\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஐராவதம் மகாதேவன்

 

கல்வெட்டியியல், தொல்லியல், பத்திரிக்கையாசிரியர், இந்திய ஆட்சிப்பணி அதிகாரி, வரலாற்று ஆய்வாளர் எனப் பன்முகத்தன்மை பெற்றிருந்த பத்மஸ்ரீ ஐராவதம் மகாதேவன் கடந்த நவம்பர் மாதம், 26ஆம் நாள் மூப்பு காரணமாக காலமானார்.

தமிழின் தொன்மை, எழுத்தியல் வளர்ச்சி குறித்து சிந்திக்கும் எவராலும் தவிர்க்க முடியாத பெயர் ஐராவதம் மகாதேவன். தனது விஞ்ஞானப்பூர்வ ஆய்வுகள் மூலம் சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும்,

திராவிட மொழிக் குடும்பத்துக்குமுள்ள ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி சிந்து சமவெளி கலாச்சாரம் திராவிடக் கலாச்சாரமே என்று நிறுவி தமிழ் மொழிக்கும், தமிழர் வரலாற்றுக்கும் பெருமை சேர்த்தவர்.

இரசாயனத்திலும், சட்டத்திலும் பட்டம் பெற்று இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றி வந்த அவருக்கு எழுத்தியலில் ஆர்வம் பெறத் தூண்டியது அவரது நாணயங்கள் சேகரிக்கும் வழக்கம் தான். அவருக்கு கிடைத்த நாணயங்களிலிருந்த குறியீடுகளை (NUMISMATICS) அறிய முற்பட்ட நேரத்தில் அவருக்குக் கிடைத்த வழிகாட்டிகள் உயர்திருவாளர்கள். சி.சிவராமமூர்த்தி, கே..நீலகண்ட சாஸ்திரி, கே.வி.சுப்ரமணிய ஐயர் ஆகியோர்.  குறிப்பாக, சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் தமிழ் இலக்கியத் தொன்மை குறித்த வரலாற்று ஆவணங்கள் கிடைக்கப் பெறாதிருந்த நிலையில் திரு. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் பண்டைய குகைக் கல்வெட்டுகளில் காணப்படுபவை பிராகிருத மொழியல்ல, அவற்றில்  தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகள் இருப்பதையும் சுட்டிக்காட்டி நிறுவினார்.

அவரது கருத்துக்கள் பொது வெளியில் பெரிய தாக்கத்தை உண்டாக்காத நிலையில்,  மகாதேவனுக்குள் ஒளிந்திருந்த ஆய்வுத்தன்மையை அது உசுப்பிவிட்டது. அச்சமயத்தில் ஜார்ஜ் பூலர் எனும் ஜெர்மானியர் தற்போதைய சென்னைக்கருகே இருந்த பட்டிப்புரொலு என்ற இடத்தில் தென்பட்ட கல்வெட்டில் புது வகையான பிராமி எழுத்துகள் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். அவர் அடையாளங்காட்டிய ஒலிப்பியல் முறை எழுத்துக்களைப் பின்பற்றி மதுரை, கரூர் போன்ற ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், சேர மன்னன் இரும்பொறை ஆகியோரின் பெயர்களைக் கண்டறிந்தார் மகாதேவன்.

இதனை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு, 1966 கோலாலாம்பூர் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பின்னர் 1970ஆம் ஆண்டு ஜவஹர்லால் ஆய்வு உதவித்தொகை கிடைக்கப் பெற்று சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டார். இதில் மகாதேவன் ஆராய்ச்சிக்காக எடுத்துக் கொண்டது கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நுற்றாண்டு வரையான காலகட்டத்தில், தெற்கு நோக்கி வந்த ஜைனர்கள், பௌத்தர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்த பிராமி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் பற்றியவை. பல ஊர்களுக்குச் சென்று ஏறத்தாழ 120 கல்வெட்டுகளை நவீனத்துவ முறையில் ஆய்ந்த மகாதேவன் தொல்காப்பியத்தில் குறிக்கப்பெற்றிருந்த 18 மெய்யெழுத்துகள். 8 உயிரெழுத்துகள் இக்கல்வெட்டுகளில் காணப்படுவதைப் பதிவுச் செய்தார். மேலும் இக்கல்வெட்டுகளின் கால நிர்ணயம், கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதர்கள், கிராமங்கள், ஊர்களின் பெயர்கள், சொல்லாக்க வரலாற்று விளக்கம், சொற்களின் இலக்கணக்கூறுகள், இப்படி எல்லாவற்றையும் ஆவணப்படுத்தினார். தமிழ் எழுத்துக்களின் ஒலியைக் குறிக்கவே பிராமி எழுத்துக்கள் உருவானதை மகாதேவன் குறிப்பிடுகிறார். எனவே அவை தமிழ் பிராமி என குறிப்பிடப்படவேண்டும் என்பதே அவரது ஆய்வின் முடிவு.

சிந்து நாகரிக எழுத்துக்கள் திராவிட எழுத்து வகையைச் சேர்ந்தவை என்ற அஸ்கோ பர்போலா எனும் ஆராய்ச்சியாளரின் கருத்துக்களைப் பலப்படுத்திய மகாதேவன் சிந்துசமவெளிப் பகுதியிலும் தென்னாட்டிலும் ஒரே திராவிட மொழியைப் பேசும் மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தினார்.

அதுவரை அந்தக் கல்வெட்டுகள் வட இந்தியாவிலிருந்து வந்த பௌத்த துறவிகளால் பிராமியிலும், பிராகிருத மொழியிலும் எழுதப்பட்டவை, அவற்றுக்கும் தமிழக வரலாற்றுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பொதுவான நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் வரலாற்றாசிரியர்கள். அதை மறுத்து, குகைக் கல்வெட்டுகளில் தமிழுக்கே உரிய சிறப்பு எழுத்துகளான , , , போன்ற எழுத்துகள் இருப்பதையும், தமிழ்ச் சொற்கள் இருப்பதையும், தமிழ் இலக்கணம் இருப்பதையும் சுட்டிக்காட்டி திரு. சுப்பிரமணிய ஐயரின் கருத்துக்கு வலுவூட்டி, நிரூபித்தவர் மகாதேவன்.

தன் வாழ்நாளின் பெரும்பாகத்தை, சிந்து சமவெளி இலச்சினையில் காணப்பட்ட விலங்கின் உருவம் குதிரையல்ல, காளை என்பதை நிருபிக்கவே செலவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார் அவர். இது குதிரை என்றும், ஆரியர்கள் மட்டுமே குதிரை வைத்திருந்தனர் என்றும், அதனால் சிந்து சமவெளி ஆரிய நாகரிகம் என்றும் ஒரு கருத்து நிலவி வந்தது. அதனைத் தகர்த்து அது திராவிடர் வைத்திருந்த காளை என்பதையும் நிருபித்து, சிந்து சமவெளி நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடரே என்று ஆதாரங்களோடு உலகிற்கு எடுத்துச் சொன்னவர் மகாதேவன்.

இவற்றை ஆவணப்படுத்தி அவர் எழுதிய தி இண்டஸ் ஸ்கிரிப்ட்’ (The Indus Script : Texts, Concordance | and Tables) என்ற தமிழ்மொழி வரலாற்றின், சிந்து சமவெளி நாகரிக ஆய்வின் மைல்கல் எனலாம்.

