சாஹித்ய அகாடெமி விருது பெறும் ‘சஞ்சாரம்’
‘சாஹித்ய’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு இலக்கியம் என்பது பொருள். இந்திய மொழி இலக்கியங்களை மேம்படுத்தும் நோக்கில் 1952 இல் உருவான சாஹித்ய அகாடெமி எனும் தன்னாட்சி அமைப்பு பிற மொழி இலக்கியங்களை இந்திய மொழிகளில் மாற்றம் செய்வது, எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி அவர்களது படைப்புகளை ஆவணப்படுத்துவது, இலக்கிய கூட்டங்கள் நடத்துவது என பல்வேறு பணிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமின்றி, எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் பலவித விருதுகளை அளித்து வருகிறது.
இந்திய அரசு அங்கீகரித்துள்ள 24 மொழிகள் ஒவ்வொன்றிலும், சிறந்த படைப்பொன்றைத் தெரிவு செய்து, வழங்கப்படும் ‘சாஹித்ய அகாடெமி’ விருதானது நாட்டில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதாகும். கவிதை, இலக்கிய திறனாய்வு, சுய சரிதம், பயண நூல், சிறுகதை, நாவல், மொழிமாற்ற நூல்கள் உட்பட பல இலக்கிய வடிவங்கள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 1954 முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதுடன், பணமுடிப்பும், பாராட்டுப் பட்டயமும் அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு, தமிழ் இலக்கியப் பிரிவில், ‘சாஹித்ய அகாடெமி’ விருதினைப் பெற்றுள்ளார் பிரபல எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். அவரது ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. கரிசல் நிலத்து நாதஸ்வர, தவில் கலைஞர்களின் வாழ்வியலை ஒட்டி எழுதப்பட்ட இந்நாவல் 2014 ஆம் ஆண்டு வெளியானது.
யதார்த்த வாழ்க்கையில் சிக்கி உழலும் மனித உணர்வுகளை மிகவும் தத்ரூபமாக எழுத்தில் வடிக்கும் ஆற்றல் மிக்கவரான எஸ்.ரா. இந்நாவலில் பரம்பரையாக நாதஸ்வர, தவில் இசைக்கலையை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் குடும்பங்களின் போராட்டங்களை, மண்மணம் மாறாத கதையம்சத்துடன் விளக்கியுள்ளார். ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் பல கலைஞர்களுடன் உரையாடி அவர்களின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டு இந்நாவலைப் படைத்ததாகக் குறிப்பிடுகிறார் எஸ். ரா.
இள வயதில், முனைவர் பட்டபடிப்பைத் துறந்து முழு நேர எழுத்தாளராக வாழ்க்கையைத் துவங்கிய எஸ்.ரா. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், சிறுகதைள், பயணக்கட்டுரைகள், சிறார் இலக்கியங்கள் எனப் பல பிரிவுகளில் சிறந்த படைப்புகளை அளித்துள்ளார். பாபா, பீமா, சண்டைக்கோழி, அவன் இவன் போன்ற படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய அனுபவமும் அவருக்குண்டு.
இருபத்தியைந்து ஆண்டுகளாக, தமிழ் இலக்கியப் படைப்புலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் எஸ். ராமகிருஷ்ணனுக்கு இந்த ஆண்டின் சாஹித்ய அகாடெமி விருது கிட்டியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இவ்விருது பெற்றதற்காக அவரை வாழ்த்துவதோடு, அவரது இலக்கியப் பணி தொடர பனிப்பூக்கள் சார்பில் வேண்டுகிறோம்!
- ரவிக்குமார் –