அழகிய ஐரோப்பா – 10
அழகிய ஐரோப்பா – ஃபெரி
தக்காளி சாதம் சாப்பிட்டு பசிக்களை போனதும் அடுத்த பயணத்துக்கான அடுக்குகளுடன் எல்லோரும் வேனில் ஏறி டோவர் நோக்கி விரைந்தோம்.
டோவரை நெருங்க நெருங்க வீதியின் இரு புறமும் இராட்சத கோட்டைகளும் அரண்களும் என வீதியின் இருபுறமும் வரிசைக் கட்டி நின்றன.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் அயல் நாடுகளைக் கண்காணிக்க உயர்ந்த மலை உச்சிகளில் அமைக்கப்பட்ட அரண்களெல்லாம் இன்றும் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.
ஒருவாறாக ஒன்றரை மணிநேர டிரைவிங்க்குப் பின்னர் டோவரைச் சென்றடைந்தோம். தெற்கு இங்கிலாந்தின் கென்ட் (Kent) பகுதியில் அமைந்துள்ள மிகவும் பரபரப்பான துறைமுகம் இது.
எங்களின் பாஸ்போர்ட்டைக் கையில் வாங்கிய டோல்கேட் இல் இருந்த ஒரு அதிகாரி சற்றும் எதிர்பாராத விதமாக;
“வணக்கம்” எனத் தமிழில் சொன்னதைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் நானும் “வணக்கம்” என்றேன் பதிலுக்கு.
அதன் பின் “வெல்கம் டூ ஃபிரான்ஸ்” என்றபடி சரிபார்த்த பாஸ்போர்ட்டில் ஷெங்கன் விசா ஸ்டாம்ப் குத்தி என் கைகளில் திணித்து,
“ஹாப்பி ஜர்னி” என்றார்.
“தேங்க்ஸ்” சொன்னபடி அவரிடமிருந்து விடைபெற்றபின் ஃபெரி (Ferry) நிற்கும் இடம் நோக்கி விரைந்தோம்.
சிறிய கார்கள் முதல் பெரிய கன்டைனர் வரை வகை வகையாக வரிசை கட்டி வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மூன்றாம் எண் வரிசையில் எங்கள் வேனை ஓட்டிச் செல்லுமாறு ஒரு அதிகாரி கட்டளை பிறப்பித்தான்.
உள்ளே சென்ற எமக்கோ பேரதிசயம். என் வாழ்நாளில் இப்படியொரு பெரிய கப்பலை கண்டதேயில்லை. நூற்றுக் கணக்கான கார்கள் கனரக வாகனங்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் என ஃபெரி உள்ளே ஒரு ஊரே திரண்டிருந்தது.
கப்பலின் இரண்டாவது தளத்தில் நாங்கள் கண்ணாடி வழியாக வெளியில் பார்க்கக் கூடியதான ஓர் இடத்தை எங்களுக்காக தெரிவு செய்தோம்.
கடல், அலைகள் இல்லாமல் நதிபோல அமைதியாக இருந்தது.
“ஆங்கிலக் கால்வாயைக் கடந்து ஃபிரான்ஸை அடைய வெறும் இரண்டு மணி நேரம் ஆகும்”
என்றபடி பார்சல் கட்டி எடுத்து வந்த சாப்பாட்டை ஒரு கை பார்த்து விட்டு ஒரு குட்டி தூக்கம் போட்டார் சித்தப்பா.
கப்பலுக்குள் பார்க்கும் இடமெங்கும் ரெஸ்டாரன்ட்கள் இருந்தன. ரெஸ்டாரன்ட்டைக் கண்டவுடன் என் பிள்ளைகளுக்கு மீண்டும் பசி எடுத்தது.
பாகிஸ்தானி ஒருவனின் இந்தியன் ரெஸ்டாரன்ட்டில் சுடச் சுட காரமான சிக்கன் கறியும் சோறும் கிடைத்தது.
“ஹாய் சோறு…” என்றபடி மகன் ஓடி வந்தான். அமெரிக்காவின் மெக்டொனால்ட் போனாலும் தோசை அல்லது சோறு கேட்டு அடம்பிடிக்கும் ரகம் அவன்.
ஃபோன் சார்ஜ் போடுவதற்கான வசதிகள் எல்லா டைனிங் டேபிள்களிலும் இருந்தது. எங்கள் ஃபோனை எடுத்து சார்ஜரில் போட்டு விட்டு எல்லோருமாக கதை பேசியபடி சாப்பாட்டை ஒரு பிடி பிடித்தோம்.
சாப்பிட்டு முடிந்ததும் எனக்கு ஒரு காஃபீயும் மனைவிக்கு டீயும் வாங்கினேன். பிள்ளைகள் இருவரும் கண்ணாடி வழியே கடலின் கொள்ளை அழகை கண்டு களித்துக்கொண்டிருந்தனர்.
காஃபீ மிகவும் இனிப்பாக, சுவையானதாக இருந்தது. பருகி முடிந்ததுதான் தாமதம்
“இருட்ட முதல் ஒருக்கால் கப்பலின் மேல் தளத்துக்கு போகலாமா” என்றாள் மனைவி
“அதுக்கென்ன” என்றபடி தூங்கிக் கொண்டிருந்த சித்தப்பாவின் அருகில் பைகளை வைத்து விட்டு எல்லோரும் மேல் தளம் போகும் படிகளில் ஏறினோம்.
ஃபெரியில் நான்கு தளங்கள் இருந்தன. முதல் தளம் முழுவதும் வாகனங்கள் நிரம்பி இருந்தன. இரண்டாவது மற்றும் மூன்றாவது தளம் பயணிகளுக்கானது. நான்காவது தளமான மேல் தளம் பாதி திறந்த வெளியாகவும் பாதி மூடிய பகுதியாகவும் அமைக்கப் பட்டிருந்தது.
படிகளில் மேலே சென்றதும் முதலில் நான்காவது தளத்தின் மூடிய பகுதி தென்பட்டது. ஆங்காங்கே பல பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன. அந்தப் பகுதியைத் தாண்டி வெளியேறியபோது திறந்த வெளியாக உள்ள மேல் தளம் கண்ணில் பட்டது.
நீல வானம் கடலுடன் சல்லாபித்து தனது மரபணுவை கடலுடன் பங்கு போட்டுக் கொண்டிருந்த மாலைநேர வெயிலில் பெருங் கடலை இரு கூறு போட்டபடி நகர்ந்து செல்லும் ஃபெரியை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஒரு ராசாளிப் பறவை ஃபெரியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து தானும் போட்டி போட்டு “நீ முந்தியா நான் முந்தியா சொல்லு” என்றபடி பறந்து வந்துகொண்டிருந்தது.
நானும் என் மனைவியும் டைட்டானிக் ஸ்டைலில் ஓரிரு போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம். பிள்ளைகளும் தங்கள் காமெரா போன திசையெல்லாம் தங்கள் இஷ்டப்படி சுட்டு விளையாடினார்கள்.
சூரிய ஒளி மறைந்து இருள் மெதுவாக எட்டிப் பார்க்கத் தொடங்கிய போது ஒருவிதமான சில்லென்ற காற்று எலும்புக்கும் தசைக்கும் இடையில் புகுந்து நர்த்தனமாடியது.
“சரியாய் குளுருது…” என்றாள் என் மகள்
“கீழே போகப்போறேன்…” என்றபடி படியை நோக்கி ஓடினான் மகன்
இந்தக் கோடைக்கால உடையில் இதற்கு மேலயும் இருக்க முடியாது என்பதை உணர்ந்தவர்களாக விலக மனமின்றி விலகிச் சென்று வேறு வழியின்றி மீண்டும் இரண்டாந்தளம் சென்று கண்ணாடியூடாக வேடிக்கை பார்த்தோம்.
“இந்தக் குளிருக்கு இன்னொரு டீ குடிச்சால் நல்லாயிருக்கும்” என்றபடி மீண்டும் ஒரு டீயை வாங்கி குடித்த பின் ஒரு குட்டித் தூக்கம் போட்டாள் என் மனைவி. நான் பிள்ளைகள் விளையாடுவதைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.
-தியா-