பின்னர் பல்வேறு குடைவரைகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ச்சி செய்வதில் கவனம் செலுத்திய மகாதேவனின் வரலாற்று கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக காரைக்குடிக்கு அருகேயுள்ள பிள்ளையார்பட்டி கோயில் குடைவரையைச் சொல்லலாம். ஒரு முறை இந்தக் குடைவரையின் புகைப்படத்தைப் பார்த்த மகாதேவன் அது ஐந்தாம் நூற்றாண்டின் இறுதியில் பொறிக்கப்பட்டிருக்கலாம் எனவும், பல்லவ காலத்திற்கு முந்தையவை எனவும் குறிப்பிட்டிருந்தார். பின்னர், அந்தக் குடவரைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வாய்ப்புக் கிடைத்த போது மேற்கொண்ட ஆய்வில், அந்த எழுத்துக்களைத் தெளிவாகப் பார்க்க நேர்ந்து அவை ஆறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பதியப்பட்டிருப்பது என்ற உண்மையைக் கண்டறிந்து தனது தவறைத் தானே திருத்தியமைத்தார்.

மேலுள்ள படத்தில் அவர் புகைப்படத்தில் பார்த்ததற்கும் நேரில் கண்டதற்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டு அந்த எழுத்துகள்எக் காட்டூருக் கோன் பெருந் தசன்என்ற வாக்கியத்தைக் குறிப்பதாகவும், அக்கல்வெட்டின் பொருள்எக்காட்டூர் என்ற ஊரின் தலைவன் பெருந்தச்சன்என்பதையும் ஆவணப்படுத்தினார்.

மேலும், இவ்வெழுத்துக்களில், தொல்காப்பியத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல புள்ளி மெய்யெழுத்துக்களும், எகரமும் புள்ளி பெற்றிருப்பதைக் கண்டறிந்து ஆவணப்படுத்தினார். ஓலைச்சுவடிகளில் இப்புள்ளி எழுத்துகளைக் காண முடியாமல் தொல்காப்பியம் தவறாகச் சொல்லியிருக்கக்கூடும் என்று அக்காலத்தில் நிலவிய கருத்தினை, மகாதேவனின் இக்கண்டுபிடிப்பு மாற்றியது.  (ஓலையைக் கிழித்துவிடும் என்பதால் புள்ளிகள் இன்றி எழுதி வந்தனர் என்பதையும் அவருடைய குறிப்பில் காணலாம்). தமிழ் எழுத்தியலில் ஒரு காலகட்டத்தில் தீராத பிரச்சினையாக இருந்த புள்ளி பிரச்னையைத் தீர்த்து வைத்த விநாயகப் பெருமான் என்றும் பிள்ளையார்பட்டி பற்றி  வேடிக்கையாகச் சொல்லியிருக்கிறார் மகாதேவன்.

தினமணி பத்திரிக்கை ஆசிரியராக இருந்தபோது, தமிழ்ப் பத்திரிக்கையுலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தார் மகாதேவன். அரசு ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி பத்திரிக்கையாளர்களின் சம்பளத்தை உயர்த்தியது, பெண் பணியாளர்களுக்குச் சரிசம வாய்ப்புகள் என பல நிர்வாகச் சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்தார். நாளிதழ்களில் பெரியாரின் எழுத்துமுறையைக் கொண்டுவந்தது, செய்திகளில் மொழிக்கான முக்கியத்துவத்தை, குறிப்பாக ஒற்றெழுத்துகளின் பயன்பாட்டை வலியுறுத்தியது என்று பல மாற்றங்களை அறிமுகப்படுத்தினார். தனது பெயரை, தூயத் தமிழில்வெள்ளை யானை பெரிய சாமிஎன்று குறிப்பிட வேண்டுமென வேடிக்கையாக சொல்வாராம் மகாதேவன்.   

தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ்த் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறிஞருமான .வே. சாமிநாத ஐயர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புக்கு ஈடானது ஐராவதம் மகாதேவனின் பங்களிப்பு என்றால் அது மிகையில்லை. இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது, தொல்காப்பியர் விருது உட்பட பல விருதுகளுக்குப் பெருமை சேர்த்தவர் ஐராவதம் மகாதேவன்.

அன்னாரின் மறைவு பத்திரிக்கை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை, மொழி வரலாற்றுத் துறை மற்றும் தமிழ் இலக்கியத் துறைக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.

  • ரவிக்குமார்

 

Tags: , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad