ஆச்சர்யக்குறிகள்
கேள்விக்குறிகளான மெய்யை
ஆச்சர்யக் குறிகளாக்கும்
மாற்றுத்திறனாளிகளே!
திறமைகளின் குவியலே!
தன்னம்பிக்கையின் உருவமே!
விழிகள் செயலிழந்தவர்களே!
உங்கள் வாழ்க்கை
விழி திறந்து
படிக்கப்பட வேண்டிய பாடம்!
கைகள் இழந்தவர்களே!
தன்னம்பிக்கை தந்திடும் உங்களின்
போராட்ட வாழ்க்கை!
செவித்திறன் இழந்தவர்களே!
உலகம் கேட்டுக்கொண்டே இருக்கட்டும்
தொடர் வெற்றிகளை!
மனவளர்ச்சி இல்லாதவராம் நீங்கள்!
உங்கள் உதட்டினில் தானே
தவழ்கிறது தூய புன்னகை!
உலகின் கோணப்பார்வைக்குத் தானே
குறை பிறை!
நிலவுக்கு ஏது?
திரும்பியிருக்கும் அரை உலகிற்கே இருட்டு!
விழிகள் மூடுவதில்லை
என்றும் சூரியன்!
தீண்டாமை புரையோடிய
சமூகக் கண்கள் கூறும்
குருடர்கள் என்று!
மக்களின் மன ஊனத்திற்கு
சிகிச்சையளிக்கட்டும்
மாற்றுத்திறனாளிகளின்
விடாமுயற்சிகள்!
சாதனைப் புத்தகத்தின்
துவக்கப் பக்கத்தை அலங்கரிப்பவர்களே!
உங்கள் உடலெங்கும் ஆயிரம் விழிகள்!
கோபுர வாசலில்
தள்ளிய சமூகத்தின்முன்
நிமிருங்கள் கலசமாக!
செயலிழந்த நரம்புகளில்
தொடர்ந்து மலரட்டும்
புதிய சாதனைப் பூக்கள்!
சா. கா. பாரதி ராஜா
செங்கற்பட்டு.