம் காட்டியவர், ஆரா ஒளிவட்டம் வந்தபின்பு அந்நியனாகிவிடுகிறார்.

படத்தின் கிளாமர் பொறுப்பை மட்டுமின்றி, காமெடி பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் எமி ஜாக்சன். இப்படி ஒரு ரோபோ கிடைச்சா நல்லாத்தான் இருக்கும் என்று எண்ண வைக்கும்படி இருக்கிறார். தமிழில் இதுவரை அவர் நடித்த படங்களில் பொருத்தமாக இருக்கிறது என்று சொல்ல வைப்பது, மதராஸபட்டினமும், 2.0வும் தான்.

இந்திய சினிமாவிற்கே பல தொழில்நுட்ப சாத்தியங்களுக்கான கதவுகளை இப்படம் திறந்து வைத்திருக்கிறது. 3டி மூவி, 4டி ஆடியோ என திரையரங்குகளுக்கு மக்களை இழுத்துவர பல டெக்னாலஜிகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒவ்வொருவருமே இப்படத்திற்காக ஒருவகையில் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அதற்கான பலனை படத்தின் ரிசல்ட் அளித்திருப்பதாகத் தெரிகிறது. ஒரு மாதம் கழித்து தான் உண்மை நிலவரம் தெரியும் என்றாலும், பட்ட கஷ்டத்திற்கு ஆறுதலளிக்கும் வெற்றியைக் கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. திரையில் மட்டுமில்லாமல், திரைக்குப் பின்னும் ரசூல் பூக்குட்டி, நிரவ் ஷா, ஆண்டனி என தொழில்நுட்ப ராட்சதர்கள் உழைத்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயமோகன், மதன் கார்க்கி ஆகியோர் ஷங்கருக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு இப்படம் பிடிக்கும். ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப்படம் பார்க்க விரும்பியவர்களுக்கு இப்படம் விருந்து. ஹாலிவுட் படம் தான் வேண்டும் என்றால் 3.0 வரட்டும்.

– சரவணகுமரன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad