\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

திகைப்பூட்டும் திரைப்படப்பாடல்கள்

தமிழ்த் திரைப்படங்கள் இதிகாசம், புராணம் என்பதைக் கடந்து சமகாலத்துக் கதைகள் என்ற தளத்துக்கு வந்தபோது, பெரும்பாலும் உணர்வுகள் மேலோங்கி நிற்கும் படங்களே வெற்றி பெற்றன. சுதந்திரத்துக்குப் பிந்தைய அரசியல் சூழலைச் சில படங்கள் தோலுரித்தன. கூட்டுக் குடும்பங்களில் நிலவும் முரண்பட்ட மனங்களால் வாழ்க்கை சூறாவளியானதைச் சுட்டிக்காட்டின. அந்தச் சமயத்தில் யுவ-யுவதிகளைச் சுண்டி இழுக்கும் சக்தியாய், மென்மையான காதல் படங்களைத் தந்தவர் C.V. ஸ்ரீதர்.   ‘செங்கோல் அவனுக்கு, சர்வாதிகாரம் எனக்கு’ என்று உத்தமபுத்திரனில் சரித்திர வசனம் எழுதிய ஸ்ரீதர், தானே படங்களை இயக்க முடிவு செய்தவுடன் எழுதிய கதை தான் ‘கல்யாணப் பரிசு’. காதலைப் பற்றிய புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் ஸ்ரீதர் என்றால் அது மிகையில்லை. காதல் என்பது நேசித்த மனதை  அடைவது மட்டுமல்ல; பிரிய நேர்ந்தாலும் நேசிப்பதுதான் மெய்யான காதல் என்ற மகத்துவத்தைப் படங்களில் பதியச் செய்தவர் ஸ்ரீதர்.

ஸ்ரீதரின் பல படங்களில் முக்கோணக் காதல் அடிநாதமாக ஓடியது. இருந்தபோதிலும் அதில் அதிகபட்ச கண்ணியத்தைக் கடைபிடித்தார். அவரது பல படங்களில் வில்லன் என்ற கதாபாத்திரமே இருக்காது. ஸ்ரீதர்  பல மணி நேரங்கள் செலவழித்துச் சொன்ன ‘கல்யாணப் பரிசு’ கதையை கேட்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ‘காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி, கலங்குகின்றாள் அவனை நெஞ்சில் நிறுத்தி – இது தானே கதை?’ என்று வினவ, அதிலிருந்து தனது படங்களின் கதையைப் பாடல் வழியே விளக்கும் உத்தியைப் பின்பற்றினார் ஸ்ரீதர். திரைக்கதையிலும் , காட்சியமைப்பிலும் புதுமைகளைப் பின்பற்றி, முதன் முதலில் இயக்குனருக்கென தனித்தன்மையான முத்திரைகளை உண்டாக்கி அதற்கு ரசிகர் வட்டத்தினை உருவாக்கியவரும் இவரே.

1962ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ உலகத் தரம் வாய்ந்த தமிழ்ப்படம் என்றால் அது மிகையில்லை. படம் முழுதும் மருத்துவமனை பின்னணியில், அதிக வசனமின்றி கதாபாத்திரங்களின் மனவுணர்வுகளை வித்தியாசமான கோணங்களில் வெளிப்படுத்தி திரையில் காவியம் படைத்திருப்பார் ஸ்ரீதர். இந்தப் படைப்பில்  அவருக்கு உறுதுணையாய் நின்றவர்கள் ஒளிப்பதிவாளர் A. வின்செண்ட், இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி, பாடலாசிரியர் கண்ணதாசன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் கணவனை (முத்துராமன்) சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கிறாள் நாயகி (தேவிகா). ஆனால் அவளது முன்னாள் காதலன் (கல்யாண்குமார்) தான் அங்கு மருத்துவர் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லை. முன்னாள் காதலியின் கணவனைக் காப்பாற்ற வேண்டிய கடமை கல்யான்குமாருக்கு; இவர்களின் முன்னாள் பழக்கத்தை அறிந்து, ஒருவேளை தான் இறக்க நேர்ந்தால் அவர்கள் இருவரும் ஒன்று சேரவேண்டுமென நினைக்கும் உயர்குணம் கொண்ட கணவன் பாத்திரம் முத்துராமனுக்கு. தனது பழைய காதல் பற்றி கணவனுக்குத் தெரிந்துவிடுமோ என்ற அச்சம் ஒரு பக்கம்; தனது காதலை இழந்த கோபத்தால் மருத்துவர்  கணவனை காப்பாற்றாமல் விட்டுவிடுவானோ என்ற கவலை ஒரு பக்கம் – இருதலைக் கொள்ளி எறும்பாக தேவிகா என அனைவரும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள்.

தான் பிழைப்பது கடினம் என உணர்ந்த நாயகன்; மனைவியை, தான் முதன் முதலாக அவளைப் பார்த்த மணமகள் கோலத்தில் பார்க்க விழைந்து மணக்கோலத்தில் வரச் சொல்லி அழைக்கிறான். இந்த நேரத்தில் கணவன் இப்படி அழைப்பதன் காரணம் புரியாமல் நாயகி பாடும் பாடல்.

என்ன நினைத்து என்னை அழைத்தாயோ?

ஏன் இந்தக் கோலத்தைக் கொடுத்தாயோ?

முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ?

முகத்தைப் பார்த்துக்கொள்ள துடித்தாயோ?

வாழ்க்கை கனவுகளைக் கலைத்தாயோ? – ஒரு

வாசல் திறந்ததென்று நினைத்தாயோ?

மாயப் பறவை ஒன்று வானில் பறந்து வந்து

வாவென அழைத்ததைக் கேட்டயோ?

பறவை பறந்து செல்ல விடுவேனா? – அந்த

பரம்பொருள் வந்தாலும் தருவேனா?

உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம்

என்னையே நான் தர மறுப்பேனா?

வாழ்க்கை முடிந்து வாசல்கள் கடந்து வானில் கரைந்து போய்விட நினைக்கிறாயா  உன்னை அழைத்துச் செல்ல வரும் தலைவனிடம் என்னைக் கொடுத்து உனைக் காப்பேன் என்று பாடுகிறாள் நாயகி.

படம் முழுவதும் முடிந்து விட்ட நிலையில் ஸ்ரீதருக்கு இந்தக் காட்சியில் போதிய அழுத்தமில்லை என்ற உணர்வு தோன்ற, கவிஞரை அழைத்து சில வரிகள் தரும்படி கேட்கிறார். வெளியூருக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவரை நான்கு வரிகள் மட்டும் கொடுங்கள் என்று ஸ்டுடியோவுக்கு வரவழைக்க,  சில நிமிடங்களில் கண்ணதாசன் உதிர்த்த வரிகள் இவை. பின்னர் மெல்லிசை மன்னர்கள், பி. சுசிலாவைப் பாடவைத்து உண்டாக்கிய அற்புதம் இது. சோகத்தின் உச்சக்கட்டத்தில் நாயகி பாடுவதால் ‘என்ன நினைத்து என்னை ‘ என்று நிறுத்தி அவள் விசும்ப ஒரு இடைவெளி தந்து ‘அழைத்தாயோ’ என்பதில் எம்.எஸ்.வி கொடி நாட்டியுள்ளார். அந்தச் சோகத்தை  அப்படியே குரலில் வடித்தெடுத்துத் தந்திருப்பார் பி. சுசிலா. வடஇந்தியாவில் மட்டுமே பிரபலமாயிருந்த ஷெனாய் இசையைத் தமிழுக்குக் கொண்டு வந்த மெல்லிசை மன்னர்கள்,அந்த இசையை எப்படியெல்லாம் தங்களது பாடல்களில் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குரியது. ‘கிராஸ் டிசால்வ்’ (Cross Dissolve) நுட்பத்தின் வழியே நாயகன் மணநாளை நினைத்துப் பார்த்து, நனவுலகுக்கு வருவதைச் சன்னமாகக் காண்பித்திருந்தது இயக்குனரின் அசாத்தியக் கற்பனை.

சென்ற பகுதியில் நான் குறிப்பிட்டிருந்த பாடலும் இதே படத்தில் இடம்பெற்றது தான். நாயகன் தான் இறந்த பின்னர், நாயகி அவளது முன்னாள் காதலனை மணந்து கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான். அதைக் கேட்டு துடித்து நிற்கிறாள் மனைவி. அந்த நேரத்தில் மனைவியின் சிதார் இசையைக் கேட்க விழைகிறான் நாயகன்.

சொன்னது நீதானா? சொல் சொல் சொல் என்னுயிரே

சம்மதம் தானா? ஏன் ஏன் ஏன் என்னுயிரே?

ஏன் ஏன் ஏன் என்னுயிரே?

இன்னொரு கைகளிலே யார் யார் நானா?

எனை மறந்தாயா? ஏன் ஏன் ஏன் என் உயிரே?

 

மங்கல மாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே?

மணமகளைத் திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே?

என் மனதில் உன் மனதை இணைத்ததும் நீதானே?

இறுதிவரைத் துணையிருப்பேன் என்றதும் நீதானே?

 

இன்று சொன்னது நீதானா?

 

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?

தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?

ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா?

ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா?

இந்த அற்புதப் பாடலின் மகத்துவத்தைச் சிறிய கட்டுரையில் சுருக்கிவிட முடியாது. சந்தத்திற்கு (மெட்டுக்குப் பாட்டு ) எழுதினாலும், சொந்தத்திற்கு (பாட்டுக்கு மெட்டு) எழுதினாலும் இலக்கிய நயத்தோடு, வாழ்க்கை நியதியை, தத்துவத்தைத் தெளித்துவிட்டுப் போவதில் கண்ணதாசனுக்கு நிகர் அவர் மட்டுமே. மணமகளைத் திருமகளாய் நினைத்ததையும், கடவுளுக்கு சாற்றப்பட்ட மாலை கூட புனிதம் பெறுகிறது என்ற நம்பிக்கைகளையும் மிகப் பொருத்தமாக, யதார்த்தமாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்.

இந்த எளிமையான வரிகளுக்குள் உணர்வுகளை நுழைத்த மெல்லிசை மன்னர்களின் விந்தையைப் பாருங்கள். ‘சொன்னது நீதானா.. சொல் என்னுயிரே’ என்ற வரியை ‘சொல் சொல் சொல் என்னுயிரே’ என்றும் ‘ஏன் என்னுயிரே’ என்ற வரியை ‘ஏன் ஏன் ஏன் என்னுயிரே’ என்றும் மாற்றியதில் தான்  எவ்வளவு வேறுபாடு. சிதார் இந்தப் பாடலின் பிரதான இசை என்றாலும், சாரங்கியும் தபேலாவும் போட்டிப் போட்டு துணை நின்றிருக்கும். அதிலும் தபேலா தனி லயத்தில் நின்று விடாமல் ராகத்தோடு இணைந்து பாடல் முழுதும் குழைந்து வருவது இசையின் உச்சம். (இந்த இசை ஜாலத்தை  ‘ஹெட்போனில்’ கேட்டுப் பாருங்கள் – தபேலாவின் தனித்தன்மையான ஒலி உங்களை வேறொரு தளத்துக்கு அழைத்துச் செல்லும்). பி.சுசிலாவின் குரலில் நாயகியின் உணர்வுகள் பொங்கி வழியும்.

‘யார், யார் நானா?’ எனும் வரிக்கு மெல்லிசை மன்னர் எவ்வளவு அழுத்தங்கொடுத்துப் பாடச் செய்தார் என்பதை பல இடங்களில் சொல்லி புளகாங்கித்திருக்கிறார் அவர். முத்துராமன், தேவிகா இருவரும் தங்களது பங்கை மிகச் சிறப்பாகச் செய்திருப்பார்கள்.

ஒரு பாடல்  காட்சியில், மருத்துவ அறை, ஜன்னல், கட்டில், சிதார், மேஜை, கண்ணாடி என்று சொற்பமான ‘செட் ப்ராபர்டிகளை’ வைத்துக் கொண்டு என்ன செய்துவிட முடியும்? இதனை ஒரு சவாலாக ஏற்று இயக்குனர் ஸ்ரீதரும் ஒளிப்பதிவாளர்  வின்செண்டும் விந்தை புரிந்திருப்பார்கள். ‘ஜிம்மி ஜிப்’ (Jimmy Jib) போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் கேமரா சுழன்று சுழன்று வருவது, சிதாரின் கோணத்தில் கேமராவைப் பொருத்தியது, தேவிகாவின் முகத்துக்கு க்ளோசப் வைத்து பின்புறத்து நிலைக்கண்ணாடியில் முத்துராமனின்  தவிப்பைக் காட்டியது, முத்துராமனின் பின்புறமிருந்து நகரும் கேமரா கட்டிலுக்கடியில் நுழைந்து தேவிகாவின் அருகில் வருவது, சிதார் விற்பன்னர் ஒருவரின் விரல்களை மட்டும் சில காட்சிகளில் பயன்படுத்தியது என்று விளையாடியிருப்பார் வின்செண்ட். (முத்துராமன் அமர்ந்திருக்கும் போதே கட்டிலின் இருபுறமும் கயிறு கட்டி தூக்கியதன் மூலம் ‘ஜிம்மி ஜிப்’ எஃபெக்ட்டை கொண்டுவந்ததாக வின்செண்ட் சில ஆண்டுகளுக்கு முன்  தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் சொல்லியிருந்தார்).

இப்படி ஒரு கூட்டுமுயற்சியில் அமரத்துவம் படைத்த இந்தப் பாடலைப் பற்றிய சுவையான இன்னொரு தகவல் – பாடல் கம்போசிங் நேரத்தில் அனைவரும் காத்திருக்க கண்ணதாசன் மட்டும் வரவில்லை. பொறுமையிழந்த எம்.எஸ்.வி. ‘இந்தக் குடிகாரரோடு இதே தொல்லையா போச்சு’ என்று கடிந்து கொண்டார். கண்ணதாசன் வந்த பின்னர் யாரோ ஒருவர் அவரிடம் இதைப்பற்றி சொல்லிவிட நேரே மெல்லிசை மன்னர் முன் வந்தமர்ந்த கண்ணதாசன் ‘ஏன்டா விசு .. என்னை குடிகாரன்னு திட்டினியாமே… நீயாடா அப்படி சொன்னே… சொல்லுடா,  நீ அப்படியா சொன்ன?’ என்று கேட்டுவிட்டு ‘சொன்னது நீதானாடா சொல்லுடா’ என்று கத்தி பாடினாராம். ஸ்ரீதருக்கு இந்த சொற்கள் பிடித்துவிட அதனையே பல்லவிக்கு முதல்வரியாக வைத்துப் பாடலை எழுதச் சொல்ல, கண்ணதாசன் அருவியாகக் கொட்டிய வரிகள் தாம் இவை.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம்பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் வைரங்கள். .

 

‘நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்’

 

ஆயிரம் வாசல் இதயம்

அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்

யாரோ வருவார் யாரோ இருப்பார்

வருவதும் போவதும் தெரியாது

ஒருவர் மட்டும் குடியிருந்தால்

துன்பம் ஏதும் இல்லை

ஒன்று இருக்க ஒன்று வந்தால்

என்றும் அமைதி இல்லை

எங்கே வாழ்க்கை தொடங்கும்

அது எங்கே எவ்விதம் முடியும்

இது தான் பாதை இது தான் பயணம்

என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லாம் மாறி வரும்

பயணம் முடிந்து விடும்

மாறுவதைப் புரிந்து கொண்டால்

மயக்கம் தெளிந்து விடும்

கவிஞரின் தத்துவப் பார்வையின் உச்சத்தை இப்பாடலில்  காணலாம். பி.பி. ஸ்ரீநிவாஸ் குரலில் உருவான இப்பாடலைப் பற்றி பின்னொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

‘எங்கிருந்தாலும் வாழ்க’

வருவாயென நான் தனிமையில் நின்றேன்

வந்ததும் வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க

 

ஏற்றிய தீபம் நிலை பெறவேண்டும்

இருண்ட வீட்டில் ஒளிதர வேண்டும்

போற்றும் கணவன் உயிர்பெற வேண்டும்

பொன்மகளே நீ வாழ்க

என்று எட்டு வரிகளில் படத்தின் கதைச் சுருக்கத்தைத் தந்திருப்பார் கவிஞர்.  ஏ.எல். ராகவனுக்கு நீடித்தப் புகழைத் தந்தது இந்தப் பாடல்.

‘முத்தான முத்தல்லவோ’,

 

சின்னஞ்சிறு சிறகு கொண்ட சிங்கார சிட்டல்லவோ

செம்மாதுளை பிளந்து சிரித்து வரும் சிரிப்பல்லவோ

மாவடு கண்ணல்லவோ மைனாவின் மொழியல்லவோ

பூவின் மணமல்லவோ பொன்போன்ற முகமல்லவோ

வாழாத மனிதரையும் வாழ வைக்கும் சேயல்லவோ

பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ

தாழம்குடையல்லவோ தள்ளாடும் நடையல்லவோ

மாலை பொழுதல்லவோ வண்டாடும் செண்டல்லவோ..

 

கதையின் இறுதியில் புற்றுநோய் பாதித்திருந்த முத்துராமன் பிழைத்துவிட, மருத்துவரான  கல்யாண்குமார் இறந்துவிடுவார். அவரது மருத்துவமனையை முத்துராமனும், தேவிகாவும் விரிவுபடுத்தி, அவரது சிலையைத் திறந்து வைப்பதாகப் படம் முடிவடையும்.

அப்பொழுது பின்னணியில் ஒலிக்கும் பாடல்

 

‘ஒருவர் வாழும் ஆலயம்’

 

ஒருவர் வாழும் ஆலயம் உருவமில்லா ஆலயம்

நிலைத்து வாழும் ஆலயம் நெஞ்சில் ஓர் ஆலயம்

கருணை தெய்வம் கைகள் நீட்டி அணைக்கத் தாவும் ஆலயம்

காலமெல்லாம் திறந்து காணும் கதவில்லாத ஆலயம்

பாசமென்னும் மலர்களாலே பூஜை செய்யும் ஆலயம்

தியாகம் என்னும் ஒளியினாலே தீபம் ஏற்றும் ஆலயம்

நிலைத்து வாழும் ஆலயம் – ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ தமிழ்த் திரையுலகமுள்ளவரை இந்த வரி முற்றிலுமாக நிலைத்து நிற்கும்.

அடுத்த பகுதியில் வேறொரு பாடலுடன் சந்திப்போம்.

  • ரவிக்குமார் –

Tags: , , , , , ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad